இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜனவரி, 2019

விழிபிதுங்கி வாடும் சமூகத்திற்கு வழிகாட்டுவோர் யார்?


Image result for broken world

= மகாராஷ்டிராவின் மதுபான பார்களில் பெண்கள் நடனமாட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!
= தலைவிரித்தாடும் சாதிக்கொடுமையால், தாயின் சடலத்தை ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்த மகன்!- (நாள் 17 -1-19 இடம்: ஓடிஸா)
= கல்லூரி மாணவரை கொலை செய்துவிட்டு அவரது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நாள் 17 -1-19, இடம்: திருச்சி
= கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலி உயிரிழப்பு!
= கடன் வாங்கித்தருவதாகக் கூறி வரவழைத்து இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்! இடம்: டெல்லி நாள் 16-1-19
(News7Tamil நாள்:17-1-19)
குற்றங்களின் கோரமுகம்!
இவையெல்லாம் வெறும் ஓரிரு நாட்களில் நம் நாட்டில் நடந்த குற்றங்களில் ஒருசில மட்டுமே . வெறும் ஒரு உதாரணத்துக்காக மட்டுமே இவற்றை எடுத்துக் கூறியுள்ளோம். இவை சற்றும் நின்ற பாடில்லை.
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப் படி 2016 ஆம் ஆண்டு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சம். பதிவு செய்யப்படாதவை பல மடங்கு அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளதை சிந்திப்போர் அறியமுடியும். இந்த எண்ணிக்கை ஏறுமுகமாகவே தொடர்கிறது. இந்நிலை தொடர்ந்தால் நம் வீட்டுக்குள்ளும் கொலைகளும் கொள்ளைகளும் கற்பழிப்புகளும் சகஜமாகவே நிகழும் நாட்கள் தூரத்திலில்லை. ஏற்கெனவே மக்கள் வாழவே வெறுக்கும் நிலை நாட்டில் உள்ளதையும் ஆவணக்காப்பகத் தகவல் எடுத்துரைக்கிறது. ஆம், நாளொன்றுக்கு 371 தற்கொலைகள் .. காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே இது. போலீஸ் மற்றும் போஸ்ட்மார்ட்டம் போன்ற தொல்லைகளை பயந்து பெரும்பாலான தற்கொலைகளை உறவினர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்வதில்லை என்பது ஊரறிந்த உண்மை!

கீழ்கண்டவை இங்கு பரவலாக நடப்பதை நாம் இனிமேலும் கண்டும் காணாமல் இருக்கமுடியாது.
= தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக எந்தக் குற்ற உணர்வுமின்றி தாமாகவே கொன்றொழிக்கும் பெற்றோர்கள்.
= பெருகிவரும் கருக்கொலை, சிசுக்கொலை, பெண்சிசுக்கொலைகள்.
= வாழ்நாட்களை தங்களுக்காகவே அர்பணித்த பெற்றோர்களை வளர்ந்து ஆளானதும் மதிக்காத பிள்ளைகள்... பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்,
= போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து காதலர்களைக் கைப்பிடித்து ஓடிப்போகும் பிள்ளைகள்.
= காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கன்னிப்பெண்களைக் கைவிட்டு ஓடும் காமுகர்கள்.
= திருமண ஒப்பந்தத்தை மீறி நடக்கும் கள்ளக்காதல் உறவுகள், கபட நாடகங்கள், கள்ளக்காதலனுக்காக அல்லது காதலிக்காக மணமுடித்த கணவனை அல்லது மனைவியை மற்றும் சொந்தக் குழந்தைகளைக் கொன்றொழிக்கும் கொடூரங்கள்.
= திருமணம் இல்லாமலே ஆணும் பெண்ணும் தகாத உறவு கொண்டு மனம்போன போக்கில் வாழுதல். அதில் பெற்றெடுக்கும் பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொல்லுதல்.
= அந்நிய ஆண்களும் அன்னிய பெண்களும் தடைகளின்றி கலந்து படிக்கும், பணியாற்றும் ஏற்பாடுகளும் அங்கு நடைபெறும் தவறான பாலியல் உறவுகளும், வல்லுறவுகளும்! (தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிப்பு. இவை வெறும் ரிபோர்ட் செய்யப்படும் புகார்களின் அடிப்படையிலானவை. உண்மை கற்பழிப்புகள் குறைந்த பட்சம் 3 மடங்காவது அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது)
= மது, போதைப்பொருள் இவற்றின் கட்டுக்கடங்காத பெருக்கம். பள்ளி மாணவர்களும் வகுப்பறைக்கு குடித்துக்கொண்டு வரும் அவலம். பத்துவயதுக் குழந்தைகளும் கூட போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை.
.....என இவற்றின் நடுவே எந்தவித குற்ற உணர்வும் வெட்க உணர்வும் இன்றி சஞ்சரித்துக் கொண்டு வாழ்கிறது சமூகம்!
மக்களை சுரண்டுவது ஒன்றே இலட்சியமாகக் கொண்ட அரசுகளுக்கும் அவர்களின் அடியாள்களுக்கும் இது பற்றி என்றுமே குற்ற உணர்வு இருப்பதில்லை.

தவறுகளை வேண்டுமென்றே வளர்க்கும் அரசியலார்
சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம், காவல்துறை, சட்டமன்றம், பாராளுமன்றம், ஆன்மீக போதனைகள், வழிபாட்டுத்தலங்கள், போன்ற அனைத்தும் இருந்தும் மக்கள் செய்யும் பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் எந்தக் குறைவும் இன்றி நாளுக்குநாள் மிக வேகமாக அதிகரித்தே வருகின்றன. இதில் சட்டம் ஒழங்கை நிலைநாட்டுவதைத் தலையாய பணியாகக் கொண்ட அரசாங்கம் நேர்மாற்றமாக செயல்படுவதை நாம் காணமுடிகிறது. நாடு எக்கேடோ கெட்டுவிட்டுப் போகட்டும் முடிந்தவரை சுரண்டுவது ஒன்றே நம் பணி என்று அரசியல்வாதிகள் செயல்படுவதையும் நாம் காணலாம். நாட்டின் சீர்கேட்டுக்கு இட்டுச்செல்லும் குற்றங்களின் பெருக்கம் பற்றியோ பாவங்களின் பெருக்கங்கள் பற்றியோ எந்தப் பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ யாரேனும் எப்போதேனும் பேசுவதைக் கேட்டுள்ளீர்களா?

விபரீதத்தின் உச்சகட்டம்

நாட்டில் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பாவங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய தலையாய பணிக்காக நிறுவப்பட்டவைதான் நீதித்துறையும் காவல்துறையும். ஆனால் எப்படி விபரீதமாக அவை செயல்படுகிறது என்று பாருங்கள். பெரும்பாவங்க்ளான விபசாரமும் ஓரினசேர்க்கையும் சூதாட்டங்களும் கள்ளக்காதலும் எல்லாவற்றுக்கும் சட்ட அங்கீகாரங்கள் கொடுக்கப்படும் அவலத்தை நாம் யாரிடம் சொல்ல?
திருமணம், குடும்ப உறவுகள், தாய்தந்தை மரியாதை, மனிதநேயம் என அனைத்தையும் தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிர்கதியாக நின்றுக்கொண்டிருகிறது சமுதாயம். யாரிடம் நாம் உதவிக்கு கையேந்த முடியும்?

சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்
அனைவரும் சிந்திக்கவேண்டிய கேள்வி இது. சமூக நலன் நாடும் அனைவரும் ஒன்றுகூடி அவசர அவசரமாக விடை காண வேண்டிய கேள்வி இது. நாளொன்றுக்கு சுமார் 500 இல் இருந்து ஆயிரம் பேர்வரை தற்கொலை செய்துகொள்வது என்ற தகவலை நாம் அலட்சியமாகக் கடந்து போக முடியாது. .
உலகைக் காப்பாற்ற என்னதான் வழி? இனியொரு விடியல் ஏற்பட வாய்ப்புண்டா? அதை ஆராய அழைக்கிறோம். ஆன்றோர்களே, சான்றோர்களே, சமூகத்தை வழிநடத்த வேண்டிய தலைவர்களே, முன்வாருங்கள்..
------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக