இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

நாம் பிறந்த காரணத்தை அறிவோமா?

Image result for purpose of lifeநாம் பிறந்த இடத்தையோ, நாம் பிறந்த நாளையோ, ஏன் நம் பெற்றோர்களையோ  கூட  நாம் தேர்ந்தெடுத்து இங்கு வரவில்லை என்பது உறுதி.  நாமாக விருப்பப்பட்டு நாமே பிறந்து இங்கு வந்தோமா என்றால் அதுவும் இல்லை.
பிறகு எதற்காக நாம் இங்கு வந்தோம்? நம் வாழ்வும் மரணமும் எதற்காக? இதை பற்றி சற்று சிந்தித்துப் பார்க்கலாமே, வாருங்கள்..
நோக்கமின்றி எதுவுமில்லை!
நம்மை சுற்றிப்  பரவிக்கிடக்கும் எண்ணற்ற பொருட்களை சற்று பாருங்கள். நாம் காணும் இயற்கைப் பொருட்களிலோ அல்லது நம்மால்  தயாரிக்கப்பட்ட பொருட்களிலோ நோக்கம் இல்லாத ஒரு பொருளையும்  நம்மால் காணமுடிகிறதா?  சரி,  நம் உடல் உறுப்புகளையே  எடுத்துக் கொள்ளுங்களேன்! நோக்கம் இல்லாத ஏதாவது ஒரு உறுப்பை  காட்டுங்கள் பார்ப்போம்!
நாம் தயாரித்த பொருட்கள் அனைத்திற்கும் பின்னால் நோக்கம் இருக்கும்போது, நம் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் பின்னால் நோக்கம் இருக்கும்போது, இயற்கை வளங்கள் அனைத்திற்கும் பின்னால் நோக்கம் இருக்கும்போது, உலகெங்கும் பரவிக்கிடக்கும் இவ்வளவு பெரிய மனிதகுலம் மட்டும் எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்கிறது என்று எண்ணினால், அது  சரியாக இருக்க முடியுமா?

நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?...
பெயரும் புகழும் பெறுவதற்கா?  உல்லாசமாக இருப்பதற்கா?..  செல்வந்தனாக வாழ்வதற்கா?..  இவை மட்டும்தான் வாழ்க்கையின் நோக்கம் என்றால், ஐந்தறிவு உள்ள மிருகங்களுக்கும் ஆறறிவு பெற்ற மனிதனுக்கும் என்ன வேறுபாடு?  இவற்றுக்கெல்லாம் அப்பால் நம் வாழ்விற்கு பின்னால் ஒரு உன்னத நோக்கம் இருக்க வேண்டும் என்றல்லவா நம் பகுத்தறிவு கூறுகிறது.. சற்று சிந்திப்போமே!
எனது வாழ்வின் நோக்கத்தை தீர்மானிப்பது யார்?
'நான்தான் என் வாழ்வின் நோக்கத்தை தீர்மானிப்பேன்!' என்று நீங்கள் கூறலாம். உதாரணமாக ஒரு பேனாவை எடுத்துக்கொள்வோம். அது தயாரிக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் என்ன? நாம் சில சமயம் பேனாவை நம் காது குடைவதற்காக பயன்படுத்துவதுண்டு. அதற்காக பேனா காது குடைவதற்காக தயாரிக்கப்பட்டது என்று நாம் கூறமாட்டோம். பேனா எழுதுவதற்காகத்தான்  தயாரிக்கப்பட்டது என்பதை உறுதியாக அறிவோம். ஆனால் அதைத் தீர்மானித்தது யார்?
அதை பயன்படுத்துபவரா? அல்லது அதனை விற்பனை செய்பவரா? அல்லது அதனைத் தயாரித்தவரா?
கண்டிப்பாக அதனை யார் முதன்முதலில் தயாரித்தாரோ அவர்தானே அதன் உண்மையான நோக்கத்தை தீர்மானிப்பவராக இருக்க முடியும்?   இந்த விஷயத்தை நமக்கும் பொருத்திப் பார்ப்போமே!

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையின் நோக்கமாக வெவ்வேறு  காரணங்களை கூறலாம்.  ஆனால் அவையெதுவும் ஒருபோதும் நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கமாகாது.  மாறாக, யார் நம்மை படைத்தானோ, யார் நமக்கு இந்த வாழ்வைக் கொடுத்தானோ அவன்தான் நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தீர்மானிக்க முடியும் என்பது தெளிவு!
நம்மை படைத்தவன் ஒருவன் உண்டா?
நாம் ஒரு பொருளை, ஒரு வாகனத்தை அல்லது ஒரு கட்டிடத்தை பார்க்கும்பொழுது அதை தயாரித்த ஒரு தனி மனிதனோ அல்லது நிறுவனமோ அதற்குப் பின்னால் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. இந்த பிரபஞ்சம்  சீராக ஒழுங்குடன் ஒரு அழகிய கட்டமைப்புடன் இயங்குவதை நாம் காணலாம். உதாரணமாக இன்றிலிருந்து அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள சூரிய சந்திர கிரகணத்தின் நேரத்தையும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தையும் மிக துல்லியமாக இன்றே நம்மால் கணிக்க முடிகிறது என்பதை அறிவோம். இது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களும் கோள்களும் ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இயங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த ஒழுங்கும் கட்டமைப்பும் தானாகத் தோன்ற இயலுமா என்று சிந்தித்துப்பாருங்கள்.

ஒரு சுவற்றின் மீது நாம் பல வண்ணத் திரவங்களை வேகமாக வீசினால் அது ஓர் பறவையை போன்றோ அல்லது ஓர் மலரை போன்றோ தோற்றம் அளிக்க வாய்ப்புண்டு. ஆனால் மிக பிரபலமான மோனாலிசா  ஓவியம் அங்கு தோன்ற வாய்ப்பே இல்லை.  ஒரு தலைசிறந்த ஓவியன்தான் அந்த ஒவியத்தை வரைந்திருக்க  முடியும் என்று ஒத்துக் கொள்ளும் நாம் மோனாலிசா ஓவியத்தை விட மிக நுட்பமான இந்த பிரபஞ்சம் மட்டும் தானாக தோன்றியது என்று கூறுவது எவ்வாறு பகுத்தறிவாகும்? நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தை படைத்த ஒரு மாபெரும் சக்தி இருக்க வேண்டும் என்பதுதானே பகுத்தறிவு நமக்கு கூறும் உண்மை!
நம் உடல் என்ற அற்புதமும் அது வசிக்கும் இந்தப் பிரபஞ்சம் என்ற மாபரும் அற்புதங்களின் தொகுப்பும் தானாகவோ தற்செயலாகவோ உருவாகவோ தொடர்ந்து இயங்கவோ முடியாது என்பது திண்ணம்! இதற்குப் பின்னால் ஒரு அளப்பரிய தன்னிகரற்ற சக்தியும் நுண்ணறிவும் அதிபக்குவமான திட்டமிடலும் அவற்றை அயராது இயக்குதலும் அவசியம் என்பதை பகுத்தறிவு நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒரு மனிதனைப் போலவோ அல்லது நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற ஒருஜடப்போருளாகவோ இருக்க முடியாது என்பதும் அதே பகுத்தறிவு நமக்குச்சொல்லும் பாடமாகும். அந்த தன்னிகரற்ற சக்தியையே நாம் தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் ஆங்கிலத்தில் காட் என்றும் அரபு மொழியில்அல்லாஹ் என்றும் நாம் அழைக்கிறோம்.
மனிதனுக்கு இறை வழிகாட்டல் அவசியமா?
மனிதனை ஒரு இயந்திரம் என்று அழைப்போமேயானால், உலகிலேயே மிகவும் அதிநவீனமான, சிக்கலான இயந்திரம் மனிதன்தான். ஏனெனில், ஏனைய இயந்திரங்களுக்கு இல்லாத அறிவாற்றலும், உணர்ச்சிகளும் மனிதனுக்கு உள்ளன.
நாம் பயன்படுத்தும் ஸ்கூட்டர் அல்லது காரின்  டயருக்கு காற்றடிக்கும் போது, அந்த வாகனத்தை தயாரித்தவர் எவ்வளவு காற்றழுத்தம் இருக்க வேண்டும்  என்று சொல்கிறாரோ அந்த அளவிற்குத்தான் நாம் காற்றடிப்போம். மாறாக, நம் வாகனம் என்பதற்காக, நம் இஷ்டம் போல காற்றடிப்பதில்லை. இப்படி ஒரு சாதாரணமான விடயத்திற்கே வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது என்றால், எண்ணற்ற சிக்கல்களும் நுட்பமும் நிறைந்த மனிதன் என்ற இந்த  இயந்திரத்திற்கு அதை உண்டாக்கியவனின்  வழிகாட்டல் அவசியமில்லை என்று சொல்வது பகுத்தறிவாகுமா?
மனிதனுக்கான  படைத்தவனின் வழிகாட்டல் எங்கே கிடைக்கும்?
ஏதேனும் ஒரு அதிநவீன இயந்திரத்தை பெரும் விலைகொடுத்து வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த இயந்திரத்திலிருந்து உரிய முறையில் நாம் பயனடைய வேண்டுமானால் அதற்கு அதன் பயன்பாடு பற்றிய நல்ல செயல்முறை விளக்கமும் (demo), தொடர்ந்து அந்த  இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்று தரும் கையேடும் (Instruction Manual) இன்றியமையாதவை என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் நம்மில் ஒவ்வொருவருக்கும் வாய்த்துள்ள விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக அமைந்திருப்பவை நம் உடலும் உள்ளமும். இவ்வுலகையும் அதில் உள்ள்ளவற்றையும் அதிபக்குவமாகப் படைத்தவன் நமகென்று ஒரு வழிகாட்டுதலைத் தராமல் 'அம்போ' என்று விட்டுவிடுவானா?
ஆம் அன்புக்குரியவர்களே,  இந்த மாபெரும் பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவற்றையும் மனிதனுக்கு பயனளிப்பதற்கென்றே படைத்து பரிபாலித்து வரும் அந்த அளவற்ற அருளாளன் அவனுக்கு நேரிய முறையில்
வழிகாட்டுவதற்காக மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளான். நமது படைப்பின் நோக்கம், நாம் இங்கு எவ்வாறு வாழவேண்டும், இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் எங்கே போகிறோம் என்பன போன்ற விடயங்களைக் கற்றுத்தரவும் நமக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாக விளங்கவும் வேண்டி மனிதர்களில் புனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமித்து அனுப்பியுள்ளான்.
அந்த சிறந்த மனிதர்களே இறைதூதர்கள் என்று அறியப்படுகின்றனர். இந்த இறைதூதர்கள் மூலமாக நேர்வழியை கற்று தரும் கையேடுகளை வழங்கினான். இந்த கையேடுகளே இறை வேதங்கள்.

நோவா (Noah), ஆபிரகாம் (Abraham), தாவுது (David), சாலமன் (Solomon), மோசஸ் (Moses) மற்றும் இயேசுகிறிஸ்து (Jesus Christ) போன்றோர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் சிலர்.  அந்த வரிசையில் இறுதியாக இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் முஹம்மது நபி அவர்கள். அவர்கள் மூலமாக இறைவன் அருளிய  வேதம்தான் திருக்குர்ஆன். திருக்குர்ஆன் ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு  மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.

நம் வாழ்க்கையின் நோக்கத்தை நமக்கு கற்று தருவது மட்டுமல்லாமல், இந்த உலகில் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ, திருக்குர்ஆன் ஒரு அற்புதமான வாழ்க்கை திட்டத்தை முன்வைக்கிறது. வறுமை, பெருகி வரும் குற்றங்கள், வன்முறை, ஊழல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள்  மனித சமுதாயத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சமுதாய பிரச்சனைகளுக்கும், தனி மனித பிரச்சனைகளுக்கும் இறைவன் தரும் தீர்வுகளைத் தாங்கி நிற்கிறது திருக்குர்ஆன் என்பதை நீங்கள் அறிவீர்களா?
ஆராய்ச்சிக்கு அழைப்பு
எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், திருக்குர்ஆனை ஆராய்ந்து படித்து, சிந்திக்க இறைவன் முழு மனித சமுதாயத்திற்கும் அறைகூவல் விடுக்கிறான்.
"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." (திருக்குர்ஆன் 4:82)

திருக்குர்ஆனில் விசேஷமாக அப்படி என்னதான் உள்ளது? படித்துதான் பாருங்களேன்!
===========
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக