ஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல நாடுகளில் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையை ஏற்ற மக்கள்
பல்வேறு விதமான அல்லல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதையும்
அறிவோம். பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்
படுதல், அகதிகளாக வெளியேற்றம், சீனாவில் உக்யூர் முஸ்லிம்களுக்காக தடுப்பு
முகாம்கள், அவர்களுக்கு ரமலான் மாதம் கூட நோன்பு வைக்கத் தடை, திருக்குர்ஆன்
படிக்கத் தடை, பல்வேறு நாடுகளில் இஸ்லாமியரகளின் வாழ்வாதாரமும் வாழ்விடங்களும்
சூறையாடப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து போர்களுக்கு
உள்ளாக்கப்படுதல், சொந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேற்றப் படுதல் போன்ற
பலவும் நிகழ்வதை அறிவோம். நம் நாட்டிலும் இன்று சில மாநில அரசுகள்
இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கைக் கொண்டிருப்பதும் இஸ்லாமியர் உரிமைகளை
மறுப்பதும் இஸ்லாமியருக்கு கொடுமை இழைத்தவர்களைக் குற்றமற்றவர்களாக அறிவித்து
அவர்களுக்கு மாலையிட்டு மரியாதை செய்வதும் எல்லாம் நடந்துகொண்டு இருப்பதை அறிவோம்.
இவற்றிற்கு வேறுபல காரணங்களும் இருந்தாலும் இஸ்லாம் என்ற கொள்கைக்கு எதிராக ஆதிக்க
சக்திகள் திரண்டு போரிடுவதே முக்கிய காரணமாக உள்ளது என்பதை ஆராய்வோர் அறியலாம்.
ஆதிக்க சக்திகள் ஏன் இஸ்லாம் என்ற இந்த வாழ்வியல் கொள்கை கண்டு பயப்படுகிறார்கள்?
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன்
மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது நம்மைப் படைத்தவனுக்குக் கீழ்படிந்து
அவன் வழங்கும் ஏவல்-விலக்கல்களை ஏற்று வாழ்ந்தால்
இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது
இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். இது மனித இனம் அனைத்துக்கும் பொதுவான ஒரு
வாழ்வியல் கொள்கை. இதன்படி, இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை
இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது
தர்மம் என்பது. எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச்
செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார்
இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு
மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.
இஸ்லாம் ஏன் குறி வைக்கப்படுகிறது?
ஒரே நாடு, ஒரே இனம் சார்ந்த அல்லது ஒரே மொழி பேசக்கூடிய மக்களில் எவராவது
இஸ்லாம் என்ற கொள்கையை ஏற்றவுடன் ஏன் இவ்வாறு சக மக்களின் அல்லது ஆதிக்க
சக்தியினரின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுகிறது?
= அதுவரை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வோடு பாவங்களில் வாழ்ந்தவர்கள்...
= கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று தான்தோன்றித்தனமான வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்...
= நிறபேதம் இன பேதம் மொழிபேதம் பாராட்டி பிரிவினை வாதம் பேசிக்கொண்டு இருந்தவர்கள்..
= விபச்சாரம், குடி, போதைப் பழக்கத்தில் மூழ்கி இருந்தவர்கள்..
= கொலை, கொள்ளை, இலஞ்சம் போன்றவற்றில் மூழ்கி இருந்தவர்கள் மற்றும்
இவற்றுக்கு துணை போனவர்கள்..
தங்கள் தவறுகளை உணர்ந்து தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு
என்ற உணர்வு மேலிட தன்னைத் தானே திருத்திக் கொண்டு இஸ்லாம் என்ற வாழ்வியல்
கொள்கையை ஏற்று கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ
முற்பட்டால் ஏன் அவர்கள் மீது அடக்குமுறைகளும் வன்முறைத் தாக்குதல்களும்
முடுக்கிவிடப்படுகின்றன?
ஆம் அதற்குக் காரணம் இருக்கிறது..
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
= இஸ்லாம் தனிமனிதனை மட்டுமல்லாமல் முழு சமூகத்தையும் சீர்திருத்த
முயல்கிறது என்பது இங்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
= ஒன்றே மனித குலம், மனிதர்கள் அனைவரும் சரி சமமே ஒருவருக்கொருவர்
சகோதரர்களே என்பதை இஸ்லாம் அடிப்படையாக போதிப்பதோடு அதை நடைமுறைப்படுத்தவும் செய்கிறது.
அதனால் இனத்தின், நிறத்தின், குலத்தின், ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற
மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கையை முழுமூச்சாக
எதிர்க்கிறார்கள்.
= படைத்தவன் மட்டுமே இறைவன், அவன் மட்டுமே வணக்கத்திற்கு
உரியவன், அவனை நேரடியாக பொருட்செலவின்றி அணுக முடியும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதை
நடைமுறைப் படுத்தியும் காட்டுகிறது. இந்த செயல் கடவுளின் பெயரால் மக்களை சுரணடும் இடைத்தரகர்களை அமைதி இழக்கச் செய்கிறது!
மூடநம்பிக்கைகளை பாமர மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக
மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது அறவே பிடிக்காது!
= இஸ்லாம் வட்டி, விபச்சாரம், சூதாட்டம் இவற்றுக்கு தெளிவான
தடை விதித்து இக்கொள்கையை ஏற்றுக்கொண்ட மக்களை இத்தீமைகளில் இருந்து
காப்பாற்றுகிறது. அதனால் இத்தீமைகளை
வைத்துக்கொண்டு வயிறு வளர்ப்பவர்களுக்கும் மக்களை சுரண்டுபவர்களும் இஸ்லாம்
பரவுவதை முழுமூச்சாக எதிர்க்கிறார்கள்
= தன்னைச் சுற்றி நன்மையை ஏவுவதையும் தீமைகளைத்
தடுப்பதையும் இறைவிசுவாசிகளின் மீது கடமை என்கிறது இஸ்லாம். அதன் காரணமாக மக்கள்
விழிப்புணர்வு பெற்று நாட்டை சுரண்டும் ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களின் கைப்பாவை
ஆட்சியாளர்களுக்கும் எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை
விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
இவற்றின் காரணமாக ஆதிக்க சக்திகள் தங்கள் சக்தி வாய்ந்த
ஊடகங்கள் மூலம் இஸ்லாத்திற்கு எதிராக பெரும் பரப்புரைகள் மேற்கொள்கிறார்கள்.
தங்கள் கைக்கூலிகளைக் கொண்டு இஸ்லாமியர்களை
பயங்கரவாதிகளாக சித்தரிக்கும்படியான நிகழ்வுகளை நடத்தி இஸ்லாத்தின் மீது அவப்பெயர்
ஏற்படுத்துகிறார்கள். இஸ்லாம் வெகுவேகமாகப் பரவி வருவதைத் தடுக்க மக்களை தங்கள்
ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்யத் துடிக்கிறார்கள்.
இறுதியில் இஸ்லாமே வெல்லும்
உண்மையில் இஸ்லாத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளவர்கள்
இது அவைகளைப் படைத்த இறைவன் தந்துள்ள வாழ்வியல் கொள்கை என்பதையும் அவர்கள் உட்பட
அனைவரையும் வாழவைக்க வந்தது என்பதையும் அந்த இறைவனிடமே இறுதி மீளுதலும்
விசாரணையும் உள்ளது என்பதையும் அறிந்திருந்தால் அவர்கள் போக்கு நேர் எதிர்திசையில்
திரும்பும். அவர்களும் தங்களை இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டு உலகில் அமைதியை
நிலைநாட்டப் பாடுபடுவார்கள். அவர்கள் திருந்தினாலும் சரி, திருந்தாவிட்டாலும் சரி
இறுதியாக இஸ்லாமே வெற்றிபெறும் என்பதை இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்:
'தம்
வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை
பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (திருக்குர்ஆன் 9:32)
==================
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக