இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 பிப்ரவரி, 2014

காதலை வெல்வோம்!


மரணம் என்ற உண்மை நிகழ்வு நம் அனைவரையும் காத்திருக்கும் ஒன்றாகும். இன்று நாம் வாழும் வாழ்க்கையும் தற்காலிகமானது
இந்த உலகும் தற்காலிகமானது இது ஒருநாள் அழியும் என்பதும் இதில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு குறுகிய தவணையில் இங்கு வந்து போகிறான் என்பதும் அனைவரும் புரிந்துகொண்டே இருக்கிறோம்.
 இவ்வுலகை நமக்கு ஒரு பரீட்சைக்களமாகப் படைத்துள்ள இறைவன் இறுதித் தீர்ப்புநாள் அன்று தன் ஏவல் - விலக்கல்களை பேணி நடந்தோருக்கு  வெகுமதியாக சொர்க்க வாழ்வையும் பேணாமல் தான்தோன்றிகளாக நடந்தோருக்கு தண்டனையாக நரகத்தையும் வழங்கவுள்ளான். திருமறைக் குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

ஆக இந்த பரீட்சையில் வெல்ல வேண்டுமானால் நாம் இறைவன் நமக்கு வைக்கும் சோதனைகளில் தளராது நின்று எதிர்கொள்ளவேண்டும். அவன் எவற்றை நமக்கு செய் என்று சொல்கிறானோ அவற்றை செய்யவேண்டும். எவற்றை செய்யாதே என்று விலக்குகிறானோ அவற்றில் இருந்து விலகியும் இருக்கவேண்டும். நமது மனோ இச்சைகளுக்கு எதிராக இருந்தாலும் அவற்றை நாம் பேணியே ஆகவேண்டும்.

இவ்வுலக வாழ்வில் ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதும் காதல் ஏற்படுவதும் காம உணர்வுகள் பொங்குவதும் எல்லாம் இந்த தற்காலிக வாழ்வு என்னும் பரீட்சையின் பாகங்களே. உதாரணமாக அழகிய கன்னிப்பெண் ஒருத்தி தன் கடைக்கண் பார்வையால் காதலுக்கு அழைப்பு விடுத்தாலோ அல்லது அரைகுறை ஆடையில் பெண்ணொருத்தி உங்களை காமத்துக்கு அழைத்தாலோ அதை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் உங்களுக்கு அங்கு வைக்கப்படும் பரீட்சை. வாழ்வு முழுக்க இவற்றை நீங்கள் சந்திக்க நேரிடும். சூழ்நிலைக்குத் துணை போகும் விதத்தில் உங்கள் இளமை, அழகு, தனிமை, நட்பு போன்றவையும் தூண்டலாம்.

 ஒரு உண்மையான இறைவிசுவாசி அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இவ்வுலகில் தனது நிலை உணர்ந்து ஷைத்தானின் இந்த சூழ்ச்சி வலைகளில் இருந்து தப்பித்துக் கொள்வான். இறைப் பொருத்தத்திற்காக தன் உணர்வுகளையும் உடல் இச்சைகளையும் கட்டுப்படுத்திக் கொள்வான். இறைவன் கூறுகிறான்:
3:14. பெண்கள், ஆண் மக்கள், பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. இறைவனிடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
3:15. (நபியே!) நீர் கூறும்; ''அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?  பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் இறைவனின் திருப்பொருத்தமும் உண்டு. இறைவன் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.

ஆனால் அதேவேளையில் இந்த இயற்கையான உணர்வுகளைத் துறந்து சந்நியாசம் மேற்கொள்ள இறைவன் கூறவில்லை. பாலியல் உணர்வுகளை முறைப்படி வடிகாலிட திருமணம் என்ற ஏற்பாட்டை புனிதமாக்கியுள்ளது இஸ்லாம். பொறுப்புணர்வோடு இல்லறத்தை அனுபவிப்பதை வழிபாடு என்று சொல்லி  வழிகாட்டுகிறது இஸ்லாம். காதலையும் காமத்தையும் திருமண உறவு மூலம் அனுபவித்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை பொறுப்புணர்வோடு வளர்த்து வலுவான சமூக அமைப்பை கட்டியெழுப்ப வழிவகை செய்கிறது இறைவனின் மார்க்கம்.

ஆனால் அதேவேளையில் இறைவன் விதித்த வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்பட்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே!

99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவு நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.
எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் காதலையும் காமத்தையும் கட்டுப்படுத்தி கவனமாக  செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.

78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
=============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக