இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 மார்ச், 2020

கருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை


Image result for worryகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த சொத்து, சுகம், உறவு, ஆதரவு இவை அனைத்தும் கைவிட்டுப் போகிறதே என்ற கவலை. இது மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அதேவேளையில் நம்மைப் படைத்து அயராமல் பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி அறிந்தவர்களின் மனோ நிலை இதற்கு நேர் மாற்றமாக இருக்கும். அவர்கள் அந்த இறைவனை சந்திக்கப் போகிறோம் என்ற உணர்வில் ஆறுதலும் பேரானந்தமும் அடைவார்கள். அதைத்தான் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:
ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' (திருக்குர்ஆன் 2:156,157)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
கருணையின் உறைவிடமே இறைவன்  
இன்று நம்மோடு உறவாடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் யார் நம்மோடு அன்பு மிக்கவர்கள் என்று கேட்டால் நாம் யாருமே தமது பெற்றோரையே அதிலும் குறிப்பாக தாயார்தான் என்றுதான் கூறுவோம்.
தொடர்ந்து, “அந்தத் தாயைப் படைத்தது யார்? தாய் உள்ளத்தில் என்றும் வற்றாத தாய்ப் பாசம் என்பதை விதைத்தவன் யார்? தாயின் மாரில் நமக்காக தாய்ப் பாலை சுரக்கச் செய்தவன் யார்?” என்று கேட்டுப்பாருங்கள்.
இந்தக் கேள்விகளுக்கு விடைதேடும்போதுதான் இறைவன் என்பவன் எத்துணைக் கருணைமிக்கவன் என்பதை உணர்கிறோம்.
இவை அனைத்தும் நம்மீது கொண்ட அன்பின் காரணமாகவே என்பதை நாம் உணரும்போது அவனை நேசிக்காமல் இருக்க முடியுமா?
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை மனிதன், ஜின்,மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.” (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி) (புகாரி) )

அப்படியென்றால் அந்த இறைவனின் கருணையை நினைத்துப் பாருங்கள். இதன் காரணமாகவே அவனை அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) என்றும் நிகரற்ற அன்புடையவன்(அர்ரஹீம்) என்றும் கூறுகிறோம். அதாவது இவ்வுலகில் அனைவருக்கும் பொதுவாக அருள்புரிபவனும் அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தவர்களுக்கு மாத்திரம் மறுமையில் அருள்புரிபவனும் என்பது இதன் பொருள்.
= அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். நியாயத் தீர்ப்புநாளின் அதிபதி (திருக்குர்ஆன் 1: 3, 4)
= அவனே அல்லாஹ்வணக்கத்திற்குரியவன்அவனைத் தவிர வேறு நாயன் இல்லை மறைவானதையும் பகிரங்கமானதையும் அறிபவன்அவனே அளவற்ற அருளாளன்நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 9:22 )   
  
இறைவனின் தன்மைகள்
இறைவனைப்பற்றிய தவறான சித்தரிப்புக்களே மக்களிடம் இறைநம்பிக்கை இல்லாமல் போவதற்கும் அவன் மீது அவநம்பிக்கை ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது. பலவீனமான படைப்பினங்களை எல்லாம் காட்டி அவற்றையெல்லாம் கடவுள் என்று சித்தரிக்கும் போது உண்மை இறைவனைப்பற்றிய மரியாதை உணர்வு மனித மனங்களில் இருந்து அகன்று போய் விடுகிறது.
மாறாக இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் அவற்றில் உள்ளவற்றையும் அப்பாற்பட்டவற்றையும் படைத்து பரிபாலித்து வருபவனே அந்த இறைவன் என்றும் அவன் நம்மீது அளவிலா கருணை கொண்டவன் என்றும் மிக நெருக்கமானவன் என்றும் மக்களுக்கு கற்பித்தால் உண்மை இறைநேசமும், இறையச்சமும், தன்னம்பிக்கையும் அவர்களுக்கு உண்டாகும்.
அப்படிப்பட்ட பண்புகளைத்தான் இறைவேதம் திருக்குர்ஆன் நமக்குக் கற்பிக்கிறது:
= நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல்  அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
இறைவனின் அழைப்பு:
= (நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும்என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
 = என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய கருணையில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் 39:53)

அடியார்களை நெருங்கக் காத்திருப்பவன்
இறைவன் தன்னைப்பற்றி இவ்வாறு கூறியதாக நபிகளார் கூறினார்கள்:
 என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்
இதை அபூஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 2224) .
 ================= 
இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?
https://www.quranmalar.com/2012/09/blog-post_12.html
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக