இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 டிசம்பர், 2018

கொலை கொலையாகத் தற்கொலைகள்!

தற்கொலைஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம் தாழ்வுகள் வரும்போது தகர்ந்து போகிறது!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள், விலங்குகள், மரங்கள், வீடுகள், விவசாயம், தொழில் என பலவற்றையும் திடீரென இழந்து மக்கள் செய்வதறியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கு முன்னரும் பல பேரழிவுகள் நம்மைக் கடந்து சென்றுள்ளதை நாம் அறிவோம்.
மனிதன் பிறந்ததில் தொடங்கி இறக்கும் வரை அவனது வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு சோதனைகளைக் கடந்தே போக வேண்டியுள்ளது. செல்வம், வறுமை, ஆரோக்கியம், நோய், இலாபம், நஷ்டம் இளமை முதுமை என ஒன்றுக்கொன்று முரணான நிலைகளைக் கொண்டதே வாழ்க்கை. இதில் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தவர்கள் திடீரென நோயுறும்போதும், செல்வ வளத்தோடு வாழ்ந்தவர்கள் திடீரென வறுமைக்குத் தள்ளப்படும் போதும் பெரும்பாலும் வாழ்க்கையையே வெறுத்து விடுகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள். ( தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 தற்கொலைகள்!)
எதற்காக தற்கொலைகள்?
எதற்காகவெல்லாம் தற்கொலைகள் நிகழ்கின்றன என்ற தகவல்களை காப்பகம் பதிவு செய்துள்ளது. பொதுவாக குடும்பப் பிரச்னைகள், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நாள்பட்ட, தீராத நோய்கள், காதல் தோல்வி, வேலையின்மை, ஏழ்மை, பரீட்சையில் தோல்வியுறுவது, பொருளாதார நிலையில் ஏற்படும் திடீர் பின்னடைவு, சொத்துத் தகராறு, தொழில் நஷ்டம், போதைக்கு அடிமையாதல், வரதட்சணைப் பிரச்சினை, பாலியல் பலாத்காரம், முறையற்ற கர்ப்பம், விவாகரத்து, குழந்தையின்மை, பிரியத்துக்குரியவர்களின் மரணம்... என எத்தனையோ காரணங்கள் காணப்படுகின்றன...
சற்று விரிவான உதாரணங்கள்
= சிறுவயதில் ஏற்பட்ட இன்னல்கள், வறுமை.
= இளம் வயதில் பள்ளியைவிட்டு நீங்குதல், நீக்கப்படுதல்.
= பெற்றோருக்கு இடையே பிரச்னை, அதன் காரணமாக பெற்றோர் பிரிதல்.
= நண்பர்களோடு கருத்து மாறுபாடு, பிரச்னை, உறவு முறிதல்.
= ஏதோ காரணத்தால் வேலையிலிருந்து நீக்கப்படுதல்; நிறுவனத்தில் இருந்து ஆள்குறைப்பு காரணமாக நீக்கப்படுதல்.
= குடும்ப உறவுகளால் மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ளுதல்... மனப் பதற்றம், மனஅழுத்தம் ஏற்படுவது போன்றவை.
= சமுதாயரீதியாக ஒதுக்கப்படுதல்.
=  மாற்றுத்திறனாளியாக இருந்து, அதன் காரணமாக மற்றவர்களால் மனக்கசப்புக்கு ஆளாகுதல்.
= சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது.
= சுயகௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் நிலைமை வந்தால், அதனால் மனதளவில் பாதிக்கப்படுவது.
=  உறவினர்களில் முக்கியமானவர் இறந்துபோவது அல்லது பிரிந்துபோவது.
= உறவினர்களோடும் மற்றவர்களோடும் உறவின்மை (Belongingness)
= மற்றவர்களுக்கு நாம் பயனில்லாமல் இருக்கிறோம் என்கிற நினைப்பு.
= மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்று நினைத்துக்கொள்வது.
= மீளாத்துயரம்.. உதாரணமாக, திருமணம் செய்யும் அளவுக்கு வளர்ந்த மகன் இறந்து போவது, பெற்றோரை பாதிக்கும்; தாங்க முடியாது. சிலருக்கு அந்தத் துயரம் வாழ்நாள் முழுக்க தோய்ந்து இருக்கும். எப்போது சமயம் கிடைக்கும், அவர்களோடு சேர்ந்து போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 
மாணவர்களைப் பொறுத்த வரை... 
= பரீட்சையில் தேர்ச்சி அடையாமை.
= பள்ளியில் மற்ற மாணவர்களுடன் சுமுகமாக இருக்க முடியாமல் போதல். 
= மற்ற நண்பர்களால் ஒதுக்கிவைக்கப்படுதல். 
= உடல்ரீதியாக ஏதாவது குறைபாடு இருந்தால், அதனால் சுயபச்சாதாபம் ஏற்பட்டு, அதனால் பாதிக்கப்படுவது... 
இவ்வாறு ஒவ்வொரு தரப்பாரிடமும் வெவ்வேறு காரணங்களை நாம் காண முடியும்
தீர்வுகளாகப் பரிந்துரைக்கப் படுபவை :
மன நல மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் கீழ்கண்ட தீர்வுகளை பரிந்துரைப்பதைக் காணலாம்.
= குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 
= அம்மா, அப்பா இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்துவது, விளையாடவிடுவது அவசியம். குழந்தைகளின் ஆளுமைத்திறன் வளர அது உதவும். 
= விரக்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
= இப்போது தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க பல மையங்கள் இருக்கின்றன. தொலைபேசியில்கூட தொடர்புகொண்டு அவர்களுடன் பேசலாம்.
= உறவினர்களுடனான உறவைப் பேணுவது; நண்பர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுவது; ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது.
=  ஓய்வுகாலத்தைக்கூட பயனுள்ள வகையில் ஏதாவது அமைப்போடு சேர்ந்து பணியாற்றுதல், மற்றவர்களுக்கு உதவி செய்வது என அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், இந்த எண்ணம் வராது. 
= தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. உயரமான இடங்கள் (செல்போன் டவர், லைட் ஹவுஸ்) பாதுகாப்பற்ற இடங்களில் அதை நெருங்க முடியாதபடி தடைகளை (Barricade) ஏற்படுத்தலாம். அதற்கு அரசு ஆவன செய்யலாம்.
= தற்கொலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் (துப்பாக்கி போன்றவை) பூச்சிகொல்லிகள், போன்றவை எளிதில் கிடைக்காத மாதிரி அரசு கட்டுப்படுத்துவது.
= அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, பெற்றோரே குழந்தைகளை எதையும் எதிர்கொள்ள  மனோரீதியாக தயார்ப்படுத்த வேண்டும். பரீட்சை வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பதல்ல. ஒரு மாதம் கழித்து இன்னொரு பரீட்சை எழுதிக்கூட தேர்ச்சி பெற்றுவிடலாம் என தைரியம் கொடுக்கலாம். இது ஒரு தற்காலிகத் தோல்வி; இதற்காக நிரந்தரமாக ஒரு முடிவைத் தேடிக்கொள்ளக் கூடாது என்ற விஷயத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதை ஊடகங்களிலும் பரவலாகச் சொல்ல வேண்டும். 
= பள்ளிகளில் ஸ்டூடன்ட் கவுன்சலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பிரச்னை வரும்போது அவர்களுக்கு உரிய ஆலோசனை தர வேண்டும். 
= நாட்டில் பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள், போன்றவை நிகழும்போது மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்நிலைகளில் தற்கொலைகள் அதிகரிக்கும். அந்த நேரத்தில் அரசும் மக்களுக்கு உதவ வேண்டும்.  
ஏட்டுச்சுரைக்காய் போன்ற தீர்வுகள்   
மேற்கண்ட தீர்வுகள் நடைமுறைப் படுத்தப் பட வேண்டுமானால் அதற்கான முறையான உந்துதல் தீர்வை நடைமுறைப் படுத்தப் போகிறவருக்கும் தற்கொலைக்கு முயற்சிப்பவருக்கும் இருக்க வேண்டும். அப்படியே அவை நடைமுறைப்படுத்தப்படுமானாலும் எந்த அளவுக்கு தற்கொலைகளைத் தடுக்கும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமே. காரணம் மனித மனம்தான் இங்கு முக்கியமான காரணி. இது முக்கியமாக பண்படுத்தப்படாத வரை தீர்வு என்பது எட்டாக்கனியாகவே தொடரும் என்பதில் ஐயமில்லை. எந்த ஒரு மனிதனும் தான் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைக்கு தற்கொலைதான் தீர்வு என்று அவனுக்குத் தோன்றுவதற்கு முக்கியமான காரணம் அதனால் தனக்கு எந்த பாதிப்பும் இழப்பும் இல்லை என்று வலுவாக நம்புவதால்தான். அதனால் தனக்கு எந்த பின்விளைவுகளும் நேரப்போவது இல்லை என்ற எண்ணமே தற்கொலைக்கு மிகப்பிரதானமான காரணம் என்பதே உண்மை! அதாவது வாழ்க்கை என்பது அர்த்தமற்றது, நோக்கமற்றது, ஒரு மாயை, வாழும் வரைதான் வாழ்க்கை அதற்குப்பிறகு மண்ணோடு மண்ணாகிப் போகிறோம், வாழ்க்கை என்பது தற்செயலானது இங்கு எப்படி வாழ்ந்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்பன போன்ற உணர்வுகளும் அந்த உணர்வுகளை ஊக்குவிக்கும் பரப்புரைகளுமே தற்கொலைக்குத் தள்ளும் முக்கிய காரணிகள் என்பதை நாம் உணரவேண்டும்.

இறைவன் தருவதே தீர்வு
மாறாக மனித மனங்களில் பகுத்தறிவு பூர்வமான இறைநம்பிக்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிவும் ஏற்படுத்தினால் மட்டுமே தற்கொலைகளை ஆக்கபூர்வமான முறையில் தடுக்க முடியும்.
மனித வாழ்வில் மன அமைதியும் சோதனைகள் வரும்போது எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாமல் போவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நாம் யார்? இந்த வாழ்க்கை என்பது எதற்காக? இதன் பின்னணி என்ன? நாம் ஏனிங்கு உள்ளோம்? இங்கிருந்து எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கான பதில்களை அறிய முற்படாமையே. இக்கேள்விக்கான தெளிவான பதில்களை இவ்வுலகைப் படைத்த இறைவனே தன் தூதர்கள் மூலமாக வழங்கியுள்ளான். அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன். திருக்குர்ஆனில் இருந்தும் நபிகளாரின் வழிகாட்டுதல்களில் இருந்தும் மனஅமைதி மற்றும் தன்னம்பிக்கை வளர்பதற்கான வழிகளை அறிய முற்படுவோம் வாருங்கள்.

 நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115) 
========= 
நாம் ஏன் பிறந்தோம்?

வெள்ளி, 14 டிசம்பர், 2018

வானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே!


 ஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து போகிறது! வறுமை, நோய், விபத்து, தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் நஷ்டம், விவசாயத்தில் வறட்சி போன்ற சோதனைகள் வாழ்க்கையில் குறுக்கிடும்போது பெரும்பாலோர் வாழ்க்கையையே வெறுத்து விடுகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.
( தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் (NCRB) அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 தற்கொலைகள்!)
ஆனால் அதே மக்கள் சற்று பொறுமை காத்து மாற்றி யோசித்தால் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வழிகளைக் காண்பார்கள். அதைத் தொடர்ந்து தன்னம்பிக்கையும் எதையும் தாங்கும் இதயமும் மன அமைதியும் மறுவாழ்வும் அவர்களை வரவேற்கும். (இறைவன் நாடினால்)
தன்னம்பிக்கையோடு மறுவாழ்வு வாழ முத்தான பத்து யோசனைகள்
1. நம்மை நாமே அறிந்து கொள்வோம்
= இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் தற்காலிகமாக மின்னி மறையும் நீர்க்குமிழி போன்றது நமது வாழ்வு. நாமாக நாம் இங்கு வரவில்லை என்பது உண்மை! உடல் என்ற கூட்டுக்குள் நாம் வந்ததும்  இதை விட்டுப் பிரிவதும் நம்மைக் கேட்டு  நடப்பவை  அல்ல என்பதையும் அறிவோம்.  நமது  என்று  நாம் சொல்லிக்கொள்ளும் உடல்பொருள்ஆவி என இவை யாவும் நமது முழுமையான  கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதும் உண்மை
 = ஒரு அற்ப  இந்திரியத் துளியில் இருந்து தொடங்கி படிப்படியாக  பல கட்டங்களைக் கடந்து கருவாக  உருவாகி கருவறையில் சொகுசாக வளர்ந்து  உரிய பக்குவம் அடைந்த பின் குழந்தையாக  வெளிவந்து  தொடர்கிறது  நம் ஒவ்வொருவரதும் வாழ்க்கைப் பயணம்தொடர்ந்து பற்பல பருவங்களைக் கடந்து இறுதியாகக் கல்லறையில் சென்று அடக்கமும் ஆகிறது.
இந்த வாழ்க்கை என்பது எதற்காக? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு தெளிவான விடை காண்பதுதான் மன அமைதிக்கான முதல் படிக்கல்.இக்கேள்விகளுக்கு நமக்கு நாமே ஊகித்து விடை காண்பதை விட நம்மைப் படைத்தவன் என்ன கற்றுத் தருகிறானோ அதை ஏற்று அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்வதுதானே அறிவுடைமை?
2. தேவை தெளிவான ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டம்  
இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் அதில் நீர்க்குமிழி போல தோன்றி மறையும் நம் நிலையையும் பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது நமது குறுகிய இந்த தற்காலிக வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ளான் என்பது புலப்படும்.  இந்த பூமியின் பல்வேறு பாகங்களில் பல்வேறு காலகாட்டங்களில் வந்து சென்ற இறைத்தூதர்களும் இறைவேதங்களும் இந்த உண்மையை உறுதிப் படுத்துகின்றன. இறுதிவேதம் திருக்குர்ஆனும் இதைக் கூறுகிறது:
= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
 இந்த குறுகிய வாழ்வில் இறைவனின் வழிகாட்டுதல்களின் படி அவன் ஏவுவதை செய்து அவன் தடுத்தவற்றைத் தவிர்த்து வாழ்வதுமே அந்தப் பரீட்சை. அவ்வாறு வாழ்வோருக்கு நன்மை எது தீமை எது என்ற தெளிவான கண்ணோட்டம் கிடைப்பதால் இந்த பூமியில் கட்டுப்பாடான வாழ்க்கையும் மன அமைதியும் சாத்தியமாகின்றன. அவ்வாறு இந்தப் பரீட்சையில் வெல்வோருக்கு இறைவன் மறுமை வாழ்க்கையில் சொர்க்கம் என்ற அழியா இன்பங்கள் நிறைந்த வாழ்விடத்தை பரிசாக வழங்க உள்ளான். மாறாக இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் இந்தப் பரீட்சையையும் புறக்கணித்து வாழ்ந்தவர்களுக்கு தண்டனையாக நரகம் என்ற தீரா வேதனைகள் நிறைந்த வாழ்விடத்தையும் வழங்கவுள்ளான்.
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185) 
3. உறுதியானதைப் பற்றிப் பிடித்து வாழ்க்கையில் வெல்லுங்கள்
இதுதான் இவ்வுலகைப் படைத்ததன் நோக்கமாக இறைவனே கூறுகிறான். இதுதான் இறுதியான மற்றும் உறுதியான உண்மை ஆகும். இதைத் தவிர நீங்கள் வேறு எந்த கோணத்தில் சிந்தித்தாலும் வாழ்க்கையின் பின்னணி பற்றியும் வாழ்க்கையின் நோக்கத்தைப்  பற்றியும் எந்தத் தெளிவும் பெறமுடியாது என்பது உறுதி! இதைத் தவிர இவ்விடயத்தில் சொல்லப்படும் அனைத்தும் வெற்று மனித ஊகங்களே. ஊகங்கள் மக்களின் மனஉறுதியைக் குலைத்து கோழைத்தனத்தை உருவாக்குகின்றன. அதனால் அவர்களுக்கு சோதனைகளைத் தாங்கும் துணிவு இருப்பதில்லை.
4. நாத்திகம் தவிர்த்து பகுத்தறிவு வளர்ப்போம்
நாத்திகத்தைப் பின்பற்றுவோருக்கு வாழ்க்கையின் நோக்கம் என்று எதுவும் இல்லை. வாழ்க்கையில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் பேணவேண்டும் என்பதற்கு உந்துதலும் கிடையாது. மனம்போன போக்கில் நன்மை தீமைகளை அவர்களே சுயமாக முடிவு செய்வதால் மது, போதைபொருள், விபச்சாரம், கொலை போன்ற வன்பாவங்களையும் அவர்கள் சந்தர்ப சூழலுக்கேற்ப நியாயப்படுத்துகிறார்கள். எனவே ஒழுக்கம், கட்டுப்பாடு இவை மறைந்து குடும்பங்களிலும் சமூகத்திலும் தான்தோன்றித்தனமும் குழப்பங்களும் அதிகரிக்கின்றன. வாழ்க்கைக்கு அர்த்தமற்றது என்ற சிந்தனை தற்கொலைகளுக்கு தூண்டும் காரணமாகும். எனவே  ஊகங்களை கைவிட்டு இறைவன் கூறும் உண்மைகளைப் பற்றிப் பிடிப்பது மட்டுமே வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும். சோதனைகளை எதிர்கொள்ளும் மனோதைரியத்தையும் கொடுக்கும்
5. வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜமே என்றறிதல் 
வந்து சென்ற கஜா புயல் ஆயினும் சரியே, இதற்கு முன்னர் உங்களுக்கு உண்டான நோயும் சரியே, வியாபாரத்தில் அல்லது தொழிலில் அல்லது கல்வியில் நீங்கள் சந்தித்த ஏதேனும் பின்னடைவும் இழப்பும் சரியே இவை அனைத்தும் இந்தக் குறுகிய வாழ்க்கைப் பரீட்சையின் பாகங்களே என்பதை நாம் கட்டாயமாகப் புரிந்து கொள்ளவேண்டும். செல்வமும் செழிப்பும் இலாபமும் வெற்றியும் எல்லாம் எவ்வாறு வாழ்க்கையின் பாகங்களோ அதே போலவே வறுமையும் பஞ்சமும் நஷ்டமும் தோல்வியும் உங்களை வந்தடையும் என்பதை உங்களைப் படைத்தவனே கூறுகிறான் கேளுங்கள்:  
= மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
6. இறைவனிடம் தஞ்சம் புகுவோம்  
அவ்வாறு சோதனைகளை எதிர்கொள்ளும்போது நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் இறைவனே  நமக்குக் கற்றுத் தருகிறான்:
= அவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே மீள்பவர்கள்) என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும், நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்! (திருக்குர்ஆன்  2:156, 157) 
அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனிடமிருந்தே இந்த சோதனை வந்துள்ளது, அவனே நம் இறுதி அடைக்கலம் என்ற உணர்வோடு பொறுமையை மேற்கொள்வோருக்கு மறுமையில் இறைவனிடம் பரிசுகள் காத்திருகின்றன.
7. மறுமை என்ற ஆறுதல்
மரணம் என்பது வாழ்கையின் முடிவல்ல. மாறாக அதுவே உண்மையான மற்றும் நிரந்தரமான வாழ்க்கையின் தொடக்கமே என்ற புரிதல் மன அமைதிக்கான மாமருந்தாகும். அதுவும் நம்மைப் படைத்து நம்மீது அளவிலா கருணை பொழிந்து பரிபாலிக்கும் இறைவனிடம்தான் நாம் திரும்பிச்செல்கிறோம் என்ற உணர்வு நமக்குள் மேலிடுமானால் விந்தைகள் நிகழாதா என்ன? இன்னும் அந்த அருளாளன் திகட்டாத இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தில் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறான் என்று உணர்ந்தால் மனதின் இரணங்கள் மாயாமாய் மறையாதா?
8. மறுமையே நிலையானது என்றறிதல் 
= “இறைவன் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது சுட்டு விரலை  கடலில் வைத்தால் அதில் ஒட்டிக்கொள்ளும் நீரளவு போன்றதே” என்பது நபிமொழி (முஸ்லிம்)
நல்லோர்கள் சென்றடையும் சொர்க்கம் என்பது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடமாகும். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?. (திருக்குர்ஆன் 47:15)
இவ்வுலகில் இறைவனைப் புறக்கணித்து வாழ்ந்தோருக்கும் பிற மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களுக்கு அநீதி இழைத்தோருக்கும் பூமியில் அராஜகங்களும் அட்டூழியங்களும் செய்தோருக்கும் சரியான தண்டனைகள் மறுமையில்தான் நிறைவேற்றப்பட உள்ளன. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக உள்ளது நரகம்.
9. இறைவனின் அரவணைப்பை உணர்தல் 
இறைவன் தனது கருணையில் நூறில் ஒரு பாகத்தை மட்டுமே பூமியில் உயிரினங்களுக்கு இடையே பகிர்ந்து அளித்துள்ளான். அதன் ஒரு பாகம் மட்டுமே தாய்ப்பாசம் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரி). அப்படிப்பட்ட அளவற்ற அருளாளளின் அரவணைப்பு என்றும் நம்மைவிட்டுப் பிரிவதில்லை என்ற உறுதியான உணர்வு இருந்தால் அனைத்து இழப்புகளும் நமக்கு துச்சமாகவே மாறிவிடும். 
·  அருளாளனை அறிவோம்
இம்மாபெரும் பிரபஞ்சத்தில் ஒரு நுண்ணிய துகள் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அதன் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் ஏதேனும் மற்றொரு நுண்ணிய பொருளைக் காட்டி அதுதான் கடவுள் என்று கற்பிக்கப்படும் போது மக்களின் உள்ளத்தில் – குறிப்பாக இளைஞர்கள் அல்லது குழந்தைகளுக்கு கடவுளைப்பற்றிய மதிப்பு (seriousness) உண்டாவதில்லை. நாளடைவில் அது அவர்களை நாத்திகத்திற்கு இட்டுச்சென்று விடுகிறது. எனவே இவ்வுலகைப் படைத்தவன்தான் உண்மை இறைவன் என்பதையும் அவனது தன்மைகளையும் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
ஏகனான தன்னிகரற்ற இறைவனின் தன்மைகளை மேற்கண்டவாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்கும்போது உண்மையான இறை பக்தியும் இறைவனின் கண்காணிப்பில் இருக்கிறோம், அவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற பொறுப்புணர்வும் மக்களில் உண்டாகும்.

10. யாதும் ஊரே யாவரும் உறவே என்றறிதல் 
இன்றைய கலாச்சார சீர்கேடு உருவாக்கியுள்ள “நான் மற்றும் என் குடும்பம்” என்ற குறுகிய சிந்தனையும் தன்னம்பிக்கையை இழக்க வைக்கும் காரணியாகும். அதை விடுத்து உலகெங்கும் பரவி இருப்பது நமது குடும்பமே, மனிதகுலம் அனைத்தும் நம் உறவே என்ற பரந்த சிந்தனையின் பால் இறைவன் அழைக்கிறான்:
= மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்.  (திருக்குர்ஆன் 49:13) 
= சகமனிதனை சகோதரனாக பாவிப்பதும் அவனது துயர் துடைப்பதும் ஒரு கட்டாயக் கடமையாகவும் புண்ணியத்தைத் தேடித் தரும் வழிபாடாகவும் கற்பிக்கிறது இஸ்லாம்.
= மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபிமொழி.  
= “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறார உண்பவன் இறைவிசுவாசி அல்ல” என்கிறது இன்னொரு நபிமொழி.
இஸ்லாமியர்களை இன்று புயல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தூண்டிக் கொண்டு இருப்பதும் இந்த உந்துகோல்களே!
ஆம் உடன்பிறப்புக்களே, இனம், நிறம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இறை கூறும் இந்த சகோதரத்துவ உறவோடு நாம் வாழும் வரை-
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
-------------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html

திங்கள், 3 டிசம்பர், 2018

பேரழிவுகள் தரும் படிப்பினைகள் !




கொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள், விலங்குகள், மரங்கள், வீடுகள் என பலவற்றை இழந்து மக்கள் செய்வதறியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கு முன்னரும் பல பேரழிவுகள் நம்மைக் கடந்து சென்றுள்ளதை நாம் அறிவோம்.
நாமும் இந்த பேரழிவுகள் நமக்கு ஏன்எதற்குஎன்ற எந்த கேள்வியும் கேட்காமல் அதை கடந்துசென்று கொண்டேதான் இருக்கின்றோம்.

உண்மையில் நமக்கு இவை கொண்டு வரும் செய்தி என்ன? அன்றாட வாழ்வில் அனுதினமும் புதுப்புது அலுவல்களில் மூழ்கிக்கிடக்கும் நமக்கு இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றியோ அதில் ஒரு நுண்ணிய துகள் போன்ற பூமியின் மீது வாழும் மற்றொரு நுண் துகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நிலை பற்றியோ சிந்திக்க சற்றும் நேரம் கிடைப்பதில்லை. எதற்காக இங்கு இவ்வளவு அவசரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இதன் இறுதி முடிவு என்ன? இங்கிருந்து எங்கே போகிறோம்? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளை நாம் கேட்பதுமில்லை.

இப்படிப்பட்ட நம்மை நெறிப்படுத்தவே வருகின்றன என்பதை நாம் உணரவேண்டும். இவ்வுலகைப் படைத்த இறைவன் இந்த தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சையாகவும் படைத்துள்ளான். இதில் இறைவனின் எவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வோருக்கு பரிசாக சொர்க்கத்தையும் இறைகட்டளைகளைப் புறக்கணித்து வாழ்வோருக்கு தண்டனையாக நரகத்தையும் ஏற்பாடு செய்துள்ளான். அப்படிப்பட்ட பரீட்சைக் கூடத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் நிகழ்வுகளே இதுபோன்ற பேரழிவுச் சம்பவங்கள். இதை உணர்வோர்தான் அறிவாளிகள்.

சோதனைகள் வாழ்க்கையின் அங்கம் 
இறைவன் தன்னுடைய இறுதி வேதமான குர்ஆனில் கூறுகிறான்:
= "ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோஇரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை." (திருக்குர்ஆன் 9:126)
= "உங்களைப் போன்ற பலரை அழித்திருக்கிறோம். படிப்பினை பெறுவோர் உண்டா?" (திருக்குர்ஆன் 54:51)
இறைவன் இந்த பேரழிவுகளை நடத்துவது மனிதர்களாகிய நாம் படிப்படினை பெற வேண்டும் என்பதற்காகவே. அறிவியலும் ஆய்வுகளும் ஊகங்களும் நமக்கு பல காரணங்களை சொல்லலாம். ஆனால் இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நமது அற்பநிலையை – அற்ப ஆயுளை – உணர்ந்த பின் இந்த உலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது அறிவீனமே! இந்த அறிவீனம் நம்மை இதைவிடப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
பேரழிவுக்கு முன்வரும் எச்சரிக்கை 
இந்தப் புயல் நம் கண் முன்னே சிலவற்றை அழித்ததைப் போலவே நாமும் ஒருநாள் மரணம் என்ற நிகழ்வு மூலம் அழிக்கப்பட இருக்கிறோம் என்ற உணர்வையாவது நாம் குறைந்தபட்சம் பெற வேண்டும்.
"நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. (திருக்குர்ஆன் 4:78)
= "நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. பின்னர் மறைவானதையும்வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 62:8)

திருந்திவாழ முயல்வோம் 
அழிவு அல்லது மரணம் நம்மை சந்திக்கும் முன் நம்மை நாமே சுதாரித்துக்கொண்டு திருந்திவாழ முற்படுவதே அறிவுடைமை! இறைவேதம் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
= "உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா?தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான். (திருக்குர்ஆன் 63:10)
நமது ஆயுள் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் நமக்கு எப்போது அது முடியும் என்பது தெரியாது. உண்மை இவ்வாறு இருந்தும் நாம் மெத்தனமாக இருந்தால் அப்போக்கு மிகவும் ஆபத்தானது.
= "சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோஅவர்கள் அறியாத நிலையில் திடீரென யுகமுடிவு நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?" (திருக்குர்ஆன் 12:107)
= "மாறாகஅது அவர்களிடம் திடீரென்று வந்து அவர்களைத் திகைக்க வைக்கும். அதைத் தடுக்க அவர்களுக்கு இயலாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்." (திருக்குர்ஆன் 21:40)
= யுகமுடிவு நேரம் திடீரென தங்களிடம் வருவதைத் தவிர வேறெதனையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களாஅதன் அடையாளங்கள் வந்து விட்டன. அது அவர்களிடம் வரும் போது அவர்கள் படிப்பினை பெறுவது எப்படி? (திருக்குர்ஆன் 47:18)
ஆம் அன்பர்களே இன்று வாழும் நமக்காக இறைவன் அருளிய இறுதி வேதம் திருக்குர்ஆன் நமக்கு முன்னே இருக்கிறது. அதன்பால் திரும்பி வாழ்வில் ஈடேற்றம் பெற முயல்வோமாக
= "மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிகெட்டவர் தனக்கு எதிராகவே வழிகெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (திருக்குர்ஆன் 10:108)
=============== 

இஸ்லாம் என்றால் என்ன?