இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 ஏப்ரல், 2017

பர்வீன் – நடராஜன் காதல் கதை

Image result for victim alcohol tamil
இதைக் கதை அல்லது காவியம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இது நிஜமா கற்பனையா என்ற ஆராய்ச்சியும் இங்கு தேவையில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. சிறு சிறு மாற்றங்களோடு அன்றாடம் நாட்டில் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு இது. இன்று காதல்வயப்பட்டுக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.
---------------------------------- 
 அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று தொடங்கித் தொடர்ந்தது அவர்களின் காதல் கதை. பர்வீன் குடியிருந்த அதே தெருவில் ஒரு ஐந்தாறு வீடு தள்ளி இருந்தது நடராஜனின் வீடு. பர்வீன் படித்துக்கொண்டிருந்து பிளஸ் டூ. நடராஜன் அப்போது பெயிண்டர் வேலைக்குப்போய்க் கொண்டு இருந்தான். பார்க்க அழகாக இருந்தான்.
 பர்வீனின் அப்பாவுக்கும் கூலிவேலைதான். வீட்டில் பெயரளவுக்குத்தான் இஸ்லாம். இஸ்லாம் கூறும் ஐவேளைத் தொழுகை எல்லாம் அவர்களின் வீட்டில் இல்லை. சடங்குக்கு வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளிக்குச் செல்வார் பர்வீனின் தந்தை பாரூக். தாய்க்கும் மகளுக்கும் அதுவும் இல்லை. அருகாமையில் உள்ள பள்ளிவாசலில் பாங்கு (தொழுகை அழைப்பு) ஒலி கேட்கும்போது தலையில் முக்காடு போட்டுக்கொள்ளும் பழக்கம் எப்படியோ தாய் சல்மாவுக்கு இருந்தது.
தினமும் பார்வைப் பரிமாற்றத்தில் தொடங்கிய பர்வீன்-நடராஜன் காதல் நாள் செல்லச்செல்ல மறைமுக சந்திப்புகளில் வளர்ந்தது. அது முற்றி பெற்றோர்களின் பலத்த எதிர்ப்புகளையும் கடந்து ரிஜிஸ்டர் திருமணத்தில் முடிந்தது. அனைவரையும் பகைத்துக்கொண்டு தனிக்குடித்தனமும் தொடங்கினர். திருமணத்திற்கு முன்னதாக நடராஜன் நாசராக மாறியிருந்தான். நாசருக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்துச்சொல்ல எவரும் அங்கு இல்லை.
துடிப்பும் துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருந்த காதலர்கள் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு அவை அனைத்தும்  அசுர வேகத்தில்  களை இழக்க ஆரம்பித்தன. யாரைப் பற்றிய நினைப்பே ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது மெல்லமெல்ல எரிச்சலாக மாறியது.  காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. வாழ்க்கையின் யதார்த்தங்கள் பற்றி சிந்திக்க மறந்தார்கள். திருமணத்திற்கு முன்னர் பெற்றோர்களும் மற்றவர்களும் அவற்றை நினைவூட்டிய போது அவை உள்ளே நுழையவில்லை. பர்வீனின் உற்ற பள்ளித்தோழி அஸ்மா படித்துப்படித்துச் சொன்ன அறிவுரைகள் எதுவும் பர்வீனிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
அஸ்மாவுக்கு மார்க்கப் பற்று இருந்தது. அறிவும் இருந்தது. வகுப்பு இடைவேளையின்போது கூட தொழுகையை நிறைவேற்றுவாள். அஸ்மா எவ்வளவோ இறை எச்சரிக்கைகளை எடுத்துரைத்தும் எதுவும் எடுபடவில்லை. அவள் எடுத்துரைத்த குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பர்வீனின் செவிகளைத் தாண்டி இதயத்திற்குள் நுழைந்தாலும் ஷைத்தான் குறுக்கே நின்று ‘விட்டுக்கொடுக்காதே பர்வீன், காதலே பெரிது’ என்றான்.
அன்று ‘வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்க்கை. இல்லையேல் மரணம்’ என்று அடம்பிடித்தாள்  பர்வீன். ‘அவளோடுதான்...’ என்று அடம்பிடித்தான் நடராஜன்.
இன்றோ... எவ்வளவு அற்புதமான தலைகீழ் திருப்பம்! 
--------------------------
குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகள் ஒவ்வொன்றாகத் தலைதூக்க ஆரம்பித்தபோது இருவருக்கும் அது அலுத்துப்போனது.  இரு தரப்பு பெற்றோர்களுக்கும் இவர்கள் விடயத்தில் ஈடுபாடு இல்லாது போனதால் அவர்களிடம் இருந்து எந்தவித உதவியும் ஆதரவும் இல்லாமல் இருந்தது. நாசரின் சம்பளம் ஒன்றுதான் அவர்களின் வருமானம்.  பர்வீன் கர்ப்பமாகி விட்டாள் என்று தெரிந்த உடன் அடுத்துவரக்கூடிய குடும்பப் பொறுப்புகள் பற்றிய கவலைகள் நாசரை வாட்டத் தொடங்கின.
நாள் செல்லச்செல்ல மாலையில் வீட்டுக்கு வருவதையே வெறுத்தான் நாசர். நண்பர்களின் சேர்க்கை வீட்டைவிட இனித்தது. மிகவும் தாமதமாகவே வீட்டுக்கு வந்தான். குடிப்பழக்கமும் தொற்றிக்கொண்டது. வறுமையும் பற்றாக்குறையும் தலைக்காட்ட ஆரம்பித்தன. குடிபோதையில் வீட்டுக்கு உளறிக் கொண்டே வருவான் நாசர். சிலவேளைகளில் நடுவீட்டில் வாந்தியும் எடுப்பதுண்டு. ஒருநாள் இருட்டில் டாய்லெட் என்று பாவித்து பீரோக் கதவைத்திறந்து மூத்திரமும் பெய்து வைத்திருந்தான் நாசர்.
ஒருநாள் நடு இரவில் வீடு திரும்பிய நாசர் குடிபோதையில் இருந்த தன் நண்பனையும் அழைத்து வந்திருந்தான். “பர்வீன் இவன்தான் சார்லி. பாவம், அவன் வீடு ரொம்ப தூரம். அதா அந்த ஓரத்தில படுத்துட்டு காலைல எந்திரிச்சுப் போயிருவான்.” சர்வ சாதாரணமாகச் சொன்னான் நாசர்.  விடியும்வரை இடித்துக்கொண்டிருந்த இதயத்தோடு உறங்காமலே கழித்தாள் பர்வீன்.
 நாசரின் நடவடிக்கைகளைப் பற்றி கண்டித்தால் அடியும் அடிமேல் அடியும் விழ ஆரம்பித்தது பர்வீனுக்கு. முறுக்கேறிய குடிபோதையில் வருபவனிடம் நியாயம் பேசவா முடியும்? எதிர்பேச்சு பேசப்பேச அடியின் வீரியம் கூடியது. வாழ்வே வெறுத்தது பர்வீனுக்கு. அன்று ‘உன்னை என் கண்ணின் மணியைப்போல் காப்பேன்’  என்று தேனொழுகப் பேசிய அவனா இவன்? ஏமாற்றத்திற்கும் விரக்திக்கும் ஆளான பர்வீனுக்கு ஆறுதல் சொல்லவோ நாசரைக் கண்டித்து நிறுத்தவோ எவரும் அங்கு இல்லை. தாளிடப்பட்ட வீட்டிற்குள் இரவுநேரத்தில் நடக்கும் கொடுமைகள் வேறு யாருக்குத்தெரியும்?
அன்றாட அராஜகங்களை வெதும்பிய மனதோடும் கண்ணீரோடும் சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியேதும் தெரியவில்லை கர்ப்பிணி பர்வீனுக்கு! கண்மூடித்தனமான காதலின் விளைவுகள் எவ்வளவு விபரீதமானவை என்பதை பர்வீன் தினமும் அனுபவித்து அறிந்தாள். கவிதைகளிலும் காவியங்களிலும் புனிதமானது என்று வருணிக்கப்படும் காதல் எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நேரடியாக உணர்ந்தாள்.
பக்கத்து வீட்டுக்காரிகள் அவ்வப்போது வந்து அனுதாபம் தெரிவித்தார்கள். அபூர்வமாக அம்மா சல்மா வந்தார். கண்ணீர் உகுத்துவிட்டுச் சென்றார். குடிகாரக் கணவனை நிதானத்தில் பார்த்தே மாதங்கள் பலவாயிற்று.
------------------------------
அரசு மருத்துவமனையில் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பர்வீன். பெற்றெடுத்த மகளின் மலர்முகம் அவளுக்கு பாலைவனத்தில் கண்டடைந்த சோலை போல ஆறுதலளிப்பதாக இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அண்டை வீட்டுக்காரிகள் வந்து உதவினார்கள்.
அதோ, வராண்டாவில் நாசரின் குடிகாரக் குரல்.... அங்கும் கூட குடிபோதையில்தான் வரவேண்டுமா பாவி? தான் பெற்றெடுத்த மகளின் முகம் காண வேண்டும் என்று ஏதோ ஒன்று நாசரைத் தள்ளிக்கொண்டு வந்தது. அருகே வந்தான்.. ஆனால் நிற்கமுடியாமல் தள்ளாடிக் கீழ்விழுந்தான். அவமானத்தில் துடித்தாள் பர்வீன்... ஆஸ்பத்திரிக் காவல்காரர்கள் வந்து அவனைத் தூக்கிக்கொண்டு போனார்கள். அப்படியே கொண்டுபோய் மருத்துவமனை காம்பவுண்டுக்கு வெளியே நடைபாதையில் போட்டுவிட்டுச் சென்றார்கள். ஆதரவற்ற குடிகாரனை வேறு என்னதான் செய்யமுடியும் அவர்களால்?
விரக்தியில் அயர்ந்து படுத்திருந்த பர்வீனுக்கு ஏனோ தோழி  அஸ்மாவின் அறிவுரைகள் நினைவுக்கு வந்து உறுத்தின. எவ்வளவு ஆழமான வார்த்தைகள் அவை! அன்று ஏன் நான் அவற்றை உள்வாங்கவில்லை? தன்னையே நொந்து கொண்டாள் பர்வீன். பாழாய்ப்போன இந்தக் காதல் என்ற பேய்... அனைத்தையும் கெடுத்து நாசமாக்கிவிட்டது... மனதுக்குள் புலம்பினாள் பர்வீன்...
-------------------
ஆம், அன்று நிலைமை முற்றிக்கொண்டு வந்தபோது அஸ்மா அவளுடைய அம்மாவோடு வீட்டுக்கு வந்திருந்தாள். எப்படியாவது பர்வீனைத் திருத்தவேண்டும் என்ற என்பது அஸ்மாவின் நோக்கம்.
“கேளடி பர்வீன், நாம இப்போ வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு தற்காலிக வாழ்க்கைன்னு தெரியுமில்ல? இது ஒரு பரீட்சை மாதிரி. இதுல நம்மைப் படைச்ச இறைவனை மறந்துட்டு  வாழக்கூடாது. அவனோட கட்டளைப்படி வாழனும். அதுக்குப் பேருதாண்டி இஸ்லாம். அவன் நம்ம கிட்ட எத செய்யணும் சொல்றானோ அதை நாம செய்யணும். அதுக்குப் பேருதான் புண்ணியம். எதைச் செய்யக்கூடாதுண்ணு தடுக்கிறானோ அதுக்குப் பேருதான் பாவம். இப்ப நீ செஞ்சுகிட்டு இருக்கிறது பாவம்டீ! அதுவும் சாதாரணப் பாவம் இல்லடீ, பெரும்பாவம்...!”
“ஏண்டீ காதல்ங்கிறது இயற்கையானது. இதப் போயி பெரும்பாவம்னு சொல்றே?
“பசிகூட இயற்கையானதுதான். அதுக்காக திருடி சாப்டா பாவந்தானே? அதுமாதிரிதான். அல்லாஹ்  தடுத்த வழில காதலையும் காமத்தையும் தணிக்கறது பாவம்தான். அதுக்குதான் கல்யாணம்னு ஒன்னு இருக்கு. அதுலே சட்டப்படி இணஞ்சதுக்குப் பின்னாடி மட்டும்தான் ஒரு அந்நிய ஆணும் அன்னியப் பெண்ணும் காதலிக்க முடியும். காமத்தைத் தணிக்கவும் முடியும். அத விட்டுட்டு நீ எதைக் காதல்னு நெனச்சிட்டு சாகறியோ அதெல்லாம் கள்ளக்காதல்தான் அல்லது விபச்சாரம்தான் அல்லாஹ்கிட்ட.. புரிஞ்சுதா?”
கேட்டதும் அஸ்மாவின் மேல் கோபம்கோபமாக வந்தது பர்வீனுக்கு. பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் அஸ்மா...
“ஏண்டி, இந்த உடல், உயிர், உணவு, நீரு, காற்று எல்லாம் அல்லாவுக்கு சொந்தமானது. எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு அவன ஏத்துக்காம அவன் சொன்னதுக்கு மாற்றமா நடந்தா அவன் தண்டிக்க மாட்டான்னு நெனச்சுட்டு  இருக்கியா? அல்லாஹ் நம்முடைய நன்மைக்கு வேண்டிதாண்டி அந்தக் கட்டுப்பாடுகளை வச்சிருக்கான். அவன் நமக்கு குர்ஆன் ஹதீஸ் மூலமா என்ன சொல்றானோ அப்படி வாழ்ந்தா இங்கேயும் உன் வாழ்க்கை ஒழுங்கா அமைதியா இருக்கும். மருமைல சொர்க்கத்துக்கும் போலாம். ஆனா அத அலட்சியம் பண்ணிட்டு உன் மன இச்சைப்படி போனா இங்கேயும் வாழ்க்கைல சீரழிஞ்சு போவே, மருமைல நரகம்தாண்டி கிடைக்கும்.” 
 “அது மட்டுமா? ஏண்டி உன்னப் பெத்துவளர்த்த உங்க அம்மா அப்பாவுக்கு நீ செய்யற வஞ்சனையைப் பத்தி யோசிச்சியா? நாளைக்கு நீயும் அம்மாவாயிருவே. அப்ப உன்னோட புள்ள இப்படி கண்டவனோட ஓடிபோச்சுன்னா உனக்கு எப்படிடி இருக்கும்? கொஞ்சம் நிதானமா யோசிச்சுப்பாருடீ...”
“நீ நினைக்கிற மாதிரி அவரொண்ணும் மோசமானவர் இல்லடி. ரொம்ப தங்கமானவருடி. உனக்கு சொன்னாப் புரியாது.. என்ன செய்ய?” 
“உனக்கு இப்ப காதல்ங்கற ஷைத்தான் பலமாப் பிடிச்சிருக்கு. அது விட்டுப்போற வரைக்கும் எதுவும் உள்ளே நுழையாது. பர்வீன் கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாருடி, கல்யாணம்னு சொன்னா அது வாழ்க்கையோட ஒரு புதிய அத்தியாயம் தொடங்கற மாதிரி. சரியான துணையைத் தேர்ந்தெடுக்காட்டி வாழ்நாள் பூரா அவஸ்ததான். அல்லாகிட்ட நம்ம செயல்களுக்கு பதில்  சொல்லியாகணும் அப்படீங்கற பொறுப்புணர்வு கணவனுக்கும் வேணும் மனைவிக்கும் வேணும். அப்பதான் கல்யாண வாழ்க்கை சரிப்பட்டு வரும். ஆனா நீ இப்ப கட்டிக்கப்போற ஆளுக்கு இந்த நம்பிக்கை எல்லாம் கிடையாதுன்னு உனக்கே தெரியும்.”
“உனக்காக வேண்டி நான் முஸ்லிமா கூட மாறத் தயார்னு அவர் சொல்லியிருக்கார்டி, தெரியுமா உனக்கு?”
“உன்ன மாதிரி ஒரு முட்டாளப் பார்க்கவே முடியாதுடி. உனக்கே இஸ்லாம்னா என்னான்னு தெரியாது. நீ கட்டிக்கப்போற ஆளுக்கு என்ன  தெரியப் போகுது? இஸ்லாம் அப்படின்னு சொன்னா கீழ்படிதல்னு அர்த்தம். இங்கிலீஷ்ல டிசிப்ளின்னு சொல்லுவாங்க. அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வர்ற இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிஞ்சு ஒழுக்கம் பேணி வாழ்வதற்குப் பேருதான் இஸ்லாம். அப்படி வாழறவங்களுக்கு பேருதாண்டி அரபிலே முஸ்லிம். அல்லாஹ் சொன்னதுக்கு அப்படியே மாற்றமா செஞ்சுட்டு இஸ்லாமா? கல்யாணத்துக்கு அப்புறம்தான் காதல்னு அல்லாஹ் சொல்றான். ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறவங்களுக்குப் பேருதாண்டி முஸ்லிம். சும்மா முஸ்லிம் குடும்பத்திலே பொறந்துட்டாலோ, புர்க்கா போட்டுட்டாலோ, தொப்பி மாட்டிகிட்டாலோ அரபிலே பேர வச்சிகிட்டாலோ யாரும் முஸ்லிம் ஆயிற முடியாது தெரியுமா? அப்படி காட்டுப்பாடா வாழ்ந்தாதாண்டி நாளைக்கு மறுமைல சொர்க்கத்துக்கு போக முடியும். இல்லாட்டி நரகந்தான். நரக வேதனைன்னா சும்மா இல்ல, உடம்பெல்லாம் நெருப்பு பத்தி எரிஞ்சுகிட்டு இருக்கும். கொஞ்சம் யோசிச்சுப்பாருடி”
ம்ஹூம், மசியவில்லை பர்வீன். ஆடாமல் அசையாமல் குத்துக்கல்லாய் அமர்ந்திருந்தாள். காதல் கண்ணையும் புத்தியையும் பலமாக மறைத்திருந்தது. பர்வீனின் அம்மா சல்மா பேச ஆரம்பித்தார்.
 “நாங்களும் தப்பு பண்ணிட்டோம் அஸ்மா. சின்ன வயசிலேருந்து எங்க குழந்தைகளை மதரசாவுக்கே அனுப்பல. இஸ்லாத்தைப் பற்றி நாங்களும் கத்துக்கல. இவங்களுக்கும் கத்துக் குடுக்கல. பக்கத்து வீடுக மாதிரியே வாழ்ந்துட்டோம். இவங்க அப்பாவுக்கும் தொழுகை இல்ல. நானும் பொடுபோக்கா இருந்துட்டேன். நீ சொன்ன மாதிரி உண்மையான முஸ்லிமா வாழ்ந்திருந்தா இந்த விபரீதமெல்லாம் நடந்திருக்காது.”
“ஆமா ஆன்டி, அஞ்சுநேர தொழுகைய அல்லா கட்டாயம் பண்ணியிருக்கறது கூட இந்த வாழ்க்கைல ஒழுக்கம் வரணுங்கறதுக்குதான் ஆன்டி. குழந்தைகள எப்படி வளர்க்கணும், என்ன கத்துக் குடுக்கணும், அம்மா அப்பாவ எப்படி கவனிக்கணும், உறவினர்கள் அண்டை வீட்டுக் காரங்களோடு எப்படி நடந்துக்கணும், யார் யாரைக் கல்யாணம் பண்ணிக்கலாம் இப்படி வாழ்க்கையோட எல்லா விஷயங்களப் பத்தியும் இஸ்லாம் நமக்கு தெளிவா சொல்லிக் குடுக்குது ஆன்டி. ரொம்ப முக்கியமா பெண் குழந்தைகள எப்படி பாதுகாப்பா அரவணைச்சு வளர்க்கணும், அவங்கள எப்படிப் பட்டவங்களோடு கல்யாணம் முடிச்சுக் குடுக்கணும், அவங்களுக்கு எப்படிப்பட்ட உடை அணிவிக்கணும் இன்னும் அதுபோல விஷயங்கள் தெளிவா சொல்லுது இஸ்லாம்.
“அப்படியா?”
“ஆமா ஆன்டி, பெண்கள்ல இருந்துதான் ஒரு சமூகமே உருவாகுது. பெண்கள் ஒழுக்கம் கெட்டுப்போனா சமூகமே ஒழுக்கம் கேட்டுப் போயிரும். அதனாலதான் இஸ்லாம் பெண்குழந்தை பாதுகாப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குது. பெண்ணை ஒழுக்கமா வளர்த்ததுக்கு அப்புறம் ஒழுங்கான ஆண்களா தேடிக் கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணியும் குடுக்கவேண்டியது பெற்றோருடைய கட்டாயக் கடமைண்ணு இஸ்லாம் சொல்லுது. அழகு, அந்தஸ்து, செல்வம் இதை எல்லாத்தையும் விட இறையச்சத்துக்கு முன்னுரிமை குடுத்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்க அப்படீன்னு நம்முடைய நபி சொல்லியிருக்காங்க. அப்புறம் அல்லா கூட குர்ஆன்ல சொல்றான் பாருங்க:    
 உங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 2:221)
ஆன்டி, நம்மைப் படைத்த இறைவனுக்குதான் அரபிலே அல்லாஹ் அப்படீன்னு சொல்றோம்.  இணைவைக்கறது அப்படீன்னா இறைவன் அல்லாதவற்றை வணங்கறது. அதாவது சூரியன் சந்திரன், மரம், செடி, உருவங்கள் சமாதிகள் இப்படிப்பட்டவைகள வணங்கறது. அதுதான் பாவங்கள் எல்லாத்துலேயும் மிகப்பெரிய பாவம்னு குர்ஆன் சொல்லுது. இந்தப் பாவத்தை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான், இப்படிப்பட்டவங்களுக்கு நிரந்தரமான நரகம்னு அல்லாஹ் சொல்றான்.”
“ அப்போ, முஸ்லிம் பொண்ணுகள முஸ்லிம் அல்லாதவங்களுக்கு கட்டிகொடுக்கக் கூடாதுன்னு குர்ஆன் சொல்லுதா?”
“ கண்டிப்பா ஆன்டி, இப்போ காதல் கீதல் அப்படீன்னு போய் ஒட்டிக்குவாங்க, அப்புறம்தான் அதோட டேஞ்சர் எல்லாம் அனுபவிப்பாங்க. இஸ்லாம் ஒழுக்கமா கட்டுப்பாடா வாழறதுக்கு வழிகாட்டுது. எப்படி வேணுன்னா வாழு இல்லாட்டி உன் மனம்போன போக்கில வாழுன்னு மத்தவங்க சொல்றாங்க. ரெண்டும் எப்படி ஒண்ணாப் போக முடியும்? போனாலும் எவ்வளவு நாளைக்கு?”
“ஏண்டி, அவருதான் முஸ்லிம் ஆயிர்றேன்னு சொல்றாருல்ல. அப்புறம் என்ன?” வெடித்தாள் பர்வீன்.
“நீ ஒரே தீர்மானமா இருக்கிறேன்னு புரியுது. நான் சொல்லவந்தத சொல்லிட்டு போயிர்றேன். அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அதச் செய். பர்வீன், நீ மொதல்ல இஸ்லாம்னா என்னான்னு புரிஞ்சுகிட்டு அல்லாஹ்கிட்ட பாவமன்னிப்பு கேட்டு ஒரு உண்மையான முஸ்லிமா மாறு. அப்புறம்  இதுதான் இஸ்லாம் அப்படின்னு நடராஜனுக்கு சொல்லு. மனதார இஸ்லாத்த ஏத்துகிட்டு முஸ்லிம் ஆகறாரான்னு கேளு. ஒத்துகிட்டா ஒரு மாசம் நம்ம ஜமாஅத்துல இஸ்லாமிய அடிப்படைக் கல்விக்கான பயிற்சி ஏற்பாடு இருக்கு. அதுல சேர்த்து விடு. அது முடிஞ்சு மனமாற்றமும் குணமாற்றமும் வந்திருக்கான்னு பாரு. அப்படி இருந்தா மட்டும் அவர கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி மறந்துட்டு வேற மாப்பிளையத் தேடு. இதுதாண்டி நம்மப் படச்சவன் நம்முடைய நன்மைக்காக சொல்ற வழி. குர்ஆன்ல அவன் சொல்றதப் பாரு:
    (இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்'. (அல்குர்ஆன் 2:221)  
உனக்கு அமைதியான மணவாழ்க்கை வேணும்னா அல்லாஹ் சொன்னவழிய தேர்ந்தெடு. இங்கேயும் அமைதி கிடைக்கும். மருமைல நிரந்தரமான சொர்க்கமும் கிடைக்கும். அது வேண்டாம்னு உங்க மனம்போன வழில போனீங்கன்னா இங்கேயும் வேதனைதான். மருமைல அதைவிடப் பெரிய நரக வேதனைதான். .... இனி உன்னோட விருப்பம்!”
சொல்லிவிட்டு தன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாள் அஸ்மா.


நடந்ததை நினைக்க நினைக்க அழுகைக் கடலாகப் பொங்கியது. அருகே பாலுக்காக குழந்தை வாய்விட்டு அழுததைக் கேட்டு உணர்வுக்கு வந்தாள் பர்வீன். பால் கிடைத்ததும் குழந்தையின் அழுகை நின்றது. ஆனால் நிற்காமல் தொடர்ந்தது பர்வீனின் அழுகை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக