இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2025

மனித வரலாற்றை திசைத்திருப்பிய பெருநிகழ்வு!

 

கட்டுக்கடங்காத தீமைகளும் அமைதியின்மையும் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த மக்கா நகரில் முஹம்மது (ஸல்) அதிலிருந்து ஒரு விடிவு பிறக்காதா என்று ஏக்கத்தோடு அருகில் உள்ள ஹிரா என்ற குகையில் தனிமையில் இறைவனை நினைத்து வணக்க வழிபாடுகளில் மூழ்கி இருந்த வேளைதான் அந்த பெருநிகழ்வு நிகழ்ந்தது... அதைப்பற்றி நபிமொழித் தொகுப்புகளில் காணக்கிடைக்கும் குறிப்பைக் கீழே காண்போம்:

நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். அப்போது உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள்.

 இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. இறைவனிடம் இருந்து செய்தியோடு அந்த ஜிப்ரீல் என்ற வானவர் குகைக்குள் வந்தார்! முன்பின் அறிந்திராத ஒரு உருவம்! நபிகளாருக்கு ஒரே அதிர்ச்சி!

வந்த வானவர் நபியவர்களிடம் கூறினார், “ஓதுவீராக!என்று.

.நபிகளார், நான் ஓதத் தெரிந்தவனில்லையே!என்றார்கள்.

 நபிகளார் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்:

பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக!என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே!என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு ஓதுவீராக!என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே!என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.  (திருக்குர்ஆன் 96:1-5)

என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

பிறகு
நபிகளார் அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க தமது துணைவியார் கதீஜா(ரழி) அவர்களிடம் வந்து என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்என்றார்கள்.

 கதீஜா(ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள்.

அதற்கு கதீஜா(ரழி) அவ்வாறு கூறாதீர்கள்! இறைவன் மீது ஆணையாக! இறைவன் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; சிரமப்படுவோரின் சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் சிக்குண்டோருக்கு உதவி புரிகின்றீர்கள்என்றார்கள்.

 பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான வரகா பின் நவ்ஃபல் என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள்.

வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!என்றார்.

 என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!என வரகா கேட்டார்.

 நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே!” என்று அங்கலாய்த்தார்.

 நபி (ஸல்) அவர்களுக்கோ  அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

 மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?” என்று கேட்டார்கள்.

 வரகா கூறினார், ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்

இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார்.

முதல் முதலாக இறைவனிடம் இருந்து நபிகளாருக்கு வந்த இறைச் செய்தி பற்றிய சரித்திரம் இதுவே. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு வானவர் ஜிப்ரீல் தொடர்ந்து இறைவனிடம் இருந்து சிறுகச்சிறுக வேதவரிகளைக் கொண்டுவந்தார். அந்த வைரவரிகள் வெறும் ஓதப்படும் மந்திரங்களாக இருக்கவில்லை. முழு மனிதகுலத்துக்கும் இறைவனின் கட்டளைகளையும் அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் தாங்கியவையாக இருந்தன.

இவ்வாறு அகிலத்தைப் படைத்தவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அயராது பணியாற்றத் தொடங்கினார் நபிகளார். தொடர்ந்து இறைவனைப் பற்றியும் வாழ்க்கையின் நோக்கம் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் மக்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சொல்லி இஸ்லாம் என்ற இறைவன் வகுத்தளிக்கும் வாழ்க்கை நெறியின் பக்கம் அழைத்தார்கள்.

  ஆம், இந்தப் பெருநிகழ்வுதான் இன்று நாம் காணும் உலகத்தின்  வரலாற்றை மாற்றி எழுதியது! அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் விடிவு  உண்டு என்று பறைசாற்றியது!

====================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக