இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜனவரி, 2014

பெரும்பான்மையைத் துடைத்தெறிந்த சிறுபான்மை!

உலக சரித்திரம் பல வினோதமான அற்புதமான சம்பவங்களைத் தாங்கி நிற்கிறது. அவற்றில் ஒன்றுதான் மோசே என்று பைபிளிலும் மூஸா என்று குர்ஆனிலும் கூறப்படும் இறைத்தூதரின் சரித்திரம். அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக!
தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்து மக்கள் மீது அடக்குமுறைகளை கையாண்டு ஒரு கொடுங்கோலனாக எகிப்து நாட்டை ஆண்டுவந்தவன் பிர்அவன். அவன் இஸ்ரவேல் சந்ததிகளை அடிமைப்படுத்தி அவர்களின் மீது கொடுமை புரிந்து வந்தான். அவர்களின் ஆண்  பிள்ளைகளைக் கொன்றுவிட்டு பெண்களை வாழவிட்டுக் கொண்டிருந்தான். அந்த அடிமை வர்க்கமான இஸ்ரவேல் சந்ததிகளில் இருந்தே இறைவனின் தூதராகத் தேர்ந்தடுக்கப் பட்டவர்தான் மூசா.  பிர்அவ்னை திருத்துவதற்காகவும் அவனிடம் சிறைபட்டு அடிமைத்தனம் அனுபவித்து வந்த இஸ்ரவேல் சந்ததியினரை விடுவிக்கவும் வேண்டி மூசாவும் அவர் சகோதரர் ஹாரூனும் இறைவனால் உரிய அற்புத அத்தாட்சிகளோடு அனுப்பப்பட்டனர்.

பிர்அவ்னின் அரசவையில் தங்களை இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களாக அறிமுகம் செய்துகொண்டு இவ்வ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தனர். அவனைத் தவிர யாரும் வணக்கத்துக்கு உரியவர்கள் அல்ல என்ற கொள்கையை அரசவையில் முழங்கினர். தாங்கள் இருவரும் இறைவனின் தூதர்களே என்பதை நிரூபிக்க சில அற்புதங்களையும் நடத்திக் காட்டினர். பிறகு நடந்த சம்பவங்களை திருக்குர்ஆனின் 26 ஆம் அத்தியாயத்தில் இவ்வாறு காணலாம்.
26:34. (ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி ''இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!'' என்று கூறினான்.
26:35. ''இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?'' (என்று கேட்டான்.)
26:36. அதற்கவர்கள் ''அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
26:37. (அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்று கூறினார்கள்.

ஏனென்றால் சூனியக்கலையைக் காட்டிதான் பிர்அவ்ன் மக்களை தான் ஒரு கடவுள் என்று நம்பவைத்துக் கொண்டிருந்தான். அந்த மாயையைத் தகர்க்க வந்துள்ள மூஸாவையும் அவரது சகோதரரையும் எப்படியாவது வென்றாக வேண்டும். அதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டான் பிர்அவ்ன்.....
26:38. சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
26:39. இன்னும் மக்களிடம் ''(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?'' என்று கேட்கப்பட்டது.
26:40. ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக்  கூடும் (என்றும் கூறப்பட்டது).

சூனியக்காரர்களுக்கு பெரும் வெகுமதிகளை அளிக்கத் தயாராகிவிட்டான் பிர்அவ்ன்.
26:41.ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, ''திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா?'' என்று கேட்டார்கள்.
26:42.''ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று அவன் கூறினான்.
மக்கள் அனைவரும் கூடும் திருவிழா நாளில் அந்த பலப்பரீட்சை துவங்கியது.....
சூனியமா? உண்மையா? .... எது வெல்லும்?
போலிக் கடவுளா? உண்மை இறைவனா? .... யார் வெல்வார்கள்?
நடந்த சம்பவத்தை இறைவனே கூறுகிறான்.....
26:43.மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்'' என்று கூறினார்.
26:44.ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்'' என்று கூறினார்கள்.
பாவம், தாங்கள் பலப்பரீட்சை செய்வது இறைவனோடு என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
26:45.பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
அப்போதுதான் சூனியக்காரர்களுக்கு உண்மை தெளிவானது. மூஸாவும் ஹாரூனும் செய்வது சூனியக்கலை அல்ல,கண்கட்டுவித்தை அல்ல. உண்மை இறைவன் நிகழ்த்தும் நிகழ்வுகளே  என்பதை அறிந்து கொண்டார்கள்.
26:46. (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் சாஷ்டாங்கமாக விழுந்தனர்.
26:47. அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் (விசுவாசம்) கொண்டோம்.
26:48.''அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.' என்று கூறினர்.
உண்மை இறைவனின் அற்புதங்களைக் கண்ணாரக் கண்டபின் இறைநம்பிக்கை கொள்வதில் இருந்து அவர்களை எதுவும் தடுக்கவில்லை. கொடுங்கோலன் பிர்அவ்னும் அவன் பேரரசும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
26:49.(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் விசுவாசம் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.

இறைநம்பிக்கை உறுதியானபின் பிர்அவ்னின் மிரட்டல்களுக்கு மசியவில்லை அவர்கள்.

26:50. ''(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்'' எனக் கூறினார்கள்.
26:51. ''(அன்றியும்) இறைவிசுவாசிகளில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்'' என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றும் கூறினார்கள்).

தொடர்ந்து இறைத்தூதர் மூஸா அவர்களுக்கு இறைவனின் கட்டளை வந்தது.
26:52. மேலும், ''நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்'' என்று நாம் மூஸாவுக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தோம்.

கொடுங்கோலன் பிர்அவ்னுக்கு தொடங்கியது அழிவுகாலம். தன ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எகிப்தியர்கள் என்ற பெரும்பான்மையை இஸ்ரவேல் சந்ததியினர் என்ற சிறுபான்மைக்கு எதிராகத் திருப்பினான்.

26:53. (அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
26:54. ''நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
26:55. ''நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
26:56. ''நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.''

தொடர்ந்து இறைவன் கூறுவதைப் பாருங்கள்...
இந்த தற்காலிக உலகை மனிதனுக்கு ஒரு பரீட்சைக்களமாகப் படைத்திருக்கும் இறைவன் கூறும் வார்த்தைகள் இவை என்பதை நினைவில் கொள்வோமாக.....
26:57. அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
26:58. இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
26:59. அவ்வாறுதான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசகளாகவும் நாம் ஆக்கினோம்.

உலக இரட்சகனின் திட்டம் அதுவனால் மனித ஆசைகளும் பேராசைகளும் எங்கே நிறைவேறும்? இறைவனின் திட்டத்தைப் பற்றி அவன் நாடியவர்களுக்கு முன்னறிவிப்பு செய்கிறான். அவற்றை அறிந்து கொண்டவர்கள் நடந்து கொள்வதும் அறியாதவர்கள் நடந்து கொள்வதும் எதிரும் புதிருமாக இருப்பது இயல்புதானே!
26:60.பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது; ''நிச்சயமாக நாம் பிடிபட்டோம்'' என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
26:62. அதற்கு (மூஸா), ''ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்'' என்று கூறினார்;.
26:63. உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்'' என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
26:64.(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
26:65. மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
26:66. பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.

சரித்திரங்கள் இவ்வாறு பூமியில் மாற்றி மாற்றி எழுதப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவன் இறைவன். அதன் சுவடுகள் பூமியெங்கும் நிறைந்திருந்தும் பாடங்கள் பெறுவோர் குறைவே!
26:67. நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.

26:68. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

2 கருத்துகள்:

  1. your website is very good. keep it up...if you need code for your website. please visit this link

    (என் வலைப்பூவில் பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.)
    http://ungalblog.blogspot.com/p/codes.html

    பதிலளிநீக்கு
  2. Maashallah...allah udaiya thiru kur aan padika iru kangal podhadhu..allah miga periyavan..

    பதிலளிநீக்கு