Search This Blog

Saturday, December 17, 2016

மனித வாழ்வில் காலத்தின் கோலங்கள்

Image result for UNIVERSE
திருக்குர்ஆன் வசனங்களை அணுகும் முன்...

ஒரு பரந்த பாலைவனத்தின் பெரும் மணல்பரப்பில் காணக்கிடக்கும் ஒரு சிறு மணல் துகள் போன்றது நாம் வாழும் இந்த பூமி. அந்த பூமியின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் மற்றொரு நுண்ணிய துகள் போன்றவர்கள் மனிதர்கள்.  இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சங்களையும் அவற்றிற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அற்பமான மனிதனோடு தொடர்பு கொண்டு அவனது வாழ்க்கையின் நோக்கம் மற்றும் இன்ன பிற உண்மைகளை உணர்த்துவதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது தூதர்களையும் அவர்கள் மூலமாக வேதங்களையும் அனுப்பி வந்துள்ளான். அவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதனுக்கு வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதராக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலமாக அருளப்பட்ட இறைவார்த்தைகளின் தொகுப்புதான் திருக்குர்ஆன். திருக்குர்ஆனின் ஆசிரியரான இறைவனுக்கும் அற்பமான மனிதர்களாகிய நமக்கும் இடையேயுள்ள அறிவாற்றல் வித்தியாசம், நமது அறிவின் அல்லது புரிதலின் வரம்பு, காலத்தில் மற்றும் வெளியில் நமது வரையறைகள் (time and  space constraints) ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு திருக்குர்ஆனை அணுகுவது அதன் புரிதலை அதிகப்படுத்தும். இப்பிரபஞ்சத்தில் இறைவனின் படைப்பினங்களை பகுத்தறிவு கொண்டு ஆராயும்போது புதுப்புது உண்மைகள் புலனாவது போல இறைவனின் வசனங்களும் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க அவற்றின் ஆழமான கருத்துக்கள் விளங்கும்.

காலத்தின் கோலங்கள் 

இந்தப் பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் பரந்துவிரிந்த கால அளவோடு ஒப்பிடும்போது மனித வாழ்க்கை என்பது மின்மினிப்பூச்சிகள் மின்னி மறைவது போன்ற ஒன்றே. இவ்வாறு தற்காலிகமாக இந்த பூமியின்மேல் தோன்றி மறையும் மனிதன் தன் வாழ்க்கையின் யதார்த்தங்களை சிந்திக்க மறந்து விடுகிறான். இக்குறுகிய கால அளவில் மனிதன் கடந்து செல்லும் கட்டங்களை இரத்தினச்சுருக்கமாக இறைவன் தனது திருமறையில் "காலம்" என்ற 76 ஆம் அத்தியாயத்தில் நினைவூட்டுவதைப் பாருங்கள்:

மனிதன் உருவாகும் முன்பு:

76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

கர்ப்பத்தில் உருவாகும் நிலை:

76:2. கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

இறைத்தூதர்கள் மற்றும் இறைவேதங்கள் மூலம் வழிகாட்டுதல்: 

76:3. நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

இந்தக் காலகட்டம் மனித வாழ்வின் முக்கியமான ஒன்று. இங்கு மனிதன் எடுக்கும் முடிவுகளையும் செயல்பாடுகளையும் பொறுத்து அவனது மறுமை வாழ்வின் நிலை அமையும். இறைவன் கற்பிக்கும் வழிகாட்டுதல்களின் படி அவனது எவல்விலக்கல்களை ஏற்று செயல்படுபவர்கள் மறுமையில் சொர்க்கவாசிகள் ஆகிறார்கள். இறைவன் அனுப்பிய சத்தியத்தை புறக்கணிப்போரும் மறுப்போரும் நரகத்தை சென்றடைகிறார்கள்.

சத்திய மார்க்கத்தைப் புறக்கணிப்போரின் மறுமை நிலை: 

76:4. சத்தியமறுப்பாளர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
(திருக்குர்ஆனின் வேறுபல அத்தியாயங்களில் நரகத்தைப் பற்றிய பயங்கரமான வருணனைகளைக் காணலாம்)

= சத்தியத்தை ஏற்று வாழ்வோருக்கு காத்திருக்கும் தெவிட்டாத இன்பங்கள்: 

76:5. நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்,

76:6. (காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து இறைவனின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

= சொர்க்கவாசிகள் பூமியில் செய்துவந்த காரியங்கள்:

76:7. அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (மறுமை) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.

76:8. மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.

76:9. “உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், இறைவனின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).

76:10. “எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).

= இறையச்சத்தோடும் பொறுப்புணர்வோடும் நடந்துகொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கும் பாக்கியங்கள்:

76:11. எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.

76:12. மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

76:13. அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

76:14. மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.

76:15. (பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.

76:16. (அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.

76:17. மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

76:18.“ஸல்ஸபீல்” என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

76:19. இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

76:20. அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.

76:21. அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

76:22. “நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று” (என்று அவர்களிடம் கூறப்படும்). 
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் நாம் ஏன் பிரிந்தோம்? http://quranmalar.blogspot.in/2012/11/blog-post_7422.html

No comments:

Post a Comment