இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 மார்ச், 2020

நோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்!


Image result for paradise beautiful flower gardens waterfallsநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள்  எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள்ளது என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறார்கள்.
= 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:155-157)  
 இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால் இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன. சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து இருப்பதால் மற்றவர்களைப் பார்த்து அவர்கள் பொறாமைப் படுவதுமில்லை. தங்களுக்கு வாய்த்த நோய் குறித்தும் ஏழ்மை குறித்தும் பலவீனம் குறித்தும் அளவுக்கு மீறி கவலைப் படுவதுமில்லை.
மறுக்க முடியாத உண்மைகள் சில...
= நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
= இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
= எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் மனோ இச்சைகளுக்கு இடம் கொடாமல் நம்மைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கை வழிகாட்டுதல் படி வாழ்ந்தால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். அந்த வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது.
மறுமை சாத்தியமா?
சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்தாலே சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை நாம் உணரலாம். இம்மை என்பது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் மறுமை என்பது.  இதை நடத்திக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும். பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அளவற்ற இன்பங்களும் முறையாக அனுபவிக்கும் வாழ்விடமே சொர்க்கம். அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இராது!
= “வல்லமையும் மாண்பும் மிக்க இறைவன், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) இறைவன் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பு  : அனஸ்(ரலி)  நூல்: முஸ்லிம்)
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:
= நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான். இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)
= பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.) (திருக்குர்ஆன் 43:71)
= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (திருக்குர்ஆன் 47:15)
கழிவுகள் இல்லா ஆரோக்கியமான உடல்
= இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்.”

அறிவிப்பு: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி)
================
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக