Wednesday, January 23, 2019

காத்திருக்கும் மண்ணறையும் தொடரும் மறுமையும


மண்ணறையாவது, மறுமையாவதுமண்ணாங்கட்டியாவது...? எல்லாம் கற்பனை! முன்னோர்கள் எழுதி வைத்த கற்பனை ! என்று உதாசீனம் செய்பவர்கள் நம்மில் உண்டு. சற்றே நிதானமாக நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த மற்றும் கடந்து செல்லும் கட்டங்களைப் பற்றி சிந்தித்தால் நமக்குப் பல  உண்மைகள் புலப்படும்.
 நாம் இவ்வுலகுக்கு தாய் வயிற்றிலிருந்து குழந்தையாக வெளிப்பட்டோம் என்பதையும் அதற்கு முன் கற்பத்தில் பத்து மாதங்கள் இருந்தோம் என்பதையும் நாம் நம்புகிறோம். அதே போல் இன்று வாழும் வாழ்வின் பல கட்டங்களைக் கடந்து நாம் மரணமடைந்த பின்  புதைக்கப்பட அல்லது எரிக்கப்பட இருக்கிறோம் என்பதையும் நம்பத் தயாராக இருக்கிறோம்.
 இக்கட்டங்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய நம் நிலை என்ன?
இறைவேதங்களும் இறைத்தூதர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள்:  நமது வாழ்வின் அடுத்தகட்டம் மண்ணறை வாழ்வு. அடுத்ததாக பயங்கரமான நிகழ்வுகளுக்குப் பின் உலகம் ஒருநாள் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று நல்லவர்களுக்கு சொர்க்கமும் தீயோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும் 
இவற்றை நம் புலன்களால் அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா? அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா? புலன்களுக்கு எட்டும் தகவல்களை சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். அவ்வாறு ஆராயாமல் அப்பட்டமாக மறுப்பவர்களை எப்படி பகுத்தறிவுவாதிகள் என்று அழைக்க முடியும்? நம்மை மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும்? அது மடமையல்லவா? அது மட்டுமல்ல, இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இவற்றை அப்பட்டமாக மறுப்பதும் உதாசீனம் செய்வதும் பேராபத்தல்லவா?
அறிவுபூர்வமான வாதங்கள்
மனிதன் பகுத்தாய்வு செய்து மறுமையை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அறிவுபூர்வமான தன் வாதங்களை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.
நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல கட்டங்களைக் கடந்து கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
 மீணடும் உயிர்த்தெழுதல் பற்றி சந்தேகம் கொண்டோரைப் பார்த்து அவன் சொல்கிறான்;:
22:5 மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
வறண்ட பூமியின் மீது மழை நீர் பொழியும்போது
வறண்ட பூமியின் மீது மழை நீர் பொழியும்போது அது உயிர் பெற்று அதில் புதிதாக தாவரங்கள் செழிப்பதுபோல் மீண்டும் நாம் உயிப்பிக்கப் படுவோம் என்கிறான் இறைவன்
ஸ்ரீ 30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன் நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
உயிரற்ற பொருட்களில் இருந்து உயிருள்ளவை
உயிரற்ற பொருட்களில் இருந்து உயிருள்ளவை வெளிப்படுவதும் உயிருள்ளவற்றிளிருந்து உயிரற்றவை வெளிப்படுவதும் நம் கண்முன்னே அன்றாடம் நடக்கும் அற்புதங்கள். இருந்தும் மீணடும் நாம் உயிர்பிக்கப் படுவோம் என்று படைத்தவன் கூறுவதை நம்பாமல் இருக்க முடியுமா?
ஸ்ரீ 30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரில்..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரில் அவ்வூர் மக்களிடம் தனது சத்தியப் பிரசாரத்தை செய்து கொண்டிருந்த வேளை மறுமை வாழ்வைப் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் இறந்துபோன மனிதர்களின் மக்கிப் போன எலும்புகளைக் கொண்டுவந்து காட்டி நபிகள் நாயகத்திடம் இளக்காரமாகக் கேட்டார்கள்: இவற்றையா நீர் மீணடும் உயிர்பெற்று வரும் என்று சொல்கிறீர்?”.
அவர்களுக்கு பதில் கூறும் விதமாக இறைவன் தன் புறத்திலிருந்து கீழ்கண்ட திருமறை வசனங்களை இறக்கி வைத்தான்:
ஸ்ரீ 36: 77-80. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். 'எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?' என்று கேட்கிறான்
'முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!
அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
தொடர்ந்து மனிதனைச் சிந்திக்கச் சொல்கிறான்:
ஸ்ரீ 36: 81.82 வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன். ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகு' என்று கூறுவதே அவனது நிலை.உடனே அது ஆகி விடும். 
ஆம், அவ்வளவுதான் அவன் ஆகுஎன்றால் ஆகி வந்தவர்கள்தானே நாம்!  இவ்வுலகின் சொந்தக்காரன் அறுதியிட்டு உறுதியாகச் சொல்கிறான்:
ஸ்ரீ 10:4. நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; நம்பிக்கை கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ;ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு
------------------------------- 

இஸ்லாம் என்றால் என்ன?
http://quranmalar.blogspot.in/2012/10/blog-post_25.html

No comments:

Post a Comment