இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 நவம்பர், 2012

மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?



= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம்!
= மரணத்திற்குப் பின் என்ன நிகழும்?
= மறுமை வாழ்வு என்பது உண்டா?
= மரணத்தை தவிர்க்க இயலாது. அதற்குப்பின் உள்ளதைத் தவிர்க்க இய!லுமா?
= மண்ணோடு மண்ணாகிப் போய்விடுமா இந்த மனிதன் என்ற மாபெரும் அற்புதம்?
= அது வளர்த்து வந்த ஆசாபாசங்களும் அறிவும் ஆற்றலும் உறவுகளும் திடீரென முறிவதா?
= அது விதைத்த வினைகள் அறுவடையின்றி அழிவதா?
= அது செய்த தியாகங்களுக்குப் பரிசேதும் இல்லையா?
= அது செய்த அக்கிரமங்களுக்கு தண்டனை ஏதும் கிடையாதா?
நம் புலன்களுக்கு இன்று அது எட்டவில்லை என்பதற்காக மறுமையை மறுக்க முடியுமா?

 வாருங்கள்..... நம்மைப் படைத்தவனின் கூற்றும் அவனது இறுதிவேதமும் ஆன திருக்குர்ஆனின் துணைகொண்டு இக்கேள்விகளுக்கும் ஏக்கங்களுக்கும்  விடைகாண்போம்!
-------------------------------------------- 
நாம் தாய் வயிற்றில் பத்துமாதங்கள் கர்ப்பத்தில் வாழ்ந்து இவ்வுலகுக்கு வந்தோம் என்பதையும் இன்று வாழ்வின் பல கட்டங்களைக் கடந்து ஒருநாள் மரணம் அடைவோம் என்பதையும் அதன் பின் புதைக்கப்பட அல்லது எரிக்கப்பட இருக்கிறோம் என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம்.  

இப்பயணத்தின் அடுத்த கட்டம் என்ன?
இறைவேதங்களும் இறைத்தூதர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள்:  நமது வாழ்வின் அடுத்தகட்டம் மண்ணறை வாழ்வு. அடுத்ததாக பயங்கரமான நிகழ்வுகளுக்குப் பின் உலகம் ஒருநாள் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும் 

  இவற்றை நம் புலன்களால் அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா? அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா? புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும்? மேலும் இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இதுபற்றி ஆராயாமல் இருக்க முடியுமா?
 நம் பயணத்தின் அடுத்த கட்டங்களைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணரும் வண்ணம் அறிவுபூர்வமான வாதங்களை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.
படைத்தவனை மறுக்க முடியுமா?
படைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:
52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களா? அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்
நாம் இவ்வுலகுக்கு வருவதும் போவதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இவற்றை இயக்குபவன் கேட்கிறான்:
= 2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.

(திருக்குர்ஆன் இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுளோ முஸ்லிம்களின் குலதெய்வமோ  அல்ல. வணங்குவதற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது இவ்வார்த்தையின் பொருள்.)
56:57-59    .நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

வாழ்வும் மரணமும் அவன் கைவசமே!
57:2  .வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும்படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை
44:8  .அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!
67:2  .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவும்!
21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

இவ்வுலகு அழியும் , மீணடும் உயிர்பெறும்!
39:68 ஸூர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து எதிர் நோக்கி நிற்பார்கள்.
நேரம் குறிக்கப்பட்ட நாள் அது!
அது என்று நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவனிடம் அது நிச்சயிக்கப்பட்ட நாள்.
78:17    .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
இன்று நம் வினைகள் பதிவாகின்றன!
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். 
இறைவன் கூறும் வினைப்பதிவேடுகள் ஒருபுறம் இருக்க நாம் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனித்தாலே இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இன்று CCTV கேமராக்களில் நிகழ்வுகள் பதிவாகி அவற்றிற்கு சாட்சிகளாக பயன்படுவதை நாமறிவோம். அவற்றைவிட நமது கண்களும் காதுகளும் அதிநுட்பமான தொழில் நுட்பம் கொண்டவை . இவையும் மறுமை நாளில் நம் வினைகளுக்கு சாட்சிகளாக வரும் என்றும் கூறுகிறது திருக்குர்ஆன்.
நம் வினைகள் முழுமையாக விசாரிக்கப்படும்!
99:6-8 .அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
நல்லோர் சொர்க்கத்தில் நுழைவர்!
4:57  (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
தீயோர் நரகில் நுழைவர்!
78:21-26    நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
உண்மை இதுவே, மற்றவை ஊகங்களே!
நம்மைப் படைத்தவன் நம் எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உறுதியான உண்மை! மற்றவை அனைத்தும் மனித ஊகங்களும் கற்பனைக் கதைகளும் ஆகும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
மறுமையை நம்பமுடியவில்லையா?
மரித்தபின் மறுபடியும் உயிரோடு வருவோம் என்பதை நம்ப மறுப்பவர்களை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சொல்லும் வசனங்களை நாம் திருக்குர்ஆனில் காணமுடிகிறது. இல்லாமையில் இருந்து அற்புதப் படைப்பாக நம்மை உருவாக்கிய அந்த வல்லவனே மீண்டும் உருவாக்குவான் என்கிறது குர்ஆன்!
36:77  மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78 .மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று.
36:79 .''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80 .''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81 .வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82 .எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
 நீங்கள் கடந்து வந்த கட்டங்களைப் பாருங்கள்:
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
75:3, 4     (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
 உங்களைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறு பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான்:
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  

மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
39:42  அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.
மரணம் நம்மைத் தழுவும் முன் அவன்பால் திரும்புவோம்!
 10:31.   ''உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் ; ''அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.
ஆம் அன்பர்களே! நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவன் நம் இறைவன். அவனுக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். நமது உடல் பொருள், ஆவி என அனைத்தும் அவனுடையதே. அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் நாம் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் சொர்க்கத்தை அடையலாம். மாறாக அவனுக்குக் கீழ்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தால் இங்கும் அமைதியின்மையே. மறுமையிலும்  நரகமே! 
------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள்:
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.com/2015/06/blog-post_11.html
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்  
http://quranmalar.blogspot.com/2012/09/100.html

வியாழன், 1 நவம்பர், 2012

இளம் மனங்களில் இறையச்சம் விதை!


   மனிதன் பண்புள்ளவனாக வளர்வதற்கு தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வும் அவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் என்ற உணர்வும் மிகமிக அவசியம். அதுவே இறையச்சம் எனப்படும்.. இன்று கற்கும் கல்வி மனிதனுக்கும் மனிதகுலத்துக்கும் பயனுள்ளதாகவும் தீங்கு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டுமானால் மாணவ இதயங்களில் இறையச்சம் கட்டாயமாக விதைக்கப் பட வேண்டும். அதுதான் அவர்களை கல்வி கற்கும்போதும் கற்ற பின்னும் நெறிமிக்கவர்களாக வார்த்தெடுக்கும். இறையச்சம் மனதில் நுழைந்து விட்டால் அம்மனிதனை மற்ற எந்த அச்சமும் தீண்டுவதில்லை. அதனால் அவனுக்கு சமூகத்தில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் துணிவு வந்துவிடுகிறது.
இறையச்சத்தை இளமனங்களில் எவ்வாறு விதைப்பது?
கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை போதிக்கப்பட்டால்  மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு இறைமார்க்கத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.
 கடவுளும் மறுமையும் கண்ணால் கண்டு நம்பவேண்டிய விஷயங்கள் அல்ல. அவற்றைப் பகுத்துதான் அறிய வேண்டும். படைத்தவனின் உள்ளமையைப் பற்றியும் அவனது ஆற்றல்களையும் பற்றி விளங்க வைக்க  அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கின்ற அன்றாட இயற்கை நிகழ்வுகளின் பக்கம் நம் பிள்ளைகளின் கவனத்தைத் சற்று திருப்பினாலே  போதும். அவ்வாறுதான் ஆராயத் தூண்டுகிறது இறைவனின் வேதம். 
2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (இறைவனுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
(இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். ‘வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன்’ என்பது இவ்வார்த்தையின் பொருள். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது)
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்
16:12. இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
இறைவனின் உள்ளமையை உணரச் செய்தபின் இறைவன் எப்படிப்பட்டவன் என்பதையும் அவனது வல்லமைகளையும் போதிக்க வேண்டும்.
திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :
112:1-4 நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை. 
அதாவது இறைவன் என்பவன் படைப்பினங்களைப் போன்றவன் அல்ல, அவன் ஒரே ஒருவன்தான், அவன் தனித்தவன், இணை துணையோ தாய் தந்தையரோ பிள்ளைகளோ இல்லாதவன்,. ஆதியும் அந்தமும் இல்லாதவன் எப்போதும் உள்ளவன். சர்வவல்லமையும் சர்வஞானமும் கொண்டவன் மற்றும் தன்னிகரில்லாதவன் என்ற உண்மையை பிஞ்சு மனங்களுக்குள் ஆழமாக விதைத்தபின் அப்படிப்பட்ட இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வணங்கக் கற்பிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவன் அல்லாதவற்றை கடவுள் என்று பாவிப்பதோ உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதோ கூடாது என்பதை கட்டாயமாக வலியுறுத்த வேண்டும்.
முன்னோர்களின் வழக்கம் அல்லது நாட்டுநடப்பு என்றெல்லாம் சொல்லி இறைவனுக்கு இணைவைக்கும் செயலை அனுமதித்தால் அது மனித மனங்களில் இருந்து இறையச்சத்தையே துடைத்து எறிந்துவிடும். உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுளாக பாவித்து வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் இறைவனைப் பற்றிய அச்சமே துளியும் உண்டாவதில்லை. அதன் விளைவாக எப்பாவத்தையும் துணிந்து செய்து விடுகிறார்கள்.
குழந்தைகளும் பாமரர்களும் கடவுளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிலைகளையும் உருவங்களையும் கற்பிக்கிறோம் என்பார் சிலர். ஆனால் திருக்குர்ஆன் மிக எளிதாக இந்தப் பிரச்சினையைத்  தீர்க்க வழிகாட்டுகிறது:
43:9. (நபியே!) நீர் அவர்களிடம்: வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
 எந்த ஒரு மனிதனிடமும் இக்கேள்வியைக் கேட்டால் அவனிடமிருந்து இயற்கையாகவே வரக்கூடிய பதில் இது. அவரவர் மொழிகளில் அந்த உண்மை இறைவனை  என்ன பெயரில்  குறிப்பிடுவார்களோ அதைத்தான் அவர்கள் பதிலாகச் சொல்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்:

43:87. மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் அல்லாஹ்என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
மறுமை நம்பிக்கை
இறையச்சம் முழுமையாக விதைக்கப்பட வேண்டுமானால் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் மறுமை நம்பிக்கையும் போதிக்கப்பட வேண்டும் அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப் பட்டு பிறகு மீணடும் அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும் என்ற இந்த உண்மையையும் கண்மூடிக் கொண்டு நம்பாமல் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணருமாறு தூண்டுகிறது திருமறை. மறுமை நம்பிக்கையை மக்களுக்கு போதிக்க இறைவனின் வசனங்களுக்கு இணையான ஒன்று இவ்வுலகில் இல்லை.
3:185     ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
23:115. நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”  
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்
மறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மருப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:
46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
மீணடும் நாம் விசாரணைக்காக எழுப்பபடுவோம் எனபதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:
36:77-82.. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்
 ''முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்' என்று கூறுவீராக!. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
 வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.
 ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.

பயனற்ற கல்வியை நிறுத்துவோம்!



சமீபத்திய ஒரு நிகழ்வு......70 வயதான பெரியவர் ஒருவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். 

அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டன.., அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அணுகியும் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை.... ஆகவே மாவட்டக் கலெக்டருக்கு செல்ஃபோனில் தகவல் சென்றது...., அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்தார்.... ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை.......

தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரது பிள்ளைப்பாசத்தின் அழுத்தம் நமக்கு தெரிகிறதல்லவா? அறிவு வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்று கருதப்படும் இக்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருவதை நாம் கண்டுவருகிறோம்.
 என்ன காரணம்? 
சிந்திக்கின்ற எவரும் தெளிவாக பதில் கூறமுடியும்.. அறிவு முறைப்படி புகட்டப் படுவதில்லை என்று!
அதிகரித்துவரும் முதியோர் இல்லங்கள் மட்டுமல்ல, கள்ளக்காதல்  கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள்  என அனைத்து கொடுமைகளும் அதிகரித்து வருவது நமது கல்வி முறைகள் மாற்றி அமைக்கப் படவேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகின்றன.
கல்வியின் நோக்கம் ?

= குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக  உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம்.
 மனிதன் தன் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். அத்துடன்
படைத்த இறைவனைப் பற்றியும் இந்தத் தற்காலிக உலகில் மனித வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிவூட்டும் கட்டாயப் பாடங்கள் மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கப் படவேண்டும். அப்போதுதான் மனிதன் தன் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்பதையும் மரணத்திற்குப் பிறகு தனக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதையும்  
அறிந்து பொறுப்புணர்வோடு வாழ்வான். அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்!
நன்மை- தீமை அறிதல்
= உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது பற்றிய கல்வியாகும்.. அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு செயல்படமுடியும்.  இப்படிப்பட்ட நீதிபோதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போதுதான் மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான். இல்லையேல் அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில் காண்கிறோம். அவை இன்று அணுஆயுத தளவாடங்களைக் காட்டி உலகநாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்து வருவதும் உலகில் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தி மனித உயிர்களை மிக மலிவாகக் கருதி மாய்த்து வருவதும் தீய கல்வியின் பயன்பாடுகளே!
பொறுப்புணர்வை வளர்!
 = குழந்தைகள் தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான பகுதியை பள்ளிக்கூடங்களில்தான் கழிக்கின்றன. பள்ளிப் பருவம் முடிந்து வெளியேறும்போது வாழ்வின் அனைத்து சவால்களையும் துணிச்சலோடு சந்திக்கக்கூடிய மனோபக்குவத்தையும் மனோதைரியத்தையும் அவர்கள் பெறவேண்டும். அதற்கும் அடிப்படை இறையச்சம்தான். இறையச்சம் மனிதனுக்குள் வந்துவிட்டால் அவனுக்கு வேறு எந்த அச்சமும் வருவதில்லை என்பதே உண்மை!

= தங்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு  தன் வாழ்வாதாரங்களை தேடும் திறமை மட்டும் இருந்தால் போதாது. அவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சமூகத்தை பாதிக்கக் தீமைகள் குறித்தும் அறிவும் விழிப்புணர்வும் அவனுக்கு மிகமிக அவசியம். மேலும் அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் அறிவும் தேவை அப்போதுதான் சமூகத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.
பயனற்றவை தவிர்!
= இப்படிப்பட்ட சீர்திருத்தப் பாடங்களுக்கு எங்கே நேரம்? என்ற கேள்வி எழலாம். ஆனால் ஆக்கபூர்வமான பயனுள்ள கல்வி வேண்டுமானால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத பல பாடங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய தருணம் இது. சரித்திரம் என்ற பெயரிலும் இலக்கியம் அல்லது  கவிதை என்ற பெயரிலும் அந்தக் காலத்து அரசர்களின் புகழ்பாடியும் இந்தக்காலத்து மந்திரிகளின் புகழ்பாடியும் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும். தேவையற்ற சரித்திரங்களையும் இலக்கியங்களையும் கவிதைகளையும் போதிப்பதர்க்கும் பறைசாற்றுவதர்க்கும் தொலைக்காட்சிகளும் பொதுமேடைகளும் அதற்கென தவம் கிடக்கும் ரசிகர் கூட்டங்களும் பள்ளிக்கு வெளியே காத்திருக்கின்றன. தயவுசெய்து இனிவரும் இளைய தலைமுறையினரை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இனி அதற்கு நேரமில்லை!
ஆண் – பெண் வேறுபாடு   
= ஒரு ஆரோக்கியமான சமூகம் அமையவேண்டுமானால் அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு கடமைகளும் உரிமைகளும் வேறு வேறு என்பதை நாம் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இறைவன் எவற்றை ஆண்களுக்கு கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை ஆண்களுக்கும் எவற்றை பெண்களுக்குக் கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை பெண்களுக்கும் புகட்ட வேண்டும். இன்று பள்ளிகளில் நாம் கண்டுவரும் அவலங்கள் – அதாவது கர்ப்பிணிக் குழந்தைகளும் கள்ளக்காதல்களும் கொலைக் கலாசாரமும் - ஒழிய வேண்டுமானால் இனிமேலாவது இறைவன் நமக்கு விதித்த வரம்புகளை மீறக்கூடாது. பத்து வயதுக்கு மேறப்பட்ட ஆண்களும் பெண்களும் தனித்தனி பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப் படவேண்டும். சிரமங்கள் பல இருந்தாலும் இதை மேற்கொண்டால் சமூகமும் நாடும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் இன்னபிற நாசங்களிலிருந்தும் இறைவனின் தண்டனைகளில் இருந்தும் காப்பாற்றப் படும்.

http://quranmalar.blogspot.com/2016/04/blog-post_42.html 
தனிமனித சீர்திருத்தம் எவ்வாறு ?

புதன், 31 அக்டோபர், 2012

பைபிள் விடுத்த புதிருக்கு விடை காணும் குர்ஆன்!


ஏசு கிறிஸ்து...... (அவர் மீது இறைசாந்தி உண்டாவதாக!)
.......உலகின் இரு பெரும் மதங்களான கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் பின்பற்றி வரும் அனைவராலும் போற்றப்படும் மகான் அவர்!
......இம்மாபெரும் மதங்களை பின்பற்றுவோரை இணைக்கும் பாலம் அவர்! இரு சாராராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுபவர்!
......மீண்டும் இப்பூமிக்கு வரும்போது இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கப் போகிறவர் அவர்! 
.... அத்தகையதோர் அரிய ஆத்மாவின் வருகையில் யார் தான் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியும்?
நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. நம் குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால்  நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்ட முடியும்.
இறைவனின் தூதர்கள் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்பது இறைக் கட்டளை (திருக்குர்ஆன் 2:285).  அந்த இறைத் தூதர்கள் வரிசையில் வந்தவரே நமது ஏசு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)
ஆம், சத்தியத்தை நிலைநாட்ட இப்பூமிக்கு வந்த மகத்தானதோர் இறைத்தூதர் ஏசு!
பிறந்த நாள் முதலே அற்புதங்கள்  பல நிகழ்த்திய மகான்!
அன்னை மரியாளுக்குப் பிறந்த அந்த அற்புதக்  குமாரன் அயராது  சத்திய போதனை செய்தார்!
அஞ்சா நெஞ்சனாக  அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும்  எதிராகப் போராடினார்! கடவுளின் பெயரால் பொய்யுரைத்து மக்களுக்கு இடையே பிளவுகள் உண்டாக்கும் மதகுருமார்களையும் மக்கள் சுரண்டப் படுவதையும் தீவிரமாக எதிர்த்தார்.
விளைவு ?...........அநீதியாளர்களின் சூழ்ச்சிக்கு ஆளானார் ஏசு!  அவரைக் கொன்று சத்தியத்தின் வளர்ச்சியை தடுக்க சதி செய்தனர் எதிரிகள் !
ஆனால் வல்ல இறைவனால் அற்புதமான முறையில் காப்பாற்றப் பட்டார்!
ஆம், இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்!

அவரைத் தொடர்ந்து சுமார் 550 வருடங்களுக்கப் பிறகு அதே பாதையில் சத்தியத்தை நிலை நாட்ட வந்தவரே முஹம்மது நபி அவர்கள். அவர் மூலமாக அனுப்பப்பட்ட வேதமே திருக்குர்ஆன்! அந்த இறுதி மறையில் நம் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான ஏசுவின் பிறப்பு பற்றி இறைவன் கூறுவதைக் காணலாம். திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்திகள் காணக் கிடைக்கின்றன:
= இறைவன் பரிசுத்த ஆவியானவரை அன்னை மரியாளிடம் அனுப்பி அவரைக் கருத்தரிக்கச் செய்ததைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
16. இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
17.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை (பரிசுத்த ஆவியை) அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
18. '
நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று (மர்யம்) கூறினார்.
19. '
நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'என்று அவர் கூறினார்.
 20. 'எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?' என்று (மர்யம்) கேட்டார்.
21. '
அப்படித் தான்' என்று (இறைவன்) கூறினான். 'இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும்நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்' (என்று ஜிப்ரீல் கூறினார்.)
திருமணம் ஆகாமலே கருவுற்றதைத் தொடர்ந்து அன்னையவர்கள் கடுமையான மனவேதனைக்கும் சமூகத்தில் சோதனைகளுக்கும் ஆளாகிறார்கள். திருமணமாகாத ஒரு கன்னிப்பெண் திடீரென கர்ப்பிணியானால் மக்கள் வெறுமனே விட்டுவிடுவார்களா? அவரது தர்மசங்கடமான அனுபவத்தை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.
23.
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.
24. '
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
25. '
பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்)
26.
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்' என்று கூறுவாயாக!
இவ்வாறு அற்புதமான முறையில் எந்த ஆணின் துணையுமின்றி ஏசு என்ற அற்புத மகனைக் கற்பம் தரித்துப் பெற்றேடுக்கிறார்கள்  அன்னை மரியாள் அவர்கள்! இனி அந்த மகவைத் தாங்கிக்கொண்டு மக்களுக்கு முன்னால் சென்றாக வேண்டுமே! அவரது மனோ நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப்  பாருங்கள்! ‘எப்படி நான் மக்களின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் தாங்கிக் கொள்வேன்? எந்த முகத்தோடு நான் அவர்களை எதிர்கொள்வேன்? குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி ஒளியவா முடியும்?’ .... ஆம் அவர் எதிர்பார்த்தபடியே மக்கள் கடுமையாக அவரை ஏசினார்கள்.
27. (பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். 'மர்யமே! பயங்கரமான காரியத்தைச் செய்து விட்டாயே?' என்று அவர்கள் கேட்டனர்.
28. '
ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை' (என்றனர்)
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அன்னை மரியாள் அவர்கள் என்ன செய்தார்கள்? அன்னை மரியாளின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்த மக்கள் திடீரென எவ்வாறு மாறினார்கள்? யூத மத சட்டப்படி விபச்சாரக் குற்றத்திற்காக கல்லால் எறிந்து கொன்றிருப்பார்கள்... இதிலிருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டார்கள்? அவரைக் காப்பாற்றிய சம்பவம் எது? பிறகு திடீரென எப்படி அவர்களைப் புனித மங்கையாக ஏற்றுக் கொண்டார்கள்? குழந்தை ஏசுவை எப்படி புண்ணிய புத்திரனாக ஏற்றுக் கொண்டார்கள்? ஒரு முக்கியமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இந்தப் புதிருக்கு விடை காண வேண்டுமா? http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_27.html இந்தப்  பதிவில் காணுங்கள்.

திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?


ஓரிறைக்கொள்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களை அவை எவ்வளவு புனிதமானவையாக இருந்தாலும் அவற்றை வணங்குவதோ அவற்றிடம் பிரார்த்திப்பதோ பாவமாகும். இறைவனது தன்மைகள் பற்றி திருக்குர்ஆன் கூறுகிறது;
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.(திருக்குர்ஆன் 112: 1-4)
 (அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். அரபு மொழியில் 'வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்என்பது இவ்வார்த்தயின் பொருள். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)
  அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக இடைத்தரகர்களின்றி வீண் சடங்குகளின்றி  வீண் செலவுகளின்றி வணங்கச் சொல்கிறது குர்ஆன்.
2. வாழ்வின் நோக்கமும் மறுமை வாழ்வும்: இன்று நாம் காணும் உலகம் ஒருநாள் முற்றாக அழிக்கப்படும். பிறகு மீணடும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். இறைவனின் முன்  இறுதி விசாரணைக்காக நிறுத்தப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பூமியில் செய்த பாவங்களும் புண்ணியங்களும் முழுமையாக எடுத்துக் காட்டப்படும். அதன்அடிப்படையில் அவனது நிரந்தர இருப்பிடம் தீர்மானிக்கப்படும். சொர்க்கம் அல்லது நரகம்- இந்த இரண்டில் ஒன்றுதான் மனிதனின் நிலையான வீடு. அதைத் தீர்மானிக்கும் பரீட்சைக்களமே இவ்வுலகம்!
திருக்குர்ஆன் கூறுகிறது:
 அவன்தான் உங்களுக்கு மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்உங்களில் யார் நற்செயல்கள் செய்கிறீர்கள் என்று சோதித்து அறிவதற்காக. (திருக்குர்ஆன் 67:2)
 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3 : 185 )

 3. இறைத்தூது: மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக இறைவன் தனது போதனைகளை அவ்வப்போது அறிவிக்கிறான். இதுவரை 1,24,000 இறைத்தூதர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் இறைவனுக்கு அடிபணிந்து வாழுங்கள் அவனை மட்டுமே வணங்குங்கள் என்ற ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். இந்தத் தூதர்களில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி அவர்கள். இவருக்கு முன் வந்தவர் இயேசு நாதர். அவர்களுக்கு  முன்னர் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் வௌ;வேறு காலகட்டங்களிலும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள். (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)
  இவுர்கள் அனைவரும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையை போதிக்க அனுப்பப்பட்டவர்கள் என்பதால் இவர்களில் யாரையும் மறுப்பதோ தரக் குறைவாக கருதுவதோ பாவமாகும். அதே வேளையில் இவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பேரில் உருவங்கள் சமைப்பதோ அவற்றை வணங்குவதோ பெரும் பாவமாகும்.
 4. மனித குல ஒற்றுமை:
 மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.  பின்னர்  இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 4 :1)
மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பது திருக்குர்ஆனின் அடிப்படை போதனைகளில் ஒன்று. இனம் நிறம் நாடு மொழி இவைகளின் அடிப்படையில் மனித குலம் பிளவு படாமலிருக்க ஒரே வழி அனைவரும் படைத்த இறைவனை மட்டுமே வணங்குவதிலும் அவனிடமே பிரார்த்திப்பதிலும் தான் இருக்கிறது.

5. இறைவன் அல்லாதவற்றை அறவே வணங்கக் கூடாது
இன்று மனிதகுலம் பிரிந்து கிடப்பது அவரவர்களின் முரண்பாடான கடவுள் கொள்கையினால்தான். இறைவனுக்கு பதிலாக உயிரற்ற உணர்வற்ற பொருட்களையோஅல்லது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ வணங்குவதும் இறைவனுக்கு கற்பனை உருவங்களை சமைப்பதும் இறைவனால் மன்னிக்கப் படாத பாவங்கள் என்றும் அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
மனிதன் பாவம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் அவனிடம் கடவுளைப் பற்றிய அச்சமும் அவன் என்னைக் குற்றம் பிடிப்பான் என்ற உணர்வும் இருக்கவேண்டும். ஆனால் உயிரற்ற உணர்வற்ற பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பிப்பதால் மனிதனிடம் உண்மையான கடவுளைப் பற்றிய பயம் போய் விடுகிறது. அதனால் அவன் எப்பாவத்தையும் தயக்கமின்றி செய்யத் துணிகிறான். அதனால் பூமியில் பாவங்கள் பெருக ஒரு முக்கியக் காரணம் இதுவாகும். 
இந்த ஒரு பாவத்திலிருந்து மனிதன் திருந்தி மீண்டாலே கடவுளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப் படுவதும் மக்கள் சுரண்டப்படுவதும் நிற்கும்! உலகில் சகோதரத்துவமும் மனித சமத்துவமும் அமைதியும் திரும்பும்!
  மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை வழங்குகிறது. இல்லறம் திருமணம் ஆண்-பெண் பிரச்சினைகள் குழந்தை வளர்ப்பு தூய்மை உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம் கொடுக்கல்-வாங்கல் பாகப்பிரிவினை குற்றவியல் நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய  தீரவுகளை வழங்குகிறது திருக்குர்ஆன்
அவற்றை ஏற்று அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வோருக்கு இம்மையிலும் அமைதி கிடைக்கிறது. மறுமையிலும் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அலட்சியம் செய்வோருக்கு இம்மையில் அமைதியின்மையும் மறுமையில் நரகவாழ்வும் காத்திருக்கிறது!