இதை ஒரு வெற்று பிரச்சாரம் என்றோ மதபோதனை என்றோ கருதி யாரும் கடந்து செல்ல வேண்டாம். கீழ்கண்ட எச்சரிக்கைகள் இவ்வுலகின் உரிமையாளனிடம் இருந்து வந்தவை. இங்கு கூறப்படும் தூய்மை வழிமுறைகளைப் பேணுவது ஒவ்வொரு குடிமக்கள் மீதும் கடமையாகிறது. சமூகப் பொறுப்புணர்வோடு இவற்றைப் பேணும்போது சமூக நலன் காக்கப்படும். பேணாதவர்கள் இன்றில்லாவிடினும் மறுமையில் தண்டனை அனுபவிக்கப்போவது உறுதி!
பொது இடங்களில் கழிவுப்பொருள்
பொது இடங்களான சாலை ஓரங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை அசுத்தப்படுத்துவதன் மூலம் பலர் மக்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள். அவ்விடங்களைக் கடந்து செல்வது மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்போது அவர்களின் வாய் முணுமுணுக்கவே செய்யும்.
அவ்வாறு அசுத்தம் செய்யக்கூடாது என்ற எச்சரிக்கைப் பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தாலும் அதைக் கண்டும் காணாததுபோல் நடந்து கொள்கிறார்கள் பெரும்பான்மையான மக்கள்! பெரும்பான்மையான மக்கள் இத்தவறை செய்கிறார்கள் என்பதற்காக சமூகம் இதை அலட்சியம் செய்யக் கூடும். ஆனால் இறைவனின் பார்வையில் இது தவறு என்பதால் அதற்கான தண்டனை உரியவர்களுக்கு கிடைக்கவே செய்யும். இந்தத் தீய செயலை இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.
ஒருமுறை அவர்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், ''சாபத்தைப் பெற்றுத் தரும் அந்த இரண்டு விஷயங்கள் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''மக்கள் (செல்லும்) பாதையில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல். அல்லது அவர்கள் நிழலாறக் கூடிய இடத்தில் இயற்கைத் தேவையை நிறைவேற்றுதல்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 448
பொது இடங்களில் குப்பை மற்றும் நாற்றம் வீசும் கழிவுப்பொருள்களைக் கொட்டுவோருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
சிறுநீர் கழித்தாலும் சுத்தம் தேவை
சுற்றுப்புற சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தனிநபர் உடல் தூய்மை பற்றிய கல்வியும் உணர்வும் மிக அவசியமானதாகும். உதாரணமாக சிறுநீரைப் பொறுத்தவரையில் அது அசுத்தமான ஒன்று என்ற உணர்வு பெரும்பாலானோருக்குக் கிடையாது. உடலிலோ உடையிலோ இருப்பிடங்களிலோ மலம் பட்டுவிட்டால் பொதுவாக அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து சுத்தம் செய்வதைப் பார்க்கிறோம். ஆனால் சிறுநீருக்கு இதே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. பள்ளிகளிலும் சரி, வீடுகளிலும் சரி, பொதுமக்களுக்கு இடையிலும் சரி இதுபற்றி போதிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக வீடுகளில் குழந்தைகள் சிறுநீர் கழித்தாலோ பெரியவர்கள் சாலை ஓரங்களிலும் சுவர்களிலும் சிறுநீர் கழித்தாலோ அவற்றை யாரும் பொருட்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. சிறுநீரும் கழித்த பின் சுத்தப்படுத்தப் படவேண்டிய விஷயமே என்பதை மக்கள் உணராததன் காரணமாக வீடுகளிலும் சாலைகளிலும் சிறுநீரின் நாற்றத்தையும் அதன்மூலம் உண்டாகும் சுகாதார சீர்கேடுகளையும் நாம் சகித்துக் கொண்டே வாழவேண்டியுள்ளது. ஆனால் தூய இறைமார்க்கமோ வழிபாட்டின் ஒரு முக்கியப் பகுதியாக சிறுநீர் பற்றிய பேணுதலைக் கற்பிக்கிறது. குழந்தைகள் ஏழு வயதில் இருந்தே அந்தப் பேணுதலுக்குப் பழக்கப்படுத்தப் படுகிறார்கள்.
சுத்தமின்றி வாழிபாடு இல்லை
இறைவிசுவாசிகளுக்கு கடமையாக்கப்பட்ட தினசரி ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு உடல், உடை, இடம் இவை அனைத்தும் மலம் மற்றும் சிறுநீரில் இருந்து தூய்மையாக இருக்கவேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆண் குழந்தைகளுக்கு செய்யப்படும் 'கத்னா' எனப்படும் பிறப்புறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சைக்கு வேறு சில காரணங்கள் இருந்தாலும் அது முக்கியமாக சிறுநீரில் இருந்து உடலையும் உடையையும் தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டே நிறைவேற்றப் படுகிறது.
= "சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மாலிக் அல்அஷ்அரீ நூல் : முஸ்லிம் (328) = இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ''இந்த சமாதிகளில் அடங்கியுள்ளவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்லித் திரிபவனாக இருந்தான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) (நூல்: நஸயீ 2041)
அதே நேரத்தில் இக்கொடிய செயலில் ஈடுபடாமல் இறைவனின் பொருத்தம் நாடி பொது இடங்களிலோ பாதைகளிலோ காணும் அசுத்தங்களை நாம் அகற்றினால் இது இறைநம்பிக்கையோடு செய்யப்படும் வழிபாட்டின் ஒரு பகுதியாக ஆகி விடுகின்றது. அதனால் இறைவனிடம் கூலியும் கிடைக்கிறது.
= "இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'இறைவனைத் தவிர வேறு வணக்கத்துக்கு உரியவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 58
-----------------------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
Good and very beneficial post. Jazakamullahu khairan bro.
பதிலளிநீக்கு