இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஜனவரி, 2014

யாதும் ஊரே, யாவரும் கேளிர்! – இது சாத்தியமா?


இந்த அருமையான வாழ்வியல் இலக்கணம் எங்கும் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் அனைத்து மனிதர்களும் ஆசைப்படும் ஒன்றாகும். இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் அதற்கான ஆக்கபூர்வமான செயல்திட்டம் தேவை. இல்லையேல் அது ஆசையோடும் ஏக்கத்தோடும் நின்றுவிடும்.
ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் ஜாதிகளின் பெயராலும் ஒருவரை ஒருவர் பயங்கரமான முறைகளில் தாக்கிக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொண்டு வருகிறோம்.
இந்நிலைமை ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மனிதனிடம் குடிகொண்டுள்ள குழப்பம் நிறைந்த கடவுள் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளுமே!
பூமியில் மீணடும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் நன்மையையும் அமைதியும் நிலைபெற வேண்டுமானால் மனித இதயங்களில் கடவுளைப் பற்றியும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும்  தெளிவான மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை விதைக்கப் பட வேண்டும்.
அதாவது என்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் உள்ளான். அவன் சர்வ வல்லமை உள்ளவன். இந்த தற்காலிக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அவனிடமே நான் திரும்ப வேண்டியுள்ளது. அவன் நான் செய்த புண்ணியங்களுக்கு பரிசு தருவான். அதே போல் நான் பாவங்கள் செய்தால் தண்டிக்கவும் செய்வான் என்ற அடிப்படை உணர்வு ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஆழமாக விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் மனிதன் பாவம் செய்யாமல்  இருப்பான், புண்ணியங்கள் செய்வதற்கு ஆர்வம்  கொள்வான்.
  இந்த அடிப்படையை மக்களுக்கு போதிக்க இறைவன் அவ்வப்போது தனது தூதர்களை அனுப்பினான். ஒவ்வொரு காலத்திலும் இவ்வுலகின் பல பாகங்களுக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த இறைத்தூதர்கள் மிகத்தெளிவான கடவுள் கொள்கையையே போதித்தார்கள். இவ்வுலகைப் படைத்து உங்களைப் பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே. அவனை மட்டுமே வணங்குங்கள். அவனை விட்டு விட்டு படைப்பினங்கள் எதையும் வணங்காதீர்கள். அவன் அல்லாத எதையும் இறைவன் என்று சொல்லாதீர்கள், அவனுக்கு உருவங்கள் எதையும் சமைக்காதீர்கள், ஏனெனில் அவனைப் போல் எதுவுமே இங்கு இல்லை. அவனை யாரும் நேரடியாக அணுகலாம். அவனை வணங்குவதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை.

 “படைப்பினங்களைப் பாருங்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தி படைத்தவனை உணருங்கள். அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால் அதற்குப் பரிசாக மறுமை வாழ்க்கையில் சொர்க்கத்தை வழங்குவான். நீங்கள் செய்நன்றி கொன்று அவனுக்கு மாறு செய்தால் அதற்க்கு தண்டனையாக உங்களை நரகத்தில் நுழைவிப்பான் என்றெல்லாம் போதித்தார்கள்    

  ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணியவாங்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பினார்கள். நாளடைவில் அவற்றையே வழிபடவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறு மக்கள் உயிரற்ற உணர்வற்ற ஜடப் பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்பத் துவங்கியதால் உண்மையான இறை உணர்வும் பயபக்தியும் சிதைக்கப்பட்டு மக்கள் தயக்கமின்றி பாவங்கள் செய்யத் தலைப்பட்டனர். இவற்றோடு கடவுள் பெயரால் மக்களைச் சுரண்டிப் பிழைக்க இடைத்தரகர்களும் அவர்கள் அவிழ்த்துவிட்ட மூடநம்பிக்கைகளும் என பல தீமைகளும் சேர்ந்து பூமியில் அதர்மத்தை அக்கினிக் குண்டம்போல் வளர்த்தன.
   இவ்வாறு அதர்மம் பரவிய போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக மீண்டும்மீண்டும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டனர். அவர்கள் மேற்கண்ட அடிப்படை போதனைகளை மக்களிடையே விதைத்து மீண்டும் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றனர். அந்த இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவரும் தனது வாழ்நாளில் அதே அடிப்படையில் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றார்!
  
   இனி தர்மத்தை மீணடும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு நம் கையில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதற்கு இறுதி வேதம் குர்ஆனையும் இறுதித்தூதரின் முன்மாதிரியையும் நாம் கைகொள்ள வேண்டும். அதில் அதிமுக்கியமாக திருக்குர்ஆன் கற்றுத்தரும் கடவுள் கொள்கையை நாம் மக்கள் மனங்களில் விதைக்க வேண்டும். இன்று` காணும் மாசுபடுத்தப் பட்ட கடவுள் கொள்கைகளை மக்கள் மனங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். உயிரற்ற உணர்வற்ற பொருட்களை எல்லாம் காட்டி இவற்றை எல்லாம் கடவுள் என்று நம் சிறார்களுக்கு கற்பிப்பதை நாம் நிறுத்த வேண்டும். இதனால் ஒருபுறம் அவர்களின் கடவுள் உணர்வைச் சிதைத்து பாவம் செய்ய  அஞ்சாத தலைமுறைகள் உருவாக வித்திடுகிறோம். மறுபுறம் இதையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் சர்வ வல்லமையும் ஞானமும் கொண்ட இறைவனைச் சிறுமைப் படுத்துவதால் அவனது கடும் கோபத்திற்கும் ஆளாகிறோம்.
    இறைவனை அவன் எவ்வாறு அறிமுகப் படுத்துகிறானோ அவ்வாறே விளங்கிக் கொள்ள வேண்டும். அது அல்லாமல் நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகிறது.
இறைவனின் இறுதி இறைவேதம் திருக்குர்ஆன் மனிதகுல ஒற்றுமையையும் இறைவனின் இலக்கணங்களையும் இவ்வாறு கற்பிக்கிறது.:
  ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு த் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
 ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு அவனை நேரடியாக வணங்க வேண்டும். இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் அளிக்கக் கூடாது என்று கற்பிக்கிறது திருக்குர்ஆன்.
2:186        .(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;. அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;. என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக.
50:16  நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்

ஆம் அன்பர்களே இதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனவை நனவாக்க விழைவோர் மக்களுக்கு கற்பிக்கவேண்டிய அடிப்படைக் கல்வி! 
இது ஒரு வெற்றுப்பேச்சு அல்ல.     இதை நீங்கள் இந்த சத்திய இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே நிதர்சனமாகக் காணலாம். உதாரணமாக, நமது நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாய மக்களைப் பாருங்கள். இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்தோ அல்லது துருக்கியிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. இவர்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாகவோ கிருஸ்துவர்களாகவோ இருந்து இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். இன்று இவர்கள் தீண்டாமை மறந்து பள்ளிவாசல்களில் ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் ஒரே தட்டில் உணவு உண்பதையும் காண்கிறீர்கள்

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக