இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 ஜனவரி, 2015

தாய்மதம் அறிவோமா?


ஒன்றே மனித குலம்
மனிதர்கள் அனைவரும் ஒரு  ஆண் ஒரு பெண்ணில் இருந்து உருவாகி பல்கிப் பெருகியவர்களே என்பதே உண்மை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் பிறப்பால் சமமானவர்களே என்பதையும் நவீன அறிவியலும் இன்று நிரூபித்து நிற்கிறது. ஆனாலும் இவ்வுண்மை சக மனிதர்கள் மீது நிறத்தின் குலத்தின் இனத்தின் மேன்மையைக் கூறி ஆதிக்கம் செலுத்துவதற்காக சில சுயநல சக்திகளால் அவ்வப்போது மறைத்து வைக்கப்படுகிறது. இந்த சக்திகள் இந்த ஆதிக்கத்தின் மூலம் சகமனிதர்களை ஆன்மீக ரீதியாக அடிமைப்படுத்தி அவர்களின் பொருளாதாரங்களையும் உழைப்பையும் சுரண்டுவதோடு அவர்களில் பிரிவினை விதைக்கிறார்கள். நலிந்தவர்களை தீண்டத்தகாதவர்களாக ஏனைய சமூகங்களில் இருந்து விலக்கி வைக்கிறார்கள்.
 இந்த அடிமைத்தளையை உடைத்தெறியும் முகமாக இவ்வுலகையும் மனிதர்களையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது வேதத்தில் எச்சரிக்கிறான்:.
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ........நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.' ( திருக்குர்ஆன் 4:1)
 (அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குரிய ஒரே இறைவன் என்று பொருள்)

மனிதகுலம் பூமிக்கு வந்ததன் பின்னணி
முதல் மனித ஜோடியைப் படைத்து அவர்களை சொர்க்கத்தில் குடியமர்த்திய பின் அதன் அருமைபெருமைகளை உணராத காரணத்தினால் அவர்கள் செய்த ஒரு தவற்றின் காரணமாக அங்கிருந்து பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். உரிய முறையில் உழைத்தபின் மீண்டும் சொர்க்கத்தைப் பரிசாக அடையும் முகமாக இந்த பூமியை ஒரு தற்காலிக பரீட்சைக் கூடமாக அமைத்துள்ளான் நம் இறைவன். அந்த நிகழ்வைப் பற்றி அவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு கூறுகிறான்: 
20:123. ''இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்யமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
இவ்வசனத்தில் கூறப்படும் நேர்வழியே இன்று இஸ்லாம் என்று அரபுமொழியில் அறியப்படுகிறது. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் நமக்கு கற்றுத்தரும் கட்டுப்பாடான வாழ்வை (disciplined life)  மேற்கொண்டு வாழ்தலே இஸ்லாம் என்பதாகும். அவ்வாறு வாழ்ந்தால்  இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் சொர்க்கம் சென்றடையலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். அதாவது மேற்படி இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடான வாழ்வை மேற்கொள்பவர்களுக்கே முஸ்லிம்கள் என்று கூறப்படும்.
ஆக, இந்த அடிப்படையில்  இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ,அவர்கள் எந்த மதத்தவருக்குப் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி.......  மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே!
மனித குலத்தின் ஆரம்பத்தில் அருளப்பட்ட அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது.  அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. நபிகள்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டும் திருப்பி) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்."  (நூல்: புகாரி எண் 4775)
ஆக, தாய்மதம் என்பது இந்த இயற்கை மார்க்கம் இஸ்லாமே என்பது தெளிவாகிறது. இதை இதன் அடிப்படைக் கொள்கைகள் யாவை?

தாய்மதத்தின் அடிப்படைகள்
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் : தாய்மதத்தின் முக்கிய அடிப்படை உலகில் காணும் அனைத்து மனிதர்களும் பாகுபாடுகள் இன்றி ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்பதும்  நம் அனைவருக்கும் இறைவன் ஒரே ஒருவனே என்பதும் நாம் அனைவரும் அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம் என்பதும் ஆகும். (மேலே கூறப்பட்ட திருக்குர்ஆன் 4:1 வசனம் காண்க)
இங்கு இறைவன் என்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவனை மட்டுமே அது குறிக்கும். அவன் மட்டுமே நாம் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவன். அவனல்லாத அனைத்தும் அவனது படைப்பினங்களே. அந்த எல்லாம்வல்ல இறைவனுக்கு பதிலாக அவனது படைப்பினங்களை வணங்குவது வீணும் பாவமும் ஆகும் என்பதை முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் இறைவனை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து வெவ்வேறு கடவுளர்களை ஏற்படுத்திக் கொண்டதே மனிதகுலம் பிளவுபடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
 மேலும் உயிரும் உணர்வுமற்ற பொருட்களையெல்லாம் காட்டி கடவுள் என்று சித்தரிக்கும்போது மனித மனங்களில் உண்மையான இறையுணர்வு  சிதைக்கப்படுகிறது. இதன் காரணமாக இறைவன் தன்னைக் கண்காணிக்கிறான், நான் அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு மனித மனங்களில் நின்று அகன்று போகிறது. இவ்வாறு பூமியில் பாவங்கள் அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணமாகிறது.
இறைவனின் பண்புகளை இவ்வாறு கூறுகிறது திருக்குர்ஆன்:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)
ஏகனான, ஆதியும் அந்தமும் இல்லாத, தனக்குவமை ஏதும் இல்லாத, சர்வவல்லமை கொண்ட இறைவனை இடைத்தரகர்களும் வீண் சடங்கு சம்பிரதாயங்களும் இன்றி நேரடியாக வணங்கி வாழச் சொல்கிறது நமது தாய் மார்க்கம்.
*(நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ""நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால், அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்''  (திருக்குர்ஆன் 2:186)
மறுமை வாழ்வு:. இறைவனின் கண்காணிப்பு என்றால் இவ்வுலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பதிவாகின்றன என்பதும் அவை முழுமையாக இறைவனின் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப் பட உள்ளன என்பதாகும். இவ்வுலகில் இறைவனது வழிகாட்டுதல் படி வாழ்ந்தோர் சொர்க்கத்தையும் மறுத்தவர்கள் நரகத்தையும் அடைகிறார்கள் என்கிறது தாய்மார்க்கம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)


இந்த தாய்மதத்தில் இருந்து மக்கள் ஏன் பிரிந்தார்கள் ?
இறைவனின் தூதர்கள் படைத்த இறைவன் ஒருவனையே வணங்கி வரவேண்டும் என்றும் அவனல்லாது எந்த படைப்பினங்களையும் வணங்கலாகாது என்றும் கண்டிப்பான முறையில் தத்தமது மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அதனடிப்படையில் ஆங்காங்கே தர்மத்தையும் நிலைநாட்டினார்கள். ஆனால்
இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு பிற்கால மக்கள் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களின் போதனைக்கு மாற்றமாக இறைத்தூதர்களுக்கும் மற்ற புண்ணியவான்களுக்கும் நினைவுச் சின்னங்கள் எழுப்பினார்கள். நாளடைவில் அவற்றையே வழிபடவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறு மக்கள் உயிரற்ற உணர்வற்ற ஜடப் பொருட்களை எல்லாம் கடவுள் என்று நம்பத் துவங்கியதால் உண்மையான இறை உணர்வும் பயபக்தியும் சிதைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மக்கள் தயக்கமின்றி பாவங்கள் செய்யத் தலைப்பட்டனர். இவற்றோடு கடவுள் பெயரால் மக்களைச் சுரண்டிப் பிழைக்க இடைத்தரகர்களும் அவர்கள் அவிழ்த்துவிட்ட மூடநம்பிக்கைகளும் என பல தீமைகளும் சேர்ந்து பூமியில் அதர்மத்தை வளர்த்தன.

   இவ்வாறு அதர்மம் பரவிய போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக மீண்டும்மீண்டும் இறைத் தூதர்கள் அனுப்பப் பட்டனர். அவர்கள் மேற்கண்ட அடிப்படை போதனைகளை மக்களிடையே விதைத்து மீண்டும் தர்மத்தை நிலை நாட்டிவிட்டுச் சென்றனர். அந்த இறைத்தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள். 
அதர்மம் அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் பெயரால் அல்லது நாட்டின் பெயரால் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். ஆனால் தாய்மதமோ இறைவனுக்கு கீழ்படிதல்என்ற பண்புப் பெயரால் அறியப்படும்!
தாய்மதத்தின் முக்கிய இலக்கணங்கள்
= ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பதை அசைக்கமுடியாத அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதன் மூலம் தனிமனித நல்லொழுக்கத்துக்கு வழிகோலும்.
= மானிட சமத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும். அவற்றை நிலைநாட்டும். பிரிவினை வாதங்களுக்கு துணை போகாது.
= மனித இனத்தை பீடித்திருக்கும் சமூகத் தீமைகளில் இருந்தும் அடிமைத்தளைகளில் இருந்தும் விடுவிக்க தீர்வுகள் காணும். ஆன்மிகம் மட்டும் கூறிக்கொண்டு இராமல் மனித வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக் கூடியதாக இருக்கும்.

= இடைத்தரகர்களுக்கும் கடவுளின் பெயரால் சுரண்டல்களுக்கும் துறவறத்துக்கும் இடமளிக்காது எளிமையான செலவில்லாத நடைமுறை சாத்தியமான வழிபாட்டைக் கற்பிக்கும். 
=================== 
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_9390.html
இறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக