ஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள். அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள்
அப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.
மனித உரிமைகள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் இதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவரும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.
அந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல் பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்ற அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது இஸ்லாம்.
திருக்குர்ஆனில் இறைவன் இதற்கான அடிப்படையை இவ்வாறு கற்பிக்கிறான்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது, ஒன்றே மனித குலம், ஒருவனே இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும் ஆக்குகிறது இந்த இறைவசனம்.
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக