இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 பிப்ரவரி, 2017

எதனைக் கண்டான், மதங்களைப் படைத்தான்?

Related image
இந்த பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்ற இறைத்தூதர்கள் அனைவரும் கீழ்கண்ட மூன்று அடிப்படைகளை தத்தமது மக்களுக்கு நினைவூட்டி அவர்களை இறைவன்பால் அழைத்தார்கள்:
ஒன்றே மனித குலம்: அனைத்து மனிதகுலமும் ஆதித்தந்தை மற்றும் ஆதித்தாய் ஆன ஒரு ஆண்பெண் ஜோடியில் இருந்து உருவாகிப் பல்கிப் பெருகியதே.
ஒருவனே இறைவன்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனான ஏக இறைவன் மட்டுமே நம் வணக்கத்திற்கு உரியவன் ஆவான். அவனல்லாத அனைத்தும் படைப்பினங்களேயன்றி வேறல்ல. அவை வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவை அல்ல. அவற்றை வணங்குவது பெரும் பாவமாகும்.
வாழ்க்கையின் நோக்கம்: குறுகிய இவ்வுலக வாழ்வை ஒரு பரீட்சையாகவும் தற்காலிக வாழ்விடமான இந்த பூமியை அதற்கான பரீட்சைக்கூடமாகவும்  இறைவன் ஆக்கியுள்ளான். இதில்
இறைவன் கற்பிக்கும் எவல்விலக்கல்களை பேணி வாழ்வோருக்கு சொர்க்கமும் அல்லாதவர்களுக்கு நரகமும் மறுமையில் வாய்க்க உள்ளன.
அமைதி உண்டாக்கும் இறை மார்க்கம்
இவற்றுடன் நன்மை தீமைகளை அல்லது புண்ணியம் எது பாவம் எது என்பதை தீர்மானிக்கும் அளவுகோலையும் இறைவன் அவனது வேதங்கள் மூலமாகவும் தூதர்கள் மூலமாகவும் மனித குலத்திற்கு அவ்வப்போது அறிவித்து வந்துள்ளான். இந்த பரீட்சை வாழ்வின்போது இறைவன் எதைச் செய்யுமாறு ஏவுகிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் என்பது. எதைச்செய்யக் கூடாது என்று ஏவுகிறானோ அதுவே தீமை அல்லது பாவம் என்பது.
அவ்வாறு இறைவனின் எவல்விலக்கல்களை ஏற்று அதன்படி வாழ்வோர் தங்கள் தனிநபர் வாழ்க்கையில் ஒழுக்கம் பேணுபவர்களாக இருப்பார்கள். அவ்வாறு ஒழுக்கம் பேணுபவர்கள் இணைந்து வாழும்போது குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் நல்லிணக்கமும் அமைதியும் காண்பார்கள்.
அவ்வாறு தன் மனோஇச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்ததற்குப் பரிசாக வழங்கப்படுவதே மறுமையில் நிரந்தர இன்பங்கள் கொண்ட சொர்க்கம் என்ற வாழ்விடம். இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்தும் புறக்கணித்தும் வாழ்வோருக்கு தண்டனையாக கொடுக்கப்படுவதே நரகம் என்ற வாழ்விடம்.
  இவ்வாறு படைத்தவன் கற்பிக்கும் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பேணி வாழும் வாழ்க்கை நெறிக்கே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி என்றும் கீழ்படிதல் என்றும் பொருட்கள் உண்டு. அதாவது இறைகட்டளைகளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் அமைதி காணலாம் என்பது இந்த மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.
வெறும் சடங்குகளைக் கொண்டதல்ல இறைமார்க்கம்
இந்த பூமிக்கு வந்த அனைத்து இறைத்தூதர்களும் மேற்கூறப்பட்டவாறு இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையிலான முழுமையான வாழ்க்கை நெறியையே போதித்தார்கள். அவர்களே அதற்கு முன்மாதிரிகளாக நின்று மக்களிடையே மக்களாக வாழ்ந்து விட்டுச் சென்றார்கள். மக்களிடையே நன்மை எவை  தீமை எவை என்பவற்றை போதித்ததோடு நில்லாமல் நன்மையான காரியங்களை சமூகத்தில் ஏவவும் தீமைகளுக்கு எதிராகப் போராடவும் செய்தார்கள். அதர்மத்திற்கு எதிராகப் போராடி நாட்டில் தர்மத்தை நிலைநாட்டவும் செய்தார்கள்.
அவர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் வெறும் வணக்க வழிபாடுகளையோ அல்லது சடங்கு சம்பிரதாயங்களையோ துதிச் சொற்களையோ அல்லது துறவறத்தையோ மக்களுக்குக் கற்பித்துவிட்டு பிற மக்களிடம் இருந்து ஒதுங்கி வாழச் சொல்லவில்லை. இல்லறம், கொடுக்கல் வாங்கல், வணிகம், தொழில், அரசியல் இவற்றை ஒதுக்கிவைத்து விட்டுத்தான் ஆன்மீகத்தில் ஈடுபடவும் இறைவனின் பொருத்தத்தையும் மோட்சத்தையும் பெறமுடியும் என்பன போன்ற அபத்தங்களை அவர்கள் மக்களுக்கு போதிக்கவில்லை. மாறாக வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இறைவன் எதைப் பரிந்துரைக்கிறானோ அதைச் செய்வதும் அவன் தடுத்தவற்றைத் தவிர்ப்பதும் இறைவழிபாடே என்று கற்பித்தார்கள்.
இறை உணர்வோடு செய்யப்படும் அனைத்து காரியங்களும் இறைவழிபாடே என்று போதித்த இறைத்தூதர்கள் அந்த இறை உணர்வு மனிதனில் நிலைத்திருக்கும் பொருட்டு தொழுகை, துதித்தல் விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் இவற்றைச் செய்வது மட்டுமே மோட்சத்தைப் பெற்றுத்தரும் என்று அவர்கள் போதிக்கவில்லை.

மதங்கள் எப்படி வந்தன?
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கற்றுத்தரும் முழுமையான வாழ்க்கை நெறியே இறைமார்க்கம் என்று அறியப்படும். மாறாக அந்த இறைமார்க்கத்தை சிதைத்து  மனிதர்களாகவே உண்டாக்கிக்கொண்டவையே மதங்கள். அதாவது இறைமார்க்கத்தில் சில சுயநலம் கொண்ட இடைத்தரகர்கள் புகுத்திய வீண் சடங்கு சம்பிரதாயங்களின் தொகுப்புகளே  மதங்கள். இவை எவ்வாறு வந்தன?
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டுக்கு ஒரு இறைத்தூதர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அந்நாட்டு மக்களுக்கு தான் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை எடுத்துரைக்கிறார். ஒன்றே குலம், ஒருவனே இறைவன், வாழ்க்கையின் நோக்கம், மறுமை வாழ்க்கை, பாவம் எது புண்ணியம் எது என்பவற்றையெல்லாம் கற்பித்து ஒரு முன்மாதிரி புருஷராகவும் மக்களிடையே வாழ்ந்து காட்டுகிறார். அவ்வூரில் மக்களோடு இணைந்து தர்மத்தையும் நிலை நாட்டுகிறார். மக்களும் கலப்படமில்லாத ஏக இறைவழிபாடு மூலம் ஒன்றிணைந்த நல்லொழுக்கமுள்ள சமூக வாழ்வில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அமைதியையும் அனுபவிப்பார்கள்.
அதர்மத்தின் ஆரம்பம்
  இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் இறைத்தூதர் மரணம் அடைகிறார். ஆனாலும் அத்தூதரால் நிலைநாட்டப்பட்ட தர்மத்தின் தாக்கம் சில காலம்வரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாள் செல்லச் செல்ல பிற்கால மக்களில் சிலர் இறந்து போன இறைத்தூதருக்கு அஞ்சலி என்ற பெயரில் அவருக்கு ஒரு ஓவியத்தை வரைந்து மரியாதை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.  தொடர்ந்து ஷைத்தானுடைய தாக்கத்தால் அந்த இறைத்தூதருக்கு சிலையும் வடிக்கப்பட்டு அந்த இறைத்தூதரையே வணங்க முற்படுகிறார்கள் !
 படைத்தவனை மட்டுமே வணங்குங்கள்மனிதர்களையோ, புனிதர்களையோசிலைகளையோ எதையுமே வணங்காதீர்கள் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டியவருக்கே சிலை வடிக்கப்பட்டு அவரையே வணங்க முற்படும்போது நாளடைவில் அவருக்காக கோவிலும் கட்டப்படுகிறது. தொடர்ந்து...
= பல மூட நம்பிக்கைகள் அங்கு உடலேடுக்கின்றன.
= கடவுளுக்கு நாங்கள்தான் நெருங்கியவர்கள் எங்கள் மூலமாகத்தான் கடவுளை நெருங்க முடியும் என்று கூறிக்கொண்டு இடைத்தரகர்களும் புரோகிதர்களும் உருவாகிறார்கள்.
= கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏய்த்துப் பிழைக்கவும் சுரண்டவும் ஒரு கூட்டம் புறப்படுகிறது. அந்நாட்டு அரசனையும் செல்வந்தர்களையும் தன் கைக்குள் கொண்டு வந்து புரோகிதம் என்ற பெயரில் நாட்டை ஆள்கிறது. கடவுளின் பெயரால் இறைவனின் தூதர்கள் கற்பிக்காத சடங்கு சம்பிரதாயங்கள் நுழைக்கப்பட்டு இறைவழிபாடு என்பது கடினமாக்கப்படுகிறது.
மக்கள் இந்த இடைத்தரகர்களைச்  சார்ந்திருக்கும் வண்ணம்  மூடநம்பிக்கைகள் சமூகத்தில்
பரப்பப்படுகிறது. இவ்வாறு சமூகம் இந்த இடைத்தரகர்களுக்கு அடிமையாக்கப்பட்டு அங்கு
பாமரர்களுடையதும் சாமானியர்களுடையதும் உரிமைகள் கொள்ளை போகின்றன.
= மறுபுறம் கடவுள் அல்லாத பொருட்களைக் காட்டி கடவுள் என்று கற்பிக்கப் படுவதால் மக்களின் உள்ளத்தில் கடவுளைப்பற்றிய எச்சரிக்கை உணர்வு (seriousness) அகன்று போவதால் பாவங்கள் மலிகின்றன. தன செயல்களுக்கு கடவுளிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. அதனால் பாவங்கள் மலிந்து விடுகிறது. அநியாயமும் அக்கிரமங்களும் கொலைகளும் விபச்சாரமும் பெருகி அதர்மம் தலைவிரித்து ஆடும் சூழல் உருவாகிறது.
= இவ்வாறு உண்மையான இறைமார்க்கம் போதிக்கும் ஏக இறைக் கொள்கைக்கு நேர் மாற்றமாக இறைவன் அல்லாதவற்றையும் படைப்பினங்களையும் கடவுளாக பாவித்து வணங்கும் கலாச்சாரம் இடைத்தரகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பற்பல சடங்குகளும் மூடநம்பிக்கைகளும் ஊட்டி வளர்க்கப்படுகிறது. அதுவோ அதர்மம் பெருகுவதற்கு மூலகாரணமாக அமைகிறது.
மீண்டும் தர்மம் நிலைநாட்டப்படுதல்   
இவ்வாறு அதர்மம் பரவி நாட்டை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக புதிய தூதர் ஒருவர் இறைவனால் அனுப்பப்படுகிறார். அவர் மீண்டும் மக்களுக்கு முந்தைய இறைத்தூதர் போதித்த அதே அடிப்படை உண்மைகளை நினைவூட்டி மக்களை மீண்டும் படைத்தவனை வணங்குமாறு அழைகிறார். அவர்கள் செய்து கொண்டிருக்கும் மூட பழக்கவழக்கங்களை எடுத்துரைத்து அவற்றைத் தவிர்த்து உண்மை இறை மார்க்கத்தின்பால் வருமாறு அழைக்கிறார். இப்போது என்ன நடக்கிறது
 சிந்திக்கும் மக்கள் இவரது போதனைகளால் நல்லுணர்வு பெற்று இவரை பின் தொடர ஆரம்பிக்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ 'இல்லை ,எங்கள் மூதாதையர்கள் எதில் இருந்தார்களோ அதுவே சரி, உங்கள் போதனை எங்களுக்குத் தேவை இல்லைஎன்று மறுத்து அவரை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். அதர்மத்தையும் அக்கிரமங்களையும் மூலதனமாக கொண்டு வயிறு வளர்போரும் அரசியல் நடத்துவோரும் ஆதிக்க சக்திகளும் சேர்ந்து கொண்டு இம்மக்களை இறைத் தூதருக்கும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோருக்கும் எதிராக முடுக்கி விடுகிறார்கள். ஆனால் காலப்போக்கில் இறை அருள் கொண்டு தருமம் மறுபடியும் வெல்கிறது. அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படுகிறது.
மதங்களும் இறைமார்க்கமும்
தொடர்ந்து புதிய இறைத்தூதரும் அவருடைய பிற்கால மக்களால் வணங்கப்படுகிறார். அவருக்கும் சிலைகளும் கோவில்களும் எழுப்பப்படுகின்றன. அந்த அதர்மமானது அவரது பெயரைச் சூட்டி ஒரு மதமாக உருவெடுக்கிறது. மீண்டும் ஒரு புதிய தூதர்.......என மீண்டும் அதே கதைத் தொடர்கிறது. இவ்வாறு வந்த தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்த இறைத் தூதர்தான் முஹம்மது நபி அவர்கள். அவருக்கு முன்னதாக வந்து சென்றவர்தான் இயேசு கிருஸ்து அவர்கள். இந்த தொடர் சரித்திரத்தில் என்ன நடக்கிறதுஅதர்மம் அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் அல்லது நாட்டின் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். ஆனால் உண்மை இறைமார்க்கமோ இறைவனுக்கு கீழ்படிதல் என்ற பண்புப் பெயரால் அறியப்படும்!  அது மட்டுமே படைத்த இறைவனிடம் ஏற்புடையது. மற்றவை நிராகரிக்கப்படும் என்று இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் அறிவிக்கிறது:
= 3:19. நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
= 3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்
(இஸ்லாம் என்றால் இறைவனுக்கு அடிபணிந்து வாழும் வாழ்க்கை நெறி என்று பொருள்

அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக