இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 நவம்பர், 2020

வாழ்வின் சகல பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து திருக்குர்ஆன்

ஹஸ்ரத் ஜஃபர் ஸாதிக் றஹிமஹுல்லாஹ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் "அஹ்லுல் பைத்" எனும் புனித குடும்பத்தில் பிற்காலத்தில் தோன்றிய ஒரு பெருந்தகை.

ஒரு முறை ஹஸ்ரத் ஜஃபர் ஸாதிக் றஹிமஹுல்லாஹ் அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அவர்களிடமிருந்து கல்வி கற்க மக்கள் ஒன்று கூடினார்கள். அப்போது அவர்கள், மக்களிடம் "நான்கு விஷயங்களைக் கடைப்பிடிக்காத நான்கு மனிதர்கள் மீது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

(01). சோதனைகளில் சிக்கியுள்ள மனிதன்: 

"யா அர்ஹமர் ராஹிமீன்"

என்று கூறாமல் இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் குர்ஆனில் ஹஸ்ரத் ஐயூப் (அலை) அவர்களைப் பற்றி

இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித் போது,(அல்குர்ஆன் : 21:83)

என்று கூறினார்கள். இந்த துஆவின் பலன் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது.

நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் : 21:84)

(02). கவலையில் சிக்கியுள்ள மனிதன்:


"லா இலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க இன்னீ குன்து மினழ் ழாலிமீன்" 

என்று கூறாமல் இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் குர்ஆனில் ஹஸ்ரத் யூனுஸ் (அலை) அவர்களைப் பற்றி

"இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்." (அல்குர்ஆன் : 21:87)

என்று கூறினார்கள். இந்த துஆவின் பலன் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது.

"எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்." (அல்குர்ஆன் : 21:88)

(03). பயம், திடுக்கம் ஏற்பட்ட மனிதன்:

"ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல்"

என்று கூறாமல் இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் குர்ஆனில் ஸஹாபாக்கள் பயத்தின் போது மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்." (அல்குர்ஆன் : 3:173)

என்று கூறினார்கள். இந்த துஆவின் பலன் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது.

"இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்." (அல்குர்ஆன் : 3:174)

(04) விரோதிகளின் சூழ்ச்சிகளில் சிக்கியுள்ள மனிதன்:

"உஃபவ்விலு அம்ரீ இலழ்ழாஹ் இன்னழ்ழாஹ பஸீருன் பில் இபாத்"

என்று கூறாமல் இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் குர்ஆனில் பிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முஃமினான மனிதர்

“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்). (அல்குர்ஆன் : 40:44)

என்று கூறினார்கள். இந்த துஆவின் பலன் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது.

"ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது." (அல்குர்ஆன் : 40:45)

நன்றி: அஸீம் லாஹிர், கொழும்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக