Search This Blog

Monday, April 15, 2019

மனமாற்றத்தை விட சிறந்த தீர்வு உண்டா?


Image result for disturbed youth
பாலியல் குற்றங்கள் உட்பட எந்த ஒரு குற்றத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி இஸ்லாம் கற்பிக்கும் இறையச்சத்திற்கு உண்டு. இறையச்சத்தை எவ்வாறு உண்டாக்குவது?
-    படைத்தவனே இறைவன்,
-    வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை,
-    இதில் நம் அனைவரது செயல்களும் இறைவனது கண்காணிப்பில் உள்ளன.
-    இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு இறைவனிடம் மீள உள்ளோம்,
-    அங்கு இறுதி விசாரணை நடக்க உள்ளது.
-    நமது புண்ணியங்களுக்கு பரிசாக சொர்க்கம் கிடைக்கும்.
-    பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்க உள்ளது.
இந்த உண்மைகளை பகுத்தறிவு பூர்வமாக மனிதனுக்குள் விதைத்து உண்டாக்கப்படும் பொறுப்புணர்வுதான் இறையச்சம் என்று அறியப்படுகிறது.
இந்த உண்மைகளை வெறுமனே போதிப்பதோடு நில்லாமல் அவற்றை சதா நினைவூட்டும் வண்ணமாக ஐவேளைத் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல், வெள்ளிக்கிழமைகளில் சொற்பொழிவுகள், ரமளானில் விரதம் போன்ற இறையச்சம் வளர்ப்பதற்கான பல வழிமுறைகளையும் இஸ்லாம் கற்பித்து நடைமுறைப்படுத்துகிறது. இஸ்லாம் என்பது இறைவன் நமக்கு வழங்கும் ஒரு முழுமையான வாழ்வியல் வழிமுறைகளின் தொகுப்பு. இவற்றை ஏற்று வாழும்போது தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் பேணப்படும். அதன் காரணமாக ஒழுக்கம் நிறைந்த சமூகமும் உருவாகும். அவ்வாறு சமூகம் அமையும்போது அங்கு மக்களை குற்றங்கள் செய்வதில் இருந்து தடுப்பதும் எளிதே!
அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நபிகள் நாயகம்(ஸல்) தன் வாழ்நாளில் உருவாக்கிக் காட்டினார்கள். இறையச்சம் கொண்ட ஒரு வாலிபரை எவ்வாறு நபிகள் நாயகம் திருத்தினார்கள் என்பதைக் கீழ்கண்ட நிகழ்வின் மூலம் அறியலாம்:
நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார். வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று இறைவனின் தூதரே! எனக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்என்றார்.
அங்கிருந்த நபித்தோழர்கள் வெகுண்டெழுந்து அவரைத் தாக்கிட முனைந்தனர். ஆனால் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்என்பது போன்று சைகை செய்தார்கள்.
பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் உன் தாய் விபச்சாரம் செய்தால் அதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.
 இல்லை, இறைவனின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.என்றார் அவ்வாலிபர்.
 மீண்டும் நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள்.
பதறித்துடித்தவராக, “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாதுஎன்றார் அவ்வாலிபர்.
அப்போது நபிகளார் அப்படித்தான், நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள்.
மீண்டும் அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா? உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.
அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை இறைத்தூதரிடம் கேட்டு விட்டோம்என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.
அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, “இல்லை, இல்லை, இறைத்தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்என்றார்.
அதன் பின்னர், நபிகளார் அவரை நோக்கி சீர்திருத்தும் தொனியில் உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!என்று கூறினார்கள்.
இதைக் கேட்டதும், அந்த வாலிபர் மிகவும் பணிவுடன் இறைவனின் தூதரே! எனது உள்ளம் தூய்மை பெற இறைவனிடம் இறைஞ்ச மாட்டீர்களா?” என ஏக்கத்துடன் கேட்டார்.
அவரை அருகில் அழைத்த நபிகளார், தமதருகே அமரவைத்து அவரின் நெஞ்சத்தின் மீது கை வைத்து, “இறைவா இவரின் இதயத்தை தூய்மை படுத்துவாயாக! இறைவா இவரின் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக! இறைவா இவரின் கற்பொழுக்கத்தை பாதுகாப்பாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.
இறுதியாக அந்த வாலிபர் நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் செல்கிற போது…. “இந்தச் சபையில் நான் நுழைகிற போது, விபச்சாரம்தான் நான் அதிகம் நேசிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபச்சாரமே மாறிவிட்டதுஎன்று சொல்லியவாறே சென்றார்.
இந்த சம்பவத்தை அறிவிக்கும் நபித்தோழர் அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: இதன் பின்பு அந்த வாலிபரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.” (நூல்: முஸ்னத் அஹ்மத்,)
இது நீதிபோதனை என்ற பெயரில் புனையப்பட்ட கதையல்ல. நிஜம்! மனிதகுலத்திற்கு அழகிய முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபிகளார் நடத்திய கவுன்செலிங் இது. பாலியல் இச்சைகளைத் தவறான முறையில் தீர்க்க விரும்பும் இளைஞர்களை நபிகளார் நினைவூட்டிய அந்த உண்மைகளை நினைவூட்டி யாரும் திருத்த முயற்சி செய்யலாம்.
--------------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 


Monday, April 1, 2019

பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்?


Image result for பாலியல் சட்டங்கள்
பசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான். அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்குரிய அவையவங்களையும் மனித உடலில் அமைத்துள்ளான். எனவே இந்த உணர்வுகளை மனிதன் தான் விரும்பியவாறு தணித்துக்கொள்வதில் தவறுண்டா? ஆம், கண்டிப்பாகத் தவறு உண்டு என்பதைத்தான் பொள்ளாச்சி, சேலம் மற்றும் கோவை சம்பவங்கள் நாட்டில் உண்டாக்கி வரும் கொந்தளிப்புகள் உறுதிப் படுத்துகின்றன.
பசி, தாகம் இவற்றை தணிக்கும்போது உண்டாகும் விளைவுகள் அந்த மனிதனை மட்டும் பாதிக்கும். ஆனால் பாலியல் உணர்வுகளைத் தணிக்கும் போது உண்டாகும் விளைவுகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை முதலில் இன்னொரு நபரை மட்டுமல்ல, அவ்விருவர் சார்ந்த குடும்பத்தையும் சூழவுள்ள சமூகத்தையும் கண்டிப்பாக பாதிக்கும் என்பதை நாம் அறிவோம். அது சம்பந்தப்பட்ட இருவரின் இசைவோடு நடந்தேறியாலும் சரியே!
தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் - தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த பாலியல் தொடர்புள்ள செயல்பாடுகளும்!
கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம்
உதாரணமாக கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் வழங்கப் பட்டால் – அதாவது யாரும் யாரோடும் பாலியல் உறவு கொள்ளலாம், அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமையில்லை என்ற நிலை உண்டானால் என்ன நடக்கும் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்.   
= சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அறவே பாதுகாப்பற்ற சூழல் உண்டாகும். 
= குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலையும்.
= கணவன், மனைவி, தாய், தந்தை, மக்கள், சகோதரன், சகோதரி உறவுகள் அர்த்தமற்றவையாகிப் போகும்.
= பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, தான்தோன்றித்தனம், காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுக்கும்.
= அங்கு பெண்கள் அநியாயமாக அந்நியனின் கற்பத்தை சுமந்து பின்னர் கைவிடப் படுவார்கள். தொடர்ந்து கருக்கொலைகள், சிசுக்கொலைகள், தற்கொலைகள், அனாதைகள், தந்தைகள் இல்லாப் பிள்ளைகள், வேண்டா வெறுப்பாக வளர்க்கப்படும் பிள்ளைகள், பொறுப்பற்ற குழந்தை வளர்ப்பு போன்ற விபரீதங்கள் உருவாகும்.
= ஒழுக்க சீர்கேடு, சுயநலம், திருட்டு, கொள்ளை, கொலை என அனைத்து தீமைகளும் மலிந்து அறவே அபாயகரமான சமூக சூழல் அமையும. மக்கள் மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படும். பிறகு என்ன நிகழும்?.. தற்கொலைகள் மலிந்துவிடும்.
அதை நோக்கித்தானே நாம் இன்று சென்று கொண்டிருக்கிறோம்! இன்று இந்த  பாலியல் சுதந்திரம் ஓரளவுக்குக் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆம், தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இன்று நாளொன்றுக்கு 371 நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படாத தற்கொலை எண்ணிக்கையையும் கணக்கிலெடுத்தால், நம்நாட்டில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன என்பதே உண்மை!
அமைதியை மீட்ட சட்டங்களும் கட்டுப்பாடுகளும் தேவை
இன்று நாம் வாழும் சமூகத்தில் அமைதி உண்டாக வேண்டும் என்று விரும்புவோமேயானால் இங்கு பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. நமது குடும்பங்களிலும் அல்லது சமூகத்திலும் தீய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தெளிவான விதிமுறைகளும் தேவைப்படுகின்றன, அவை முறையாக பின்பற்றப்படவும் வேண்டும்.
சரி, இந்த விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது? இங்குதான் நாம் பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின், வாஷிங் மிஷின்,  ஸ்கூட்டர் போன்ற பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction manual) புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.
அற்ப அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன். எந்த ஒரு தனிநபரும் சரி, மனிதர்களின் குழுக்களும் சங்கங்களும் சரி, ஊர் நிர்வாகமும் சரி, அரசியல் கட்சிகளும் அல்லது நாடாள்பவர்களும் சரி, இவர்களில் யாரும்  பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும்.
ஆண் பெண்  உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்த அவர்களின் படைப்பாளன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களைத் தரமுடியும். அவன் மட்டுமே இருபாலார்க்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள், போன்றவற்றை முழுமையாக நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமையும் கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அனைவருக்கும் பொருத்தமானவை. அந்த வாழ்வியல் சட்டங்களின் ஒரு முக்கிய பிரிவே பாலியல் சட்டங்களும். 

இந்த வாழ்வியல் சட்டங்களை இறைவன் எதற்காக வழங்கியுள்ளான் ?
இங்குதான் நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான்.  இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது இம்மை மற்றும் மறுமை வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும். 
பாலியலே வாழ்வியலின் ஆதாரம்:
மனித வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும். இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை இறைவன் தன் வேதங்களின் மூலமாகவும் தூதர்களின் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான். அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின.  அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே திருக்குர்ஆன்.
ஆக, ஆண்- பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.
சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்......?
இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.
============
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.in/2015/06/blog-post_11.html

Wednesday, March 27, 2019

இறையச்சம் கற்பழிப்பைத் தடுக்குமா?


Related image
பெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி,  குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நடக்கும் விபச்சாரமும் சரி - சூழ்நிலைகள் முழுமையாக சாதகமானதாக இருக்கும்போது இக்குற்றத்தில் ஈடுபடுவோரைத் தடுப்பது என்பது அசாத்தியமான செயலே!.
நாளொன்றுக்கு நம் நாட்டில் சராசரி  600 பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை! கற்பழிப்பு என்பது நடவாமல் தடுப்பதற்கு தீர்வைக் கூற முற்பட்ட சிலர் தன்னைக் கற்பழிக்க முற்படும் ஆணிடம் அண்ணன்- தங்கை உறவை நினைவூட்டி கற்பழிப்பைத் தடுக்க முயற்சிக்கலாம் என்றும் கூறினார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வெளியான வீடியோ துணுக்குகளில் கூட பாதிக்கப் பட்ட பெண், “அண்ணா அடிக்காதீங்கண்ணா, நானே கழட்டறேன்...” என்றுதான் கூறிக் கதறுகிறார். ஆனால் அது அவளைக் காப்பாற்ற வில்லை என்றே அறிகிறோம்.
குற்றவாளியிடம் திடீர் மனமாற்றத்தை உண்டாக்க எதுவுமே சக்தியுள்ளவை அல்ல என்பதை அறிகிறோம். 

மனமாற்றத்தை உண்டாக்கவல்ல ஒரு வழி 
கற்பழிக்கும் வக்கிரத்தோடு உள்ள ஒருவனை அதிலிருந்து தடுக்க  அவனுக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய மனமாற்றம் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம். இறையச்சத்திற்கு மட்டுமே அந்த அதிர்ச்சி வைத்தியத்தை நிகழ்த்தும் ஆற்றல் உள்ளது என்பதைக் கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.
‘இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், அவனிடம் எனது நடவடிக்கைகள் பதிவாகின்றன, என் குற்றத்திற்காக இறைவனால் தண்டிக்கப்படுவேன்’ என்ற பொறுப்புர்ணர்வுக்கே இறையச்சம் என்று கூறப்படும். இந்த உணர்வு  குற்றவாளிக்கு மேலிட்டால் மட்டுமே அவன் குற்றத்திலிருந்து விலக வாய்ப்புள்ளது.

அவ்வாறு நடந்த சம்பவங்களில் சில கீழே: 

குகையில் சிக்கிக்கொண்ட மூவர்
நபிகளாருக்கு முன் வாழ்ந்த சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நபிகளார் விவரித்தார்கள். அதன் ஒரு பகுதி இது:

= மூன்று மனிதர்கள் மழைக்காக ஒரு குகையில் தஞ்சம் புகுந்தபோது அந்த குகை வாசலுக்கு முன் ஒரு பெரிய பாறாங்கல் வந்து விழுந்து அடைத்துக் கொண்டது. அதனால் மூவரும் குகையிலிருந்து வெளியேற முடியாத சூழல் உண்டானது. அப்போது அவர்களில் ஒருவர் கூறினார்: ‘நாம் ஒவ்வொருவரும் கடந்த காலத்தில் செய்த நற்செயல் ஒன்றை சொல்லி இறைவனிடம் பிரார்த்திப்போம். அதனால் இறைவன் இந்தப் பாறையை அகற்றி நம்மை விடுதலை செய்யக்கூடும்’ என்றார். அப்போது அவர்களில் ஒருவர் கூறியதைப் பாருங்கள்:

“இறைவா! எனக்குச் சிறிய தந்தையின் மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தாள். அவளை தவறாக பயன்படுத்த நான் விரும்பினேன். என் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவளாக என்னிடமிருந்து விலகி விட்டாள். பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டின் போது அவள் என்னிடம் உதவி கேட்டு வந்தாள். நிபந்தனையின் பேரில் அவளிடம் நூற்றி இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் நெருங்கினேன். அப்போது அவள், “அல்லாஹ்வை அஞ்சுவீராக! உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு. மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் தவறு செய்யாமல் நீங்கிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக!” என்று அவர் பிரார்த்தித்தார். அவர்களால் வெளியே வர இயலாத அளவுக்கு பாறை இன்னும் சற்று விலகியது. வெளி காற்றும் உள்ளே வந்தது (நூல்: புகாரி)

மேற்படி நிகழ்வில் கற்பழிக்கப் பட இருந்த பெண் இறைவனை நினைவூட்டி தன்னைத் தற்காத்துக்கொண்டதை நாம் அறியமுடிகிறது.

காமுகனிடம் இருந்து தற்காத்துக் கொண்ட சவுதி சிறுமி

சில வருடங்களுக்கு முன் சவுதி அராபியாவில் நடந்த நிகழ்வு இது. அன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டது. சவுதி சிறுமி ஒருத்தியை ஒரு இளைஞன் காரில் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றான். அவளை ஒரு பூட்டப்பட்ட வீட்டிற்குள் வைத்துக் கொண்டு கற்பழிக்க முயன்றான். அப்போது திருக்குர்ஆனை நன்கு மனனம் செய்திருந்த அந்த சிறுமி இடைவிடாது திருக்குர்ஆன் வசனங்களை ஓத ஆரம்பித்தாள். பலமுறை அவளை அணுக நினைத்தும் அவனால் மேற்கொண்டு அவளைத் தொடக்கூட முடியவில்லை. இறுதியில் அவளை எங்கிருந்து கடத்தினானோ அதே இடத்துக்குக் கொண்டுவந்து விட்டுச் சென்றான்.

மகளிருக்கு அன்னை மரியாளிடம் இருந்து ஒரு பாடம்
இது மேற்கண்ட சம்பவங்களைப் போல கற்பழிப்பு சம்பவம் அல்ல. ஆனாலும் கற்பழிப்புக்கு ஆளாகக் கூடிய நிலையில் பெண்கள் இந்த வழிமுறையை ஆத்மார்த்தமான பிரார்த்தனையோடு கையாளலாம். இறைவன் நாடினால் பலன் கிடைக்கும். .
இயேசுவைக் கருத்தரிப்பதற்கு முன் நடந்த சம்பவங்களை வல்ல இறைவன் தனது இறுதிமறையில் கூறுவதைப் பாருங்கள்:
= இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். (திருக்குர்ஆன் 19: 16-17)
(ரூஹ் – பரிசுத்த ஆவி – ஜிப்ரீல் அல்லது காப்ரியல் என்ற வானவர்)

வந்தவர் வானவர் என்று அறியாததால் கற்புக்கரசியாகத் திகழ்ந்த மரியாளுக்கு அது ஓர் அதிர்ச்சி தரும் சம்பவமாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இறைவனிடமே புகலிடம் தேடுகிறார்.

=''நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். (திருக்குர்ஆன் 19:18)
இப்படிப்பட்ட எதிர்பாராத ஆபத்துகள் அல்லது பயமூட்டும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் வரலாம். தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும். தன்னந்தனிமையில் தன் எதிரே நிற்கும் ஆடவனுக்கு இறைவனைப் பற்றி நினைவூட்டி இறைவனிடமே தனக்கு
ப் பாதுகாப்பும் தேடுகிறார். அந்த வல்லோனை மீறி என்னதான் சம்பவித்து விடமுடியும்?
================= 
இஸ்லாம் என்றால் என்ன?
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?

Tuesday, March 19, 2019

இருளில் புதையும் பாலியல் கொடூரங்கள்!தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்    
= பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சமூக வலைதளங்கள் மூலம் அன்னியப் பெண்களோடு நட்பை ஏற்படுத்தி அதைத் தொடர்ந்து அன்னியோன்யமான தகவல் பரிமாற்றம் மூலம் நேரடி தொடர்புக்கு வழி செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களோடு உல்லாசமாக இருக்கும் நிகழ்வுகளை இரகசியமாக செல்போன் மூலம் வீடியோக்களை எடுத்துள்ளனர். இவற்றைக்கொண்டு இவர்களது காம வலையில் விழ்ந்த பெண்களை பிளேக்மெயில் செய்துள்ளனர். இப்பெண்களை வைத்துக்கொண்டு விபச்சாரத்தை வியாபாரமாக செய்துள்ளனர். பெரும்புள்ளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இவர்களைத் தாரைவார்த்துக் கொடுத்து வந்துள்ளனர். சுமார் ஏழு வருடங்களாக இக்கொடூரக் குற்றம் நடந்து வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 26 ம் தேதி இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து இது அம்பலத்திற்கு வந்துள்ளது. கூட்டு பாலியல் வன்முறை மற்றும் அது பற்றிய வீடியோ பகிர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ணிக்கை கிட்டத்தட்ட 200 க்கு மேல் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
இன்று பெரும் அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஏதோ அபூர்வமான ஒன்றல்ல என்பதை அறிவோம். எப்போதும் போல இந்த சம்பவமும் மற்ற சம்பவங்கள் போல கடந்து போகும்.
இதோ எடுத்துக்காட்டாக கடந்தகால சம்பவங்களில் மிகச்சில...
= டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி நள்ளிரவு, நிர்பயா (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, சாலையில் வீசப்பட்ட அவர், சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 29–ந்தேதி உயிரிழந்தார்.
= காஷ்மீரில் கடந்த வருடம் ஜனவரி 10-ம் தேதி கதுவா மாவட்டத்தில் ஒரு வழிபாட்டுத்தலத்தின் கருவறையில்  8 வயது முஸ்லிம் ஒரு பழங்குடியின சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். 7 நாட்களுக்குப் பின் 17-ம் தேதி சடலமாக அப்பகுதியில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
= சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து அவர் வைத்திருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
= காடையாம்பட்டி தாலுகாவில் 17 வயது சிறுமியை அவரின் உறவினரே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
= சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள ஒரு கிரிகெட் மைதானத்துக்கு அருகில், உடலில் 86 காயங்களுடன் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி, குறைந்தது 8 நாள்கள் பாலியல் வன்கொடுமை மூலம் சித்திரவதை செய்யப்பட்டு, நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பின் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
= அரூர் கோட்டப்பட்டியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அண்ணாமலை – மலர் தம்பதியினரின் மகள் சவுமியா. அரசு மேல்நிலைப் பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.. தீபாவளி விடுமுறைக்கு வீடு வந்த செல்வி சவுமியா காலைக் கடன் கழிக்க ஊருக்கு வெளியே சென்றபோது கடந்த 6 ஆம் தேதி ரமேஷ், சதீஷ் என்ற இரண்டு பேர் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தியுள்ளனர். தன்னை காத்துக் கொள்ள சவுமியா போராடினார். ஆனால், அந்தக் கயவர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். உடம்பெல்லாம் காயங்கள், ரத்தமாக வழிந்த நிலையில் பெற்றோரிடம் சவுமியா முறையிட, செய்வதறியாது தவித்த அவர்களும், கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
= சேலம் ஆத்தூர் அருகே தளவாய்ப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படித்து வந்த ராஜலட்சுமி என்ற சிறுமியிடம், அதே பகுதியில் வசித்து வந்த தினேஷ் குமார் என்பவன் பாலியல் சீண்டல்களை செய்துள்ளான். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே அடுத்தடுத்த வன்மத்தை அரங்கேற்றி வந்துள்ளான். தன்னால் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி, இதை தன் பெற்றோரிடம் சொல்ல, இதனை அடுத்து அவர்கள் தினேஷைக் கண்டித்துள்ளனர்.
=  பதயூன் மாவட்டம் பிஸ்ஸாவுலி தொகுதி எம்எல்ஏ குஷாகரா சாகர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வேலைகாரரின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கூறியுள்ளார். போலீசில் புகார் தெரிவித்ததால் கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை முடித்துகொள் ரூ. 20 லட்சம் தருவதாக பேரம் பேசியதாகவும் கூறியுள்ளார். எம்எல்ஏவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதால் அப்பெண் இப்புகாரை போலீசில் தெரிவித்துள்ளார்.
= திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து விடுதி காப்பாளர்களும் அந்த செயலுக்கு ஒத்துழைப்பு தருமாறு மாணவியை வற்புறுத்திய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
= உத்தரபிரதேச மாநிலம் உன்னா வில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
= சேலம் மாவட்டத்தில், எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரம் தோரமங்கலம் பகுதியில் கடந்த மாதம் எட்டு வயது மற்றும் ஏழு வயதுடைய இரு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும், இதே பகுதியில் மற்றொரு 7 வயது குழந்தை பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கப்பட்டதுடன், அக்குழந்தையின் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
= சமீபத்தில் #MeToo பாலியல் புகார்களின் வாயிலாக கடந்த காலத்தில் பிரபலங்கள் தங்களுக்கு இழைத்த பாலியல் கொடுமைகளை நடிகைகளும் பெண் கலைஞர்களும் சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து விவாதித்ததை அறிவோம். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார் பாடகி சின்மயி, மட்டுமல்ல நடிகர்கள் கல்யாண் மற்றும் ஜான் விஜய் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
= ஒரு இலங்கைப் பெண் கூறியிருப்பதாவது: நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன். எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டுமானால் அவரோடு படுக்க வேண்டும் என்றார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.
= சின்னமனூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
= மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
= சென்னையில் முகளிவாக்கத்தில் 7-வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், மகிளா நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி எஸ் தஸ்வந்த் தாக்கல் செய்தமனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது
= 2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.
= பட்டுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கிய பெயின்டருக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அனைத்து சம்பவங்களையும் அவ்வளவு எளிதாக பட்டியல் இட்டுவிட முடியாது என்பதை நாம் நன்றாக அறிவோம். வெறும் எடுத்துக்காட்டிற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்ட மிகச்சில சம்பவங்களின் தொகுப்பையே மேலே காண்கிறோம்.
அதிகாரத்தில் உள்ளோரின் பொறுப்பின்மை:
எவ்வளவுதான் கொடுமைகள் உச்சகட்டத்தை அடைந்தாலும் ‘மறப்பது மக்களின் இயல்பு’ என்பதை நாட்டின் ஆட்சியாளர்கள் உணர்ந்தே உள்ளார்கள். அதனால் அவர்கள் இந்த வன்கொடுமையை தடுக்க  ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. அவ்வப்போது கண்துடைப்பிற்காக மட்டும் எதையாவது செய்து தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். இவையெல்லாம் நாளை மறுமையில் விசாரிக்கப்பட உள்ளன என்பதையும் அதற்கான தண்டனைகளை அனுபவிக்க உள்ளார்கள் என்பதையும் உணராமல் இருக்கிறார்கள்.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். .... உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)
குற்றங்களின் வீரியமான வளர்ச்சி:
இந்த தொடரும் குற்றங்களின் பெருக்கத்தினால் அவ்வப்போது நாடு கொந்தளிக்கிறது. போராட்டங்களும் சமூக வலைதளங்களில் தொடர்புடையோரைத் தூற்றலும் வீரியமாக நடக்கின்றன. ஆனால் மக்கள் கவனத்தை திசைதிருப்ப ஆள்வோர் தந்திரமான அணுகுமுறைகளைக் கையாள்கிறார்கள். புதுப்புது பரபரப்பான விவகாரங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் கிளப்பிவிட்டு அவற்றைப் பரப்பி இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறார்கள். மக்களும் அடங்கிப் போய்விடுகிறார்கள். இதுதான் இன்றைய நடைமுறை.
ஆனால் பாலியல் வல்லுறவு என்ற வன்கொடுமை சற்றும் அடங்காமல் மிகமிக வீரியமாக வளர்ந்தே வருகிறது என்பதை புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
= தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்' எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து 550 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. பாலியல் பலாத்காரம், கொத்தடிமையாக நடத்துதல், வல்லுறவு, கட்டாயத்திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி நடத்திய அதன் ஆய்வில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று அந்த வல்லுநர்கள் கண்டறிந்துள்ளார்கள்.. கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று மிகமோசமாக முதலிடத்தில் இருக்கிறது. (தி ஹிந்து நாளிதழ் :  26 -௦6- 2018)
= தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப்படி 2012  NCRB  நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 68 பெண்கள் கற்பழிக்கப்படும் நிலை இருந்தது.  2016 வருட அறிக்கைப்படி நாளொன்றுக்கு  106 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். கடந்த சில வருடங்களாக NCRB அறிக்கைகளை அரசாங்கம்  வெளியிடாத நிலையே தொடர்கிறது.
= இந்த எண்ணிக்கையில் சுமார் 94% க்கும் அதிகமான கற்பழிப்புகள் பாதிக்கப்பட்டோரின் உறவினர்களாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது மிகவும் வேதனைக்குரிய வெட்கப்பட வேண்டிய தகவலாகும்.
உள்ளுக்குள்ளேயே புழுங்கித் தவிக்கும் பேதைகள்:
= மேலே கூறப்படும் புள்ளிவிவரம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானது. பெண்களின் மானம் தொடர்புடையவை என்பதாலும்  குற்றமிழைத்தவர்களின் அடக்குமுறைக்கு பயந்தும் பெரும்பாலான குற்றங்கள் வெளி உலகத்திற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன.. மேலும் காவல்துறையினர் கெடுபிடியும் அங்கு உண்டாகும் அலைச்சலும் காரணமாக அக்குற்றங்கள் அங்கு பதிய பாதிக்கப்பட்டவர்கள் முயற்சிப்பதில்லை. 
National Family Health Survey (NFHS)  என்ற அமைப்பு நடத்திய கணிப்பின்படி வெறும் 15 % சம்பவங்கள் மட்டுமே காவல்துறைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அப்படியானால் 85 % குற்றங்கள் வெளிச்சத்திற்கு வராமலே மூடி மறைக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை! அதாவது நாளொன்றுக்கு 106 பேர் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கை கூறினால் உண்மையில் நாளொன்றுக்கு  600 கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்று அர்த்தம். 
இவற்றுக்கு பலியானவர்கள் கற்பழிக்கப்பட்ட பின்னும் அவற்றின் விளைவுகளை வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளாமலே அனுபவித்து வருகிறார்கள். அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு வரும்போது வாழ்க்கையே வெறுத்த நிலையில் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். அவையும் காவல்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை, மேற்கூறப்பட்ட அதே காரணங்களுக்காக!. இயற்கை மரணமாகவே ஊருக்கு மரணமாகவே அவை உறவினர்களால் ஊருக்கு அறிவிக்கப்படுகின்றன. என்ன ஒரு கொடுமை? 
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இன்று நாளொன்றுக்கு 371 நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது நம்நாட்டில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன என்று அர்த்தம்!
இறைவனின் நியாயத் தீர்ப்பு
யார் எவற்றை மறைத்தாலும் இறைவனிடம் இருந்து அவை மறைவதில்லை. அவை அனைத்தும் இறைவனிடம் பதிவாகின்றன. அவற்றிற்கு மறுமையில் மிகப் பக்குவமான முறையில் விசாரணையும் நீதி வழங்கலும் நடைபெற உள்ளன. இன்று cctv கேமராக்கள் முன்னால் யாரும் குற்றம் செய்ய முற்படுவதில்லை என்றறிவோம். ஆனால் நம் கண்களே நம்மைக் காட்டிக்கொடுக்கும் cctv ஆக மாறினால்...? ஆம், உண்மையும் அதுதானே!
= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?  அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7. 9)
= அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.அன்றியும், எவர் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார். (திருக்குர்ஆன் 99:6- 8
================ 

பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!