நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பாவபுண்ணியங்களை எவ்வாறு தீர்மானிப்பது?
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலைப் பாவமாகவோ புண்ணியமாகவோ தீர்மானிக்க
முடியுமா? அல்லது ஒரு சிலர்
கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா? அல்லது
நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா? அல்லது நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும்
ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? king is always
right! –(அரசன்
எப்போதும் சரியே!) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம்
படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா? அல்லது நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி
என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா?
இப்படி எந்த வழியில் நாம் நன்மை – தீமை அல்லது பாவம் – புண்ணியம் பற்றி ஆராய்ந்தாலும்
நமக்கு மிஞ்சுவது குழப்பமே என்பதை உணரலாம். எனவே இந்த விடயத்தில் குழப்பமற்ற
தெளிவான முடிவுக்கு வர ஒரே வழிமுறை இதுதான்:
யார் இவ்வுலகிற்கும் அதில் உள்ளவற்றிர்க்கும் சொந்தக்காரனோ அதிபதியோ அவன் எதை
நமக்கு நன்மை என்றும் அல்லது நமக்குத் தீமை என்றும் சொல்கிறானோ அதுவே உண்மையிலும்
உண்மை. அவன்தான் இப்பெரண்டம் அனைத்தையும் அவற்றில் உள்ள சிறிதும் பெரிதுமான
அனைத்து படைப்பினங்களையும் படைத்து இயக்கிப் பரிபாலித்து வருபவன். அவன் மட்டுமே
முக்காலத்தையும் உணர்ந்தவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் பற்றிய
முழுமையான அறிவுள்ளவன். அவனது அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. மனிதனுக்கும் மனித
குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது
கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. எனவே நம்
பரிபாலகன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும்
எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத்
தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை.
அது மட்டுமல்ல, இந்தக் குறுகிய தற்காலிகமான வாழ்வை ஒரு பரீட்சைக் களமாக இறைவன்
அமைத்துள்ளதையும் நாம் மறந்து விடக்கூடாது.
62:2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச்
சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
இந்தப் பரீட்சைக் களத்தில் அந்த இறைவன் எதைச் செய் என்று
சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது. அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே
பாவம் என்பது! மாறாக எந்த மனிதனும் மனிதர்களின் குழுக்களும் நீதிமன்றங்களும்
சட்டசபைகளும் பாராளுமன்றங்களும் இன்ன பிற ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களும்
பாவ-புண்ணியங்கள் எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. காரணம் இறுதித் தீர்ப்பு
நாளின் அதிபதி இறைவன் மட்டுமே. அன்று அவனே நமது வாழ்க்கையில் நாம் செய்த
புண்ணியங்களையும் பாவங்களையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ
நரகத்தையோ விதிக்க இருக்கிறான்.
ஆக, அந்த இறைவனுக்கு மட்டுமே
நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற முழுமையான அறிவு உள்ளது. அவனுக்கு மட்டுமே எது
புண்ணியம் எது பாவம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு
அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறலாம்.
மறுமை வாழ்விலும் அவன் நமக்குப் பரிசாக வழங்கும் சொர்க்கத்தை அடையலாம்.
இவ்வுண்மையை மறுத்து நம் மனோ இச்சைகளுக்கும் முன்னோரின் பழக்கவழக்கங்களுககும்
இன்னபிற சக்திகளுக்கும் செவிசாய்த்து நாம் வாழ்ந்தால் மிஞ்சுவது இவ்வுலகில்
குழப்பமும் அமைதியின்மையும் கலவரங்களுமே. மறுமையிலோ இறைவனின் கோபத்தையும் அவனது
தண்டனையாக நரகத்தையுமே அடைய நேரிடும்.
வாழ்வில் வெற்றி அடைய ஒரே வழி
எனவே இறைவனின் பார்வையில் எது நன்மை எது தீமை என்பதை
அறிந்து அதன்படி வாழ விழைபவர்கள் இறைவனின் இறுதி வேதத்தையும் அவனது இறுதித்
தூதரின் அறிவுரைகளையும் அணுக வேண்டும் ஏகனாகிய இறைவனை மட்டுமே
வணக்கத்துக்குரியவனாகவும் அவனது வேதத்தையும் தூதரையும் வாழ்வின் வழிகாட்டிகளாகவும்
ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.ஏனெனில் இறுதித் தீர்ப்பு
நாளின் போது அவன்தான் நீதி வழங்குவான்
இறுதித் தீர்ப்பு
நாளின் அதிபதி (இறைவனே) (திருக்குர்ஆன் 1: 4)
இந்த அடிப்படையில் நன்மை தீமைகளை - பாவ புண்ணியங்களை பிரித்தரிவிக்கக்
கூடிய (Criterion) திருக்குர்ஆன் வழங்கப் பட்ட மாதமே ரமலான். இந்த மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக நோன்பு நோற்பதை இறைவன்
கடமையாக்கி உள்ளான்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான்
மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான
சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை -
தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;..... (திருக்குர்ஆன்
2:185)
(பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு: மேற்படி பதிவைப் பற்றி மட்டும் பின்னூட்டம்
இடவும். இதில் குறை காண்பவர்கள் இதற்கு மாற்று ஏற்பாடாக தங்கள் கைவசம்
என்ன
வைத்துள்ளார்கள் என்பதையும் முன்வைத்து தங்கள் கருத்துக்களைக் கூறவும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக