இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 ஜனவரி, 2015

மத நல்லிணக்கம் எவ்வாறு?

Sabka Ghar in Delhi is setting example for building communal ... இந்திய அரசியல் சாசனம் ஒருவர்  தன்னுடைய மதத்தை பின்பற்றுவதையும் பிறருக்கு எடுத்து வைப்பதையும், பிரச்சாரம் செய்வதையும்  தடுக்கவில்லை, ஆனால் வலுக்கட்டாயமாக பிறர்மீது திணிப்பதைதான் கண்டிக்கிறது. மத நல்லிணக்கம் உண்டாவதற்கு அனைத்து மதத்தவரும் இதனை கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு மனிதர் தனது மதமல்லாத வேறொன்றை பின்பற்றுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை வெறுப்பது, அவரிடம் நீதமின்றி நடந்து கொள்வது எந்த ஒரு மதத்தின் மரபுகளுக்கும் எதிரானதாகும். ஒன்றே மனித குலம் ஒருவனே நம் அனைவருக்கும் இறைவன் என்பது இஸ்லாம் கற்பிக்கும் அடிப்படைக் கொள்கையாகும். அந்த அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னும்போது சக மனிதர்களின் கொள்கைகளோடு முரண்பாடு உள்ளமைக்காக அவர்களை வெறுப்பது என்பது மிகப்பெரும் தவறே!
           
முஸ்லிம் எப்படி மத நல்லிணக்கம் பேண  வேண்டும்?
முஸ்லிம் என்றால் இறைவன் கற்பிக்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்பவர். அவரைப் பொறுத்தவரையில் வணக்கத்திற்கு உரியவன் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் மட்டுமே என்பதைக் கொள்கையாகக் கொண்டவர். நபிகள் நாயகத்தை தன வாழ்க்கை முன்மாதிரியாக அவர் ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும் அவருக்கு முன்வந்த அனைத்து இறைத் தூதர்களையும் இறைவேதங்களையும் மதித்தே ஆகவேண்டும். (அவை பிற்காலங்களில் சிதைந்து காலாவதியாகி விட்டது வேறு விஷயம்)
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நபிகளார்தான் முன் மாதிரி. நபிகளார் வாழ்ந்த காலத்திலும் அவருடய இரத்த சொந்தங்கள் அறியாமையினாலும், மனோ இச்சையினாலும் மனம் போன முறையில் பல தெய்வங்களையும், சிலைகளையும் வணங்கி வந்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கண்ணியமான முறையில் படைத்த  இறைவனை வழிபட வேண்டிய அவசியத்தையும், அதை மறுக்கும் பட்சத்தில் மறுமையில் நடக்கும் விளைவுகளையும் எடுத்து சொன்னார்களே தவிர, யாரையும் நிர்பந்திக்கவோ, மிரட்டவோ இல்லை.
  தன்னை வளர்த்த பெரிய தந்தை மரணப் படுக்கையில் இருக்கும் போது  இறந்தபின் அவர் நரகத்திற்கு சென்றுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் அவரிடம் கெஞ்சிதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள கூறினார். நபிகளார் துக்கத்தில் மிகவும் உழன்ற போது, "நபியே உமது பணி இறைச்செய்தியை எடுத்துச் சொல்வது மட்டும்தான்." என எச்சரிக்கையும் விடுத்தான் இறைவன் என அறிகிறோம். 
= (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 2:256) 

நபிகளார் வாழ்வில் நடந்த சில உதாரணங்கள்:

ஒரு யூதனின் பூத உடல் அடக்கம் செய்வதற்காக வீதியில் செல்லும் போது, நபிகள் நாயகம் மரியாதைக்காக எழுந்து நின்றார் என்பது வரலாற்று பதிவு.

கிருஸ்தவ பாதிரிமார்கள் ஒரு வேலை நிமித்தம் பள்ளி வாசலில் தங்கி இருந்போது அவர்களின் வணக்க வழிபாடுகளை செய்வதற்கு அனுமதி அளித்தார். 

இரு சமூகத்துக்கு இடையே ஏதேனும் காரணத்துக்காக போர் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் அப்போதும் கூட மற்ற சமூக குருமார்களை தாக்குவதையோ, வழிபாட்டு தலங்களை இடிபதையோ நபிகளார் தடுத்திருக்கின்றார்கள். இதுவெல்லாம்தான் மத நல்லிணக்க செயல்கள். இங்கே மத துவேசம், மத வெறி போன்றவற்றிற்கு இடம் இல்லை. பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள  மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும். 

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம்:
ஒரு ஹிந்து நண்பரோ, புத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு முன்பே கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உதாரணமாக இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஏக இறைவன் அல்லாதவற்றுக்காக  படைக்கப்பட்டவையும் இறைவனின் பெயர் கூறி அறுக்கபாடாத பிராணிகளின் மாமிசங்களும் பன்றி மாமிசமும் தடை செய்யப்பட்டவை என்பதை நாம் அறிவோம். இதை நம் மாற்றுமத நண்பர்களுக்கு முன்பே தெரியப்படுத்தினால் அவர்கள் தங்கள் பண்டிகைகளின் போது இந்தவகையான உணவுகளை நமக்கு வழங்குவதைத் தவிர்ப்பார்கள்.

இதன் படி நம் சகோதர சமூகத்தவருக்கு நமது கொள்கைகளைப்பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ள செய்வதன் மூலமும், அவர்களின் கொள்கைகளை நாம் அறிந்து கொள்வது மூலமாகவும் சமூகத்தில் மத நல்லிணக்கம் பேண முடியும். இந்த புரிந்துணர்வு இல்லாத பட்சம் சுயநல அரசியல்வாதிகளும் சமூகவிரோதிகளும் மத  துவேஷத்தை மக்களுக்கிடையில் விதைத்து பகைமை மூட்டி கலவரங்களும் அதன்வழி தங்கள் சுயநல வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

எம்மதமும் சம்மதமா?
அதேவேளையில் மேற்படி புரிந்துணர்வை உண்டாக்க முயற்சிக்காமல் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் கொண்ட மதங்களையும் கொள்கைகளையும் எல்லாமே ஒன்று அனைத்துமே சம்மதம் என்று போலியாகக் கூறுவது நயவஞ்சகத்தையும் குழப்பங்களையுமே விளைவிக்கும். மதநல்லிணக்கத்திற்கு ஊறுதான் விளைவிக்கும்.

நன்றி: நியாஸ் அஹமது, USA
=========== 
எம்மதமும் சம்மதமா?
https://www.quranmalar.com/2012/11/blog-post_9814.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக