இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 மே, 2015

உறங்கும்போது எங்கே சென்றுவிடுகிறீர்கள்?


இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் மகள் வந்து “அப்பா.... அப்பா...” என்று அழைக்கிறாள் ..... உங்களால் கேட்க முடிகிறதா?
“இல்லை” என்பதே உங்கள் பதிலாக இருக்கும்.
“ஏன்?” என்று கேட்டால், “அதுதான் நான் உறக்கத்தில் இருந்தேனே!” என்பீர்கள்.
உண்மையில் அங்கு என்ன நடக்கிறது?
ஒரு அறையில் நீங்கள் இருந்து அங்கு யாராவது வந்து அழைத்தால் அது உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டுமே? ... எது தடையாக நிற்கிறது?
ஆம், அங்கு நீங்கள் – அதாவது அக்குழந்தையின் அப்பா அங்கு இல்லை.... அப்பாவின் உடல் மட்டுமே அங்கிருக்கிறது!
அப்பா எங்கே போனார் அப்போது?
ஆம், அப்பா இறைவன்பால் அழைக்கப் பட்டிருக்கிறார் என்பதே உண்மை!
ஆம் அன்பர்களே இவ்வாறு ஒவ்வொரு நாளும் உங்கள் உயிர் இறைவனால் கைப்பற்றப் படுகிறது! கைப்பற்றிய உயிரை மீண்டும் இறைவன் திரும்ப அனுமதித்தால் மட்டுமே நீங்கள் உங்கள் குழந்தையின் அழைப்பைக் கேட்கமுடியும்.
அதாவது மரணம் என்பது நாம் அன்றாடம் அனுபவித்து வரும் ஒன்று என்பதை இதில் இருந்து விளங்கலாம்.  மரணத்தின்போது மனிதனின் ஆத்மா  கைப்பற்றப்படுவது போலவே தினமும் நாம் உறங்கும்போது நமது ஆத்மா இறைவனால் கைப்பற்றப்ப்டுகிறது என்பதுதான் உண்மை. எனவேதான் நாம் உறங்கும்போது நம்மால் நம்மைச்சுற்றி நடப்பவைகளைக் குறித்து அறிய முடிவதில்லை. கீழ்கண்ட இறைவரிகள் இதை உணர்த்துகின்றன:
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்¢ மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு,  நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 39:42)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)
ஆம் அன்பர்களே, அனுதினமும் நமது உயிர்கள் இறைவன்பால் போய்வருகின்றன. ஒருநாள் போன உயிர் திரும்பாமலும் போகலாம்! எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) இரவில் படுக்கைக்கு செல்லும்போது கீழ்கண்டவாறு பிரார்த்திக்கக் கற்றுக் கொடுத்தார்கள்:
பிஸ்மிக்க அல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா   (பொருள்: இறைவா, உன் பெயரால் நான் மரணிக்கவும் வாழவும் செய்கிறேன்)
அதேபோல் காலையில் கண்விழித்தால் போன உயிர் அடுத்த தவணை வரை திரும்பிக் கிடைத்ததற்காக நன்றி சொல்லக் கற்றுத் தருகிறார்கள் நபிகளார்:
அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹின்னுஷூர்  (பொருள்:என்னை மரணிக்கச் செய்த பின் உயிர் தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அவனிடமே நமது மீட்சியும் உள்ளது. )     
மரணத்திற்க்குப் பின் இறைவனிடம் மீட்டப்படுவது பற்றி சந்தேகத்திலிருப்போரை  அவர்களின் சுற்றும்முற்றும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்துப் பாடம் பெறச் சொல்கிறான் இறைவன்:
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 43:11)
அவனே உயிர் கொடுக்கிறான்  இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான் மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? (திருக்குர்ஆன் 23:80)

வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்? (திருக்குர்ஆன் 7:185)
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்? http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக