இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 செப்டம்பர், 2024

குடும்ப அமைப்பை உடைக்கும் உத்திகள்!



‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.


இந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.

உலகமமயமாதலும் பாலியல் சீர்கேடுகளும்

மேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:

1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.
2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்

ஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

1. சினிமா
2. தொலைக்காட்சி
3. வானொலி
4. இன்டர்நெட்
5. பொப் பாடல்கள்
6. சஞ்சிகைகள்
7. விளம்பரங்கள்
8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)
9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)

இவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.
ஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.
மேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:

1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
2. சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு
3. கருக்கலைப்பு
4. கற்பழிப்பு
5. தன்னினச்சேர்க்கை
6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்
7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்
8. விவாகரத்து
9. தற்கொலை
10. போதைவஸ்துப் பாவனை

இன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இஸ்லாமிய நோக்கில் பாலியல்

ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.

அணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)

”அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.” (36:36)

திருமணம், துறவறம், விபசாரம்

மிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

இன்றைய சமயசார்பற்ற – சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.

மறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.

இஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

திருமண உடன்படிக்கையின்றி ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.
விபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.

”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)

விபச்சாரத்திற்கு வழிவகுப்பவை

இவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:

1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.

இது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:
‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.’ (அஹ்மத்)
‘உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)

குறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)

2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

‘அலியே! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.’ (அஹ்மத், அபூதாவூத்)

கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
‘இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.’ (புகாரி)

3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்

அவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.

இவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.

இஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:

1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.
2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.
3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.
4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.
5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.
6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.
7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.
8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

திருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது
”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.” (30:21)

குடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்

இல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.

துர்நடத்தை

விபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.

ஓரினச்சேர்க்கை

ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)

மனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.

விபசாரம்

ஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.

விபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
‘ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)
‘விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’ (ஆதாரம் : அத்தபராணி)

எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.
============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2024 இதழ் PDF

 


வெள்ளி, 6 செப்டம்பர், 2024

முறையற்ற கல்வியால் பெற்றோருக்கு நேரும் அவலங்கள்


“என் பிள்ளை டாக்டர் ஆகவேண்டும், இன்ஜினியர் ஆகவேண்டும், வக்கீல் ஆகவேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும், பேரும் புகழும் சேர்க்க வேண்டும்” என்ற கனவு பெற்றோருக்கு இருப்பது இயல்பே. ஆனால் அந்தக் கனவை நனவாக்கப் பாடுபடும்போது ‘என் பிள்ளை பண்புள்ள ஒரு மனிதனாகவும் ஆகவேண்டும்’ என்ற முக்கிய விடயத்தை பெற்றோர் மறந்ததனால் நம் சமூகம் இன்று சந்தித்து வரும் அவலங்கள் ஏராளம், ஏராளம். விரிவஞ்சி ஒரு சில உதாரணங்களை மட்டுமே இங்கே முன்வைக்கிறோம்:

உதாரணம் 1.

70 வயதான முதியவரை அவருடைய மகன்கள் காரில் கொண்டுவந்து சென்னை புறநகர் பகுதி ஒன்றில் தெருவோரமாக போட்டுவிட்டு சென்றார்கள். ஒட்டிய வயிறும் மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டன..அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அணுக அந்த முதியவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். .... ஆனால் அதிகாரிகள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அந்த முதியவர் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்களின் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை...
தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத்தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரது பிள்ளைப்பாசத்தின் அழுத்தம் நமக்கு தெரிகிறதல்லவாஅறிவு வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்று கருதப்படும் இக்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருவதை நாம் கண்டுவருகிறோம்.

உதாரணம் 2..

ஆசிரியர் பணியுடன் மாலை நேரத்தில் நெசவு தொழில், ஏலச்சீட்டு நடத்துதல் என 30 ஆண்டுக்கு முன் வரை ராமைய்யாவின் அரவணைப்பில் மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் என குடும்பமே சந்தோஷத்தில் மிதந்தது. இன்று அவரது புகலிடம் முதியோர் இல்லம். பிள்ளைகள் எதை கேட்டாலும் வாங்கி கொடுத்த ராமைய்யாவுக்கு இப்போது அவர்களை பற்றி பேசினாலே வெறுப்பு. நான் இறந்த பின்னர் உடலைக் கூட மருத்துவ கல்லூரிக்கு தானமாக தான் தரவேண்டும் என்கிறார். தனது பென்சன் பணத்தில் முதியோர் இல்லத்தில் 86 வயதை கடந்து நாட்களை ஓட்டி வருகிறார். தனது முதல் மனைவி இறப்புக்கு பின்னர் குடும்ப சொத்துக்களை வழக்கு போட்டு வாங்கிக்கொண்டு பிள்ளைகள் அனுப்பி விட்டதால் இந்த கதி!
பென்சன் வாங்கும் ராமய்யாவின் நிலையே இப்படி என்றால் எந்த வருமானமும் இல்லாத லட்சக்கணக்கான முதியோரின் நிலை இன்னும் கொடூரமானது. பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு நிராதரவாக சாலையோரங்கள், புண்ணியஸ்தலங்களில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்துவோர் ஏராளம். அதைக்காட்டிலும் கொடூரம் வயது முதிர்ந்த முதியோரை சத்தமில்லாமல் மறைமுகமாக கொலை செய்யும் அவலங்களும் நடக்கின்றன.

தவறு எங்கே நிகழ்கிறது?

இப்படி முதியோர்கள் புறக்கணிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்படுவதற்கும்  மரணிக்கும் வரை ஆதரவின்றி அனாதையாக விடப்படுவதற்கும் காரணம் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரும்பாடுபட்டு புகட்டிய கல்வியோடு ஒழுக்கம் சார்ந்த கல்வி புகட்டப்படவில்லை என்பது தெளிவு! முறையான இறைநம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் புகட்டப்பட்டு இருந்தால் இந்த அவல நிலை நேர்வதற்கான வாய்ப்புகள் குறைவு.

புகட்டவேண்டிய இறையச்சக் கல்வி:

கற்பிக்கப்படும் கல்வியோடு கீழ்கண்ட இறை உபதேசங்களையும் சேர்த்து பகுத்தரிவுபூர்வமாக மாணவர்களுக்கு புகட்டியிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.  

= பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்  அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம்  இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (திருக்குர்ஆன் 17:23)

தண்டனை தள்ளிவைக்கப்படுவதில்லை என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

= "பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ

பெற்றோருக்காக எவ்வாறு பிள்ளைகள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை திருக்குர்ஆன் கற்றுத்தருவதை நாம் காணலாம்: 

= இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போதுஎன்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல்நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (திருக்குர்ஆன் 17:24)

நடைமுறை சாத்தியமா?

இந்த நவீன காலத்திலும் பெற்றோரை அரவணைத்து செல்வது சாத்தியமா என்ற ஐயம் பலருக்கும் எழலாம். ஆனால் சாத்தியமே என்பதை உங்கள் அருகாமையில் வசிக்கும் இஸ்லாமிய குடும்பங்களை கவனித்தால் உணரலாம். நூறு சதவீதம் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதில்லை என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருப்பது அவர்களின் இறைநம்பிக்கையும் மறுமை நம்பிக்கையுமே!

================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?

வியாழன், 5 செப்டம்பர், 2024

மனித இனத்தின் முதல் ஆசிரியர்!


மனித இனத்தின் துவக்கத்திலிருந்து வரலாற்றை நாம்  ஆராயும்போது  சமூகம் படிப்படியாக முன்னேறியது அதற்கு தலைமுறை தலைமுறையாகக் கிடைத்த அறிவினால்தான் என்பது புலனாகிறது. மனிதனுடைய வரலாறே அறிவுடன் தொடர்புள்ள நிலையிலேயே ஆரம்பமாகின்றது என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

இறைவன் ஆதம் (அலை) என்ற முதல் மனிதரைப் படைத்து, அவரிலிருந்து அவரது மனைவியை உருவாக்கினான். அந்த இருவர் மூலம் மனித இனத்தைப் பல்கிப் பெருகச் செய்தான். ஆதம் (அலை) அவர்களை, இறைவன் படைத்த பின்னர், அவன் ஆரம்பப் பணியாக ஆதமுக்கு அறிவு புகட்டியதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.  

= ஆதமுக்கு எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்தான்.’ (திருக்குர்ஆன் 02:31)

= அவனே மனிதனைப் படைத்தான்; அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான். (திருக்குர்ஆன் 55:3-4)

மனிதன் ஆரம்பகாலத்தில் அறிவற்ற மிருக நிலையில் இருந்தான் என்ற நாத்திக ஊகத்தை இஸ்லாம் அப்பட்டமாக மறுக்கிறது. முதல் மனித ஜோடியே வாழ்க்கையைத்  துவங்குவதற்குத் தேவையான அறிவோடும் பகுத்தறிவோடும் இயற்கையோடும் வசதிகளோடும்தான் படைக்கப்பட்டது என்பதை மேற்படி வசனங்களில் இருந்து அறியலாம்.

மிருகத்தில் இருந்து மனிதனை வேறுபடுத்தும் மிக முக்கியமான ஆற்றல் பேச்சாற்றல். மனிதன் தான் பெற்ற அறிவையும் தான் பகுத்து அறிந்தவற்றையும் தன் சந்ததிகளுக்கு கற்றுக் கொடுக்க தேவையான முக்கியமான ஆற்றல் இது. அதை ஆரம்பத்தில் இருந்தே மனிதனுக்கு வழங்கி இருந்ததாக இறைவன் மேற்படி வசனத்தில் கூறுகிறான். 

இங்குதான் கல்வி – அதாவது அறிவைப் பகருதல் – என்பது உருவெடுக்கிறது.

அடிப்படைக் கல்வி:

மனித இனத்துக்கு முதன்முதலாக கற்பிக்கப் பட்ட விஷயம் இறைவனைப் பற்றியும் இந்த தற்காலிக உலக வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கல்வியே.

முதல் மனித ஜோடி சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பூமியில் குடியேற்றம் செய்யப்பட்ட பின் அவர்களிடம் இறைவன் கூறியதாக திருக்குர்ஆன் கூறுகிறது:

= நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லைஅவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்துஎம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! (திருக்குர்ஆன் 2:39, 38)

அதாவது..

= இந்த பூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக இறைவன் அமைத்துள்ளான்.

= இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள்.

= இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது.

இந்த உண்மைகளை மனித சந்ததிகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவே இறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது தூதர்களையும் வேதங்களையும் அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் முதல் மனிதரே முதல் இறைத் தூதராகவும் இருந்துள்ளார். மனித குலத்துக்கான முதல் ஆசிரியரும் அவரே.

இந்த அடிப்படைக் கல்வியை மக்களுக்குப் புகட்டாததன் காரணமாக அதர்மம் உலகெங்கும் படர்ந்து பரவுகிறது. இன்றைய இளைஞர்களிடையே என்னென்ன விபரீதங்கள் நடக்கின்றன என்பதைக் காட்ட இரு உதாரணங்கள் போதுமானதாகும்:

= பெற்ற பிள்ளைகளுக்காகவே இரவுபகல் பாராமல் உழைக்கும் பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் விடுகிறார்கள். சொத்துக்கு ஆசைப்பட்டு கருணைக் கொலை என்ற பெயரில் பெற்றோர்களை பிள்ளைகள் கொல்கிறார்கள்.

= SSLC முதல் IAS வரை நடக்கும் தேர்வுகளில் தோல்வியுற்றாலோ அல்லது மதிப்பெண்கள் குறைந்தாலோ மாணவர்கள் உடனே தற்கொலை செய்து கொள்வதை நித்தம் காண முடிகிறது.

வள்ளுவர் அன்றே கூறினார் இதுபற்றி:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
(
அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:2)

பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? (மு வரதராசனார் உரை)

================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?