இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 மே, 2016

இயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை?


கேள்வி: 
இயேசுநாதரை நம்புகிறோம் என்று சொல்லும் நீங்கள், ஏன் அவரை தேவனாக ஏற்க மறுக்கிறீர்கள்?
- சகோதரர்  வின்சென்ட், பெங்களூர்

பதில்:

இயேசுநாதரை மட்டுமல்ல, முஸ்லிம்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரையும் நம்புகின்றனர்.  இதில் ஆதாம் முதல் நோவா, தாவீது, சாலமன், மோசே, இயேசு உட்பட அனைத்து முந்தைய இறைத்தூதர்களும் அடக்கம். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று.

"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், ஆப்ரகாம், இஸ்மவேல், இஸ்ஹாக், யாகோபு மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மோசேவுக்கும், இயேசுவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. (திருக்குர்ஆன்  2:136)

இயேசுவை ஒரு இறைத்தூதர் என்று நம்பும் நாங்கள் ஏன் அவரை தேவனாக ஏற்று கொள்வதில்லை என்று பார்ப்போம்.

ஆதாம், நோவா, தாவீது, சாலமன், மோசே போன்ற முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த அதே ஏக இறைக் கொள்கையையே – அதாவது படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையையே- இயேசுவும் போதித்தார் என்பதை சந்தேகமற வேதாகமத்தில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

 தேவன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று இயேசு தெளிவாக கூறுகிறார்:

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்." 
- லூக்கா, 4 அதிகாரம், 8வது வசனம்.

மேலும் இயேசு, தேவன் ஒருவனே என்றும் ஆணித்தரமாக கூறுகிறார்.

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்." 
- மாற்கு, 12 அதிகாரம், 29வது வசனம்.

உண்மை இப்படி இருக்க, இயேசுவும் தேவன்தான் என்று பல கிறித்துவ நண்பர்கள் நம்புகிறார்கள். இது சரியா என்று பார்ப்போம்.

வேதாகமத்தில் ஒரு இடத்தில் கூட,  தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்றோ இயேசு சொல்லவேயில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டு கீழே உள்ள வேதாகம வசனத்தை படியுங்கள்:

 "இவ்விதமாய்க் இயேசு அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்." மாற்கு 16 அதிகாரம் 19 வது வசனம்.


= இயேசு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று மேலே உள்ள வேதாகம வசனம் கூறுகிறது. இயேசுவும் தேவன் என்று நம்பினால், தேவன் அவர் அருகில் அமர்ந்துள்ள இயேசு (தேவன்) என்று இப்போது நாம் இரண்டு தேவன்களை காண்கிறோம்.  கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையிடம் இந்த மாற்கு 16 அதிகாரம் 19 வது  வசனத்தில் எத்தனை தேவன்களை காண்கிறாய் என்று கேட்டு பாருங்கள். கண்டிப்பாக இரண்டு என்றே கூறும்.

இரண்டு தேவன்கள் இயேசு கற்பித்த இறைக் கொள்கைக்கு முரணாக அல்லவா உள்ளது?

பல தெய்வ வணக்கம் ஒரு பெரும் பாவம்  என்று வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறது.

 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." யாத்திராகமம், 20 அதிகாரம், 3-5 வசனங்கள்.

மேலும், இறைவனால் அனுப்பப்பட்ட எந்த இறைதூதரும் தன்னை தேவன் என்று ஒரு போதும் சொல்லவே மாட்டார். இந்த வேதாகம வசனத்தைப் பாருங்கள்.

"பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;" மாற்கு 10 அதிகாரம் 18 வது வசனம்.

இந்த வசனத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். உங்களை ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று அழைத்தால், அதற்கு நீங்கள் "நீ என்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்வானேன்? ரஜினி ஒருவர் தவிர சூப்பர் ஸ்டார் ஒருவனுமில்லையே" என்று பதில் தந்தால், நீங்கள் ரஜினி இல்லை என்று தானே அர்த்தம். அதே போல்,  "இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;" என்று இயேசு சொன்னால், இயேசு தேவன் இல்லை என்று தானே அர்த்தம்.

திருக்குர்ஆன் இந்த விடயம் குறித்துக் கூறுவதைப் பாருங்கள்:
எந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும், இறைதூதர் எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!'' என்று மனிதர்களிடம் கூற இயலாது. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே இறைதூதர் கூறுவார்.) 3:79

இயேசு தான் தேவன் என்றோ, தன்னை மக்கள் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பதாலும், இயேசுவை தேவன் என்று நம்பினால், இரண்டு தேவன்கள் ஏற்பட்டு "பல தெய்வ வணக்கம்" செய்த பாவத்திற்கு ஆளாவோம் என்பதாலும் முஸ்லிம்கள்  இயேசுநாதரை தேவனாக நம்புவதில்லை.

http://quranmalar.blogspot.com/2014/12/1_26.html 
இயேசு பற்றிய இஸ்லாமிய அறிமுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக