இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 ஜூன், 2013

கொலையுண்டவர்கள் எழுந்து வரும் நாள்!

மறுமை நாளில் சில காட்சிகள்
அத்தியாயம் - 81-  தக்வீர் (சுருட்டுதல்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
இறுதித் தீர்ப்பு நாளின் போது நடைபெறும் நிகழ்வுகளை திருக்குரான் தத்ரூபமாக ஆங்காங்கே படம் பிடித்து காட்டுகிறது.
இதோ இந்த சிறு அத்தியாயாத்திலும்.....
•    சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
•    நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
•    மலைகள் பெயர்க்கப்படும் போது-


ஆம், இன்று காணும் அமைதியான சூழலோ உலகின் சீரான இயக்கமோ அன்று இராது. எல்லாம் ஆட்டம் கண்டு விடும் நாள் அது! மனிதன் எவற்றை நிலையானவை என்று எண்ணிக் கொண்டிருந்தானோ.அவை எல்லாம் ஏமாற்றிவிடும் நாள் அது!
விலை உயர்ந்தவைகளாகக் கருதப்பட்டு வந்தவைகளை எல்லாம் விட்டு விட்டு மனிதன் விலகி ஓடும் நாள்! ஆனால் மனிதனிடம் இருந்து விலகி இருந்தவைகள் ஒன்று சேரும் நாள்!
•    சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
•    காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது


நடக்கவே நடக்காது என்று எண்ணிய நிகழ்வுகள் நடக்கும் நாள்!
•    கடல்கள் தீ மூட்டப்படும்போது-
    
கூடு விட்டு பறந்து போன ஆவிகள் மீண்டும் கூட்டுக்குள் நுழையும்    நாள். மீண்டும் வர மாட்டோம் என்று எண்ணியவர்கள் மறுபடியும் எழுந்து எதிரும் புதிருமாக நிற்கும் நாள்.!
•    உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
•    உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
•    ''எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?'' என்று-


 பெற்ற குழந்தைகளையும் பெறவுள்ள குழந்தைகளையும் கொன்றொழித்தால் நாம் இங்கு சுகமாக வாழலாம் என்றெண்ணி யாரை எல்லாம் தீர்த்துக் கட்டியிருந்தார்களோ அவர்களெல்லாம் உயிரோடும் உடலோடும் எழுந்து வரும் நாள்! அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் நாள்! இவையும் இவைபோன்ற பலவும் தோலுரிக்கப்பட்டு பகிரங்கமாக்கப்படும் நாள்! எந்த வானத்தை எல்லை என்று கருதிக்கொண்டு இருந்தானோ அந்த எல்லையும் அகற்றப்பட்டு அதற்கு அப்பாலுள்ளவையும் காட்டப்படும் நாள்!
•    பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
•    வானம் அகற்றப்படும் போது-
•    நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
•    சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-


அன்று என்ன நிகழும்?..........ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுலக வாழ்வு என்ற பரீட்சையில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தது என்பதை ஒளிவு மறைவின்றி அறிந்து கொள்ளும் . தன இறுதி இருப்பிடம் சொர்க்கத்திலா இல்லை நரகத்திலா என்பதை திண்ணமாக அறிந்து கொள்ளும்
•    ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக