இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

‘இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன?.



முஸ்லிம்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவதைக் கண்டிருப்பீர்கள். குறிப்பாக எதிர்காலத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தாலோ அல்லது நாடினாலோ இந்த வார்த்தையோடு சேர்த்துதான் அச்செயலை செய்வதாகக் கூறுவர். இன்ஷா அல்லாஹ் நான் இன்று மாலை அங்கு வருகிறேன் என்றோ இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு திருமணம் நடைபெற உள்ளது என்றோ கூறுவதை கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தையின் பொருள் என்ன?
இந்த அரபு வார்த்தையின் பொருள் இறைவன் நாடினால் என்பதே. இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ஆம் அன்பர்களே, இறைவன் தன திருமறையில் இறைத்தூதரைப் பார்த்துக்  கூறுவதை கவனியுங்கள்.
 அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ் ) என்ற வார்த்தையை சேர்த்தே தவிர நாளை இதைச் செய்வேன் என்று எதைப் பற்றியும் நீர் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது இறைவனை நினைப்பீராக! (திருக்குர்ஆன 18;23.24)
இந்த வசனம் நமக்கு ஒரு மிக பெரிய உண்மையையும் தத்துவத்தையும் போதிக்கிறது. பொதுவாக இவ்வுலக வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் ஈடுபடும்போது மனிதன் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியும் உள்ள பல உண்மைகளை மறந்து விடுவான். தனது உடல், உயிர், பொருட்கள் இடம் காலம் என பலவும் தனது கட்டுப் பாட்டில் இல்லதவையே. இவை இன்றி அவனால் எதையுமே சாதிக்க முடியாது என்பதும் அவன் அறிவான். ஆனால் இவை அனைத்தும் இறைவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப் படுபவை என்ற உண்மையை மிக எளிதாக மறந்து விடுவது மனித இயல்பு. இந்த தன்னிலை மறந்த நிலை அவனை அகங்காரத்தின் எல்லைக்கும் தற்பெருமைக்கும் பிறரை இழிவாகக் கருதும் மனோநிலைக்கும் கொண்டு செல்ல ஏதுவாகிறது. அடக்குமுறை, கொடுங்கோன்மை, அக்கிரமம், அட்டூழியம் என்பவை எல்லாம் இதன் தொடர்ச்சியே!
ஆனால் எக்காரியம் செய்யும்போதும் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தவர்களாக தொடங்கும்போதும் தொடரும்போதும் என்ன நடக்கும்?
·  பணிவும் அடக்கமும் மனிதனை ஆட்கொள்கிறது!
·  பாவங்கள் செய்ய முற்படமாட்டான்!
·  காரியங்களை சாதிக்க அநியாயமான வழிகளை நாடவோ பொய் பேசவோ மோசடிகள் செய்யவோ முற்படமாட்டன்!
·  செய்யும் காரியத்திற்கு அகிலத்தின் இறைவன் என்னோடு துணை உள்ளான் என்ற நினைப்பு மேலோங்குவதால் தன்னம்பிக்கை பெருகுகிறது.
·  காரியம் நிறைவேறாமல் போனாலோ தோல்வியில் முடிந்து விட்டாலோ என் இறைவன் அதை நாடவில்லை, இது எனது நன்மைக்கே என்ற உணர்வு ஆட்கொள்வதால் அவன் விரக்தி அடையவோ தற்கொலைகளுக்கோ போகமாட்டான்.
·  காரியம் நிறைவேறிவிட்டலோ அல்லது வெற்றி அவனை அடைந்து விட்டாலோ அகங்காரமோ தற்பெருமையோ அவனை ஆளாது. இது இறைவன் சாதித்துக் கொடுத்தது என்று அவனுக்கு நன்றி கூறி சிரம் பணிவான்.
இது போன்று இன்னும் பல நன்மைகள்! இனி நாமும் சொல்வோமா, இன்ஷா அல்லாஹ்?

1 கருத்து: