Search This Blog

Tuesday, April 11, 2017

எப்போது விழிப்போம்...? - ராஜ் சிவா

ஜெர்மனி அறிவியலாளர் ராஜ் சிவாவின் பதிவு ... இது பற்றிய விழிப்புணர்வு நாட்டுக்கு கட்டாயம் தேவை :


இன்றுள்ள கார்ப்பரேட் உலகில், கிட்டத்தட்டச் சம பலமுள்ள இரண்டு நாடுகளுக்கிடையில் ஒருபோதும் போர் என்பதே நடக்காது. நாடாளும் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கும், அவர்களை இயக்கும் கோடீஸ்வரர்களுக்கும், போர் என்ற ஒன்று நடைபெற்றால், அவர்கள் தலையிலும் குண்டு விழுமென்பது நன்றாகவே தெரியும். அணு ஆயுதத்தை சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் சிகரெட்டைப் போலச் சாதாரணமாக வைத்திருக்கின்றது ஒவ்வொரு நாடும். அவற்றுகிடையே போர் மூண்டால், இந்த அரசியல் தலைவர்களும், கோடீஸ்வரர்களும் வாழும் முக்கிய நகரங்களில்தான் அணுகுண்டு விழுமென்று தெரியாதவர்களா அவர்கள்? அதனால், போர் என்பது இனி எந்த இரு சம பலமுள்ள் நாடுகளுக்குமிடையிலும் நடைபெறப் போவதில்லை. மூன்றாம் உலக யுத்தம், நான்காம் உலக யுத்தம், எட்டாம் உலக யுத்தம் வரப் போகிறதென்ற தோற்றத்தை ஏற்படுத்துவதெல்லாம், மக்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே! எரிமலையின் உச்சியில் உட்கார்த்திருப்பவனுக்கு சாப்பாட்டு எண்ணமும் வராது. பக்கத்து வீச்சு சந்திரசேகரன் என்ன செய்கிறான் என்ற நினைப்பும் வராது. எல்லாமே, மக்களை ஒரு பதட்ட நிலையில் வைத்திருக்க முயலும் தந்திரம்.
அப்படி ஒருவேளை ஒரு போர் நடப்பதாக இருந்தால், அது வளமுள்ள நாடொன்றைக் கைப்பற்றி, அதன் வளங்களைச் சுரண்ட நினைக்கும் வல்லரசு நாட்டின் ஆக்கிரமிப்புப் போராகத்தான் இருக்கும். இப்போது சிரியாவில் நடக்கும் போர்போல. முன்னர் ஈராக்கிலும், லெபனானிலும் நடந்த போர்களைப் போல. அவற்றையெல்லாம் போரென்றே சொல்ல முடியாது. பேட்டை ரவுடிகள் சிலர் ஒன்று சேர்ந்து அப்பாவி ஆறுமுகத்தை அடிப்பதற்கு ஒப்பானது அது.
எப்போது, மக்கள் அரசுகளின் பித்தலாட்டங்களைப் புரிந்துகொண்டு அதிருப்தி அடைகிறார்களோ, அப்போது எல்லைப் போர், எல்லை தாண்டிய போரெல்லாம் கடவிழ்த்து விடப்படும். அதில் இறக்கப் போவது அப்பாவியான நாட்டுப்பற்றுள்ள சில இராணுவ வீரர்கள் மட்டும்தான். காப்டன்கள், மேயர்கள் கூட அதில் இறக்க மாட்டார்கள். “இங்கே பார்! நம் எல்லாருக்குமான பொது எதிரி ஒருவன் தோன்றிவிட்டான். அவனை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்” என்று நாட்டுப்பற்று என்ற முகமுடியை மாட்டிவிட்டு, மக்களை ஒரே திசையில் பார்க்க வைக்கும் தந்திரம். அந்தப் பரபரப்பில் சில நாட்கள் இருக்க வைக்கப்பட்டு மக்கள் முட்டாள்களாக்கப்படுவார்கள். மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் மறக்கடித்துவிடுவார்கள். அப்புறம் என்ன….? எல்லாமே மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கும். எல்லைப் போர்களால், ஒரு உயர்தர அரசியல்வாதி அல்லது அதிகார வர்க்கத்தில் உள்ள ஒருவன் அல்லது கார்ப்பரேட் கோடீஸ்வரன் எவனாவது இறந்திருக்கிறானா சொல்லுங்கள்? அல்லது குறைந்தபட்சம் சொத்துக்களினாலாவது பாதிக்கப்பட்டிருக்கிறானா? இறப்பதும், இழப்பதும் சாதாரண மக்களும், அவர்களின் வீட்டிலிருந்து சென்ற அப்பாவி இராணுவத்தினனும்தான்.
ஒன்றை மட்டும் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாடாளும் மிகப்பெரிய அரசியல் தலைவர்களுக்கும், உலக மகாக்கோடீஸ்வரர்களுக்கும் இனம், மொழி, நாடு என்று எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரே இனம். கோடீஸ்வரன் என்னும் இனம்.
‘மக்களும்கூட ஒரே இனம்தான். ஏமாளிகள் இனம்’
-ராஜ்சிவா-

No comments:

Post a Comment