இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஜூலை, 2017

உண்மைகளைப் பின்பற்றுவோரும் ஊகங்களைப் பின்பற்றுவோரும்

Related image
உண்மைகளைப் பின்பற்றுவோர் நிலை
மனிதர்களைப் பற்றி அவர்களையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்தவன் என்ன கூறுகிறானோ அதுவே முழுமையான உண்மை ஆகும். அவனுக்கு மட்டுமே மனிதனைப் பற்றிய முழுமையான அறிவும் மனித வாழ்வின் நோக்கமும் ஆரம்பமும் முடிவும் என அனைத்தும் பக்குவமாகத் தெரியும். எனவே அந்த இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் பின்பற்றி வாழ முற்படுவோருக்கு வாழ்க்கை ஒரு உறுதியான அஸ்திவாரத்தின் மேல் அமைகிறது.
கலிமா தய்யிபா  என்றால் இஸ்லாத்தின் மூலமந்திரமான லா இலாஹ இல்லல்லாஹ்  என்பதைக் குறிக்கும். அந்த நல்வாக்கியத்தின் பொருள் வணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர யாருமே இல்லைஎன்பது. இதன் சிறப்பைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:      
 (கலிமா தய்யிபா எனும்) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை (நபியே!)  நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
  அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான் (திருக்குர்ஆன் 14:24.-25)
அதாவது இந்த உறுதிமொழியை அடிப்படையாகக்கொண்ட உண்மையான இறைக்கோட்பாடும், முறையான மறுமை நம்பிக்கையும் மக்கள் உள்ளத்தில் விதைக்கப் படுமானால் அது சமூகத்திற்கு அள்ளி வரும் நன்மைகள் ஏராளம் ஏராளம்!  இந்தச் சொல் உறுதியாக இவ்வுலக மக்களால் பின்பற்றப் பட்டால்- அதாவது இந்த உறுதிமொழியை  மக்கள் மொழிந்து அதன்படி நடப்பார்களேயானால் அங்கு ஆக்கபூர்வமான சமூகப் புரட்சிகள் ஏற்படும். தனிநபர் நல்லொழுக்கம், மனித சமத்துவம், சகோதரத்துவம்,  மனித உரிமை மீட்புசுயமரியாதை மீட்பு, பெண்ணுரிமைகள் மீட்புபெண்சிசுக்கொலை ஒழிப்புவரதட்சணை ஒழிப்பு, பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு,  விபச்சார ஒழிப்பு, குடும்ப அமைப்பின் பாதுகாப்பு, வட்டி ஒழிப்பு, வறுமை ஒழிப்புஇடைத்தரகர் ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு ஆன்மீகத்தின் பெயரால் ஆதிக்கம் ஒழிப்பு, ஆன்மீகத்தின் பெயரால் சுரண்டல் ஒழிப்பு போன்ற பற்பல நன்மைகள் சமூகத்தில் உண்டாகின்றன. அது மட்டுமல்லாமல் இதன் அடிப்படையில் இவ்வுலக வாழ்வைக் கழித்தவர்களுக்கு பரிசாக மறுமையில் சொர்க்கம் என்ற நிரந்தர இன்பங்கள் நிறைந்த வாழ்விடமும் கிடைக்கிறது.
ஊகங்களைப் பின்பற்றுவோர் நிலை
மாறாக இம்மாபெரும் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு அற்பக் கோளான பூமியின்மேல் ஆறடி உயரம் நின்றுகொண்டு அனைத்தையும் அறிந்தவர்களைப் போலப் பிதற்றும் சில அற்ப மனிதர்களின் ஊகங்களையும் பொய்களையும் அல்லது அவர்கள் வகுத்த இசங்களையும் கொள்கைகளையும் பின்பற்றுவோரால் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவோ மக்களிடையே பயனுள்ள சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவோ முடிவதில்லை. ஒரு உறுதியான நிலையான கொள்கை இல்லாமையால் அவர்களால் இனம், மொழி, இடம், நிறம் போன்றவற்றால் இயல்பாகவே பிரிந்து நிற்கும் மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்தவோ முடிவதில்லை. இறைவன் தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் மனித குல நன்மைக்காக போதிக்கும் உண்மைகளை மறுத்து இவர்களாகவே உண்டாக்கிக்கொண்ட இசங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் பூமியில் நிலைத்து நிற்கும் தன்மை கிடையாது. அவை தற்காலிகமாக வெற்றி பெறுவதைப் போல ஒரு மாயையை உண்டாக்கினாலும் காலப்போக்கில் அழிந்து விடுவதையே நாம் காணமுடிகிறது.
14:26. (சத்தியத்தை மறுபோரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை.
14:27. எவர்கள் இறைநம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்.  
 (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்.  
இவ்வுலகில் அவர்கள் தங்கள் இசங்களை நம்பி இறைமறுப்பைக் கைக்கொள்வதால் அவர்களுடைய மறுமை வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகிறது. இவ்வுலகில் அவர்களுக்கு மறுமையைப் பற்றியும் அங்கு நடக்கவுள்ள நீதி விசாரணை பற்றியும் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அவற்றை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
இவ்வுலகைப் படைத்தவன் அவர்களைப் பற்றி தன் வேதத்தில் இவ்வாறு கூறுகிறான்:
45:7. (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
45:8. தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
45:9. நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
45:10. அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் இறைவன் தனது வழிகாட்டுதலை தன் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் அனுப்பி உள்ளான். இவற்றைப் பின்பற்றி அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு சொர்க்கமும் மறுப்போருக்கு நரகமும் மறுமையில் விதிக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்று வாழும் மக்களுக்காக அனுப்பப்பட்ட வேதமே இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆன்! அதையே உறுதியான மொழிகளில் சொல்கிறான்:

45:11. இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்டியாகும். எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக