இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 பிப்ரவரி, 2014

காதலுக்கும் காமத்துக்கும் வரம்புண்டா?


பசி, ருசி போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்குரிய அவையவங்களையும் மனித உடலில் அமைத்துள்ளான். எனவே இந்த உணர்வுகளை மனிதன் தான் விரும்பியவாறு தணித்துக்கொள்வதில் தவறேது?
. இந்த கேள்வியில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது? இதை நாம் ஆராய்ந்தே ஆக வேண்டும். காரணம் நாம் ஒரு சமூகமாக வாழ இது பற்றிய தெளிவு மிகமிக முக்கியம். இது தெளிவாகாத வரை தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் குழப்பமும் அமைதியின்மையும்தான் மிஞ்சும். அதைத்தான் இன்று நாம் கண்டுகொண்டு இருக்கிறோம்.
பசி மற்றும் தாகம் இவற்றை தணிப்பது போன்றதல்ல பாலியல் உணர்வுகளை தணித்துக்கொள்வது என்பதை நாம் உணர வேண்டும். பசி தாகம் இவற்றை தணிக்கும்போது உண்டாகும் விளைவுகள் அந்த மனிதனை மட்டும் பாதிக்கும். ஆனால் பாலியல் உணர்வுகளைத் தணிக்கும் போது உண்டாகும் விளைவுகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை முதலில் இன்னொரு நபரை மட்டுமல்ல, அவ்விருவர் சார்ந்த குடும்பத்தையும் சூழவுள்ள சமூகத்தையும் கண்டிப்பாக பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். அது சம்பந்தப்பட்ட இருவரின் இசைவோடு நடந்தேறியாலும் சரியே!
தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் - தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த பாலியல் தொடர்புள்ள செயல்பாடுகளும்!
உதாரணமாக கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் வழங்கப் பட்டால் குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலையும். கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளை உறவுகள் அர்த்தமற்றவையாகிப் போகும். பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுத்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படும். அங்கு பெண்கள் அநியாயமாக கற்பத்தை சுமந்து கைவிடப் படுவார்கள். சிசுக்கொலைகள், அனாதைகள், தந்தைகள் இல்லாப் பிள்ளைகள், பொறுப்புணர்வு இல்லா பெற்றோர்கள் போன்றோர் அதிகரிக்க அதிகரிக்க சுயநலமும் கொலையும் கொள்ளையும் மலிந்து அறவே ஒழுக்கமில்லாத சமூக சூழல் அமையும்.
எனவே நாம் வாழும் சமூகத்தில் அமைதி வேண்டும் என்று விரும்புவோமேயானால் அங்கு பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. நமது குடும்பங்களில் அல்லது சமூகத்தில் தீய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தெளிவான விதிமுறைகளும் தேவைப்படுகின்றன, அவை முறையாக பின்பற்றப்படவும் வேண்டும்.
சரி, இந்த விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது?
ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் இருபாலார்க்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள்,  போன்றவற்றை முழுமையாக அறிந்த ஒருவரால்தான் இவ்விதிகளை நிர்ணயிக்க முடியும். அப்போதுதான் அவை குறைகள் இல்லாததாக இருக்கும். இவற்றைப் பற்றி அரையும்குறையுமாக அறிந்தவர்களும் அறவே அறியாதவர்களும் சட்டங்கள் இயற்றினால் அவற்றின் விளைவுகள் கண்டிப்பாக விபரீதமாகவே இருக்கும்.
 சரி, இப்பொறுப்பை தனி நபரிடமோ ஒரு குடும்பத்திடமோ அல்லது இனம், மொழி, நிறம், தொழில், மற்றும் இன்னபிற அடிப்படையிலான சங்கங்களிடமோ குழுக்களிடமோ கட்சிகளிடமோ அல்லது ஒரு ஊர் நிர்வாகத்திடமோ அல்லது நாட்டை ஆள்பவர்களிடமோ விட்டால் என்ன ஆகும்? அறியாமையும் அதிகாரமும் ஒருசேரப் பெற்றவர்கள் சட்டங்கள் இயற்றினால் அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! அவற்றில் சிலதைத் தான் இன்று நாம் இங்கு அனுபவித்து வருகிறோம்.
ஆக, இந்த சட்டங்களை இயற்றும் தகுதி இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனான இறைவனுக்கே உண்டு என்பதை அறியலாம். இறைவன் மட்டுமே அவனது படைப்பினங்களையும் அவர்களின் தேவைகளையும் பரிபூரணமாகவும் மிகமிக நுணுக்கமாகவும் அறிந்தவன். முக்காலத்தையும் முழுமையாக உணர்ந்தவன். யாருக்கு எவ்வளவு உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு ஞானம் அவனுக்கு மட்டுமே உள்ளது, அந்த சர்வஞானமும் சர்வ வல்லமையும் கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அறவே குறைகள் அற்றவை.
ஆக, ஆண் பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல் விலக்கல்களை பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.  அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும். அந்த வாழ்க்கைத் திட்டமே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. அவ்வாறு நம் இறைவனின் பரிந்துரைக்கேற்ப வாழ்வோருக்கு அதற்கு பரிசாக மறுமையில் சொர்க்கமும் வழங்கப்படுகிறது.

சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்......?
இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.
5:48.மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;  அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

(அல்லாஹ் என்றால்  வணக்கத்துக்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக