இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 மார்ச், 2020

நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?

நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?
இறைவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்....
-    இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு துகள் போன்றவர்கள் நாம்.
Image result for corono virus image-    இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு இல்லை.
-    மட்டுமல்ல நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
-    நாம் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் நம் விருப்பப்படி நடப்பது அல்ல.
நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது. அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம்.
எனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
அர்த்தமுள்ளதே வாழ்க்கை
 அடுத்ததாக நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது  இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
= நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்;  இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்;   வானத்திற்கும்,  பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:164)  
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப்  படைக்கப் பட்டிருப்போமாஇதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
 = நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115)
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும்.  இறைத்தூதர்களும்  இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை  என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாகப் படைத்துள்ளான்  என்பது.  இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. அங்குதான் அறவே நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அளவிலா இன்பங்களும் எல்லாம் வழங்கப்படும். யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு   விதிக்கப்பட்ட   தவணையில்   வந்து போகிறோம். இங்கு  இறைவனின் கட்டளைகளுக்குக்   கீழ்படிந்து  செய்யப் படும்  செயல்கள்   நன்மைகளாகவும் கீழ்படியாமல்   மாறாகச்  செய்யப்படும்   செயல்கள்  தீமைகளாகவும்   பதிவாகின்றன.  இவ்வாறு  ஒவ்வொருவருக்கும்  நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும்  வாய்ப்பும் அளிக்கப்படும்  இடமே  இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35) 
இந்தப் பரீட்சை வாழ்வின் ஒரு பாகமாகவே இங்கு நோய் வருகிறது.
= 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
'(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:156-157) 
=================
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

செவ்வாய், 17 மார்ச், 2020

நோய் பரவலைத் தடுக்கும் இஸ்லாமிய வழிமுறைகள்


Image result for coronoமனித உடலை விட்டு வெளியேறக் கூடிய தும்மல், எச்சில், கபம், சிறுநீர், மலம் என அனைத்தும் உடல் தனக்கு வேண்டாம் என்று வெளியேற்றும் கழிவுகளே. இவை பெரும்பாலும் நோய் பரப்பும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகின்றன. இவற்றை முறையாகக் கட்டுபடுத்துவது நோய்கள் பரவலைத் தடுக்கும். இக்கழிவுகள் மற்றவர்களை பாதிக்கக் கூடாது என்பதற்காக மக்கள் பேணவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இறைவன் தன் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாக கற்றுத் தருவதை நாம் காணலாம். தொழுகை போன்ற கட்டாயக் கடமைகளோடு நபிகளாரின் அன்றாட வழிமுறைகளைப் பின்பற்றுவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது.
தூய்மை - நம்பிக்கையில் பாதி
 இஸ்லாம் தூய்மைக்கு முதலிடம் கொடுக்கிறது
 "சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூ மாலிக் அல்அஷ்அரீ நூல் : (முஸ்லிம்)
= திண்ணமாக இறைவன், தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர்களையும் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன்.2:222)
= இறைவன் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள். மேலும், எந்த இறைவன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள். (திருக்குர்ஆன். 5:88)

நோய்கிருமிகள் பரவாமலிருக்க   
= நபி (ஸல்) அவர்கள் தும்மினால், தம் கையைக் கொண்டு அல்லது தன் துணியை வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்துக்) கொள்வார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), அபூ தாவூத்,. திர்மீதி)

தும்மலின்போது காற்றில் வெளியேறும் வைரஸ் கிருமி நீர்த்திவலைகள், மணிக்கு 100 மைல் வேகத்தில் வெளியேறும். இதன் மூலமாக எதிரில் இருக்கும் நபர்களுக்கு வைரஸ் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே தும்மலின் வேகத்தை குறைப்பதற்கு கையை அல்லது துண்டை வைத்து மறைப்பதை இஸ்லாம் சுன்னத்தாக ஆக்கிவைத்துள்ளது. இது போன்று தான் கொட்டாவி விடுதலையும் இஸ்லாம் மறைக்கக் சொல்கிறது.

= உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், தன் கையால் வாயை மூடட்டும். நிச்சயமாக, ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), முஸ்லீம்.
துயில் எழுந்ததும் தூய்மை
.காலையில் தூங்கி எழுந்தவுடன் முகம், வாய், மூக்கை சுத்தம் செய்ய மார்க்கம் கட்டளையிடுகிறது.
= உங்களில் ஒருவர் உறங்கி எழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்கை மூன்று முறை சிந்தி சுத்தம் செய்யட்டும் ஏனெனில் ஷைத்தான் அவர் உள் மூக்கில் தங்குகின்றான்., என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லீம்)
எச்சிலை மண்மூடி மறைத்தல்
வெளி இடங்களில் எச்சில் துப்பினால் அதை மண்ணைப் போட்டு மறைக்கும் படி இஸ்லாம் ஏவுகிறது.
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதைக் கண்டேன்” (முஸ்லிம்)
சிறுநீர் மற்றும் மலம் இவற்றிலிருந்து சுத்தம் பேணுதல்
இறைவிசுவாசிகளுக்கு  கடமையாக்கப்பட்ட தினசரி ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு உடல், உடை, இடம் இவை அனைத்தும் மலம் மற்றும் சிறுநீரில் இருந்து தூய்மையாக இருக்கவேண்டும் என்ற வரையறை உள்ளது.  ஆண் குழந்தைகளுக்கு செய்யப்படும் 'கத்னா' எனப்படும் பிறப்புறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சைக்கு  வேறு சில காரணங்கள் இருந்தாலும் அது முக்கியமாக சிறுநீரில் இருந்து உடலையும் உடையையும் தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டே நிறைவேற்றப் படுகிறது. 

சிறுநீரைப் பொறுத்தவரையில் அது அசுத்தமான ஒன்று என்ற உணர்வு பெரும்பாலானோருக்குக் கிடையாது. உடலிலோ உடையிலோ இருப்பிடங்களிலோ மலம் பட்டுவிட்டால் பொதுவாக அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து சுத்தம் செய்வதைப் பார்க்கிறோம். ஆனால் சிறுநீருக்கு இதே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.  பள்ளிகளிலும் சரி, வீடுகளிலும் சரி, பொதுமக்களுக்கு இடையிலும் சரி இதுபற்றி போதிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக வீடுகளில் குழந்தைகள் சிறுநீர் கழித்தாலோ பெரியவர்கள் சாலை ஓரங்களிலும் சுவர்களிலும் சிறுநீர் கழித்தாலோ அவற்றை யாரும் பொருட்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. சிறுநீரும் கழித்த பின் சுத்தப்படுத்தப் படவேண்டிய விஷயமே என்பதை மக்கள் உணராததன் காரணமாக வீடுகளிலும் சாலைகளிலும் சிறுநீரின் நாற்றத்தையும் அதன்மூலம் உண்டாகும் சுகாதார சீர்கேடுகளையும் நாம் சகித்துக் கொண்டே வாழவேண்டியுள்ளது.  ஆனால் தூய இறைமார்க்கமோ வழிபாட்டின் ஒரு முக்கியப் பகுதியாக சிறுநீர் பற்றிய பேணுதலைக் கற்பிக்கிறது.   குழந்தைகள் ஏழு வயதில் இருந்தே அந்தப் பேணுதலுக்குப் பழக்கப்படுத்தப் படுகிறார்கள். 

= இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ''இந்த சமாதிகளில் அடங்கியுள்ளவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்லித் திரிபவனாக இருந்தான்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: நஸயீ)

பொது இடங்களில் கழிவுப்பொருள் 
பொது இடங்களான சாலை ஓரங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை அசுத்தப்படுத்துவதன் மூலம் நோய் பரவலுக்கு துணைபோகிறார்கள் என்பது மட்டுமல்ல பல மக்களின் சாபத்திற்கும் ஆளாகிறார்கள்.. இந்தத் தீய செயலை இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  கண்டிக்கிறார்கள். 

ஒருமுறை அவர்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல். அல்லது அவர்கள் நிழலாறக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 448

பொது இடங்களில் குப்பை மற்றும் நாற்றம் வீசும் கழிவுப்பொருள்களைக்  கொட்டுவோருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

கொள்ளை நோயின்போது வழிகாட்டுதல் 
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
= "ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள் ' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பு: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) - புகாரி)
= “வியாதி பீடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்”
(அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி) – புகாரி)
==============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

திங்கள், 16 மார்ச், 2020

காய்ச்சல் என்பது நோயல்ல, சிகிச்சை!


காய்ச்சல் என்பதும் இறை அருட்கொடையே:

சிறுவயதில் நீங்கள் செய்த சேட்டைக்காக உங்கள் ஆசிரியர் குச்சியால் உங்கள் உள்ளங்கையில் அடித்து இருக்கலாம். அவ்வாறு அடிவாங்கிய இடத்தில் உடனே என்ன நேருகிறது? அந்த இடம் உடனே சிவப்பு நிறமாக மாறுவதை கவனித்திருப்பீர்கள். என்ன காரணம்?
Image result for feverஆம், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக அங்கே செயல்படுகிறது. உடனே அந்த இடத்துக்கு இரத்தத்தை அனுப்புகிறது. இது போலவே உடலில் எங்கே பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சரிக்கட்ட போதுமான ஏற்பாடுகளை இறைவன் நம் உடலில் ஏற்படுத்தியுள்ளான். அதுபோன்ற ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான் காய்ச்சல் என்பதும். மேற்கூறப்பட்ட உதாரணத்தில் கையில் அடிவாங்கிய இடத்தில் சூடு பரவியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதுபோன்றே நமது உடலில் நோய் எதிர்ப்புக்கான சக்தி உடலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு எதிராக வேலைசெய்யும் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பையே காய்ச்சல் என்கிறோம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
இதேபோல நமது உடலில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இறைவன் அமைத்திருப்பதை நாம் காணலாம். நாம் உண்ணும் உணவு உண்ணத் தகுந்ததா என்பதை கை, மூக்கு, மூளை என்பவை பார்த்துத் தேர்ந்தெடுக்கின்றன. தொடர்ந்து அது தகுதியில்லாததாக இருந்தால் நாக்கு, வாய், போன்றவை அதைத் துப்பி விடுகின்றன. உண்ட உணவு செரிமானத்திற்குத் தகுதி இல்லாததாக இருந்தால் அதை வெளியேற்ற வாந்தி என்ற ஏற்பாடு உள்ளது. அதேபோன்ற இன்னொரு ஏற்பாடுதான் வயிற்றுப்போக்கு என்பதும்.
அதேபோல நுரையீரலில் தூசு அல்லது ஒவ்வாத ஏதேனும் சேரும்போது அதை வெளியேற்ற தும்மல் உண்டாகிறது. அதிகமான கழிவுகள் அங்கு சேரும்போது அதை சளி திரண்டு அவற்றை வெளியேற்றுகிறது. இவை அனைத்தும் நம் உடல் தானாகவே தனக்கு செய்துகொள்ளும் சிகிச்சைகளாகும்.
=
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (திருக்குர்ஆன் 39:62)
= ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. (திருக்குர்ஆன் 86:4)
அவ்வாறு கய்ச்ச்சல் ஏற்படும்போது பலரும் அதை ஒரு நோயாக நினைத்து உடனே சிகிச்சைக்காக மருத்துவரிடம் விரைகின்றனர். வெப்பத்தைத் தணிப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் தற்காலிகமாக காய்ச்சல் தணியலாம். ஆனால் இயற்கையாக உடல் தனக்குத்தானே செய்துகொள்ளும் சிகிச்சை தடைபடுகிறது.
எனவே காய்ச்சல் வரும்பொழுது வெப்பநிலை அதிகரிப்பதால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படுமே தவிர நாம் அதைப்பார்த்து பயப்பட அவசியமில்லை. காய்ச்சல் என்பது உடல் தனக்குத்தானே பார்த்துக் கொள்ளும் வைத்தியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காய்ச்சல் வரும்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?
 காய்ச்சலின் போது நமது உடல் என்ன கேட்கிறதோ அதைக் கொடுத்துக்கொண்டு இருப்பதுதான் நாம் செய்யவேண்டிய அறிவார்ந்த செயலாகும். காய்ச்சலின் போது உடல் சோர்வாக இருக்கும். அப்போது நாம் கொடுக்கவேண்டியது ஒய்வு. படுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல தாகம் எடுத்தால் தண்ணீர் கொடுப்பதும் பசி எடுத்தால் உணவு கொடுப்பதும்தான் நாம் செய்யவேண்டியது. இவற்றை உடல் கேட்காதபோது நாம் வலியசென்று திணிக்கக் கூடாது.
எப்பொழுது காய்ச்சல் வந்து நாக்கு கசக்கிறதோ அப்பொழுது உணவு தேவையில்லை என்று பொருள். எனவே அந்த நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது நலம். படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தாகம் எடுத்தால் லேசாக சூடு செய்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும். பசி எடுத்தால் அரிசி கஞ்சி கோதுமை கஞ்சி மற்றும் இயற்கையான பழ வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தேன் கலந்த நீரை அருந்துவதும் கருஞ்சீரகத்தை வாயில் இட்டு மெல்லுவதும்  சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்தும்.
=  உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக்குர்ஆன்16:68,69)
= ''கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

காய்ச்சலும் பாவநிவாரணமும்
இவ்வாறு மூன்று நாட்கள் வரை உடலின் தேவையறிந்து கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டால் காய்ச்சலும் குணமாகும். அது எதற்காக வந்ததோ அந்த நோக்கமும் – அதாவது சிகிச்சையும் – நிறைவேறும் இறைவன் நாடினால். மட்டுமல்ல, நம் பாவங்களும் மன்னிக்கப்படும்.
= நபித்தோழர் ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ''உம்மு ஸாயிப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ''உம்மு ஸாயிபே! உமக்கு என்ன? ஏன் துடிக்கிறீர்'' என்று கேட்டார்கள். ''காய்ச்சல்தான். அதிலே அல்லாஹ் பரக்கத்(அபிவிருத்தி) செய்யாதிருப்பானாக'' என்று உம்மு ஸாயிப் (ரலி) கூறினார். ''காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலை, இரும்பின் துருவை நீக்குவது போல், காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
 (மருத்துவ தகவல்கள் மாற்று மருத்துவ அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது)
==================== 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மண்ணோடு மண்ணான பின் மீண்டும் வாழ்க்கையா?


Image result for grave inside viewகொலை செய்தாலும் கொள்ளையடித்தாலும் கற்பழித்தாலும் என யார் எதைச் செய்தாலும் எவர் மீதும் யாதொரு பழியுமில்லை, அவற்றைத் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற நிலை நீடிக்கும் வரை நாட்டில் அமைதி என்பதே இராது. இந்நிலை மாறி நாட்டுமக்கள் நன்னடத்தை உள்ளவர்களாக மாற வேண்டுமானால் அவர்களின் மனங்களில் இறைவன், வாழ்க்கையின் நோக்கம், இறுதித்தீர்ப்பு நாள், மறுமை, சொர்க்கம் நரகம் பற்றிய உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக விதைக்க வேண்டும். அப்போதுதான் நம் செயல்களுக்கு விசாரணையும் அதற்கேற்ற பரிசும் தண்டனையும் உள்ளது என்ற பொறுப்புணர்வு ஏற்படும். மக்கள் ஒழுக்கம் பேணி வாழ முற்படுவார்கள். அந்த வகையில்  இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மறுமை வாழ்க்கை என்பது முழுக்கமுழுக்க சாத்தியமே என்பதை மனிதனுக்கு உணர்த்த பகுத்தறிவு பூர்வமான வாதங்களை முன்வைக்கிறது.   
எது பகுத்தறிவு ?
திருக்குர்ஆன் முன்வைக்கும் வாதங்களை அறியும் முன் எது பகுத்தறிவு என்பதை அறிவது நலம்.
புலன்களுக்கு எட்டும் தகவல்களை ஆய்வு செய்து புலன்களுக்கு எட்டாத விடயங்களை அறிவதே பகுத்தறிவு எனப்படும். இன்று நம்மால் இறைவனையும் மறுமையையும் காண முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி அவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் பகுத்தறியச் சொல்கிறது திருக்குர்ஆன்:
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)
ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவுகிறது என்பது நாம் உறுதியாக அறியும் சத்தியமாகும். இது எதற்காக என்பது நாம் ஆராய்ந்து அறிய வேண்டிய விடயம். அதை இறைவனே பின்வருமாறு கூறுகிறான்:
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
அதாவது இந்தக் குறுகிய வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது என்பதும் இறுதியில் இவ்வுலகம் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக மீண்டும் அனைவரும் உயிர்கொடுத்து எழுப்பப்பட உள்ளார்கள் என்பதும் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் உண்மைகளாகும்.
இயற்கையில் உள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
 வறண்டு கிடந்த பூமியில் மழைநீர் விழும்போது அதிலிருந்து செடி கொடிகளும் தாவரங்களும் பச்சைப் பசேல் என முளைத்து செழித்து வளர்வதை நாம் அன்றாடம் காண்கிறோம். அவ்வாறு நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான்:
= பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற்பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். (திருக்குர்ஆன் 41:39) 

 = அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்;  இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  (திருக்குர்ஆன் 30:19)
நமது உடலே ஒரு சான்று!
இவ்வுலகைப் படைத்தவன் நம்மை மீண்டும் படைப்பான் என்பதை உணர நாம் ஒவ்வொருவரும் குடிகொண்டுள்ள நமது உடலே போதுமான சான்றாக உள்ளது. நாம் எவ்வாறு உருவானோம்? நாம் கடந்துவந்த பல்வேறு கட்டங்கள் என்னென்ன? என்பதை சற்று ஆராய்ந்தாலே போதுமானதாகும்.
= மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும்பின்னர் விந்தாலும்பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போதுஅது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (திருக்குர்ஆன் 22: 5)

நபிகளாருக்கு முன்வைக்கப்பட்ட கேள்வி
நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்நாளின் போது மக்கா நகரில் சத்தியப் பிரச்சாரம் செய்து மக்களை நேர்வழிக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒழுக்கத்தைப் பேணி வாழுமாறு மக்களை அழைத்தார்கள். அவ்வாறே ஒழுக்கம் பேணாமல் தான்தோன்றித்தனமாக வாழ்வோருக்கு மறுமையில் நரக தண்டனை காத்திருக்கிறது என்றும் எச்சரித்தார்கள். அப்போது அம்மக்கள் அக்கூற்றை மறுத்தார்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப்போன எலும்புகளையெல்லாம் கொண்டுவந்து இவையெல்லாம் மீண்டும் உயிரோடு வர முடியுமா என்று கூறி எள்ளிநகையாடினார்கள். அப்போது இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்களே கீழ்கன்டவை:
= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)
மரணமும் உயிர்தெழுதலும் அன்றாட நிகழ்ச்சி!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்.; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன. (திருக்குர்ஆன் 39:42 )
மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
மக்கள் சந்தேகத்தில் இருந்தாலும் சரி, அவர்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதும் இறுதி விசாரணையும் மறுமை வாழ்க்கையும் எல்லாம் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட விடயங்களாக உள்ளன. எனவே அவை அனைத்தும் கண்டிப்பாக நிகழ உள்ளன. அவை மிகவும் பக்குவமான முறையில் நிகழும் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான் இறைவன்:
= மேலும், “நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?” என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள்.  இவர்களிடம் கூறும்: உங்கள்மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (திருக்குர்ஆன் 32: 10,11)
= (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானாஅன்றுஅவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (திருக்குர்ஆன் 75:3, 4 )   

மறுமையை நம்பாது வாழ்ந்தவர்களின் நிலை:
இன்று நம்மால் இறைவனையோ தீர்ப்பு நாளையோ சொர்க்கம் நரகத்தையோ காண முடியாது. ஆனால் மறுமையில் அவற்றைக்  காணும்போது இறைவனையும் மறுமையயும் அனைவரும் நம்புவர். ஆனால் அப்போது அந்த நம்பிக்கை ஒருவருக்கும் பயனளிக்காது. தேர்வு எழுதுவதற்கான நேரம் முடிந்த பின் எப்படி தேர்வு எழுத முடியும்இறைவனைக் காணமுடியாதபோது அவனை நம்ப வேண்டும் என்பதில்தான் நாம் சோதிக்கப்படுகிறோம்.
= அந்தோ! இந்தக் குற்றவாளிகள் தலை குனிந்தவர்களாய்த் தம் இறைவன் திருமுன் நிற்கும் வேளையில் நீங்கள் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை அவர்கள் இப்படிக் கூறிக்கொண்டிருப்பார்கள்:) எங்கள் இறைவனே! நாங்கள் நன்கு பார்த்துவிட்டோம்; கேட்டுவிட்டோம். எனவே, எங்களைத் திரும்ப அனுப்பி வைப்பாயாக நாங்கள் நற்செயல் புரிவதற்காக! இப்போது எங்களுக்கு உறுதி வந்துவிட்டது! (திருக்குர்ஆன் 32:12) 
=============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

இன இழிவு நீங்க என்ன வழி?

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்றார் பாரதி.

பாடியோர் பலர். ஓடியாடி உழைத்தோர் பலர்.
நாடியது நடக்காமல் நம்பிக்கையிழந்தோர் பலர்.
கிணற்றில் தண்ணீர் எடுக்க மறுப்பு ...நீண்ட காலமாக நம் நாட்டை பீடித்துள்ள சாதிக் கொடுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் வேரறுக்க வேண்டும் என்று பலரும் இடையறாது பாடுபடுவதை நாம் கண்டு வருகிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற பழம்பெரும் தலைவர்களும் தங்கள் வாழ்நாளையே இதற்காக தியாகம் செய்து போராடிச் சென்றதையும் நாம் கண்டோம்.
 இன்றும் அவர்களைத் தொடர்ந்து அவர்களின் தொண்டர்களும் சீடர்களும் பல இயக்கங்களை உருவாக்கி அவையும் பல குழுக்களாக நாடெங்கும் செயல்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இந்த ஜாதிக் கொடுமைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் ஜாதிச்சண்டைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. காரணம் என்ன? நாட்டின் நலன் கருதி நாம் இதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
அதேவேளையில் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களும் அவர்களின் தலைமுறையினரும் ஒருகாலத்தில் தங்களை பீடித்திருந்த ஜாதிக் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்தும் தங்களைத் தாங்களே எளிதாக விடுவித்துக்கொண்டுள்ளனர். இன்னும் தொடர்ந்து இது நடந்துகொண்டே இருக்கிறது. இதற்காக இவர்கள் யாரிடமும் முறையிடுவதும் இல்லை. யாரையும் உதவிக்கு அழைப்பதும் இல்லை. எந்தப் பொருட்செலவும் இல்லை! இதற்காக இவர்கள் செய்வதெல்லாம் என்னவெனில், ஒரு சில அடிப்படை உண்மைகளை உணர்ந்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொள்வதுதான்! அது என்ன?
அதை அறியும் முன் கவிக்குயில் சரோஜினி நாயுடு அம்மையார் அதைப்பற்றிக் கூறுவதைக் கேட்போம்:
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.
டாக்டர் அம்பேத்கர் இது பற்றி என்ன கூறினார்? இதோ,
“பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.”
இது பற்றி தந்தை பெரியாரின் கூற்றும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே:
இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து_!
இவர்களெல்லாம் கூறுவதில் உண்மை உள்ளதா?.... ஆராய்வோம் வாருங்கள்
இஸ்லாம் அப்படி என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறது?
முக்கிய அடிப்படைகள் 
கீழ்க்கண்ட  முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம் அது பரவும் இடங்களில் எல்லாம் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி  வெற்றி ஈட்டுவதை நாம் உலகெங்கும் காணலாம்:
1. *ஒன்றே குலம்*: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.  
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.'( திருக்குர்ஆன் 4;:1)  (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)
2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)
அவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை  வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.
3. வினைகளுக்கு விசாரணை உண்டு:    இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம்  வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.
'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)                         
மேற்படி கொள்கைகளை வெறும் போதனைகளாக நிறுத்திவிடாமல் வாழ்க்கையில் அவற்றை நடைமுறைப்படுத்த ஐவேளைத தொழுகை, ஜக்காத் போன்ற கடமைகளை விதித்திருக்கிறது இஸ்லாம். இவை சமூகப் பிணைப்பையும் சகோதரத்துவத்தையும் உறுதிப் படுத்துகின்றன. மேலும் மனித சமத்துவத்தை சமூகம் மறந்துவிடாமல் பேணிக்காக்கவும் இதில் அத்துமீறல் நிகழாமல் இருக்கவும் உதவுகின்றன. 
நிகழ்கால உதாரணங்கள் 
    உதாரணமாக இன்று இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நேற்று வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தவர்களே. அன்று ஜாதிக் கொடுமைகளாலும் தீண்டாமையாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த அவர்களிடையே இன்று ஜாதிகளும் தீண்டாமையும்  இல்லை. பள்ளிவாசல்களில் தொழுகையில் தோளோடு தோள் சேர்ந்து  அணிவகுப்பதையும் கூட்டாக அமர்ந்து ஒரே தட்டில் உணவு உண்பதையும் நாம் காண்கிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகள் வாழ்நாளில் செயல்படுத்த முடியாத தீண்டாமை ஒழிப்பையும் ஜாதி ஒழிப்பையும் அற்புதமான முறையில் இக்கொள்கை நடைமுறைப் படுத்துவதை யாரும் மறுக்க முடியுமா?
இங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி கொண்டு அடித்துக் கொண்டும்  மாய்த்துக்கொண்டிருந்தம் இருந்த  மக்களை  இதே கொள்கை அன்பினால் பிணைத்துவருவதை உலகம்  கண்டு வருகிறது.
எனவே இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்று பெரியார் கூறிச் சென்றது 100% உண்மை என உறுதியாக நாம் அறியலாம்.
============
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

புதன், 5 பிப்ரவரி, 2020

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி 2020 இதழ்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி இதழ்
---------------------------
பொருளடக்கம்:
நற்குண நாயகர் நம் நபிகளார் -2
இஸ்லாமியர்களை மிரட்டுவதும் விரட்டுவதும் ஏன்? -5
சமூக மாற்றத்தை உண்டாக்கும் இஸ்லாமிய
நம்பிக்கைகள் -7
பரீட்சைக் கூடத்தில் சோதனைகள் சகஜமே -9
சூரியன் ஒளி இழக்கும்போது - 10
ஆதிக்கவாதிகள் இஸ்லாத்தை ஏன் எதிர்க்கிறார்கள்? -12
உலக பயங்கரவாதமும் உண்மைகளும் -14
நபிகளார் கூறிய நல்லுபதேசங்கள் -17
தீமைகளைத் தடுக்காமல் அமைதி என்பது இல்லை -18
சமூக அமைதிக்கு சமத்துவமே அடிப்படை -20

பிரிவினைவாதத்திற்கும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் சாவுமணி 
https://drive.google.com/file/d/1FULCyEW7Yr7qupzgLGcvz3wj12J1aDcJ/view?usp=sharing