இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் சத்தியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளை அது. மக்கள் சிறுகச்சிறுக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டு இருந்தனர்.
உமர் பின் கத்தாப் (கத்தாப் என்பாரின் மகனான உமர்) நல்ல வலிமையும் கம்பீரமான தோற்றமும் முரட்டு சுபாவமும் உடையவராக இருந்தார்.. அவரால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பலரும்  பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். அறியாமைக் கால எண்ணங்களும் மூடப் பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தின் மீதிருந்த அலாதியான பற்றும்  உமரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட  வைத்தது.
ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) என்பார் வழியில் குறுக்கிட்டார்.
உமரே நீ எங்கு செல்கிறாய்?’ என்று கேட்டார்.
நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.என்றார்.
 அப்படியா....  முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ முடியுமா உன்னால் ?’ என்று அச்சுறுத்தினார் நுஅய்ம்.
அதற்கு, ஓஹோ.....  நீயும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்திற்கு சென்று விட்டாயா? என்று உமர் கூறினார்.
 உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. .... உனது சகோதரியும் அவளது கணவரும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர் ... தெரியுமா உனக்கு?’ என்றார் நுஅய்ம்.
இதைக் கேட்டதுதான் தாமதம். உமரின் இலக்கு மாறியது. முதலில் இவர்களை கவனிப்போம்.... அவர்களை நோக்கி சட்டென விரைந்தார் உமர்.
அங்கே சகோதரியின் வீட்டில்.....
 நபித்தோழர்களில் ஒருவரான கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட ஏடுகளில் இருந்து தாஹா| எனத் தொடங்கும் திருக்குர்ஆன் அத்தியாயத்தின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார் உமர்.
வீட்டிற்குள் நுழைந்ததும்....
உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?’ என்று கேட்டார் உமர்.
நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லையேஎன்று அவ்விருவரும் கூறினார்கள்.
 சரி.... நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார் உமர்.
 உமரே! உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் சத்தியம் இருந்தால் உன் கருத்து என்ன?’ என்று துணிந்து கேட்டார் மைத்துனர்
கடுமையான கோபம் பொத்துக்கொண்டு வந்தது உமருக்கு. மைத்துனர் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தையும் ரத்தக் காயப்படுத்தினார்.
இப்போது அடங்கிப்போகவில்லை உமரின் சகோதரி....  கோபத்தில் வீரிட்டேழுந்தார்.
னது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா நீ ஏற்றுக்கொள்ள மறுப்பாய் உமர்?  இதோ நன்றாகக் கேட்டுக்கொள்... அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்... (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்)  என்று இஸ்லாத்தை ஏற்கும்போது கூறும் சத்தியப் பிரமாணத்தை உரக்கக் கூறினார்.
ஆடிப் போய்விட்டார் உமர்! தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது.
உங்களிடமுள்ள அந்த ஏடுகளை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதற்கு அவரது சகோதரி நீ அசுத்தமானவன். எழுந்து போய் குளித்து விட்டு வா’ கறாராகக் கூறினார் சகோதரி.
குளித்துவிட்டு வந்தார் உமர்.
திருமறையை கையிலேந்தி பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்)என்று ஓதத் துடங்கினார் உமர்....... வியப்பில் ஆழ்ந்து போனார் அந்த மாவீரர்!
 ஆஹா! என்ன தூய்மையான சொற்கள்என்று கூறினார்.  தொடர்ந்து தாஹா| என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை தொடர்ந்து ஓதி முடித்தார்.
எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!ஒரு கணமும் பொறுக்கமுடியவில்லை அவரால்....
உமரின் பேசுவதைக் கேட்டார் அதுவரை ஒளிந்திருந்த கப்பாப் (ரழி)....
நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள் உமரே!. வியாழன் இரவு, ‘அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதை நான் கேட்டேன்.. நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்என்றார் வெளியே வந்த கப்பாப்(ராலி)
தாமதமின்றி நபிகளைக் காணப் புறப்பட்டார் உமர். தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள ஒரு இல்லத்தில் தன் தோழர்களோடு இருந்தார்கள். உமர் வந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள். உமர் கதவைத் தட்டியபோது தோழர்களில் ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக அவரை வாள் அணிந்த நிலையில் கண்டார். உடனே அங்கிருந்தோருக்கு அச்செய்தியைக் கூறினார்.
அங்கிருந்தவர்களில் நபிகளாரின் சிறிய தந்தை ஹம்ஜாவும் ஒருவர். அவர் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றிருந்தார்.. அவர் குறுக்கிட்டார்....
ஓ! உமரா! வரட்டும், அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!என்று ஹம்ஜா (ரலி) கூறினார்கள். உமர் வந்தார், நபிகளாருக்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்தார் நபி (ஸல்) அவர்கள்.... உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி
உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!என்று கூறினார்கள்.
உமர் (ரழி) அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.)
இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெயரிவன்) என்று முழங்கினார்கள். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களுக்கும் கேட்டது.

ஆம், உலக வரலாற்றில் அழியாத சுவடுகளுக்கு சொந்தக்காரரின் முதல் காலடித் தடம் அது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக