= பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப்பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான்.
= தங்களுக்குத் தேவையான வசதிகளோடு தன்னிறைவாக
வாழ்ந்து வரும் குடும்பங்களானாலும் அண்டை வீட்டாரின் வசதிகளைப் பார்த்து அவை போல
தங்களிடம் இல்லையே என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம் நாளடைவில் தங்கள் கணவன்மார்களை
நச்ச்சரிப்பதற்கும் ஏசுவதற்கும் குடும்பச் சண்டைகளுக்கும் கொண்டுபோய் விடுகின்றன.
நேர்மையானவர்கள் கூட இலஞ்சம் போன்ற பாவங்களில் ஈடுபடுவதற்கு இது எதுவாகி
விடுகிறது.
= ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார
செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம்
போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.
= இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை
விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக
அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில்
தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.
= ஒரு கண்ணை இழந்தவர் இரு கண்கள் உடையவரோடு
தன்னை ஒப்பிடுவதால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எண்ணி வருந்துகிறார்.
இப்படி உலகின் பெரும்பாலான மனக்கவலைகளுக்கும்
குழப்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் அமைதியின்மைக்கும் இந்த ஒப்பீடு காரணமாகிறது.
இங்குதான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல இறைவன்
மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை
வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த
மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதுதான்:
"செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான
ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக்
கீழானவர்களை அவர் பார்க்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :
புகாரி 6490
ஆம், காலில் செருப்பில்லை என்று கவலையுடன்
நடந்து வருகின்ற ஒருவர் தன் எதிரே
வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப்
பார்த்தால் அவரது மனம் ஆறுதல் அடைவது உறுதி.
இது போல் அழகில், செல்வத்தில், வசதியில்,
அறிவில் என பல்வேறு விடயங்களில் தம்மிடம் இருப்பது குறைவே என்று உணர்பவர்கள்
தங்களைவிட குறைவாக அவற்றைப் பெற்றவர்களை நினைத்துப் பார்த்தால் தங்களிடம் உள்ளவை
பற்றி ஆத்ம திருப்தி கொள்ளமுடியும். இதை மக்கள் உண்மையாகவே உணர்ந்து
செயல்படுவார்களேயானால் தனிநபர் வாழ்விலும் குடும்பவாழ்விலும் அமைதி மீளும்.
ஆனால் இதை வாயால் சொல்வதும் உபதேசிப்பதும்
எளிது. ஆனால் நடைமுறையில் சாத்தியமா?
ஆம், சாத்தியமே! ... இந்த வாழ்க்கையின்
நோக்கத்தையும் உண்மை நிலையையும் உணர்ந்துகொண்டவர்களுக்கு!
வாழ்க்கை என்ற
பரீட்சை!
இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன்
குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது
மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம்.
திருமறையில் இறைவன் கூறுகிறான்:
2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும்
படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து
கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன்
தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ்
தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன்
மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே
கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இறைவன் கேட்கிறான் பாருங்கள்:
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இறைவன் கேட்கிறான் பாருங்கள்:
23:115. ''நாம் உங்களைப்
படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில்
நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?''
இறைவனின் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில்
இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இந்தப் பரீட்சைக்கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில்
வந்து போகிறோம்.
இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும்
கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும்
நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும்அளிக்கப்படும் இடமே இந்தத் தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
67:2. உங்களில் எவர்
செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும்
வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன்
(யாவரையும்) மிகைத்தவன்; மிக
மன்னிப்பவன்.
ஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து
மூடப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும்.
அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து
மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே
இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும்
பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது.
உண்மையில் நாளை மறுமையில் நம் நிரந்தர
வாழ்விடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட
தற்காலிக பரீட்சைக் கூடமே இவ்வுலகம் என்னும் பேருண்மையைப் புரிந்து கொண்டால்
மேற்கூறப்பட்ட நபிமொழியை வாழ்வில் நடைமுறைப்படுத்துவது எளிதே!
அத்தகைய உண்மை விசுவாசிகளுக்கு இறைவன் கூறும்
அறிவுரை இவையே:
= மேலும் எதன் முலம் உங்களில்
சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை
கொள்ளாதீர்கள்;.... (திருக்குர்ஆன் 4:32)
= அவன்தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். (திருக்குர்ஆன் 6:165)
வாழ்க்கைப் பரீட்சையின் பொருட்டாகவே நமக்கு
வாய்த்துள்ள இந்த நிலை என்று உணரும்போது தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் அதற்கு ஈடாக
மறுமையில் சொர்க்கத்து பாக்கியங்கள் காத்திருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில்
மகிழ்ச்சி அடைகிறார்கள். உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தங்களால் இயன்றவரை தங்கள்
வசதிகளை தாழ்ந்த நிலையில் உள்ளோரோடு இறைப் பொருத்தம் நாடி பகிர்ந்துகொள்ள
முன்வருகிறார்கள்.
17:18. எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில்
அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை
(இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் நரகத்தைச் சித்தப்படுத்தி
வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும்
சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
17:19. இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க
பிரயாசையுடன், இறை நம்பிக்கையாளனாகவும் இருந்து
முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில்
நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
17:20. இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது
இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்)
தடுக்கப்பட்டதாக இல்லை.
17:21. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட
(இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை
(வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக