இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 ஜனவரி, 2017

பாவ மீட்சி கண்டு மகிழும் இறைவன்


‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.(திருக்குர்ஆன் 39:53)

 = இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 வறண்ட பாலைவனத்தில் தொலைந்து போய்விட்ட தமது ஒட்டகத்தை உறங்கியெழும்போது கண்டுபிடித்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரிதன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 5301)
பாவம் செய்த பின் வருந்திய நபித்தோழருக்கு ஆறுதல்:

  அபுல்யசர் கiஅப் பின் அம்ர் அல் அன்சாரீ (ரலி) அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்றைக் கூறினார்கள் :
ஒரு பெண் என்னிடம் பேரீச்சம் பழத்தை விலைக்கு வாங்க வந்திருந்தார். அப்போது நான், “வீட்டில் இதைவிட உயர் ரகப் பேரீச்சம் பழம் உள்ளது” என்று தெரிவித்தேன். எனவே, என்னுடன் அவர் வீட்டுக்குள் நுழைந்தார். உடனே அவரை நான் இழுத்து முத்தமிட்டுவிட்டேன்.
நடந்துபோன தவறை உணர்ந்து வருந்தினேன். 
பின்னர் நபிகளாரின் நெருங்கிய தோழரான  உமர் (ரலி) அவர்களிடம் சென்று (நடந்ததை எடுத்துக்கூறி) அது தொடர்பாக விளக்கம் கேட்டேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; (நடந்ததை) உனக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்; யாரிடமும் கண்டிப்பாகத் தெரிவிக்காதே” என்றார்கள்.
ஆனால், என்னால் பொறுக்க முடியவில்லை. எனது நெஞ்சம் கனத்துக் கொண்டே இருந்தது.
எனவே, நபிகளாருக்கு இன்னும் நெருங்கிய தோழரான அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களிடம் அது தொடர்பாக விளக்கம் கோரினேன். அவர்களும், “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்; (நடந்ததை) உனக்குள்ளேயே மறைத்துவைத்துக்கொள்; யாரிடமும் கண்டிப்பாகத் தெரிவிக்காதே” என்றார்கள்.
அதன் பின்னரும் என்னால் பொறுக்க இயலாமல்போகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினேன். 
அதற்கு நபியவர்கள், “ஒருவர் அல்லாஹ்வின் வழியில் புறப்பட்டுச் சென்றிருக்க, நீர் இங்கே இருந்துகொண்டு, அவருடைய குடும்பத்தாரிடம் இது போன்று (ஒழுங்கீனமாக) நடந்துகொள்வதா?” என்று கேட்டார்கள். அப்போது நான் நரகவாசிகளில் ஒருவனாகிவிட்டேனோ என்று எண்ணி வருந்தினேன்.
இஸ்லாத்தை ஒருவர் எப்போது ஏற்கிறாரோ அவர் அதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் அந்த கணமே மன்னிக்கப் பட்டு விடுகின்றன என்று  நபிகளார் ஒருபோது கூறியிருந்ததை நான் அறிவேன். அந்த வாய்ப்பு இப்போது கிடைக்காதா என்று ஏங்கினேன். ஆம், அப்போதுதான் இஸ்லாத்தில் இணைந்திருக்க வேண்டும் என்றுகூட விரும்பினேன்.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் தமது தலையைத் தாழ்த்தியவாறு இருந்தார்கள். பின்னர் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஒரு இறை வசனத்தைக் கொண்டு) வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அபுல்யசர் எங்கே?” என்று கேட்டார்கள். நான் வந்தேன்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடும். படிப்பினை பெறுவோருக்கு இதுவொரு நினைவூட்டல் ஆகும்” எனும் திருக்குர்ஆன் வசனத்தை (11:114) என்னிடம் ஓதிக் காட்டினார்கள்.
அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இது அவருக்கு மட்டும் பிரத்தியேகமானதா? அல்லது பொதுவாக மக்கள் அனைவருக்கும் பொருந்துமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “பொதுவாக மக்கள் அனைவருக்கும் உரியதுதான்” என்றார்கள். (நூல்: தஃப்சீர் தபரீ)
(தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம், பாகம் - 4, 11:114,115 வசனங்களின் விரிவுரையிலிருந்து)
11:114. (நபியே!) பகலின் இரு முனைகளிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடும். படிப்பினை பெறுவோருக்கு இதுவொரு நினைவூட்டல்ஆகும்.
11:115. மேலும், நீர் பொறுமை காப்பீராக. நிச்சயமாக அல்லாஹ், நன்மை செய்வோரின் பிரதிபலனை வீணாக்கமாட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக