இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சொர்க்க வாசற்படியில் முதல் நிமிடங்கள்

 

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொர்க்கவாசலில் காலடி வைத்த முதல் நிமிடங்கள் எப்படி இருக்கும் தெரியுமா!
நிச்சயமாக அந்த நிமிடங்கள் திகைப்பூட்டும் தருணங்களாகவும், தித்திக்க வைக்கும் வேளைகளாகவும், ஆர்ப்பரிக்கும் சமயங்களாகவும்தான் இருக்கப் போகின்றன.
பூலோகத்தில்...
என்றோ ஒரு நாள் மறைந்து போன அன்பர்கள், நண்பர்கள், உறவினர்களை உடலோடும் உயிரோடும் காணும் போது!!!
மதிப்புக்குரிய பெற்றோரை பாசமுள்ள மகனும் மகளும் காணும் போது!
சிறு வயதில் உயிர் பிரிந்த செல்லக் குழந்தையை, தாய்தந்தை காணும் போது!
அன்புள்ள கணவனை, ஏங்கித் தவித்த மனைவி காணும் போது!
பூலோகத்தில்...
நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட உறவுகள் குணமடைந்து சுகதேகிகளாக காணக் கிடைக்கும் போது!
இங்கே வயோதிபர்களாக இருந்தவர்களை அங்கே இளம் வாலிபர்களாக காணும் போது!
இங்கே துன்பத்திலும், துயரத்திலும் வாழ்ந்தவர்கள் அங்கே இன்பமாக உலா வருவதை காணும் போது!
இங்கே குருடர்களாக, செவிடர்களாக, உடல் ஊனமுற்றவர்களாக, புத்தி போதலித்தவர்களாக இருந்தவர்கள் அங்கே குறைகள் ஏதுமற்ற புதுப் பிறவிகளாக நடமாடுவதைக் காணும் போது!
நபிமார்களுக்கு, தூதர்களுக்கு கைகுலுக்கி, ஆரத்தழுவி நேருக்கு நேர் சந்திக்க கிடைக்கும் போது!
எங்கள் நபியாம் அண்ணல் நபியை கண்கொண்டு காணக் கிடைக்கும் போது!
வரலாறு படைத்த நபித்தொழர்களை, தியாகிகளை, சீர்திருத்த வாதிகளை, அறிஞர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது!
நபி நூஹின் கப்பலில் ஏறி தப்பித்தவர்கள், நபி மூஸாவேடு கடல் கடந்தவர்கள், கிடங்கு வாசிகள், குகை வாசிகள், லுக்மானுல் ஹகீம், துல் கர்னைன், என முன் சென்ற சமுதாயத்தினரை காணக் கிடைக்கும் போது!
தங்கம், வெள்ளி, கஸ்தூரி, முத்து, மரகதம், குங்குமத்தினாலான மாளிகைகளை, தரைகளை, பொடிக்கற்களை காணும் போது!
கண் கவரும் அரண்மனைகளையும்,
கூடாரங்களையும் காணும் போது!
நதிகள் பாய்ந்தோடும் நந்தவனங்களை காணும் போது!
பாலாறும் தேனாறும் பாய்ந்தோடுவதைக் காணும் போது!
கைக்கெட்டும் பழங்களையும் கனிகளையும் பறிக்கும் போது!
தங்கத் தட்டுக்களில் அறுசுவை உணவுகள் பரிமாறப்படும் போது!
கையில் மது பானக் கிண்ணத்தோடு சாய்வு இருக்கையில் சாய்ந்த வண்ணம் ஒய்யாரமாக இருக்கும் போது!
சண்டைகள், சச்சரவுகள் அற்ற, குரோதங்கள், குழப்பங்கள் அற்ற, வஞ்சகங்கள், வயிராக்கியங்கள் அற்ற சமாதன யுகத்தில் நுழைந்துவிட்டோம் என்று நினைக்கும் போது!
இனி என்றும் கடமைகள், கட்டுப்பாடுகள் இல்லை என்பது தெரிய வரும் போது!
இனி என்றும் நேய் நொடிகள் இல்லை, மருந்து மாத்திரைகள் இல்லை என தெரிய வரும் போது!
இனி என்றும் துக்கம் துயரம், கஷ்டம் கவலை இல்லை என தெரிய வரும் போது!
இனி என்றும் முதுமை வயோதிபம் இல்லை, மரணம் முடிவு இல்லை என்பது தெரிய வரும் போது!
இனி என்றும் சலிப்பு தட்டாத, சஞ்சலம் ஏற்படாத சுகபோக வாழ்க்கைதான் என்பது தெரிய வரும் போது!
இனி என்றும் அழிவே இல்லாத ராஜ வாழ்கைதான் என்று நினைக்கும் போது!
அரியாசனத்தின் நாயகன் அல்லாஹ் "சுவன வாசிகளே! என்று அழைத்து, "இன்னும் ஏதாவது நான் மேலதிகமாக தர வேண்டுமா? என்ற அவன் ஓசை கேட்கும் போது!
அதற்கு அவர்கள்: நீ எங்கள் முகங்களை வெண்மை ஆக்கினாயே! எங்களை நரகத்திலிருத்து பாதுகாத்தாயே! சுவனத்தில் எங்களை நூழைவித்தாயே! வேறு என்னதான் நாம் உன்னிடம் கேட்க முடியும்? என்று அவர்கள் கூறும் போது!
அந்த நேரத்தில்தான் மகா வல்லவன் அல்லாஹ் இடுதிரை நீக்கி தனது திரு முகத்தை சுவனவாசிகளுக்கு வெளிக்காட்டும் போது!
அந்நேரத்தில் இறை திரு முகம் பார்க்க கிடைப்பதானது சுவனம் கிடைத்ததை விட பெரும் இன்பப் பரிசாக இருக்கப் போகிறது.
பின்னர் அவர்களை நோக்கி அல்லாஹ்: இன்றோடு என் திருப்தியை உங்கள் மீது நான் இறக்கி வைக்கிறேன், இனி என்றும் நான் அதிருப்தி அடையமாட்டேன்.' என்று கூறுவான்.
((சென்று போன நாட்களில் நீங்கள் செய்து வைத்த (நல்லறங்கள்) காரணமாக, இப்போது ஆனந்தமாக உண்ணுங்கள்!பருகுங்கள்! (என அவர்களுக்கு கூறப்படும்).
📖 அல்குர்ஆன் : 69:24
அருளாளன் அல்லாஹ் என்னையும் உங்களையும் அவனது பரந்த சுவத்தில் உயர்ந்த இடத்தில் வாழ வைப்பானாக!

திங்கள், 1 ஜனவரி, 2024

தள்ளுபடி விலையில் 6 நூல்கள்

 

எமது வெளியீடுகளான ஆறு நூல்களும் மொத்தமாக வாங்கினால் தள்ளுபடி விலை ரூ.80-
அல்லது நீங்கள் விருப்பப்படும் நான்கு நூல்களை வாங்க விரும்பினால் தள்ளுபடி விலை ரூ..50-
இலங்கை வாசகர்களுக்கு இந்த சேவை கிடையாது. நீங்கள் வேண்டுமானால் இந்த நூல்களின் PDF வாசிக்க கீழ்கண்ட லிங்குகளை க்ளிக் செய்யுங்கள்:
மாறும் முகவரிகள் https://www.quranmalar.com/2023/11/blog-post.html
நலம்பயக்கும் நபிமொழிகள் https://drive.google.com/.../1E4HtFo6y2pVkHv8EJ1u.../view...
இணையக் காத்திருக்கும் இருபெரும் சமூகங்கள் https://www.quranmalar.com/2018/08/blog-post.html
திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்
ஏன் இவர்கள் இப்படி?
நபிகள் நாயகம்
- வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள்
-------------
புத்தகங்களுக்கான விவரங்களுக்கு மேற்கண்ட வாட்சப் பட்டனைக் க்ளிக் செய்யுங்கள். அல்லது உங்கள் முகவரி யை 098860 01357 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.
=================

திருக்குர்ஆன் நற்செய்திமலர் கட்டுரைகள் சில:
--------------------------------
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

சனி, 23 டிசம்பர், 2023

மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்க வேண்டுமா?


 “கடவுளை மற! மனிதனை நினை!”

நாத்திகர்கள் ஆத்திகர்களிடம் அடிக்கடி கூறும் சொற்கள் இவை. இக்கூற்றை இன்று பொய்ப்பித்து நிற்கிறார்கள் முஸ்லிம்கள். கடவுளை சதா நினைக்கும் இஸ்லாமிய சமூகத்தால் எவ்வாறு மற்றெவரையும் விட அர்ப்பணிப்போடு மக்கள் சேவையில் ஈடுபட முடிகிறது?

கடவுள் நம்பிக்கையில் வேறுபாடு

ஆம், மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிறபடி நினைத்தால் சக மனிதர்களும் நாடும் – குறிப்பாக ஏழைகள் -  அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்களைப் போல இஸ்லாமியர்கள் படைப்பினங்களையோ கற்பனை உருவங்களையோ சிலைகளையோ கடவுள் என்று நம்புவதில்லை. அவர்கள் உண்மை இறைவனைப் பகுத்தறிந்து அவனது உள்ளமையையும் வல்லமையையும் அன்பையும் பாசத்தையும் மனமாற உணர்கிறார்கள். அவனோடு அனுதினமும் பேசுகிறார்கள். அவனது கூற்றுக்களை (வேதத்தையும் இறைத் தூதர் மொழிகளையும்) ஆய்வுக்குட்படுத்தி பகுத்தறிவின் அடிப்படையில் அவன் வாக்களிக்கும் மறுமை உலகை உண்மையென்று ஆணித்தரமாக நம்புகிறார்கள்.

இந்தத் தற்காலிக வாழ்க்கை என்பதை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவுமே அவர்கள் பார்க்கிறார்கள். இதில் இறைவனின் கட்டளைக் கேற்ப வாழ்ந்தால் இப்பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்க வாழ்வை அடைய முடியும் என்றும் இறைவனுக்கு மாறு செய்தால் மறுமையில் இறைவனின் தண்டனையான நரக கிடைக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

அதன் விளைவாக இவ்வுலகில் மற்றவர்களைப் போல சுயநலமாக இருக்க முடிவதில்லை அவர்களால். தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தும் இறைவனுக்கு சொந்தமானது என்று நம்புவதால் அவற்றை தாரளமாக பொதுநலனுக்காக செலவிடுகிறார்கள். மக்கள் சேவையில் எவ்வித ஆபத்தே வந்தாலும் அவர்களால் தியாகங்களை துணிந்து மேற்கொள்ள முடிகிறது. அந்த சேவைகளில் உயிரே போனாலும் மறுமையில் இறைவன் சொர்க்கத்தை வழங்குவான் என்று உறுதியாக நம்புகிறார்கள்.   

இஸ்லாமியர்களின் அற்பணிப்புக்குக் காரணம் என்ன?

இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டு திருக்குர்ஆனின் கீழ்கண்ட சில வசனங்களை வாசியுங்கள்! முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன் ஏன் பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

= உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோமேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும்இறுதி நாளையும்வானவர்களையும்வேதங்களையும்இறைத்தூதர்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும்அனாதைகளுக்கும்ஏழைகளுக்கும்நாடோடிகளுக்கும்யாசிப்போருக்கும்மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும்தொழுகையை நிலைநாட்டுவோரும்ஸகாத்தை வழங்குவோரும்வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும்வறுமைநோய்மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (திருக்குர்ஆன் 2:177)
= அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும்தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம்உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:265)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

= “தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும்உறவினருக்காகவும்அனாதைகளுக்காகவும்ஏழைகளுக்காகவும்நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:215)

= நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:272)
(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. (திருக்குர்ஆன் 2:280)
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும்உறவினர்களுக்கும்அனாதைகளுக்கும்ஏழைகளுக்கும்நெருங்கிய அண்டை வீட்டாருக்கும்தூரமான அண்டை வீட்டாருக்கும்பயணத் தோழருக்கும்நாடோடிகளுக்கும்உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்துகர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36)

= நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும்பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! (திருக்குர்ஆன் 9:34)

= யாசிப்போருக்கும்ஏழைகளுக்கும்அதை வசூலிப்போருக்கும்உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும்அடிமை(களை விடுதலை செய்வதற்)கும்கடன்பட்டோருக்கும்அல்லாஹ்வின் பாதையிலும்நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

= உறவினருக்கும்ஏழைக்கும்நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! (திருக்குர்ஆன் 17:26)


= தர்மம் செய்யும் ஆண்களுக்கும்பெண்களுக்கும்அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு. (திருக்குர்ஆன் 57:18)

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!

வெள்ளி, 22 டிசம்பர், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 24


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜனவரி 24 

இஸ்லாமிய வரலாற்றில் பாலஸ்தீனம்-2

வாசகர் எண்ணம் -4, 12

இஸ்லாத்திற்கு ஈர்க்கப்படும் பெண்கள்-55

மேகன் ரைஸுக்கு எதிரொலிகள்!-8

மக்கள் சேவையில் பள்ளிவாசல்கள் -9

கருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை -11

சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் இஸ்லாம்! -13

மக்கள் நலனை மையமாகக் கொண்டது இஸ்லாம்  -15

மனிதனை நினைக்க  கடவுளை மறக்க வேண்டுமா?-17

வீரமங்கை சுபைதா!-20

மழை கொண்டுவந்த மடல்!-21

பேரிடர் கற்பிக்கும் பாடங்கள் -22

இரக்கம் அண்ணலாரின் வழிமுறை - 24

வெள்ளி, 24 நவம்பர், 2023

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 23 இதழ்


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 23 இதழ் 

 பொருளடக்கம்:

இறைமார்க்கத்தின் அடிப்படை ஏகத்துவம்! -22

தொடக்கத்திலேயே பொறுமை -33

தர்மத்தை நிலைநாட்ட வந்த இறைத்தூதர்கள்  -4

திருக்குர்ஆன் கூறும் உண்மைக் கதைகள்

சத்தியத்திற்காக வாதாடிய நூஹ் (நோவா) நபி -6

கப்பலில் காப்பாற்றப்பட்ட மக்களும் உயிரினங்களும்  -9

பூசாரிக்குப் பிறந்த பகுத்தறிவுவாதி! -12

சோதனைகள் பலவிதம் -15

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி!-16

கைத்தடி பாம்பாக மாறிய அற்புதம் -19

கொடுங்கோலனை வீழ்த்திய இறைத்தூதர்கள்! -21

அற்புதங்கள் பல நிகழ்த்திய இயேசு என்ற இறைத்தூதர்! -23

ஞாயிறு, 12 நவம்பர், 2023

ஷரீஆவின் சட்டம்! அதன் மாண்பும்… மகத்துவமும்….

நவம்பர் 26 உலக சட்ட தினம் உலகெங்கும் கொண்டாடப் பட்டு வருகிற இந்த நேரத்தில் உலகில் முஸ்லிம்கள் எந்தளவு சட்டங்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும், இஸ்லாமிய ஷரீஆவின் சட்டங்கள் எந்தளவு உலகில் பிற சமய மக்களால், இஸ்லாமிய விரோதப் போக்கு கொண்டவர்களால், ஃபாஸிச சிந்தனை கொண்டவர்களால் விமர்சிக்கப்படுகின்றது என்பதையும் இஸ்லாமிய சட்டங்களில் உள்ள நியாயங்களையும், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக உலகில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளால், சட்டங்களைக் கொண்டு முடக்கி, அநீதி இழைக்கப்படுவதையும் உலக அரங்கிற்கும், உலக மனித சமுதாயத்திற்கும் உணர்த்த நாம் கடமையும் பொறுப்பும் பெற்றிருக்கின்றோம்.

உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு தத்துவங்கள், சமயங்கள், மதங்கள் மக்களின் வாழ்க்கை நெறியாக பின்பற்றப்படுகின்றன.

அந்தந்த நாட்டு சூழ்நிலைகளுக்கேற்ப அவ்வப்போது மனித சமூகத்தைக் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழச்செய்வதற்காக மன்னராட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும், சர்வதிகார ஆட்சியாக இருந்தாலும், சமயங்களில் நம்பிக்கையற்ற நாத்திக மற்றும் கம்யூனிஸ ஆட்சியாக இருந்தாலும் அங்கே பாராளுமன்றங்கள், சட்ட மன்றங்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் மூலம் சட்டங்களை இயற்றி மக்களை நெறிப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டம் என்பது சமுதாயத்திற்குப் பணிவிடைகள் செய்யும் ஒரு அரிய கருவியாகும். மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை அகற்றும் மகத்தான சாதனமாகும்.

பல்வேறுபட்ட இனங்கள், கொள்கைகள் கொண்டவர்கள், சமுதாயங்கள் பாகுபாடின்றி ஒன்றிணைந்து வாழ்வதற்கும், கொடுமைகள் களையப்படுவதற்கும், உரிமைகள் பேணப்படுவதற்கும், நீதி நியாயங்கள் நிலை நாட்டப்படுவதற்கும் பல்சமூக உறவுகள் ஒருமுகப்படுத்துவதற்கும் சட்டத்தின் துணை அவசியமாகிறது.

சட்டங்களின் துணை கொண்டு தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், ஏனைய மனிதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் தீர்மானிக்க முடியும்.

ஆனால், ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சட்டங்கள் மட்டும் மாறிக் கொண்டும், திருத்தங்களுக்கு உள்ளாகியும் வருகிறதே ஒழிய மக்களிடம் மாற்றங்களோ, திருத்தங்களோ ஏற்பட்டதாக தெரியவில்லை.

உலகில் யார் இயற்றிய சட்டமும் இஸ்லாமியச் சட்டம் வழங்கும் நீதிக்குப் பக்கத்தில் கூட வர முடியவில்லை. காரணம் ஒன்றே ஒன்று தான். இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட, மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்ட சட்டம்.

ஏன், அவர்கள் தோற்றுப் போய்விட்ட இந்தச் சட்டங்களையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, மிகச் சிறந்த வழிகாட்டியான அல்லாஹ்வின் சட்டத்தின் பக்கமும், அதை நடைமுறைப்படுத்தும் ஷரீஆவின் பக்கமும் திரும்பக் கூடாது? எனும் கேள்வியோடு உலகச்சட்டங்களில் இருந்து இஸ்லாமியச் சட்டம் எங்கெல்லாம், எப்படியெல்லாம் வேறுபடுகின்றது என்பதை வாருங்கள்! கொஞ்சம் வாசித்து விட்டு வருவோம்!

ஷரீஆ சட்டங்களின் நோக்கம் என்ன?

இஸ்லாமிய சட்டம் மனிதனை திருத்துவதற்கே முதலிடம் தரும். தண்டனை என்பது இறுதியான திட்டமாகவே இருக்கும். இது தான் உலகச் சட்டங்களில் இருந்து ஷரீஆவின் சட்டம் தனித்து விளங்குவதற்கான அடிப்படை அம்சமாகும்.

அடுத்து, குற்றங்கள் குறைந்து மனித சமுதாயத்தின் பாதுகாப்பும், சமாதானமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தனி மனிதனில் துவங்கி, குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில் நிம்மதி நிலவ வேண்டும் என்கிற தூர நோக்கத்தோடு ஷரீஆவின் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டது.

மேலோட்டமாகப் பார்க்கும் போது ஷரீஆவின் சட்டங்கள் கடினமாகவும், கடுமையாகவும் தோன்றினாலும் சில குற்றங்களின் தண்டனையில் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டிருக்கும்.

சில குற்றங்களின் தண்டனையில் குற்றம் செய்யும் வாய்ப்புகளிலிருந்து மனித சமூகத்தை விலக்கி விடும் வகையில் தண்டனை கடுமையாக்கப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் ஷரீஆ சட்டங்களால் மட்டும் தான் சமுதாயப் பாதுகாப்பும், அமைதியும், நிம்மதியும், சமாதானமும் மேலோங்கும் என்பது இன்றைய நவீன காலம் நமக்கு தெளிவாக்கி விட்டிருக்கின்றது.

இன்று உலகம் முழுவதிலும், கொலை, கொள்ளை, விபச்சாரம், மது போன்ற தீமைகளால் தான் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் இருப்பதையும், அதை சரி செய்ய இயலாமல் ஆட்சியாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நாம் அறிந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த 2011-ல் இந்தியா முழுவதும் 62.5 லட்சம் குற்றங்கள் பதிவாகின. இதில் 3-ல் ஒரு பங்கு உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளன. மெகா நகரங்களில் திட்டமிட்ட குற்றங்கள் நடைபெற்றதில் டெல்லி முதலிடம் வகிக்கிறது. கடுமையான குற்றங்கள் என்ற பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது.


அதேபோல் 2007 முதல் 2011 ம் ஆண்டு வரை 18 முதல் 30 வயதுடைய 75 ஆயிரத்து 257 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 முதல் 45 வயது வரை உடைய 38 ஆயிரத்து 845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேசிய குற்றப் பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனித வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்ல சில அம்சங்களான பொருளாதாரக் குற்றங்கள், கொலைக் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள், மோசடிக்குற்றங்கள், அரசுத் துறைச் சார்ந்த குற்றங்கள் போன்றவற்றில் இஸ்லாம் வகுத்த சட்டங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அற்புதமானது.


ஷரீஆவின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இஸ்லாத்தின் அணுகுமுறைகள்…..


அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுடைய கட்டளைகள் தான் “உயர் நிலைச் சட்டங்கள்” ( Supreem Law ) என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது.


எனவே, ஷரீஆவின் சட்ட வடிவம் என்பது அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் தான் என்பது குர்ஆனின் பல்வேறு வசனங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


அவற்றை அப்படியே ஏற்று கீழ்படிந்து நடப்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளன் மீதும் கடமையாகும்.


அது விஷயத்தில் மாற்றுக் கருத்து கொள்வதோ, மனதால் கூட மாற்றம் செய்ய நினைப்பதோ ஈமானிற்கு நேர் முரணானதாகும்.


பார்க்க: 4: 64, 4: 80, 59: 7, 33: 36, 24: 51.


அல்லாஹ் வடிவமைக்காத எந்தச் சட்டமும் பின்பற்றத் தகுத்ததல்ல.


பார்க்க: 5:44, 45, 47, 50


அல்லாஹ்வின் சட்டங்களை மீறி நடக்க யாருக்கும் உரிமையில்லை.


பார்க்க: 2: 229, 65: 1 – 4,


மனிதனின் நடத்தைகளை, நடைமுறைகளை நெறிப்படுத்தும் ஆற்றல் அல்லாஹ்வுக்கே இருக்கிறது.


பார்க்க: 7: 54, 5: 38 – 40, 12: 40, 21: 23, 13: 41, 5: 1, 95: 8.
ஷரீஆவின் சட்டத்திற்கு இஸ்லாம் வழங்கிய அழகு எதுவென்றால், சட்டத்திற்கும், நீதிக்கும் முன்பாக மக்கள் வந்து நிற்பதற்கு முன்னால், ஒவ்வொரு செயலின் ஆரம்பமும் முடிவும் எங்கு கொண்டு போய் ஒரு மனிதனை நிறுத்திவிடும் என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மூலம் சுட்டிக்காட்டிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த காரியங்களின் பல பரிமாணங்களை வகைப்படுத்துவார்கள். அவைகளின் தீங்குகளைக் கூறி அந்தச் செயல்களைச் செய்வதை விட்டும் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்காறுகளையும், ஒழுக்க விழுமியங்களையும் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கடைபிடிக்குமாறு போதித்தார்கள்.
அதன் பிறகே சட்டமியற்றினார்கள்; அல்லது அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எல்லைகளாக வகுத்தார்கள்.


அதன் விளைவாக குற்றங்கள் அடியோடு ஒழிந்து, ஒழுக்கமும் உயர்வும் நிறைந்த ஓர் சமூகம் உருவானது.

=================== 
உலகச்சட்டங்களின் இயலாமையும்…. ஷரீஆ சட்டத்தின் வீரியமும்….

இன்று மனித சமூகத்தை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கும் தீமைகளில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதில் அரசு இயந்திரமும், சட்டங்களும் எவ்வாறு இயங்குகிறது என்பதை கீழ்வரும் புள்ளி விபரங்களும் ஷரீஆ மனித சமூகத்தைப் பாதுகாப்பதில் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளையும் பொருத்திப் பார்ப்போம்.

1. இந்தியாவில் மிகஅதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கின்றார்கள்.

2. தமிழகத்தில்குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி.அவர்களில் 20 சதவீதம் பேர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு போதைக்கு அடிமையானவர்கள்.

3. தமிழகத்தில்அன்றாடம் மதுஅருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதைசேர்ந்தவர்கள்.

4. அதிகமான சாலை விபத்துக்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும் ஒராண்டில் நடக்கும் 60,000 சாலைவிபத்துகளுக்கு பலகாரணம் இருந்தாலும் 60 சதவீத விபத்துகள் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால்தான்.

5. மதுபான விற்பனையால்,ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில் கிட்டதட்ட 30 சதவீத அளவுக்கு சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.

6. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32சதவீதத்தையும் மதுபானத்துக்காகசெலவிடுகிறார்கள்.

7. இந்தியாவிலேயே அதிகமானோர் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். கடந்த ஆண்டு மட்டும் 16561 நபர்கள். அதாவது ஒவ்வொருமணி நேரத்திற்கும் 15 பேர்கள் இந்த தற்கொலை சாவுகளில் 50% பின்னணியில் இருப்பது மதுப்பழக்கமே.

1. மதுவின் தீமையும்... தண்டனையும்...

உஸ்மான் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“மது அருந்துவதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஏனெனில், அது அனைத்து வகையான பாவங்களுக்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறை நம்பிக்கையும், மது அருந்துவதும் ஒரு மனிதனிடத்தில் ஒரு போதும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்றை மற்றொன்று அகற்றிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: நஸாயீ )

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நிரந்தரமாக மது அருந்திய நிலையில் மரணிப்பவன் சிலை போன்று எழுப்பப்படுவான்” என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்:ஸில்ஸிலா அஸ் ஸஹீஹ்,ஹ.எண்:677. )

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்:


“மது அருந்தி போதையில் திளைத்தவனின் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது. அவன் அதே நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான். அதன் பிறகும் மது போதையில் திளைத்தால் 40 நாட்கள் தொழுகை ஏற்கப்படாது; அவன் மரணித்தால் நரகம் புகுவான்; அவன் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்.

இதன் பிறகும் அவன் அந்த இழிச் செயலை தொடர்வானேயானால், அவனுக்கு மறுமையில் “ரத்ஃகத்துல் ஃகிபாலை” குடிக்க வைப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது”.

அப்போது, நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! ”ரத்ஃகத்துல் ஃகிபால்” என்றால் என்ன? என்று வினவினார்கள்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் “அது நரக வாசிகளின் சீழ், சலம் ஆகும்” என்றார்கள்.
( நூல்:ஷரஹுஸ் ஸுன்னா, பாகம்:6, பக்கம்:118 )


அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் {ரலி} அறிவிக்கின்றார்கள்:


“மது அருந்துபவர்கள் நோயுற்றுவிட்டால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்:தஃக்லீக் அத் தஃலீக் லி இப்னி ஹஜர்,பாகம்:5,பக்கம்:126. )

அப்துல்லாஹ் இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மது சம்பந்தமாக பத்து நபர்களை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபித்தார்கள்: 1. மதுவைக் தயாரிப்பவர். 2. தயாரிக்க உதவுபவர். 3. அதைக் குடிப்பவர். 4. அதனை ஊற்றிக் கொடுப்பவர். 5. அதனைச் சுமந்து செல்பவர். 6. அதற்கு துணை போனவர். 7. அதனை விற்பவர். 8. அதனை வாங்குபவர். 9. அதனை அன்பளிப்புச் செய்பவர். 10. அதை விற்பனை செய்பவர்.”
( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹ.எண்:5091 )

மதுவைப் பற்றியுண்டான இந்த அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் நபிகளார் முன்வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அல்லாஹ்வும் தன் திருமறையின் மூலம் மதுவின் விபரீதங்களை விளக்கிக் கொண்டிருந்தான்.

ஆரம்பமாக, அல்லாஹ் 2:219-ம் வசனத்தை இறக்கியருளினான். மக்களில் பாவமென கருதியவர்கள் விட்டனர். பின்னர் இரண்டாம் கட்டமாக, அல்லாஹ் 4:43-ம் வசனத்தை இறக்கியருளினான். இஷாத் தொழுகைக்குப் பின்னர் சிலர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

ஆனால், முன்பை விட மக்கள் இப்போது மதுவை விட்டிருந்தனர். இறுதியாக, அல்லாஹ் 5:90,92,93. ஆகிய இறைவசனங்களை இறக்கியருளினான். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மது தடை செய்யப் பட்டதாக அறிவித்த போது அம்மக்கள் மதீனாவின் வீதிகளில் மதுப்பானைகளைக் கொட்டினார்கள். அதன் காரணமாக தெருக்களில் மது ஆறு ஓடியதாகக் கூட வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்.

அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நன்கு புளித்த மது எங்களிடம் இருந்து வந்தது; அபூதல்ஹா, அபூ அய்யூப் {ரலி} ஆகியோருக்கும், இன்னும் சிலருக்கும் அதிலிருந்து நான் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்;

அப்போது என்னருகே ஒருவர் வந்து, “மதுபானங்களை அருந்துவதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தடை செய்து விட்டார்கள்” என்று கூறினார்.
உடனே, அங்கிருந்தோர் அனைவரும் மதுபானங்கள் வைத்திருந்த குடுவைகளையும், மண்பாண்டங்களையும் அப்படியப்படியே கவிழ்த்துக் கொட்டி விடுமாறு கூறிவிட்டனர்.

இச்சட்டம் வந்ததும் அவர்களில் எவருமே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அம்மனிதர் தெரிவித்த செய்தியை அவமதிப்பும் செய்யவில்லை.
( நூல்:புகாரி, பாடம்: பாபு ஸப்புல் கம்ரி ஃபித்தரீக்கி )

இதன் பின்னர் மிக மிகச் சொற்பமானவர்களே மது குடித்ததற்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் காலத்தில் தண்டிக்கப் பட்டனர்.

அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மது அருந்திய குற்றத்திற்க்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும், செருப்பாலும் அடித்திடும்படி அண்ணல் நபி {ஸல்} அவர்கள் உத்தரவிட்டார்கள்”

அபூஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மது அருந்திய மனிதர் மாநபி {ஸல்} அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவர்கள் “இவரை அடியுங்கள்” என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர்; இன்னும் சிலர் செருப்பால் அடித்தனர்; இன்னும் சிலர் முறுக்கப்பட்ட தமது துணியால் அடித்தனர். தண்டனை முடிந்து அவர் திரும்பிய போது மக்களில் சிலர், “அல்லாஹ் உம்மை கேவலப்படுத்துவானாக! என்று சாபமிட்டனர். அப்போது அண்ணலார் {ஸல்} அவர்கள் “இவ்வாறு கூறி இவருக்கெதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்கள்” என்றார்கள்.
( நூல்: புகாரி, பாடம்: பாபு மாஜாஅ ஃபீ ளர்பி ஷாரிபில் கம்ரி, பாபு அள் ளர்பி பில் ஜரீதி வன் நிஆல் )
=====================  
2. திருட்டின் பாவமும்.... தண்டனையும்....


இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:


“விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரிகின்றபோது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் அதைச் செய்ய மாட்டான். திருடன் திருடும் போது இறை நம்பிக்கையாளனாக இருக்கும் நிலையில் திருட மாட்டான்.” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரி, பாடம்: பாபு அஸ் ஸாரிக்கு ஹீன யஸ்ரிக்கு )

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்:


“ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சூரியக் கிரகணத் தொழுகை தொழுது முடித்த பின் மக்களை நோக்கி “இப்போது நரகம் எனக்கு கண் முன் காட்டப்பட்டது. அதன் ஜுவாலை என்னைத் தீண்டிவிடக்கூடாது என்பதற்காக சற்று பின் நகர்ந்து கொண்டேன். அந்த நரகத்தில் ஸாஹிபுல் மிஹ்ஜன் தடியைக் காட்டித் திருடுபவன் தனது குடலை இழுத்துச் செல்வதைப் பார்த்தேன்.”
( நூல்:முஸ்லிம் )


உப்பாதா இப்னு அஸ் ஸாமித் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:


“அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் எங்கள் ஒவ்வொருவரிடமும் பைஅத் {உறுதி மொழி} பெறும் போது ”திருடமாட்டோம்” என்று எங்களைக் கூறச் சொல்லி உறுதிமொழி வாங்கினார்கள்”


( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, பாகம்:9, பக்கம்:403 )


அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:


“அல்லாஹ்வின் சாபம் திருடனின் மீது உண்டாகட்டும்! அவன் விலை மதிப்புமிக்க தலைக்கவசத்தையும் திருடுகின்றான்; அதனால் அவன் கை வெட்டப்படுகின்றது. அவன் விலை மலிவான கயிற்றையும் திருடுகின்றான்; அதனாலும் அவன் கை வெட்டப்படுகின்றது”. என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரி, பாடம்: லஅனஸ் ஸாரிக்கி இதா லம் யுஸம்மி )


இஸ்லாமிய பண்பாடும், இன்றைய உலகோடு அது கொண்டிருக்கின்ற தொடர்பும்.. { Collquium On Islamic Culture In Its Relation to Contempory World } என்கிற தலைப்பில் 1953 –ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் எட்டு நாட்கள் ஒரு மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது.


அதில் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் குறித்து கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட போது, அதற்கு பதில் கூறுவதற்காக ஏமன் நாட்டின் மார்க்க அறிஞரும், அந்நாட்டு நீதித்துறை அமைச்சருமான அல் காழி, அஷ் ஷெய்க், முஹம்மது அல் ஹஜ்ரீ அவர்கள் அந்த சபையின் முன் எழுந்து நின்றார்.


தன்னுடைய உரையில் உலக நாடுகளில் பின் பற்றப்படுகிற குற்றவியல் சட்ட நடைமுறைகளை பட்டியலிட்டு, அது ஒவ்வொரு நாடுகளிலும் பல் வேறு விதமாக பின் பற்றப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.


பின்னர், திருட்டுக் குற்றத்திற்கு திருமறை வகுத்துள்ள தண்டனை எவ்வாறு இஸ்லாமிய நாடுகளில் வேறுபாடுகளின்றி நடைமுறை படுத்தப் படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.


உலக நாடுகளிலிருந்து இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச்சட்டத்தை மேற்கொள்கிற இஸ்லாமிய நாடுகள் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதையும் புள்ளி விவரத்தோடு சுட்டிக்காட்டினார்.


அல்லாஹ் கூறுகின்றான்: “திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கரங்களைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைகளுக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.” (அல்குர்ஆன்:5:38)

இந்த இறைவசனத்தையும், ஏராளமான நபிமொழிகளையும் எண்ணிலடங்கா வரலாற்றுச் சான்றுகளையும் மேற்கோள் காட்டி விரிவாகப் பேசினார்.

இந்த கடுமையான தண்டனை எந்தச் சூழ்நிலையில் வழங்கப்பட வேண்டும் என்பது பற்றி அவர் பேசும் போது…

”1. வறுமை மற்றும் பசியின் காரணமாக ஒருவன் திருடினால் அதற்காக கை வெட்டப்படாது. அதற்கு சமூகமும் சமுதாயமும் தான் காரணம்.
2. பொதுச் சொத்தில் இருந்து திருடினால் அதற்கும் கை வெட்டப்படாது. அதற்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம்.
3. சுற்றத்தார்களிடம் திருடினாலும் கை வெட்டப்படாது. சுற்றத்தார்கள் அவனுடைய உரிமையைப் பேணாததே அதற்கு காரணம்.
4. பகலில் திருடினாலும் கை வெட்டப்படாது.
5. குறைவான, மதிப்பில்லாத பணத்தையோ பொருளையோ திருடினாலும் கை வெட்டப்படாது.
6. எவரின் கட்டாயத்தின் பேரிலோ, வற்புறுத்தலின் பேரிலோ, நிர்பந்தத்தின் தூண்டுதலிலோ திருடினாலும் கை வெட்டப்படாது.

ஆனால், 1. பொருளோ, பணமோ குறிப்பிட்ட கணிசமான மதிப்புடையதாக இருக்க வேண்டும்.

2 .பலவந்தமாக திருடினால், சம்பந்தப்பட்டவர்களை தாக்கி திருடினால், பூட்டியிருக்கும் வீட்டையோ, பூட்டையோ உடைத்து திருடினால் கை வெட்டப்பட வேண்டிய குற்றமாகும்.

எனக்குத் தெரிந்து ஏமனில் 1953 வரை இரண்டே இரண்டு வழக்குகளில் மட்டுமே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

முஹம்மது அல் ஹஜ்ரீ அவர்கள் இஸ்லாத்தின் மீதான விமர்சனத்திற்கு ஆணித்தரமாக உலக நாடுகளின் தலைவர்கள் அறிஞர்கள் ஆகியோருக்கு மத்தியில் விவாதித்து மிகச் சரியான பதிலைத் தந்தார்கள்.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் தான் மனித சமூகத்தை குற்றச் செயல்களில் இருந்து காப்பாற்றும். குற்றச் செயல்களின் விகிதாச்சாரத்தை மட்டுப்படுத்தும் என்று புள்ளி விவரங்களோடு பதில் கூறினார்.

ஆனால், உலகச் சட்டங்கள் திருட்டுக் குற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக தொடர்ந்து திருட்டுக்குற்றத்தில் ஈடுபடவே தூண்டுகின்றது. ஆதலால் தான் 50 முறை திருடியவன் 51 வது முறை கைது என்பது போன்ற செய்திகளைப் பார்க்க முடிகின்றது.

இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 379 இன்படி, திருட்டு குற்றத்துக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். இச்சிறை தண்டனையை சூழ்நிலையைப் பொறுத்து இத்தண்டனைச் சட்டத்தின் பிரிவு 60 இன்படி கடுங்காவலாகவும் விதிக்க முடியும்.

வெறுங்காவலுக்கும் கடுங்காவலுக்கும் உண்டான வித்தியாசம் இது தான் வெறுங்காவல் என்றால் தண்டனைக் காலம் முழுவதையும் வேளா வேளைக்கு சாப்பிட்டும், தூங்கியுமே பொழுதை கழிக்க வேண்டும். கடுங்காவல் என்றால், சிறையில் வேலை செய்ய வேண்டும். இதற்கு சட்ட விதிகளின்படியான திறன் கணக்கிடப்பட்டு குறைந்த பட்ச கூலியும் கொடுக்கப்படும்.
=================== 
3. விபச்சாரம் எனும் அருவருப்பும்... தண்டனையும்...

அபூ ஹுரைரா {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“அந்நியப் பெண்களைப் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரமாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: புகாரி, பாடம்: ஸினல் ஜவாரிஹி தூனல் ஃப்ர்ஜ் )
--------------
மஃகல் பின் யஸார் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:
“இரும்பினாலான ஊசியால் உங்களின் ஒருவருடைய தலையில் குத்துவது, அவருக்கு அனுமதி இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவருக்குச் சிறந்ததாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: ஸஹீஹ் அல் ஜாமிஉ லில் அல்பானீ, ஹதீஸ் எண்:5045. )
------------------- 
இப்னு உமர் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ஓர் ஆண், அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தால் அங்கு நிச்சயமாக மூன்றாமவனாக ஷைத்தான் இருக்கின்றான்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அஹ்மத், திர்மிதீ )
-------------------- 
அம்ருப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“எனது இன்றைய நாளிற்குப் பிறகு எந்தவொரு ஆணும், அவனுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்தே தவிர கணவன் வீட்டில் இல்லாத பெண்களிடம் வர வேண்டாம்.” என்று கூறினார்கள்.
( நூல்: அஹ்மத், ஹதீஸ் எண்:6559 )
------------------- 
ஸஹ்ல் பின் ஸஅத் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“எவர் தம் இரு தாடைகளுக்கு மத்தியில் உள்ள நாவிற்கும், தம் இரு கால்களுக்கு மத்தியில் உள்ள மர்ம உறுப்பிற்கும் என்னிடம் (தவறான வழியில் அதைப் பயன்படுத்த மாட்டேன் என்று) உத்தரவாதம் அளிக்கின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.”
( நூல்: புகாரி, பாபு ஹிஃப்ளுல் லிஸான் )

விபச்சாரம் அது எத்தகைய பார தூரமான காரியம் என்பதிலிருந்து மக்களை தடுக்கும் முன், அதன் மிக அருகே அழைத்துச் செல்கிற அத்துணை வழிகளையும், வாசல்களையும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்களின் முற்றத்தில் போட்டுடைக்கின்றார்கள்.

அதே காலகட்டத்தில் அல்லாஹ் முஃமின்கள் பார்வை விஷயத்தில் பேணவேண்டிய விழுமியங்களையும், ஹிஜாப் என்னும் ஒழுக்கத்தையும், கற்பொழுக்கம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்ற நியதிகளையும், படிப் படியாக இறக்கியருளினான்.

அடுத்த படியாக, விபச்சாரம் என்பது ஒரு நல்ல முஃமினின் பண்பாடாக இருக்கமுடியாது என்று அறிவித்தான். இறுதியாக, விபச்சாரம் அது மாபாதகச் செயல் அதன் அருகே கூட நெருங்கிடாதீர்கள் என 17 –ஆம் அத்தியாயம் 32 –ஆம் வசனத்தை இறக்கியருளினான். அதன் பின்னர் விபச்சாரம் செய்வது முற்றிலும் தடைசெய்யப்படுவதாக மாநபி {ஸல்} அவர்கள் அறிவித்தார்கள்.

அதன் பின்னரே விபச்சாரம் புரிபவனுக்கான தண்டனை என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு எல்லையாக வகுத்தார்கள்.

திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால்...

திருமணமாகாதவர்கள் விபச்சாரம் செய்தால்...
ஆண்களோ, பெண்களோ விபச்சாரத் தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கான தண்டனையை இரு வகைகளாகப் பிரித்துள்ளனர்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு மரண தண்டனையும், திருமணம் ஆகாத வர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடி என்ற தண்டனையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
( நூல்: புகாரி - 2649, 2696, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260, 2315, 5270, 5272, 6812, 6815, 6820, 6824, 6826, 6829, முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ் நூல்களில் இதற்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன.
விபச்சாரத்திற்கு லைசென்ஸ் 
விபச்சாரத்தைக் குற்றம் என்று சொல்லும் இந்திய அரசு இந்தியாவில் சில இடங்களில் விபச்சார தொழில் செய்ய லைசென்ஸ் அனுமதி வழங்கி இருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது.

அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது. இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது.

1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது. பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் 
நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?
விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை. மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது.
==================== 
4. கொலையும்… தண்டனையும்…

ஒரு மனிதனை ஒருவன் கொலை செய்தால், இவ்வுலக அனைத்து மனிதர்களையும் கொலை செய்ததற்கு சமம் என்று சொல்கின்றது.

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" ( அல்குர்ஆன் 5:32 )

”(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்”. ( அல்குர்ஆன் 17:33 )

”தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்;

இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்”. ( அல்குர்ஆன்: 4: 92 )

------------------------- 
அனஸ் {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி வெளியே சென்றாள். அப்போது அச் சிறுமியின் மீது யூதன் ஒருவன் கல் எறிந்தான்.
உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் அச் சிறுமி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டாள்.

அச் சிறுமியிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”இன்னார் உன்னைத் தாக்கினாரா? என்று இரண்டு முறை (யாரோ இரு நபர்களின் அடையாளங்களையோ, அல்லது பெயர்களையோ கூறி) கேட்டார்கள். அவள் இல்லை என்று தலையால் சைகை செய்தாள்.

மூன்றாம் முறையாக அவளிடம் “இன்னாரா உன்னைத் தாக்கினார்? என்று கேட்ட போது, அவள் கீழ் நோக்கி (ஆம் என்று கூறும் விதமாக) தாழ்த்தி தலையால் சைகை செய்தாள்.
ஆகவே, அந்த யூதனை அழைத்து வருமாறு நபி {ஸல்} ஆணை பிறப்பித்தார்கள். அவனை அழைத்து வந்து விசாரித்த போது அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஆகவே, இரு கற்களுக்கிடையில் வைத்து அவனது தலையினை நசுக்கிக் கொல்லுமாறு நபி {ஸல்} அவர்கள் உத்தரவிட்டார்கள்.
( நூல்: புகாரி, பாடம்,பாபு இதா கதல பிஹஜரின் அவ் பிஅஸா )


தேசிய குற்றவியல் விசாரணை அமைப்பின் ஆண்டு விவர வெளியீட்டில், இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,2014 ஆம் ஆண்டினைப் பொறுத்த வரையில் நாட்டில் 33,981 கொலைகளும், 3,332 கொலைக்கு உடந்தையாக இருந்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மிகக் குறைந்த அளவாக 1970 ஆம் ஆண்டில் 16180 கொலைக் குற்றங்களும், 2,357 கொலைக்கு உடந்தை குற்றங்களும் பதிவாகியுள்ளன. 60 களில் அதிகமாகிய இந்த குற்றங்கள் 1992ல் அதிகரித்து காணப்பட்டுள்ளன.
==================== 
5. கற்பழிப்புக்குற்றங்களும்… தண்டனையும்….


கடந்த 16.12.2012, அன்று தில்லியின் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் 6 – பேர் கொண்ட ஒரு கும்பலால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, தில்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 29.12.2012, அன்று உயிரிழந்தார்.


அதன் பிறகு எழுந்த வாதப் பிரதிவாதங்களையும், தேச மக்கள் கொதித்து எழுந்ததையும், அரசியல்வாதிகளின் நாடகங்களையும், சட்ட மேதைகளின் தடுமாற்றங்களையும் நாம் ஓரளவு ஊடகத்தின் வாயிலாக அறிந்து வைத்திருக்கின்றோம்.


அப்போது 2013 –ஆம் ஆண்டு பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. இதன் பின்னரும் கற்பழிப்புகள் தொடரத்தான் செய்கின்றன.


மத்திய பிரதேச மாநிலம், கற்பழிப்புகளின் தலைநகரமாக விளங்குகிறது. 2007 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டுவரை மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 15 ஆயிரத்து 275 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் பதிவான பாலியல் வன்முறை வழக்குகளில் 14.1 சதவிகிதம் ஆகும். அதேபோல் மேற்கு வங்கத்தில் 11 ஆயிரத்து 427 வழக்குகள் பதிவாகியுள்ளன.


உத்திரபிரதேசத்தில் 8,834 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 7,703 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேசமயம் 2011 ம் ஆண்டு மட்டும் புது டெல்லியில் 568 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2010 ஆண்டை விட அதிகமாகும். மேலும்ஆந்திராவில் பாலியல் வன்முறைகள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு. 375, 376 –ன் படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படலாம்.


பாலியல் பலாத்காரத்தால் ஒரு பெண் இறந்து விட்டால், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு “இந்திய தண்டனைச் சட்டம் 302 – ன் படி கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதிற்காக மரண தண்டனையோ, அல்லது ஆயுள் தண்டனையோ, அல்லது அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ வழங்கப்படலாம்.


( நூல்: முப்பெரும் குற்றவியல் சட்டங்கள், இந்திய தண்டனைச் சட்டம், தீங்கியல் சட்டம். இந்த நூற்கள் வழக்கறிஞர்களிடம் இருக்கும் )


பாலியல் பலாத்கார குற்றத்திற்கு இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் தண்டனை என்ன? ஷரீஆவின் சட்ட வடிவம் என்ன?


ஹிஜ்ரி 1401 –ஆம் ஆண்டு துல்கஅதா மாதம் பிறை 11 அன்று, சவூதியாவின் மாபெரும் மார்க்கச் சட்ட வல்லுனர்களும், முதுபெரும் உலமாக்களும் சவூதியாவின் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் என ஒரு பெரும் திரளான இஸ்லாமிய கலாச்சார பாதுகாவலர்கள் ஒன்று கூடி “பாலியல் பலாத்காரத்திற்கான இஸ்லாமிய தண்டனை என்ன? அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இது குறித்து என்ன வழிகாட்டி இருக்கின்றார்கள்? என்று ஆலோசனை நடத்தினார்கள்.


இறுதியாக, அல் மாயிதா அத்தியாயத்தின் 33-ஆம் வசனத்தின் படி “பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனையாக” அதிக பட்ச தண்டணையாக மரணதண்டனையை தீர்மானித்து, அதை அன்றைய தேதியிலேயே அமுல்படுத்தப்பட வேண்டும் என ஃபத்வா – மார்க்கத்தீர்ப்பு வழங்கினார்கள்.


அந்த தீர்மானத்தையும், ஃபத்வாவையும் அத்துணை இஸ்லாமிய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை சவூதி மற்றும் இஸ்லாமிய நாடுகளில் அந்தச் சட்டம் தான் நடைமுறைபடுத்தப்படுகின்றது.


إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَنْ يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ مِنْ خِلَافٍ أَوْ يُنْفَوْا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ ()


அல்லாஹ் கூறுகின்றான்: “எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும், பூமியில் குழப்பம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான்:


அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்.


இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவா (ன தண்டனையா) கும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கின்றது.” (அல்குர்ஆன்:5:33)


ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்பவன் அல்லாஹ்வுடன் போர்பிரகடனம் செய்தவனாகவும், தான் வாழும் நாட்டில் அல்லது பகுதியில் பெரும் குழப்பம் விளைய காரணமான வனாகவும் ஆகிவிடுகின்றான்.


மேலும், அல்லாஹ் இந்த வசனத்தில் கூறிடும் தண்டனை “ஒரு மனிதனின் உயிர், மானம், பொருள் ஆகியவைகளில் மிகப் பெரிய சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியவர்கள் விஷயத்திலும் வழங்கலாம். என அந்த ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளனர்.


(நூல்: அல் – மஜ்லதுல் புஹூஸுல் இஸ்லாமிய்யா, பாகம்:16, பக்கம்:75.)


ஷரீஆ சட்டம் நிரபராதியைக் காப்பாற்றும்....
ரிஃபாஆ இப்னு ஜைதுல் அவ்ஸீ (ரலி) எனும் நபித்தோழர் அன்ஸாரித் தோழர்களோடு ஓர் படைப்பிரிவில் போருக்குச் சென்றார்.


வழியில் ஓரிடத்தில் அவருடைய கேடயம் ஒன்று திருடப்பட்டது. அதை ளஃப்ரீ கோத்திரத்தைச் சார்ந்த துஃமத் இப்னு உபைரிக் என்ற அன்ஸாரித் தோழர்களில் ஒருவர் தான் திருடி இருக்க வேண்டுமென ரிஃபாஆ (ரலி) அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.


படைப்பிரிவு மதீனா வந்ததும், முதல் வேளையாக நபிகளாரைச் சந்தித்த ரிஃபாஆ (ரலி) அவர்கள் தங்களது கேடயம் திருடு போனது குறித்தும், துஃமத் இப்னு உபைரிக் மீதான தமது வலுவான சந்தேகம் குறித்தும் விவரித்து விட்டு, தமக்கு இந்த விஷயத்தில் விசாரித்து நீதி வழங்குமாறு முறையிட்டார்கள்.


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ரிஃபாஆ (ரலி) அவர்கள் தொடுத்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார்கள்.


இதைக் கேள்விப்பட்ட துஃமத் இப்னு உபைரிக், ஜைத் இப்னு ஸமீன் என்ற தமது பக்கத்து வீட்டு யூதரின் தோட்டத்தில் தாம் திருடிய கேடயத்தைத் தூக்கியெறிந்தார்.


பின்னர், தமது கோத்திரத்தார்களிடம் வந்து நடந்த விஷயங்களைக் கூறிவிட்டு, ”அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அந்த பொருள் எங்கே இருக்கிறது என்பதை அறிய வீடு வீடாக சோதனை மேற்கொள்வார்கள்.


அப்படி தேடும் முயற்சியில் ஈடுபட்டால் நிச்சயம் அந்தக் கேடயம் ஜைத் இப்னு ஸமீன் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்படும்.


நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், நான் குற்றமற்றவன் என்றும், ரிஃபாஆ (ரலி) என் மீது அவதூறு சுமத்துகிறார் என்றும் நபி {ஸல்} அவர்களிடம் கூறிவிட்டு, எங்களுக்கென்னவோ இந்த திருட்டை எங்கள் கோத்திரத்தைச் சார்ந்த துஃமத் இப்னு உபைரிக்கின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜைத் இப்னு ஸமீன் தான் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


ஆகவே, அவர் வீட்டைச் சோதனை செய்தால் உண்மை தெரிந்து விடும் என்று கூறிவிடுங்கள்” என்று தமது திட்டத்தைக் கூறினார்.


அங்கிருந்து விடைபெற்ற அவரது கோத்திரத்தார்கள், நேராக மாநபி {ஸல்} அவர்களின் சபைக்கு வருகை தந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் கோத்திரத்தை சார்ந்த துஃமத் இப்னு உபைரிக் ஒரு நல்ல முஸ்லிம். மேலும், அவர் மீது சுமத்தப் பட்டிருக்கிற குற்றச்சாட்டை விட்டும் தூய்மையானவர்.


அந்தக் கேடயத்தை திருடியது அவர் இல்லை. அவரின் பக்கத்து வீட்டுக்காரரான ஜைத் இப்னு ஸமீன் தான் திருடினார். வேண்டுமானால் நீங்கள் விசாரித்துப் பாருங்கள்.


மேலும், எங்களது கோத்திரத்தார்கள் எவருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள். ஆனால், எங்கள் கோத்திரத்தாரின் மீது இப்போது களங்கம் ஏற்பட்டுள்ளது.


நீங்கள் தான் மக்களை அழைத்து, ஒன்று கூட்டி துஃமத் இப்னு உபைரிக் குற்றமற்றவர் என்று அறிவித்து எங்கள் கோத்திரத்தார்கள் மீது வீசப்பட்டிருக்கிற களங்கத்தை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.


இந்தச் செய்தியைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மக்களை ஒன்று கூட்டி அமர வைத்து விட்டு, யூதரின் வீட்டில் இவர்கள் சொல்வது போன்று கேடயம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய சில தோழர்களை அனுப்பினார்கள்.


யூதரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட கேடயம் கண்டெடுக்கப்பட்டு நபி {ஸல்} அவர்களின் முன்னால் கொண்டுவரப்பட்டது.


உடனே, திரண்டிருந்த மக்களின் முன்பாக நின்று நபி {ஸல்} அவர்கள் “துஃமத் இப்னு உபைரிக் நல்லவர், அவர் குற்றமற்றவர்” என்று அறிவித்தார்கள்.


அந்த சபையில் ரிஃபாஆ (ரலி) அவர்களின் மாமா {தாயின் சகோதரர்} கதாதா இப்னு நுஃமான் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.


நேராக ரிஃபாஆ (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, ரிஃபாஆ (ரலி) அவர்களைச் சந்தித்து மாநபி {ஸல்} அவர்களின் சபையில் நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் கூறினார்கள்.


فقال: الله المستعان.
அதைக் கேட்ட ரிஃபாஆ (ரலி) அவர்கள் “நான் உண்மையையே கூறினேன்! இது விஷயத்தில் அல்லாஹ் எனக்கு பேருதவி செய்வான்” எனக் கூறினார்கள்.


அப்போது, அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்தின் 105 முதல் 109 வரையிலான வசனங்களை தொடர்ந்து இறக்கியருளினான்.


إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا


(நபியே! அல்லாஹ் உமக்கு அறிவித்துத் தந்த நேரிய வழியின்படி மக்களிடையே நீர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே உம்மீது இந்த திருக்குர்ஆனை சத்தியத்துடன் நாம் இறக்கிவைத்தோம். நீர் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு வாதாடுபவராய் இருக்க வேண்டாம்.


وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا (106) وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنْفُسَهُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا (107) يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا


மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக! திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.


தமக்குத்தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும், பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டோனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.


அவர்கள் தம் இழிசெயல்களை மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு போதும் அல்லாஹ்விடம் இருந்து மறைக்க முடியாது. அவனோ, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக சதியாலோசனை செய்து கொண்டிருக்கும் போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கிற அனைத்துச் செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான்.”


இங்கே, அல்லாஹ் ஓர் நிரபராதி தண்டிக்கப்பட்டதை தவறென்கிறான். நம்பிக்கைத் துரோகம் செய்பவர்கள் அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக வாதிடுவதை அல்லாஹ் தடுக்கின்றான்.


மேலும், பிறரின் மீது அநீதி இழைப்பது மாபெரும் குற்றமெனவும், சட்டத்தின் படி நீதி நிலை நாட்டப்பட வேண்டுமெனவும் விவரிக்கின்றான்.


அல்லாஹ் இதை தம் நபியிடம் இரகசியமாகச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஆனால், மறுமை நாள் வரை அனுதினமும் லட்சோப லட்சம் முறை வாசிக்கப்படுகிற குர்ஆனில் இதைப் பதிவு செய்திருப்பதால் சட்டமும், நீதியும் எந்தளவு அல்லாஹ்விடத்திலே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்த்துகிறது.


இந்த இறைவசனங்களை இறக்கியருளி நிறைவு செய்கிற போது அல்லாஹ் தம் நபியை நோக்கி…


هَا أَنْتُمْ هَؤُلَاءِ جَادَلْتُمْ عَنْهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا فَمَنْ يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَمْ مَنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا


”சரி! இக்குற்றவாளிகளுக்காக உலக வாழ்க்கையில் நீங்கள் வாதாடிவிட்டீர்கள்! ஆனால், மறுமையில் அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்?” என்று சற்று கோபமாகவே கேட்கிறான்.
( நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூர் )

ஆகவே, சட்டமும், நீதியும் நிலை நாட்டப்படுவது முக்கியத்துவம் என்பதால் தான் ஒரு யூதருக்கு அநீதி இழைக்கப்பட்ட போதும் அல்லாஹ் சட்டம் மற்றும் நீதியின் மீதான நிலைப்பாட்டை தனது தூதருக்கு இறைவசனங்களை இறக்கியருளி நினைவூட்டுகின்றான்.


ஆகவே, தூய்மையான நிம்மதியான சமூகம் அமைத்திட இஸ்லாமிய வழிகாட்டலையும், இஸ்லாம் வழங்கும் ஷரீஆவின் சட்டங்களையும் பின்பற்றி ஒழுகிட உலக சமூகத்தை அழைப்போம்.
இஸ்லாமிய ஷரீஆவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வாழ்வை அமைத்து இறைவனின் உவப்பைப் பெறுவோம்.

ஷரீஆவின் சட்டங்கள் மட்டும் தான் உலகில் சமாதானத்தையும், பாதுகாப்பையும், நீதியையும், நிம்மதியையும் வழங்கிடும் ஆற்றல் கொண்டது என்பதை உலக சட்டதினம் கொண்டாடும் உலக மனித சமுதாயத்திற்கும், உலக ஆட்சியாளர்களுக்கும் தெரியப்படுத்துவோம்!

வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு வாழும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!

================ 
நன்றி; https://vellimedaiplus.blogspot.com/2015/11/blog-post_25.html