இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 மார்ச், 2014

பூமியென்ற வாழ்விடம்!


இதோ இன்றைய விஞ்ஞானிகள் பூமியைப்பற்றி கண்டறிந்தவைகளில் சில
= பூமியின் வயது 455 கோடி வருடங்கள்.
= பூமியின் சுற்றளவு 25000 மைல்கள். உருண்டை வடிவம் கொண்டது.
=  பூமியின் குறுக்களவு 8000 மைல்கள்
= எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி உயரம்.
= பெண்ட்லி பள்ளத்தாக்கு 8300 அடி ஆழம்.
= இப்போது நாம் காணும் மண்ணும் கல்லும் கலந்த பகுதி தான் பூமியின் பொறுக்கு. சுமார் 25 மைல் வரை தான் இந்தப் பொறுக்கு.
= அதற்குக் கீழே 1800 மைல் வரை பாறை.
= அதற்கும் கீழே 2160 மைல் வரை அக்கினிக் குழம்பு. அதாவது பாறையும் இரும்பும் உருகி உலோகக் குழம்பாகி பயங்கரச் சூட்டில் கொதித்துக் கொண்டிருக்கும்.
= இந்த அக்கினிக் குழம்புக்கும் கீழே 780 மைலுக்கு கனத்த உலோகம்.
= இதையெல்லாம் தோண்டிப் பார்க்க நம்மிடம் ராட்சஸ இயந்திரங்கள் இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை மட்டுமே தோண்டிப் பார்த்திருக்கிறார்கள்.
= பூமியின் ழுழுப்பரப்பின் 70.8 விழுக்காடு கடல்கள்.மீதமுள்ள பகுதியே நாம் வாழும் பகுதி.

இவ்வளவையும் இன்னும் நாம் அறியாத பலவற்றையும் சுமந்து கொண்டிருக்கும் பூமிப்பந்தின் மீது நம்மை அமர்த்தியவன் இந்த பூமி நம்மோடு இன்று பகிர்ந்து கொள்ளும் செய்திகளையும் செவிமடுக்க அழைக்கிறான்...
36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:34.மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

= பூமியைப் படைத்தவன் அதன் நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்....
18:7. (மனிதர்களில்)அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
= அதே பூமி ஒருநாள் உருமாற்றப்படும் என்றும் எச்சரிக்கிறான்...
18:8. இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூணில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.
ஆக, நம்மையும் இந்த பூமியையும் படைத்து பரிபாலித்துவரும் கருணையாளனாம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள் என்பது நாம் பெறவேண்டிய பாடமாகும். ஆனால் இறைவன் நமக்கு அயராது வழங்கும் அருட்கொடைகளை அனுபவித்துவிட்டு இறைவன் அல்லாதவற்றை வணங்குவதும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று பாவிப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும். அவனை இழிவுபடுத்துவதும் செய்நன்றி கொல்லும் செயலுமாகும். இச்செயலையே திருக்குர்ஆன் இணைவைத்தல் என்றும் இது இறைவன் மன்னிக்காத பெரும் பாவம் என்றும் குறிப்பிடுகிறது.
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்கு உரிய இறைவன் என்று பொருள்)
= இதே பூமி அதன்மீது நடைபெறும் அனைத்து செய்திகளையும் பதிவு செய்கிறது என்றும் அவற்றை இறுதித் தீர்ப்பு நாளன்று வெளிப்படுத்தும் என்றும் இறைவன் எச்சரிக்கிறான்:
99:1. பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
99:2. இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3. ''அதற்கு என்ன நேர்ந்தது?'' என்று மனிதன் கேட்கும் போது-
99:4. அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5. (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

99:8. அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். 

புதன், 19 மார்ச், 2014

எண்ணித் துணிவது எவ்வாறு?- இஸ்திகாரா

எண்ணித்துணிக கருமம்- துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு ..... என்ற வள்ளுவர்  சொல்லை அறிவோம்.
 நாம் ஒரு குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை  இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையா வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு  செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாற வாய்ப்புகள் உண்டு. அவை நமது  அழிவுக்கும் இழப்புக்கும் காரணமாவதும் உண்டு. நமக்கு எவ்வளவுதான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தாலும், நம்மைப் படைத்த இறைவனைச் சார்ந்தே இருக்கிறோம் என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் செய்ய முற்படும் ஏதேனும் ஒரு காரியத்தை எவ்வழியில் செய்வது என்று முடிவெடுப்பதில் நமக்கு தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை எந்த வழியில் எப்படிச்   செய்தால் நம் குறிக்கோளை அடைய முடியும்? நமக்கு முன் தேர்வுகளும் வாய்ப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்குமானால் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே.!  குறிப்பாக திருமணம், தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் போன்ற அன்றாட விடயங்களில் நாம் எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அன்றைய அராபிய வழக்கம்
இஸ்லாம் வருவதற்கு முன்  இவ்வாறா நிலைமைகளில் அரேபியர்கள் இக்குழப்பத்தில் இருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள்.  அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் செய்என்றும் மற்றதில் செய்யாதேஎன்றும் மற்றொன்றில்  “ஒன்றும் இருக்காது”! இவற்றில் செய்என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். செய்யாதேஎன்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள். ஒன்றும் இல்லாதசீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து  சீட்டுகளை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
நபிகளார் கற்றுத்த்தந்த இஸ்திகாரா தொழுகை
இவ்வாறான நிலைமைகளில் இருந்து இறைவிசுவாசிகளை இறைவன் இஸ்லாத்தின் மூலம் பாதுகாத்தான். குறிபார்ப்பது ஜோதிடம் போன்ற மோசடிகளில் இருந்தும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் அவர்களை தடுத்து செலவில்லாத எளிய முறையை தன் தூதர் மூலம் கற்றுக்கொடுத்தான். .
நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும் (அல்குர்-ஆன் 5:3)
நபித்தோழர் ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு அத்தியாயத்தைக் கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகையைக் கற்றுதருபவராக இருந்தார்கள்
இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை:
கடமையான தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை (சுற்றுக்களை) இஸ்திகாரா தொழுகை என்ற எண்ணத்தோடு  தொழ வேண்டும். அதன் பிறகு கீழ்கண்ட பிரார்த்தனையை பொருள் விளங்கி ஓதவேண்டும்
அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக பி(B)இல்மிக, வ அஸ்தக்திருக பி(B)குத்ரதிக வ அஸ்அலுக மின் ப(F)ள்கல் அளீம். ப(F)இன்னக தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B) அல்லாஹும்ம இன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(F) தீனீ வ மஆஷீ வ ஆகிப(B)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)க்துர்ஹு லீ வயஸ்ஸிர்ஹு லீ, ஸும்ம பா(B)ரிக் லீ பீ(F)ஹி வஇன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(F) தீனீ, வமஆஷீ வஆகிப(B)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)ஸ்ரிப்(F)ஹு அன்னீ வஸ்ரிப்(F)னீ அன்ஹு வக்துர் யல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ பி(B)ஹி.

இதன் பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.

இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத்(அருள்வளம்) செய்!

இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடுவாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக!

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

இவ்வாறு இறைவனிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தித்து விட்டு இறைவிசுவாசியான ஒரு சகோதரனிடம் கலந்தாலோசித்து காரியங்களில் ஈடுபட்டால் அது ஒரு விசுவாசிக்கு திருப்தி உள்ளதாகவே அமையும். காரியத்தின் முடிவு தன் விருப்பத்துக்கு மாறாக அமைந்தாலும் அதுவும் நன்மைக்கே என்று அமைதியுறுவான் விசுவாசி!

திருக்குர்ஆன் மலர்கள்: இறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல!

திருக்குர்ஆன் மலர்கள்: இறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல!: இன்று கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், மதம், நிறம், மொழி, இனம், நாடு போன்ற பல காரணிகள் நம்மைப் பிரித்தாலும் மனிதர்கள் நாம் யாவரும்...

செவ்வாய், 18 மார்ச், 2014

இறைவனின் எச்சரிக்கைகள் வெறும் பூச்சாண்டிகளல்ல!

இன்று கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், மதம், நிறம், மொழி, இனம், நாடு போன்ற பல காரணிகள் நம்மைப் பிரித்தாலும் மனிதர்கள் நாம் யாவரும் ஒருவகையில் இணைந்து இரண்டறக் கலந்துதான் வாழ்கிறோம். இந்ந்நிலை இவ்வாறே தொடருமா அல்லது முடியக் கூடியதா?

இதற்கோர் முடிவுண்டு என்கிறான் நம்மைப் படைத்தவன். ஆம், இவ்வுலகு ஒருநாள் அழியும். அதைத் தொடர்ந்து மீண்டும் நாம் அனைவரும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவோம் என்கிறான் அவன். இதோ தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
30:14. மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
30:15. ஆகவே, எவர்கள் விசுவாசம் கொண்டு நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவனப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
30:16. இன்னும், எவர்கள் சத்தியத்தை மறுத்து (அதாவது காஃபிராகி)  நம்முடைய வசனங்களையும் , மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ  அ(த்தகைய)வர்கள் வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
இன்று நாம் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலும், நமது இறைநம்பிக்கையின் அடிப்படையிலும் நமது வினைகளின் அடிப்படையிலும் நாம் பிரிக்கப்படுவோம். அந்த நாள் யாராலும் தவிர்க்கமுடியாத நாள்! அது நிகழ்வதை தடுத்துவிடவோ அல்லது அந்நிகழ்வில் இருந்து யாரும் தப்பி ஓடவோ இயலாத நாள்! காலாகாலமாக இறைத்தூதர்களாலும் இறைவேதங்களாலும் எச்சரிக்கை செய்யப்பட்ட நாள்தான் அது! யார் இறைவனுக்காக தங்களைக்  கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்களோ அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கத் துடங்கும் நாள் அதுவே! யார் இறைகட்டளைகளை புறக்கணித்தும் அலட்சியப்படுத்தியும் ஏளனம் செய்தும் வாழ்ந்தார்களோ அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கத் துடங்கும்  நாளும் அதுவே!
ஆக, அந்நாளில் மனிதனுக்கு அவனது குலப்பெருமையோ, செல்வமோ, ஆதிக்க பலமோ எதுவுமே துணை வராது. எவர் துணையும் இன்றி வெட்டவெளியில் விடப்படுவது போன்ற ஓர் நிலை அது! ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் சம்பாதித்த வினைகளின் பட்டியலை மட்டுமே சுமந்தவர்களாக நிற்கும் நாள் அது! அந்நாளின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள விரும்புவோருக்கு இதோ இறைவன் தொடர்ந்து கூறுகிறான்:
30:17. ஆகவே, (இறைவிசுவாசிகளே!) நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும்  , நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்.
30:18. இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் நண்பகலின் போதும் (இறைவனைத் துதியுங்கள்).
ஆம், இவ்வுலகம் என்ற பரீட்சைக் களத்தில் நம் வாழ்வின் உண்மை நோக்கத்தை நாம் மறந்து விடாமல் இருக்கவும் நேர்மையாக வாழவும் ஷைத்தான் நம்மை தீய சஞ்சலங்களுக்கு உட்படுத்தி வழிகெடுக்காமல் இருக்கவும் இறைநினைவு அடிக்கடி புதுப்பிக்கப் பட வேண்டும். அதற்காக ஏவப்படுவதே இறைவனை துதித்தல் என்ற கடமை.  அந்த துதித்தலுக்கு தகுதியானவனும் படைத்தவன் ஒருவன் மட்டுமே. அவனது ஆற்றல்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அறியத் தூண்டுகிறான். அதற்காக பூமியெங்கும் பரவி நிற்கின்றன அவனது அத்தாட்சிகள்! இவற்றை பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது இறைவனின் எச்சரிக்கைகள் அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள் என்பதும் அவை வெற்றுப் பூச்சாண்டிகள் அல்ல என்பதும் புலனாகும்.
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
30:20. மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
இல்லாமையில் இருந்து நாம் படைக்கப்பட்டு இன்று நடமாடிக்கொண்டு இருப்பதும்  நாம் அன்றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவையும் என  அனைத்தும் அந்த இறைவனின் ஏற்பாடுகளே! இதில் எங்குமே மனித கரங்களுக்கோ அறிவுக்கோ எவ்விதப் பங்கும் இல்லை அதிகாரமும் இல்லை என்பது தெளிவு!
30:21. இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றறிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:23. இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன் நிச்சயமாகஅதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சகள் இருக்கின்றன.
30:25. வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளதாகும். பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.
ஆம், மேற்கூறப்பட்ட அற்புதங்களில் உங்களுக்கு எவ்வாறு எந்த பங்கும் ஆற்றலும் இல்லையோ அதேபோல அதைத் தொடரும் நிகழ்விலும் உங்களுக்குப் பங்கு கிடையாது. அவன் மீண்டும் அழைக்கும் போது பூமியில் இருந்து வெளிப்பட்டு வருவதைத் தவிர வேறு வழியுண்டா சொல்லுங்கள்!
30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.
30:27. அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

எனவே அந்த எல்லாம்வல்ல இறைவனுக்குக் கீழ்படிந்து நடப்பதுவே அறிவுடைமை. அந்த கீழ்படிதலுக்கே அரபு மொழியில் இஸ்லாம் என்று கூறப்படுகிறது.

நான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை! - யுவோன் ரிட்லீ...

(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant)

[யுவோன் ரிட்லீ, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர். ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் உளவாளியாக நுழைந்த இவர் பின்னர் தலிபான் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்டு சிறிது காலம் அவர்களின் கைதியாக இருந்து பின்பு விடுவிக்கப்பட்டார். அவர்களின் பண்பான நடத்தையும் திருக்குர்ஆன் வாசிப்பும் அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க அவர் இஸ்லாத்தை மனமுவந்து தழுவினார். தன் அனுபவங்களை கூற "தாலிபானின் பிடியில்" என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இன்று இவர் ஒரு மேற்குலகில் முன்னணி மனித உரிமை மற்றும் பெண்ணுரிமைப் போராளி!]
ஹிஜாப்... உலகின் அனைத்து அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களும் விரும்பி விமர்சனம் செய்யும் விஷயம் இது! இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் என்னும் உடலை மறைக்கும் முழு ஆடை.... அதை அணிந்திருக்கும் பெண்களின் கருத்து என்னவென்று அறிய முற்படாமல் தமக்கு தோன்றியவற்றை எல்லாம்  தங்களுடய கண்ணோட்டமாகப் பிதற்றிகொண்டு திரிகின்றார்கள் இவர்கள்! இந்த அறியாமையை என்னவென்பது?
தன் சொந்தக்கருத்தை மட்டுமே மூலாதாரமாக வைத்துக்கொண்டு எழுதும் இவர்களுக்கு உண்மையில் ஹிஜாபைப் பற்றியும் இஸ்லாம் தன் பெண் மக்களை எப்படிப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றியும், மொத்தத்தில் 1400  வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வலுவான இஸ்லாமியக் கட்டமைப்பைப் பற்றியும் எதுவும் தெரியாது.
ஆயினும் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரபு நாடுகளில் நடக்கும் குழந்தைத் திருமணம், பெண்களுக்கு செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்), கௌரவக்கொலை மற்றும் கட்டாயத் திருமணங்கள் போன்ற அரபுக் கலாச்சாரம் சம்மந்தமானவை மட்டுமே! இவற்றை இஸ்லாத்தோடு இணைத்து இஸ்லாத்தை தவறான கோணத்தில் விமர்சிப்பதில் அகமகிழ்ந்து கொள்கின்றனர்.

அவற்றில் நான் மிகவும் வெறுப்பது என்னவென்றால் சௌதி அரேபியாவை உதாரணம் காட்டுவதும், அங்கு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்படும்  தடை செய்வதைப்பற்றி விமர்சிப்பதும் ஆகும். இவர்கள் சாடும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் காரணம் ஆகாது. ஆயுனும் அவர்கள் தம் ஆதிக்க பலத்தால் இஸ்லாத்தைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை எழுதியும் பரப்பியும்  வருகிறார்கள்நான் இவர்களை வேண்டிக்கொள்வது என்னவென்றால்.... ஒரு தூய்மையான மார்க்கத்தை ஒரு கலாச்சார வழக்கத்தோடு முடிச்சுப்போட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்பதே .

முஸ்லிம் ஆண்கள் தங்கள் பெண்களை எப்படி அடித்து துன்புறுத்துகிறார்கள் என்பது பற்றி எழுதும்படி என்னை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இது உண்மைல்ல என்று எனக்கு நன்றாகத்தெரியும். இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் திருக்குரானிலிருந்தும், ஹதீஸ்களில் இருந்தும் சம்மந்தமில்லாத சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத வாசகங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் "ஒரு உண்மையான அடியான் தன் மனைவியை அடிக்க நேர்ந்தாலும் அது அவள் உடலின் மீது எந்த காயத்தையும் கூட உருவாக்கக் கூடாது" என்று குர்'ஆன் கட்டளை இடுகிறது. இது ஆண்களை எச்சரிக்கை செய்யும் கட்டளையாகவே உள்ளது. மற்ற மதங்கள் இதைப்பற்றி மூச்சுகூட விடுவதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சரி... நாம் இப்பொழுது சில சுவையான புள்ளி விபரங்களைச் சற்று பார்ப்போம். தேசியக் குடும்ப வன்முறை ஹாட்லைன் (National Domestic Violence Hotline) கணக்கெடுப்பின் படி வருடத்திற்கு 4 மில்லியன் அமெரிக்கப் பெண்கள் கடுமையான குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். சராசரியாக தினசரி 3 பெண்களுக்கு மேல் அவர்களது கணவர்கள் மற்றும் காதலர்களால் (boy friend) கொல்லப்படுகின்றனர். கடந்த 9/11ல் இருந்து 5500 பெண்கள் சாகும்வரை அடிக்கப்பட்டும் வருகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சிலர் இதை நாகரீக உலகின் மீது போடப்படும் பழி என நினைக்கலாம். ஆனால், பெண்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறை ஒரு உலகளாவிய பிரச்னை ஆகும். இப்படிப்பட்ட வன்முறையை நிகழ்த்தும் ஆண்கள், எந்த குறிப்பிட்ட கலாச்சாரத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல.
உண்மை என்னவெனில், உலகின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உதை வாங்கிக்கொண்டும், பாலுறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டுக்கொண்டும், பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வாழ்நாள் முழுவதும் கழித்துக்கொண்டிருக்கின்றனர். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை பொதுவானது. மதம், வகுப்பு, அந்தஸ்து, தோலின் நிறம், கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டது
இஸ்லாம் வரும் முன்பு வரை பெண்கள் மிகவும் கீழ்ததரமானவர்களாகவே கருதப்பட்டு வந்தனர். உண்மை என்னவெனில், மேற்கத்திய ஆண்கள் இன்னுமே தங்களைப் பெண்களை விடவும் மிக உயர்வானவர்களாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுகள் இன்றும் கீழ் மட்டத்திலி்ருந்து உயர் பதவிகள் வரை வேலை பார்க்கும் பெண்களுக்கு, வழங்கப்படும் ஊதியம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.
மேற்கத்தியப் பெண்கள் இன்றும் ஒரு விற்பனைச் சரக்கு போன்றே நடத்தப் படுகின்றனர். அவர்கள் பெருகிவரும் பாலியல் அடிமைத்தனம், விரும்பத்தகாத விற்பனை யுக்திகள், பெண்களின் உடலை வியாபாரப் பண்டமாகவும் விளம்பரச் சரக்காகவும் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  இங்கு பாலியல் பலாத்காரம், கொடுமை மற்றும் வன்முறைகள் தினசரி நிகழ்வுகளாகவும், ஆண் பெண் சமத்துவம் என்பது  ஒரு வெற்று மாயையாகவும் உள்ளது. பெண்களின் செல்வாக்கு அவர்களின் மார்பகங்களின் அளவு சம்மந்தப்பட்டதாகவும் அமைந்துள்ளது
முன்பெல்லாம் முக்காடு அணிந்து செல்லும் பெண்களைக் கண்டால் எனக்கு அவர்கள் வாயில்லா ஜீவன்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் தென்பட்டனர். ஆனால் இஸ்லாத்தை நான் அறிந்த பிறகு அவர்கள் எனக்கு பலசெயல் திறங்களையும், ஆற்றலையும், எந்த சூழ்நிலையையும் சமாளிப்பவர்களாகவும், சகோதரத்துவத்தின் அடயாளமாகவும் காணப்படுகிறார்கள். இன்று இவற்றிற்குமுன் மேற்கத்திய பெண்ணியத்தை ஒப்பிடும்போது அது அறியாமையின் ஏமாற்றத்தின் உச்ச்சகட்டமாகப் படுகிறது! 

செப்டெம்பர் 2001ல், நான் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் புர்கா அணிந்து திருட்டுத்தனமாக நுழைய முற்பட்டபோது, தாலிபான் இயக்கத்தினரால் கைது செய்யப்பட்டேன். அச்சம்பவம் என்னை மிகுந்த பயத்துக்குள்ளாக்கியது.


(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)