இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

நாட்டைக் காக்க ஓர் நல்ல வழி!


இறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டை நேசிக்காமல் இருக்க முடியாது! அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும்  கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. எனவே நாமும் இவற்றுக்கெதிராக களம் இறங்கியாக வேண்டும். விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ அல்ல. ஆனால் இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான் என்ற காரணத்தால்!  அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும்.
நாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம் என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், தானம், விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான் 
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்...... (திருக்குர்ஆன்  - 3:110)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)
மேலும் இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம் 78)

ஆக, ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே  இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். நமது நாடு இன்று ஜனநாயக நாடாக உள்ளது. அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் காணும் தீமைகளுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் அல்லது  பொதுசொத்துக்களைப்  பாழ்ப்படுத்தும் செயல்களை இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் அவ்வாறு செய்தால் அது நமக்கு பாவமாகப் பதிவு செய்யப்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எவ்வாறு போராடுவது?
தீமைகளை எவ்வாறு சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில் உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்.

  1. ஒழுக்கம் விதைப்போம்!
 இலஞ்சம், ஊழல், கொள்ளை, பாலியல் வன்முறைகள், போன்ற அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன் திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும்.
 அதாவது இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப் பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயதுமுதலே ஊட்டி வளர்க்க வேண்டும்.   அப்போதுதான் உண்மையான இறையச்சம் உருவாகும்.
 மாறாக உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களைக் காட்டி அவற்றையெல்லாம் கடவுள் என்று கற்பித்தால் குற்றங்கள் செய்ய அஞ்சாத தலைமுறைகள்தான் உருவாகும்.. இன்று அதுதானே நாட்டில் நடைபெற்றுக்கொண்டு வருகிறது! சிறுவயதுமுதலே முன்னோர்களின் வழக்கம் என்ற பெயரில் உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களையும் சிலைகளையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து வருகிறோம். அதனால் பாவம் செய்ய சிறிதும் கூச்சமில்லாத தலைமுறைகள் பெருகி நம்மை அலைக்கழிக்கின்றன. இந்நிலை மாற படைத்தவனை நேரடியாக வணங்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

  1. இறைசட்டங்களை அமுல்படுத்துவோம்!

தீமைகள் பெருகுவதற்கு அடுத்த காரணம் படைத்த இறைவன் வகுத்துத் தரும் வாழ்க்கைத் திட்டங்களையும் சட்டங்களையும் புறக்கணித்துவிட்டு மனிதன் மனம்போன போக்கில் உருவாக்கியவற்றை செயல்படுத்துவதுதான். மனிதனின் இயற்கையை நன்கறிந்தவன் இறைவன் மட்டுமே. அவன் நமக்கு வகுத்தளித்துள்ள வாழ்வியல் சட்டங்களையும் குற்றவியல் சட்டங்களையும் அமுல்படுத்தினாலே நாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிடும். உதாரணமாக, இலஞ்ச ஊழல் தொடர்புள்ள இரு சட்டங்களை மட்டும் இங்கு காண்போம்.
குற்றவியல் சட்டம் :
நமது  நாட்டில் இலஞ்சம், மோசடி, திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்றவை கட்டுக்கடங்காது பெருகுவதற்கு நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் மிகவும் துணை போகின்றன. திருடனுக்கும் மோசடிக்காரர்களுக்கும் காமுகர்களுக்கும் கருணை காட்டும்விதம் அவை அமைந்துள்ளதால் திருடர்கள் மீண்டும் மீண்டும் திருடுகிறார்கள், கற்பழிப்போர் அச்சமின்றி நடமாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வரும்போது புதுப்புது கலைகளையும் கற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இறைவன் வழங்கும் குற்றவியல் சட்டம் திருடனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது முன்கையை வெட்டிவிடச் சொல்கிறது. அதே போல் விபச்சாரக் குற்றவாளிகளை சாட்டையடி அல்லது மரணதண்டனைக்கு உட்படுத்தச் சொல்கிறது. இந்த தண்டனைகளை பொதுமக்கள் சாட்சியாக நிறைவேற்றச் சொல்கிறது!
 இவற்றை நடைமுறைப்படுத்தி  இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் என்ன நடக்கும்?..... சற்று யோசித்துப் பாருங்கள்! திருடர்களும் காமவெறியர்களும் உண்மையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் ஒரு பாடமாக அமையும். இச்சட்டம் அமலுக்கு வந்தால் இன்று நீங்கள் காண்பதுபோல் குற்றங்கள் மலிந்து தலைவிரித்தாடும் நிலையையோ ஊழல்பேர்வழிகள் நாட்டைக் கொள்ளையடித்து ஆளும் நிலையையோ காணமுடியாது.

வெள்ளி, 26 ஜூலை, 2013

ரமலானுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு?


நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பாவபுண்ணியங்களை எவ்வாறு தீர்மானிப்பது
?
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலைப் பாவமாகவோ புண்ணியமாகவோ தீர்மானிக்க முடியுமா? அல்லது ஒரு சிலர் கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா? அல்லது நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா? அல்லது நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும் ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? king is always right! –(அரசன் எப்போதும் சரியே!) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம் படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா? அல்லது நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா? 
இப்படி எந்த வழியில் நாம் நன்மை தீமை அல்லது பாவம் புண்ணியம் பற்றி ஆராய்ந்தாலும் நமக்கு மிஞ்சுவது குழப்பமே என்பதை உணரலாம். எனவே இந்த விடயத்தில் குழப்பமற்ற தெளிவான முடிவுக்கு வர ஒரே வழிமுறை இதுதான்:
யார் இவ்வுலகிற்கும் அதில் உள்ளவற்றிர்க்கும் சொந்தக்காரனோ அதிபதியோ அவன் எதை நமக்கு நன்மை என்றும் அல்லது நமக்குத் தீமை என்றும் சொல்கிறானோ அதுவே உண்மையிலும் உண்மை. அவன்தான் இப்பெரண்டம் அனைத்தையும் அவற்றில் உள்ள சிறிதும் பெரிதுமான அனைத்து படைப்பினங்களையும் படைத்து இயக்கிப் பரிபாலித்து வருபவன். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் பற்றிய முழுமையான அறிவுள்ளவன். அவனது அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. எனவே நம் பரிபாலகன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை.
அது மட்டுமல்ல, இந்தக் குறுகிய தற்காலிகமான வாழ்வை ஒரு பரீட்சைக் களமாக இறைவன் அமைத்துள்ளதையும் நாம் மறந்து விடக்கூடாது.
62:2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
 இந்தப் பரீட்சைக் களத்தில் அந்த இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது. அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது! மாறாக எந்த மனிதனும் மனிதர்களின் குழுக்களும் நீதிமன்றங்களும் சட்டசபைகளும் பாராளுமன்றங்களும் இன்ன பிற ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களும் பாவ-புண்ணியங்கள் எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. காரணம் இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி இறைவன் மட்டுமே. அன்று அவனே நமது வாழ்க்கையில் நாம் செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ விதிக்க இருக்கிறான்.
ஆக, அந்த இறைவனுக்கு மட்டுமே நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற முழுமையான அறிவு உள்ளது. அவனுக்கு மட்டுமே எது புண்ணியம் எது பாவம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறலாம். மறுமை வாழ்விலும் அவன் நமக்குப் பரிசாக வழங்கும் சொர்க்கத்தை அடையலாம். இவ்வுண்மையை மறுத்து நம் மனோ இச்சைகளுக்கும் முன்னோரின் பழக்கவழக்கங்களுககும் இன்னபிற சக்திகளுக்கும் செவிசாய்த்து நாம் வாழ்ந்தால் மிஞ்சுவது இவ்வுலகில் குழப்பமும் அமைதியின்மையும் கலவரங்களுமே. மறுமையிலோ இறைவனின் கோபத்தையும் அவனது தண்டனையாக நரகத்தையுமே அடைய நேரிடும்.
 வாழ்வில் வெற்றி அடைய ஒரே வழி             
 எனவே இறைவனின் பார்வையில் எது நன்மை எது தீமை என்பதை அறிந்து அதன்படி வாழ விழைபவர்கள் இறைவனின் இறுதி வேதத்தையும் அவனது இறுதித் தூதரின் அறிவுரைகளையும் அணுக வேண்டும் ஏகனாகிய இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது வேதத்தையும் தூதரையும் வாழ்வின் வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.ஏனெனில் இறுதித் தீர்ப்பு நாளின் போது அவன்தான் நீதி வழங்குவான் 
இறுதித்  தீர்ப்பு நாளின் அதிபதி (இறைவனே) (திருக்குர்ஆன் 1: 4)
இந்த அடிப்படையில் நன்மை தீமைகளை - பாவ புண்ணியங்களை பிரித்தரிவிக்கக் கூடிய (Criterion) திருக்குர்ஆன் வழங்கப் பட்ட மாதமே ரமலான். இந்த மாதத்தை  கண்ணியப்படுத்தும் முகமாக நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி உள்ளான்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;..... (திருக்குர்ஆன் 2:185)
(பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு: மேற்படி பதிவைப் பற்றி மட்டும் பின்னூட்டம் இடவும். இதில் குறை காண்பவர்கள் இதற்கு மாற்று ஏற்பாடாக தங்கள்  கைவசம் என்ன


வைத்துள்ளார்கள் என்பதையும் முன்வைத்து தங்கள் கருத்துக்களைக் கூறவும்) 

ஞாயிறு, 21 ஜூலை, 2013

அந்த ஒரு காட்சி! அந்த ஒரு வேளை......

ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக்கூடிய அந்த வேளையைப்  படம் பிடித்துக் காட்டுகிறது திருக்குர்ஆன்.. ஆம், அதுதான் பிறந்தது முதலே உங்கள்  உடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டு இருந்த உங்கள்  உயிர்.... ஆருயிர்... இன்னுயிர்.... என்றெல்லாம் அழைப்பீர்களே அது உங்களை விட்டுப் பிரியும் வேளை.....
அக்காட்சியில் கதாநாயகன் வேறு யாருமல்ல... நீங்கள்தான்!.
அக்காட்சியை உங்களைச்சுற்றி பலரும் கண்டு கொண்டு நிற்கிறார்கள். ஆனாலும் உங்கள் கவனம் அவர்களின்மீது இல்லை. ஏனெனில் அவர்கள் காணாத ஒன்றையல்லவா நீங்கள் காண்கிறீர்கள்! அவ்வேளையில் உங்களுக்கு மட்டுமே புலப்படும் சில காட்சிகள் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. உயிர் பறிக்க வந்துள்ள வானவர் அல்லவா உங்கள்முன் நிற்கிறார்! உங்கள் முகம் நீங்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கும் வேதனைகளை வெளிப்படுத்துகிறது...... உங்கள் கால்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்கின்றன.....
உங்கள் தாய் தந்தை, மனைவி, மக்கள், சகோதரி, சகோதரர்கள், நண்பர்கள். கைவிரித்து விட்ட மருத்துவர்கள், என பெரும் பட்டாளமே அங்கு திரண்டுள்ளது...... ஆனால் யாராலும் எதையும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை! அனைவருக்கும் உங்கள் மேல் அன்பும் உண்டு, அனுதாபமும் உண்டு.... இருந்தும் என்ன செய்ய? யாருக்கும் கட்டுப்படாத ஒன்றல்லவா உயிர் என்பது. அதுவல்லவா அங்கு பறிக்கப் படுகிறது!
 அக்காட்சியை இன்னொருவனும் கண்டுகொண்டு நிற்கிறான். ஆம், உங்களைப் படைத்தவனும் இதுகாறும் பரிபாலித்து வந்தவனும் ஆன உங்கள் இறைவன்.... அக்காட்சியின் இயக்குனரும் அவன்தான்! இதோ அவனே அதை வர்ணிப்பதைப் பாருங்கள்!
= மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது - அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை. (திருக்குர்ஆன் 56:83-85) 
அவ்வளவு அருகாமையில் அக்காட்சியை இயக்கிக்கொண்டிருக்கும் அவன் உங்களைப் பார்த்துக் கேட்கிறான் சற்றே செவிமடுத்துக் கேளுங்கள், இதோ உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறான் முடிந்தால் எதிர்கொள்ளுங்கள்:
=,எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் - நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!     (திருக்குர்ஆன் 56:86,87)               
படைத்தவன் விடுக்கும் சவாலின் விவரம் இதுதான்:
ஆம், நான்தான் உங்களுக்கு உயிரைக் கொடுத்தேன். எதற்காக? இந்தத்  தற்காலிக உலகில் உங்களைப் பரீட்சிப்பதற்காக. அந்தப் பரீட்சை இன்றோடு முடிந்துவிட்டது. இனி மீதமிருப்பது பரீட்சையில் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் கூலி கொடுப்பதுதான். இது எனது ஏற்பாடு. இதைத்தான் எனது தூதர்கள் மூலமும் வேதங்கள் மூலமும் உங்களுக்கு எடுத்துரைத்தேன். எனது ஏற்பாட்டில்  உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அப்படியென்றால் உங்கள் நம்பிக்கை எவ்வளவு சரியானது என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாமே! நீங்கள்தான் சரி என்றால்......

இதோ சென்று கொண்டிருக்கிறதே ஓர் உயிர்... அதைக் கொஞ்சம் தடுத்து நிறுத்த முடிகிறதா பாருங்கள் அல்லது அதோ, சென்று விட்டதே அந்த உயிர்!.... அதை மீள வையுங்கள் பாப்போம். சற்றுமுன்னர் வரை இருந்த எல்லாமே இப்போதும் உங்கள் முன்னர் தானே உள்ளது. இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகங்கள், ஜீரண அமைப்பு,   கை கால்கள் என முழுமையான உடல், நவீன விஞ்ஞானம்  கண்டுபிடித்துத் தந்த மாற்று அவையவங்கள், விஞ்ஞான வளர்ச்சியில் நீங்கள் கண்டுபிடித்து நிர்மாணித்த இயந்திரங்களும் உபகரணங்களும் தலைசிறந்த அறிவாளிகளின் பட்டாளமும் உச்சாணிக்கொம்பில் நின்றுகொண்டு இருக்கும் தொழில்நுட்பமும் என அனைத்துமே உங்கள் கைவசம்! எங்கே அந்த பறிக்கப் பட்ட உயிரை மட்டும் சற்று மீட்டு வாருங்கள் பாப்போம்!
 பழுதடைந்த இதயத்தை, அல்லது சிறுநீரகத்தை அல்லது வேறு உறுப்புக்களை மாற்று அறுவைசிகிச்சைகள் மூலம் மாற்றினீர்கள். இருந்தும் அந்த உயிரை மட்டும் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையே! ஏன்? இன்னும் இதோ இன்னொருவர்...  இவருக்கு எந்த உறுப்புப் பழுதடையாமலே இருக்கிறதே. இருந்தும் என்ன தயக்கம்.... உயிர் மட்டும் தானே மிஸ்ஸிங்.... அதை மீட்டுக்கொண்டு வந்து விட்டால் மீண்டும் எழுந்து நடமாடுவார் அல்லவா? அதை மீட்டுவர ஏன் முடிவதில்லை?
உயிர் என்பது வாஸ்தவமான ஒன்றுதானே, இல்லாத ஒரு பொருள் அல்லவே! சற்றுமுன் அந்த உடலுக்குள் இருந்ததற்கு நீங்களே சாட்சி! சுற்றி நிற்கும் உங்கள் அனைவரின் கண் முன்பாகவே எங்கே அது தப்பித்து ஓடியது? உங்கள் அதிநவீன நுண்ணோக்கிகளுக்கும் தொலைநோக்கிகளுக்கும் ஏன் அது மட்டும் தட்டுப்படாமல் போயிற்று?
_கடவுள் இல்லை, இல்லவே இல்லை... கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி_ என்று  ஒரு அதிபுத்திசாலிகளின் கூட்டம் முழங்கிக் கொண்டு திரிந்ததே .... இன்னும் திரிந்துகொண்டு இருக்கிறதே அவர்களையாவது உதவிக்கு அழைத்துப் பாருங்கள், அவர்களிடம் ஏதாவது சூத்திரம் இருந்தால் பிரயோகித்துப் பார்க்கட்டுமே! விஞ்ஞானமே எல்லாம் என்று பீற்றிக்கொள்ளும் ஜாம்பவான்கள் எங்கே ஓடி ஒளிந்தார்கள்? அணுவாயதங்களைத் திரட்டி தங்களது விரல் நுனியில்தான் உலகம் என்று மிரட்டிக் கொண்டிருக்கும்  வல்லரசுகளின் ‘வல்லமை” இவ்விடயத்தில் எங்கே போனது?  
இவ்வாறு மனிதனின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான் வல்ல இறைவன்!
இனி, பறிக்கப்பட்ட உயிருக்கு உரியவரின் கதி என்ன? 
இதோ தொடர்ந்து கூறுகிறான்..... 
அவர் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த நல்லோர்களில் உள்ளவராக இருந்தால் அவர் உன்னத நிலைக்குச் செல்கிறார்:
= (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின். அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு. (திருக்குர்ஆன் 56:88, 89 )
 = அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,  ' 'வலப்புறத்தோரே! உங்களுக்கு ''சாந்தி உண்டாவதாக'' (என்று கூறப்படும்). (திருக்குர்ஆன் 56:90. 91)
அதாவது இவ்வுலகில் தனது நற்செயல்கள் மூலம் இறைவனுக்கு நெருக்கமாகி விட்டவராகவோ இறைவனின் திருப்தியைப் பெற்றுவிட்டவராகவோ அவர் இருந்தால் அவருக்கு கவலை இல்லை. ஆனால் அந்த பிரியும் உயிருக்கு உரியவர் இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியையும் அவன் வேதத்தையும் தூதர்களையும் புறக்கணித்தவராக இருந்தால் அவரின் நிலை மிகவும் கவலைக்குரியதே!
= ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால் கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும். நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்). (திருக்குர்ஆன் 56:92 -94)

மேற்கூறப்பட்டவை கட்டுகதைகளோ கற்பனைக் காவியங்களோ அல்ல, நாளை நடக்க இருக்கும் உண்மைகளாகும். இவை நடந்தே தீரும்! ஏனெனில் இவை இவ்வுலகின் உரிமையாளனின் வார்த்தைகளாகும்!
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும். எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதி செய்வீராக. ((திருக்குர்ஆன் 56:95 ,96) 
=============================== 
மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்
http://quranmalar.blogspot.com/2013/09/blog-post_24.html 
நோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள் 
https://www.quranmalar.com/2020/03/blog-post_17.html
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html

புதன், 17 ஜூலை, 2013

உணவு என்ற இறை அற்புதம்!


    நாம் அன்றாடம் 3வேளை, 4வேளை, 5வேளை என பலவிதமாக உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஒரு வேளையாவது அந்த உணவின் பக்கம் அதை எவ்வாறு பெற்றோம்? எங்கிருந்து பெறுகிறோம்? வேறு எந்தக் கோள்களிலும் இல்லாத ஒன்று - இதை யார் நமக்கு வழங்குகிறார்கள்? அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பசி, அதை சுவைக்க நாக்கு, ஜீரணிக்க வாய், வயிறு, குடல்கள்... அதிலிருந்து சத்தை உறிஞ்சி சக்தியாக்கும் உடற்கூறுகள் என இவற்றை எல்லாம் வழங்கி நமக்கு ஓயாது இன்ப்மூட்டிக் கொண்டிருக்கும் நம் இரட்சகனை நன்றி உணர்வோடு என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? நம் மீது இவ்வளவு நேசமும் பாசமும் கொண்ட அவனிடம் நாம் நேசம் பாராட்டுகிறோமா?
'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள  பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம'  ( திருக்குர்ஆன் 17:70 )
இந்த உணவு என்பது எவ்வளவு பெரிய அருட்கொடை என்பது மட்டுமல்ல, அதில் அடங்கியுள்ள நம் இறைவனின் வல்லமையை எடுத்துச்சொல்லும் அற்புதங்களைப் பற்றி நாம் சிந்தித்தோமா? மண்ணிலிருந்து உருவாகி மீண்டும் மண்ணுக்கே சென்றடையும் வரை இந்த உணவு பயணிக்கும் பாதை நிறைய எவ்வளவு அற்புதங்கள்? விதை, முளை, செடி,கொடி, மரம், பூ, காய், பழம், தானியம்.........என்று ஒருபுறம்! ருசி, பசி,தாகம், வாய், நாக்கு, பற்கள், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், சுரப்பிகள், மலக்குடல், குதம், சிறுநீர், மலம்..... என நம் உடலோடு தொடர்புடையவை ஒருபுறம்! அந்த உணவிலிருந்து பெறப்படும் சக்தி, ஆற்றல், தெம்பு, ஊக்கம், வீரம், வேகம், உழைப்பு......... என உலகையே இயக்கும் விந்தை ஒருபுறம்!
இதில் எதைத்தான் நம் மறுக்க முடியும்? ஒவ்வொரு கவளம் உணவு நாம் உண்ணும் போதும்,
  • "இதைத் தந்த என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்தி விட்டேனா?
  • நான் இன்று வணங்குவது அவனையா?
  • அல்லது இதில் எந்தப் பங்களிப்பும் செய்யாத மற்றும் எதையுமே உணராத படைப்பினங்களையா? உருவங்களையா? சமாதிகளையா?
  • முன்னோர்கள் அதைச் செய்து வந்தார்கள் என்று நம் செயலுக்கு நியாயம் கற்பிப்பது முறைதானா?"
என்று நம்மை நாமே கேட்க கடமைப்பட்டு உள்ளோம்.
நம்மைப்படைத்த இறைவன் தன்  இறுதி மறையில் நினைவூட்டுவதைப் பாருங்கள்:
''எனவே, மனிதன்  தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். 
•  நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
•  பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-  
•  பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
•    திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
•   அடர்ந்த தோட்டங்களையும்.
•   பழங்களையும், தீவனங்களையும்-
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,' (திருக்குர்ஆன் 80: 24- 32)
பிறிதோரிடத்தில் இவ்வாறு நம்மை சிந்திக்கச் சொல்கிறான். இன்று நீங்கள் உண்ணும் உணவை உங்களுடைய தொழில் நுட்பமோ தொழிற்சாலைகளோ உண்டாக்கவில்லை. அந்த உணவு என்பது இறந்து கிடக்கும் பூமியில் இருந்து உருவாகி வெளியாவதை அன்றாடம் பார்க்கிறீர்கள்.. உண்கிறீர்கள்... இருந்தும் இவற்றை உங்களுக்காகவே உருவாக்கிய உங்கள் இரட்சகனைப் பற்றி நீங்கள் சிந்திப்பதும் இல்லை. அவனுக்கு நன்றி கூறுவதும் இல்லை...

'அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?'          (திருக்குர்ஆன் 36 : 33-35)

கால்நடைகள் 
மேலும் கால்நடைகளிருந்து நமக்கு உணவும் மற்ற பயன்களும் கிடைக்கின்றன. நமக்காக அவற்றை படைத்து வசப்படுத்தி தந்தவன் அவன் . ஆனால் அவற்றின் மீது உரிமை கொண்டாடுவது நாம்! மேலும் ஒரு சைக்கிளையோ, காரையோ அல்லது ஏதாவது வாகனத்தையோ வடிவமைத்து தயாரிக்க எவ்வளவு தலைமுறைகளின் அறிவாற்றல், அனுபவம், உழைப்பு, காலம் என பலதும் விரயமாகி உள்ளது என்பதை ஒரு கணம் சிந்தித்தாலே இறைவன் நமக்கு வசப்படுத்தி தந்துள்ள கால்நடைகளின் அருமையை எளிதாய் உணர முடியும். அவற்றை நினைவூட்டி இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா? என்று கேட்கிறான்:
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
•     அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
•     மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்;
• ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது;
•      இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
•  மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன,
 இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
 (திருக்குர்ஆன் 36 : 71- 73)
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (திருக்குர்ஆன்  6:142) 
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
ஆனால் இவற்றுக்கெல்லாம் நன்றி மறந்து இறைவன் அல்லாதவற்றை வழிபடும் மாந்தரைப் பார்த்து இறைவன் எச்சரிக்கிறான்
= அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான், பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான். அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன், அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (திருக்குர்ஆன் 30:40)
= நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன், பலம் மிக்கவன், உறுதியானவன். (திருக்குர்ஆன்  51:58)
இறந்து கிடக்கும் பூமியில் இருந்து தாவரங்கள் உயிர்பெற்று வெளியாவதைப் போன்று மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள்.
= எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும். (திருக்குர்ஆன்  36:74-75)
        நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
        பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
        பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன்  102: 6-8)