இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 மார்ச், 2020

உங்கள் பரீட்சைக் கூடத்தை அறிந்து கொள்ளுங்கள்


Image result for exam hallஉங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய – அரசாங்கத் தேர்வை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்வீர்கள்? அது நடக்கக்கூடிய இடத்தை முன்கூட்டியே அடைவீர்கள். அங்கு பேணவேண்டிய ஒழுங்குகளை அறிந்து அதில் கவனமாக இருப்பீர்கள். பரீட்சை நேரத்தின் வரையறைக்குள் உங்கள் முழு கவனமும் பரீட்சையை எப்படியாவது வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும் என்பதிலேயே இருக்கும் அல்லவா?
இப்போது இந்த தற்காலிக உலகம் என்ற பரீட்சைக் கூடத்தை சற்று நினைத்துப்பாருங்கள். மரணத்திற்குப் பிறகு வர உள்ள உங்கள் எதிர்காலம் – அதுவும் முடிவில்லா வாழ்விடம் - சொர்கத்திலா அல்லது நரகத்திலா என்பதைத் தீர்மானிக்கும் பரீட்சைக் கூடம் இது.
=  "இறைவன் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஸ்தவரித் (ரலி)  நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ இப்னுமாஜா
அப்படியானால் இந்த விடயத்தில் அலட்சியம் காட்டமுடியுமா?
பரீட்சைக் கூடத்தின் இயல்புகள்
உங்களை மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் இந்த பூமி என்ற பரீட்சைக் கூடத்தில் நுழைவிக்கப்பட்டு உள்ளீர்கள். உங்களைக் கேட்காமலே இதிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். இதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனுபவப்பூர்வமாகவே இதை அன்றாடம் காண்கிறீர்கள். எனவே உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கீழே சொல்லப்படும் விடயங்களை உண்மை என புரிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கைப் பரீட்சை வெற்றிகரமாக அமையும். மறுத்தால் அதன் கொடிய விளைவுகளுக்கு ஆளாகவும் நேரிடும்.
மரணம் வாழ்வும் இந்தப் பரீட்சைக்காகவே
= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2 ) 
இறுதி வெற்றி எது?
 = ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்  அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்.  இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
ஷைத்தான் பரீட்சையின் அங்கம்:
= இங்கு நேரான பாதையை மக்களுக்குக் காட்டித்தர இறைவன் தனது தூதர்களையும் தன் வேதங்களையும் அனுப்புகிறான். அதே நேரத்தில் இது ஒரு பரீட்சை என்ற காரணத்தால் இதில் ஷைத்தான் என்ற ஒரு கெட்ட சக்திக்கும் நம்மோடு வாழ அனுமதி வழங்கியுள்ளான்.
மதிப்பெண்கள் இறைவன் இடுவதே:
= இங்கு இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் ஆகும். எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே தீமை அல்லது பாவம் ஆகும். அவற்றை இறைவனின் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிகிறோம்.
ஏற்றதாழ்வுகள் முரண்பாடுகள் இங்கு நியதி:
= இங்கு நல்லவையும் தீயவையும்  நியாயமும் அநியாயமும் செல்வமும்  வறுமையும்  நம்  முன் மாறிமாறி வரும்.  நல்லோர்களுக்குத் துன்பமும் கஷ்டமும் தீயோர்களுக்கு   இன்பமும்  மகிழ்ச்சியும் கிடைப்பதெல்லாம்  இங்கு சகஜம். அவ்வாறு நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் இடமே இவ்வுலகம்.
பரீட்சை அவனது டிசைன்
= யார் எவ்வாறு வேண்டுமானாலும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் பரீட்சிக்கப்படலாம். அவற்றின் நியாயம் அநியாயம் என்பது நமது சிற்றறிவுக்கு எட்ட வேண்டும் என்பது இல்லை. நீர்க்குமிழிகள் போல் வாழ்ந்து மறையும் மனிதர்களின் தீர்ப்புக்காக இறைவன் காத்திருக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.
அதிபக்குவம் வாய்ந்த பரீட்சையாளன்
= இந்த பரீட்சையை எவ்வளவு பக்குவமாக நடத்துவது என்பதை மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவுநுணுக்கமும் அளவிலா ஆற்றலும் நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களின் பக்குவமான அமைப்பிலும் அவற்றின் குறையற்ற இயக்கத்திலும் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அற்பஜீவிகளான நம்முடைய சிற்றறிவுக்கு அறவே புலப்பட வாய்ப்பில்லை.
அற்பமானதே மனித அறிவு
= அவன் எதுவரை அனுமதிக்கிறானோ மற்றும் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ அவை மட்டுமே நமது அற்ப அறிவு என்பது. அதை வைத்துக்கொண்டு அந்த இறைவனின் அறிவையும் ஆற்றலையும் எடைபோடுவதும் அவனது திட்டத்தில் குறைகாண்பதும் மனிதனின் அறியாமையின் வெளிப்பாடே! மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அற்பமான தவணையில் தோன்றி மறையும் அற்பத்திலும் அற்பமான மனிதன்  ஆதியும் அந்தமும் இல்லாதவனும் அளவிலா அறிவும் ஆற்றலும் கொண்டவனும் ஆன இறைவனுக்கு அவன் ஏற்பாட்டுக்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

நோயும் கஷ்டங்களும் இந்த பரீட்சையின் பாகங்களாக வரும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளான். அவற்றைப் பொறுமையோடு எதிர்கொள்ளும் புண்ணியவான்களுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது என்பதையும் இறைவன் தெளிவுபடுத்தியுள்ளான்.
= 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:155-157) 
============= 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
அல்லாஹ் என்றால் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக