இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

ரயிலில் ஏற விடாத சகபயணிகள்!



சொந்தத் திருமணத்திற்காக இரண்டு மாத லீவில் ஊருக்கு வந்த ராஜா இன்று மீண்டும் வேலையில் சேர புதுடில்லிக்குப் புறப்படுகிறான். வழியனுப்ப வந்த குடும்பத்தினரோடு ரயில்நிலையம் வந்து சேர்ந்தாயிற்று. 20 நாட்களுக்கு முன்னரே முன்பதிவும் செய்திருந்தான். S6 இல் 32 வது பர்த். தமிழ்நாட்டில் ஒரு சிறிய ஊர் அது. ரயில் வந்து சேரும் நேரம் இரவு 11.30 ... இரண்டு நிமிடத்திற்கு மேல் ரயில் அந்த ஸ்டேஷனில் நிற்காது. அதற்குள் ஏறியாக வேண்டும். எல்லா தயாரிப்புகளோடும் காத்திருந்தான் ராஜா.

மணமான பின்னர் முதல்முறையாக இளம் மனைவியைப் பிரியும் தருணம் அது. மனைவிக்கும் அவள் குடும்பத்தார்க்கும் சோகம்.. ராஜாவுக்கும் சோகம்தான். ஆனால் அவனது டென்ஷன் முழுவதும் இரண்டு நிமிடத்தில் இரயிலுக்குள் ஏறுவதைப் பற்றியே இருந்தது. ரயிலின் வருகைக்கான அறிவிப்பு மணியும் அடித்தாயிற்று. ஸ்டேஷனில் விசாரித்து S6 பெட்டி நிற்கும் குத்துமதிப்பான இடத்தையும் அறிந்து கொண்டான். வழக்கமான கூவுதலோடு ரயில் ஸ்டேஷனை வந்தடைந்து கொண்டிருக்கிறது. SI.. S2... S3….. என ஒவ்வொரு பெட்டியாக ராஜாவைக் கடந்து சென்றன. தான் ஏறவேண்டிய பெட்டியும் கடந்து போய் S9 கோச் அவன் நின்ற இடத்தில் வந்து நின்றது. அவசர அவசரமாக  பயணச்சுமைகளைத் தூக்கிக்கொண்டு S6 கோச்சை நோக்கி ஓடினான். ஒருவழியாக கோச்சை அடைந்து ஏறப்பார்த்தால் அங்கே இரண்டு கதவுகளும் தாழிடப்பட்டிருந்தன. S7 இலும் அதே கதை.

ஓடிவந்து S6 இல் ஜன்னல் வழியாக மற்ற பயணிகளை அழைக்கலாம் என்று பார்த்தால் எல்லா ஜன்னல்களும் மூடப்பட்டு உள்ளன. கதவருகே உள்ள ஜன்னலைத் தட்டிப்பார்த்தான்.. யாரும் திறக்கவில்லை. உறங்கத் தொடங்கியிருப்பார்கள் போலும். ராஜாவின் டென்ஷன் யாருக்குத் தெரியும்?
கோச்சின் நடுவே ஒரு ஜன்னல் மட்டும் திறந்திருந்தது. ஓடினான் ராஜா.. உள்ளே கல்லூரி  இளைஞர்களின் கும்பல்... குடியும் கும்மாளமுமாக ஆரவாரம் செய்து கொண்டு இருந்தார்கள்.
 “சார் சார், எனக்கு இந்த கோச்தான்.. கொஞ்சம் சீக்கிரமா கதவைத் திறங்க சார்...” கெஞ்சினான் ராஜா.
 ஒரு கேலிப்பொருள் கிடைத்ததைப் போல ராஜாவைப் பார்த்தது கும்பல்...
“யோவ், இந்த ட்ரைன்தான் கெடச்சுதா உனக்கு? இன்னும் எத்தனையோ ட்ரைன் பின்னாடி வருது.. அதுலே எதுலேயாச்சும் ஏறிக்கோ..”
“ஆமா, இந்த ட்ரைன் ஃபுள்ளா எங்களுது... வேணுன்னா அடுத்த ட்ரைன்ல சீட் கெடைக்குமா பாரு...”
இன்னொருவன் இன்னும் என்னவோ சொன்னான்... அதற்குள் கூவிக்கொண்டே நகர்ந்தது ரயில்..
தடக்.. தடக்.. தடக்.. என்று நகரும் ரயிலின் இரும்பு சக்கரங்கள் உண்டாக்கிய சத்தங்கள் ஒவ்வொன்றும் இடியாக இறங்கின ராஜாவின் தலையில்!
அங்கேயே தலையில் கைவைத்துக் கொண்டு  அமர்ந்தான் ராஜா!
-------------------------
ராஜாவுக்கு நேர்ந்த இந்த அவலம்- அநியாயம் - நம்மில் யாருக்கு நேர்ந்தாலும் சகிக்க மாட்டோம். அந்தக் கல்லூரி மாணவர்களின் பொறுப்பற்ற போக்கு கடும் தண்டனைக்குரியது. ஆனால் அவர்களை இங்கு தண்டிக்க வழியும் வாய்ப்பும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதே விதமான பொறுப்பற்ற போக்கும் சுயநலமும் நம்மிடமும் இருப்பதை அறிவோமா? எப்படி?

நமது சுயநலம் மற்றும் பொறுப்பின்மை காரணமாக நாம் ஒரு சமூகமாக நின்று  நடத்திக்கொண்டிருக்கும் அக்கிரமத்தைப்பற்றி சற்று சிந்தித்துப்பார்ப்போம் வாருங்கள். இன்று நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கும் சிசுக்கொலைகளுக்கும்  கருக்கொலைகளுக்கும் முக்கிய காரணம் நமக்குள் புரையேறிப் போயுள்ள சுயநலம்தானே? நாம் இங்கு வசதியாக வாழவேண்டும். அடுத்த தலைமுறை இங்கு வந்து நம்மிடம் உள்ள  உணவை - வாழ்க்கை வசதிகளை – ஆடம்பரங்களைக் - குறைத்துவிடும் என்று கருதி அவர்களைக் கொன்றொழிக்கும் செயல்தானே இந்தக் கொலைகள்? நபிகள் நாயகம்(ஸல்), உன் குழந்தை உன்னுடன் உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது பெரும்பாவங்களில் ஒன்றுஎன்று அவர்கள் கூறினார்கள்.

மக்களின் சுயநலத்தின் காரணமாக பிள்ளை பெறுவதை பாரமாகக் கருதுகிறார்கள். சிசுவிலேயே சர்வசாதாரணமாகக் கொன்றும் விடுகிறார்கள். ஒரு ஐநா அறிக்கைப்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 7000 பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. இந்த கருக்கொலைகள்  போக குழந்தைகள் பிறந்தபின் கொன்றொழிக்கும் அவலங்கள் நாடுமுழுக்க நடந்து வருவதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம். விஷ ஊசிகளும் கள்ளிப்பாலும் அரிசிமணிகளும் பிறந்த குழந்தைகளை பதம் பார்ப்பதை நாம் அறிவோம். எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற அற்ற செயல் அது! அச்செயலை  குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதிக்கிறது. நாட்டு வளங்களை முறைப்படி கையாளத்  திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்கின்றனர்.

இப்படிப்பட்ட அவல நிலை உருவாகுவதற்க்குக் காரணம் இவ்வுலகைப் பற்றிய நமது சுயநலக் கண்ணோட்டம்தான். ரயிலில் முதல் ஸ்டேஷனில் ஏறி இடம் பிடித்தவர்கள் ரயிலே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நடந்துகொள்வதை நாம் காணலாம். இடம் கிடைத்தவுடன் தங்களை அடுத்த காலி இருக்கைகளில் எல்லாம் தங்கள் உடமைகளைப் பரப்பியும் காலை நீட்டியும் அடைத்துக் கொள்வதை அன்றாடம் காணலாம். அடுத்தடுத்த ஸ்டேஷன்களில் யாரும் ஏறவும் கூடாது, ஏறுவோர் தங்கள் சுகங்களைக் கெடுத்துவிடவும் கூடாது!  - இந்த மோசமான மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கும் உள்ளது. வரும் தலைமுறைகள் எக்கேடு கேட்டுப் போனால் என்ன, நாம் சுகமாக வாழ்ந்தால் போதும். என்ற கொடிய எண்ணம்தான் நம்மை நம் குழந்தைகளையே கொல்ல வைக்கிறது.


நமக்கென்ன உரிமை உள்ளது?

இன்னொன்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்... இன்று இந்த பூமியின்மீது வாழும் நாமும் இதன் உரிமையாளர்கள் அல்ல. நாமும் தற்காலிக வாசம் செய்ய வந்தவர்கள். ஒரு நாள் இந்த இருப்பிடத்தை விட்டு தூக்கி எறியப்படுவோம். இனி இங்கு வர இருபவர்களைத் தடுக்க எந்த உரிமையும் நமக்குக் கிடையாது. மீறி யாராவது ‘ இனி வரும் தலைமுறை கஷ்டப்படகூடாது என்ற இரக்க உணர்வினாலேயே அவர்களை முளையிலேயே கொல்கிறோம்’ என்று எண்ணினால் அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் தங்கள் இடத்தை விட்டுக்கொடுக்க முன்வருவதுதானே?

 ஆனால் இவ்வுலகின் உண்மையான சொந்தக்காரனான இறைவனோ இக்கொடிய செயல் தண்டனைக்குரியது என்கிறான். தனது இறுதி வேதமான திருக்குர்ஆனில் இச்செயலைத் தடுப்பதைப் பாருங்கள்:
= வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்;   (திருக்குர்ஆன் 17:31)
இந்த தடையையும் மீறி யாராவது இப்பாவத்தைச் செய்தால் அவர்களுக்கு மறுமை நாளில் இவர்களால் கொல்லப்பட்ட குழந்தைகளே இவர்களுக்கு  தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்:
= “உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது, என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது, (உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்! ) (திருக்குர்ஆன் 81:7-9)

எனவே திருத்த வேண்டியவற்றைத் திருத்திக் கொள்வோமாக!
---------------------------------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள் 
இஸ்லாம் என்றால் என்ன?

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

மக்கள்தொகை பெருக்கமும் பாடங்களும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக