இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 ஜனவரி, 2017

இசங்களை முறியடிக்கும் இஸ்லாம்!


யானையை ஆராய்ந்த குருடர்கள் 
 யானையை தன் கையால் தடவி உணர்ந்த ஆறு குருடர்களின் கதையை நாம் அறிவோம்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுப்பினை தடவிப் பார்த்துவிட்டு யானை என்றால் இன்னதுதான் என்று கூறினார்கள். ஒருவர் யானை என்பது தூண் என்றார். மற்றொருவர் யானை என்பது மரக்கிளை, இன்னும் ஒருவர் யானை என்பது கயிறு என்றும் கூறிய கதையை நாம் அறிவோமே.
அதைப் போன்றதுதான் மனிதனை பற்றியும் அவன் வாழும் பிரபஞ்சத்தின் பின்னணி பற்றியும் சரியான புரிதல் இல்லாதவர்கள்  மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கூறுவது!  

ஆம்! சார்லஸ் டார்வின், சிக்மண்ட் பிராய்டு, ஹெகல், கார்ல் மார்க்ஸ் போன்ற மேற்குலக சிந்தனையாளர்களும் இன்ன பிறரும் மனிதனின் குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்காக அவனை பல்வேறு  கோணகளில் சிந்தித்தனர். அவர்களின் இந்த தேடல் எங்கு கொண்டு சென்றது என்பதைப் பாருங்கள்!

= ஒருவர் உடலும் உயிரும் கலந்த மனிதனின் வெறும் உடலைபற்றி மட்டும் சிந்தித்ததால், அதன் முடிவும் உடலை மையமாக வைத்தே இருந்தது.

  = மற்றொருவர் நம் உடல் உறுப்பில்  ஒன்றான வயிற்றை மையமாகக் கொண்டு சிந்தித்ததால், மனிதன் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் பசிதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். ஆகவே இந்த பசியை போக்கிவிட்டால் அனைத்து சிக்கல்களும் தீர்ந்துவிடும் என்றார் அவர். 

= மற்றொருவரோ, மனிதனுடைய உருவத்திற்கும்,அவனுடைய பாவனைக்கும் ஒத்த மிருகம் ஒன்றைக்காட்டி, அந்த மிருகத்தில் இருந்துதான் மனிதன் பரிணாமம் பெற்றான் என்றார்.

= இன்னுமொருவரோ, மனிதனின் பாலியல் உணர்வுகளை பற்றி சிந்தித்து, மனிதனுடைய  அனைத்து தேவைகளுக்கும் காரணம் அவனது காம உணர்வுதான் என்றார். இந்த பாலியலின் மீதுள்ள கட்டுபாடுகளை நீக்கிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.

 இன்னும் ஒருவரோ மனிதனின் உடல் மற்றும் அவனுடைய இன்னபிற தேவைகளைக்  காட்டிலும் ஆன்மீகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சிந்தித்ததன் விளைவாக மனிதன் ஆன்மீகத்திற்குள் புகுந்துவிட்டால் அனைத்தும் சீராகிவிடும் என்றார்..

இவ்வாறு சிந்தித்தவர்கள் தாங்கள் அடைந்த முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு வாழ்க்கை சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் இயற்றினார்கள். 

இன்னும் சிலர் நாட்டை, மொழியை, இனத்தை அடிப்படையாகக்கொண்ட கோட்பாடுகளையும் வகுத்தார்கள். அவற்றை உருவாக்கியவர்களின் பெயர்களோடு இணைத்து 'இசங்களாக' அறிமுகப் படுத்தினார்கள். அவற்றை மக்களிடையே பிரச்சாரம் செய்து அவற்றின்பால் மக்களை ஈர்த்தார்கள். மனிதவாழ்வின் தற்காலிக பாதிப்புகளுக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கும்  உள்ளான மக்கள் பலரும் அவற்றுக்கான தீர்வு தேடியும் தற்காலிக இன்பங்களுக்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் அவற்றின்பால் ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளைப் போல் அவற்றில் சென்று விழுந்தார்கள். இன்னும் விழுந்துகொண்டு இருக்கிறார்கள்!

 மனிதன் என்ற அற்புத ஜீவி 

ஆனால் அதிபக்குவம் வாய்ந்த அறிவாற்றலும் நுணுக்கங்களும் தன்னகத்தே கொண்ட தானியங்கி இயந்திரம் போன்றது மனித உடல். எந்த ஒரு மனிதனாலும் மனிதக் குழுக்களாலும் புரிந்துகொள்ள முடியாத சிக்கல்கள் நிறைந்தது அது. இப்பரந்துவிரிந்த மாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இந்த மனிதன் என்ற அற்புத ஜீவியை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு இயங்கி வருவதையும் நாம் காணலாம். உதாரணமாக நாம் வாழும் இந்த பூமியின் சுழற்சி வேகம், சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம், இரவுபகல் மாற்றம், காற்றுமண்டல அழுத்த அளவு போன்ற நாம் அறிந்தும் அறியாததுமான பற்பல காரணிகள்  கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளதால்தானே இங்கு மனிதவாழ்வு என்பது சாத்தியமாகிறது? இவற்றில் ஏதாவது மீறப்பட்டாலும் அடுத்த நொடியே அனைத்தும் தகர்ந்துவிடும் என்பதை நாம் அறிவோம். அப்படியானால் மனிதன் என்ற பேரற்புதத்தைப் படைத்து அவனுக்காகவே இம்மாபெரும் பேரண்டத்தை உருவாக்கி அவனுடைய  தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து வரும் அந்த படைப்பாளன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சித்தாந்தத்தை நாம் புறக்கணிக்க முடியுமா?

இறைவனால் படைக்கப்பட்ட நாம் அந்த சர்வவல்லமை கொண்டவனும் நுண்ணறிவாளனும்  ஆன இறைவன் வழங்கும் வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு அற்பமான அறிவாற்றல் கொண்ட மனிதர்கள் உருவாக்கிய சித்தாந்தங்களின் பின்னால் செல்வது நம் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வையும் தராது. நமக்கு மோட்சத்தையும் பெற்றுத் தராது.

தான் எவ்வாறு, எதற்கு  இவ்வுலகில் வாழவேண்டும் என்பது பற்றிய அடிப்படை அறிவும் விழிப்புணர்வும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அத்தியாவசியமானதாகும். அதற்கான குறைகளற்ற பரிபூரணமான ஒரு வழிகாட்டுதலை இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவன் எவனோ அவனால் மட்டுமே வழங்க முடியும் என்பதே உண்மை. ஆம்! மனிதனின் வாழ்விற்கு ஒரு அர்த்தமும், வழிமுறையும், ஒரு இலக்கையும் கற்பித்தது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களும் அவர்கள் மூலமாக அனுப்பட்ட வேதங்களுமே! அவ்வாறு இறைவனால் வகுத்து வழங்கப்படும் வாழ்வியல் நெறிமுறைகளையே நாம் சமயம் அல்லது மதம் என்கிறோம். அதுவே இன்று அரபு மொழியில் இஸ்லாம் என்று  அறியப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இன்னொரு பொருள் கீழ்படிதல் என்பதாகும். அதாவது இறைவனின் எவல்விலக்கல்களை ஏற்று வாழும்போது பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்.

ஏன் இஸ்லாம்?

ஒரு பொருளை பற்றிய முழுமையான அறிவு அதை தாயரித்தவனுக்குத்தானே இருக்கமுடியும்? நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உங்களுடைய வாகனத்தை சற்று கவனித்து பாருங்கள், அந்த வாகனத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் உபரி பாகங்களாக அந்த வாகனத்தின் தாயரிப்பாளர் எதை பரிந்துரை செய்கிறாரோ அதை அப்படியே நாம் பின்பற்றுகிறோம் அல்லவா? அதுவும் எந்த அளவுக்கென்றால் அந்த வாகனத்தின் சக்கரத்திற்கு காற்றழுத்தம் எவ்வளவு புள்ளிகள் இருக்க வேண்டும் என்று வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைகிறாரோ அதை அப்படியே மிகச்சரியாக பின்பற்றுகிறோம்.
 அதை விடுத்து நாம் “இது என்னுடைய வண்டி, அவன் யார் என்னுடைய வண்டிக்கு  இத்தனை புள்ளிகள்தான் காற்றழுத்தம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு?”என்று நாம் யாரும் நினைப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. ஏனென்றால் நாம் அந்த வண்டியின் உரிமையாளர் மட்டுமே தவிர அந்த வண்டியை பற்றிய முழு அறிவு நமக்கில்லை என்பதை நன்றாக அறிந்திருக்கிறோம். ஆக யார் இந்த வண்டியை தயாரித்தார்களோ அவர்கள் சொல்வதை கேட்டு அதன்படி செயல்பட்டால்  மட்டுமே வண்டி நன்றாக இயங்கும் என்பதை நாம் அறிந்திருகின்றோம்.

 ஒரு சின்னஞ்சிறிய பழுது பார்ப்பதாக இருந்தாலும் கூட அந்த வாகனத்தின் தயாரிப்பாளர் சொல்வதை அப்படியே நம்பி செயல்படும் நாம், நம்முடைய வாழ்க்கை விஷயத்தில் அதே அணுகுமுறையை ஏன் பின்பற்ற மறுக்கிறோம்? செயலாலும் சிந்தனைத்திறனாலும் நுணுக்கத்தாலும் மனிதன் என்ற அற்புதத்தை மிஞ்சிய வேறொரு இயந்திரம் இப்புவியில் இல்லை என்பதை அனுபவபூர்வமாகவே அறிவீர்கள். இந்த அதிபக்குவம் வாய்ந்த மனிதன் என்ற இயந்திரத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவன் அதைப் படைத்து பரிபாலிப்பவனான இறைவனன்றி வேறு யார்?

புறக்கணிக்க முடியுமா? 

நம்மைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் நம்மை இடையறாது பரிபாலித்தும் வருகின்ற அந்த இறைவன் தனது வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் மனித குலத்திற்கு அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அந்த இறைத்தூதர்கள் தத்தமது காலகட்டங்களில் தத்தமது மக்களிடையே முன்மாதிரி புருஷர்களாக நின்று இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியும் சென்றுள்ளார்கள்.
அந்த வரிசையில் நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்ட்டவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர்கள் மூலமாக அனுப்பபட்ட வேதமே திருக்குர்ஆன்.

 இப்படிப்பட்ட உறுதியான வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட்டு நாமாகவே தான்தோன்றித்தனமாக வாழ்வதும் நம்மைப் போன்ற அற்ப அறிவுகொண்ட மனிதர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கைப் பாதையை ஏற்பதும் இந்த பூமியில் பற்பல குழப்பங்களுக்கும் அழிவுகளுக்கும் அதர்மத்திற்குமே வழிவகுக்கும். மேலும் இறைவனைப் புறக்கணித்ததற்காக அவனுக்கு நன்றிகேடு செய்ததற்காக மறுமையில் அவனது தண்டனைகளையும் பெற்றுத்தரும் என்பதே உண்மை!

= இறைவனின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (திருக்குர்ஆன் 3:83)

ஆக, படைத்தவனான ஏக இறைவன் ஒருவன் மட்டுமே மனிதனுக்கும் இன்னபிற படைப்பினங்களுக்கும் எது சிறந்தது என்பதைப் பக்குவமாக அறிந்தவன். அவை அனைத்தின் நோக்கங்களையும் அவற்றின் உரிமைகளையும் செயல்பாடுகளையும் பற்றிய முழுமையான அறிவு அவனிடம் மட்டுமே உள்ளது. மட்டுமல்ல, நமது இந்தக் குறுகிய வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்குரிய பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ள இறைவன் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று நமது செயல்பாடுகளை விசாரிக்கவும் செய்வான். நமது பாவபுண்ணியங்கள் அடிப்படையில் சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ நமது நிரந்தர வாழ்விடங்களாக வழங்கவும் உள்ளான். அந்த இறைவன் வழங்கும் வாழ்க்கை நெறியை ஏற்று வாழாதோர் இம்மையில் தற்காலிக சுகங்களை அடைந்தாலும் மறுமையில் பேரிழப்பையே அடைகிறார்கள் என்பதை இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் உறுதிபடக் கூறுவதைக் காணுங்கள்:
=  இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.(திருக்குர்ஆன் 3:85)
= . அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! .(திருக்குர்ஆன் 61:9)
நன்றி: www.invitetogod.com
தமிழில்: காஜா மொய்தீன்
==================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக