இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

இதற்குப் பெயர்தான் நாட்டுப்பற்று!

நாட்டின் ஆட்சியாளர்கள் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு சல்யூட் அடிப்பதோடு நாட்டுப்பற்று உள்ளதாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் உண்மை நாட்டுப்பற்று என்பது நாட்டு மக்களை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே! அதற்கு ஆட்சியாளர்களிடம் இறையச்சம் என்பது முதலில் இருக்க வேண்டும். தன்னைத் தட்டிக் கேட்க மேலே இறைவன் இருக்கிறான் என்ற பொறுப்புணர்வே அது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.....' (நூல்: புகாரீ 5200)

இஸ்லாமிய அரசின் ஒரு ஜனாதிபதியாக இருந்த உமர்(ரலி) அவர்களின் வாழ்க்கை இந்தப் பொறுப்புணர்விற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
 உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி ஜனாதிபதி உத்தியோகம் பார்த்தார்கள். ஆனால் பணிச்சுமை காரணமாக  வருவாய் தேடும் வாய்ப்பு குறைந்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு  திர்ஹங்கள் அரசுநிதியில் இருந்து பெற்றார்கள்.

சலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. ஜனாதிபதியைக் காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர். 

 ஒருமுறை ஜனாதிபதி உமர்(ரலி) அவர்கள்  உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் ஜனாதிபதியைக் காண வந்தார். ஜனாதிபதி, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட  ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். ஜனாதிபதி காரணம் கேட்டவுடன் “”சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது? மாவைச் சலித்து மணமுள்ள  எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா?” என்று வினவினார்.
“”சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். அந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன்.  மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளைச் சமைப்பேன்”
ஜனாதிபதியின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் ஜனாதிபதி ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு  நுமைர்(ரலி) அவர்கள்.
அஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் ஜனாதிபதிக்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த உமர் அவர்கள் அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த  பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட ஜனாதிபதி அதன் சுவை மிகுதியை உணர்ந்து, “”அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா?” என்று  கேட்டார். இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். ஜனாதிபதியின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
“”நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா? உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா?  அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது”.

நன்றி: அஜீஸ் அஹ்மது 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

காலிப் பானையும் கலீஃபாவும்-

கதையல்ல நிஜம்
காலிப் பானையும் கலீஃபாவும்-
அரசியல் வாதிகள் கவனத்திற்கு
 இறையச்சமும் மறுமை நம்பிக்கையும் மனித மனங்களில் விதைக்கப் பட்டால் அது உலகில் எப்படிப்பட்ட அற்புத மாற்றங்களை உண்டாக்கும் எனபதை விளங்க உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.
 அறியாமைக் காலத்தில் மக்கா வாசிகளோடு சேர்ந்து நபிகள் நாயகத்தையே கொல்லப் புறப்பட்டவர் உமர் அவர்கள். வழியில் அவர் செவியுற்ற திருக்குர்ஆன் வசனங்கள் அவரது வாழ்க்கையின் திசையை நேர் எதிராக மாற்றியது.   அவருக்குள் படைத்த இறைவனைப் பற்றிய முறையான உணர்வும் மறுமை நம்பிக்கையும் நுழைந்தன. உடன் இஸ்லாத்தை ஏற்றார். தொடர்ந்து நபிகளாரின் ஆருயிர் தோழரானார். நபிகளாரின் மரணத்திற்குப் பின் அவரது  இன்னொரு தோழரான அபுபக்கர்(ரலி)  அவர்களும் அவரை அடுத்து உமர் (ரலி) அவர்களும் மக்களின் ஜனாதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். அவராகப் பதவியைத்  தேடி அலையவில்லை. ஆனால் ஆட்சிப்பொறுப்பு அவரைத் தேடி வந்தது. இஸ்லாமிய வழக்கில் ஜனாதிபதிக்கு கலீஃபா என்று வழங்கப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியேஉங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 3733
  நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே, உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியது பற்றி மறுமையில் இறைவனால் வினவப்படுவீர்கள் என்றல்லவா கற்பிக்கிறது இறை மார்க்கம்.! சாதாரணமான குடும்பப் பொறுப்புக்கே விசாரணை என்றிருக்கும்போது ஆட்சிப் பொறுப்பு என்றால் அலட்சியம் காட்ட முடியுமா? இறையச்சம் உள்ளவர்கள் பதவியில் அமர்ந்தால் நிம்மதியாக உறங்கமுடியுமா? ஆம், மக்களின் குறைகளை ஆராய்வதற்காக இரவுகளை ஊர் உலா செல்வதில் செலவிட்டார் கலீபா உமர்.
    
  கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் அஸ்லம் என்றொரு அடிமை இருந்தார். சில காலத்திற்குப் பிறகு அவருக்கு விடுதலை அளித்துவிட்டார் உமர். தனது இரா உலவுக்குத் துணைக்கு சில சந்தர்ப்பங்களில் இந்த அஸ்லமை துணைக்கு அழைத்துக் கொள்வார் உமர். ஒருநாள் இரவு உமரும் அஸ்லமும் உலா கிளம்பினார்கள்.

மதீனாவைச் சுற்றி கறுப்பு எரிமலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிக்கு ஹர்ராஹ் (harrah) என்று பெயர். மதீனா நகரம் இந்த இரு ஹர்ராஹ்விற்கு மத்தியில் அமைந்துள்ளது. அந்த ஹர்ரத் வாகிம் (Harrat Waqim) எனும் பகுதிக்கு அன்றிரவு உமரும் அஸ்லமும் சென்றார்கள். அங்கு சரார் (Sarar) என்று ஒரு சிறு ஊர். மதீனாவிலிருந்து தோராயமாய் 5 கி.மீ. தொலைவிருக்கும். இந்த சராரை இருவரும் நெருங்கும்போது தொலைவில் நெருப்பு எரிவது தெரிந்தது. பிரகாசமான விளக்கொளி வசதிகள் எதுவும் இல்லாத காலமது. அதனாலேயே இரவில் நெருப்பு விளச்சம் மேலும் துல்லியமாய்க் கவனத்தை ஈர்த்தது. 

அதைக் கண்ட உமர், “ஓ அஸ்லம்! யாரோ பயணிகள் இந்த குளிர்மிக்க இரவில் அங்கு வந்து தங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. வாருங்கள் சென்று பார்ப்போம்என்றார்.

இருவரும் அங்கு விரைந்தார்கள். அருகில் நெருங்கினால், ஒரு பெண்ணும் அவளுடைய சிறு பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர். அருகில் மூட்டப்பட்ட அடுப்பின் மேல் ஒரு பானை இருந்தது. அவளுடைய குழந்தைகளோ அழுது கொண்டிருந்தனர். 

அஸ்லாமு அலைக்கும், ஒளியின் மக்களேஎன்றார் உமர்.

வ அலைக்கும் ஸலாம்என்று பதிலளித்தார் அந்தப் பெண். 

நான் அருகே வரலாமா?” என்று உமர் கேட்க, “ஏதேனும் நல்லது செய்பவராய் இருந்தால் வரவும்; இல்லையெனில் எங்களைத் தொந்தரவு செய்யாமல் சென்று விடவும்,” என்று கறாராய் பதில் வந்தது.

அவர்களுக்கு அருகில் சென்றவர், “இங்கு என்ன நடக்கிறது?” என்று விசாரித்தார்.

இரவும் இந்தக் குளிரும் எங்களை இங்குத் தங்க வைத்து விட்டன.

சரி. இந்தக் குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி அழுகிறார்கள்.


அவர்களுக்குப் பசி.


அந்தப் பானையில் என்ன?” என்றார்.


அதுவா, அதில் வெறும் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். சமையலாகிக் கொண்டிருக்கிறது என்று பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். களைப்பில் சிறிது நேரத்தில் உறங்கி விடுவார்கள்,” என்று அநதப் பெண் கூறியதைக் கேட்டு உமர் ஆச்சரியமடைய, அவர் அடுத்துக் கூறியது அதிர்ச்சியளித்தது.

ஒருநாள் அல்லாஹ் எங்களுக்கும் உமருக்கும் மத்தியில் நீதியளிப்பான்! 

மக்கள் அனைவருக்கும் அக்காலத்தில் கலீஃபாவின் உருவம் அறிமுகமாய் இருந்ததில்லை. அதனால் தாம் பேசிக் கொண்டிருப்பது கலீஃபா உமரிடம் என்று அப்பெண்மணிக்குத் தெரியவில்லை.


அல்லாஹ்வின் கருணை உங்கள் மேல் பொழிவதாக. உமருக்கு உங்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லையேஎன்றார் உமர்.

அதெப்படி? அவர்தானே மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு எங்கள் நிலையை அவர் அறிந்துகொள்ள இயலாவிடில் அவர் என்ன கலீஃபா?”

  இதென்ன எதிர்பார்ப்பு? அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்பா இல்லையா? ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட வறுமையையும் பிரச்னையையும் ஓர் ஆட்சியாளர் தெரிந்து வைத்துக் கொள்ள முடியுமா என்ன? ஆனால் உமர் அந்தப் பெண்ணை கடிந்து கொள்ளவில்லை; அதட்டவில்லை; சமாதானம் சொல்லவில்லை; ‘சரிதான் போம்மாஎன்று உதாசீனப்படுத்தவில்லை. அஸ்லமை நோக்கித் திரும்பி இரண்டே வார்த்தை சொன்னார். வா போகலாம்.


  ஓடினார்கள்! கலீஃபாவும் அவரது தோழரும் அந்த இருள்படிந்த இரவில் 5 கி.மீ. ஓடினார்கள்! எங்கே? கோதுமையும் இதர உணவுப் பொருட்களும் சேமித்து வைக்கும் அரசாங்கக் கிடங்கு ஒன்று இருந்தது. அந்தக் கிடங்கிற்கு ஓடினார்கள். ஒரு சாக்குப் பையில் கோதுமையையும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பையும் எடுத்துக் கொண்டார் உமர்.


அஸ்லம் இங்கு வா! இதை என் தோளில் ஏற்று!

அமீருல் மூஃமினின்! அதை இங்குக் கொடுங்கள், நான் தூக்கி வருகிறேன்,” என்றார் அஸ்லம்.


  கோபம் வந்துவிட்டது உமருக்கு. ஏனய்யா? மறுமையில் நீயா வந்து என்னுடைய சுமையை சுமப்பாய்?” என்று அஸ்லத்தைக் கடுமையாய் அதட்ட மறுபேச்சு பேசாமல் அஸ்லம் மூட்டையைத் தூக்கி கலீஃபாவின் தோளில் வைத்தார். இப்பொழுது மீண்டும் 5 கி.மீ. தொலைவில் உள்ள சரார் நோக்கி ஓடினார் உமர். பின்னாலேயே மூச்சிரைக்க அஸ்லமும் ஓடினார்.

  அந்தப் பயணிகள் தங்கியிருந்த இடத்தை அடைந்தவர், சுமையைத் தரையில் இறக்கி வைத்துவிட்டு, சிறிதளவு கோதுமையை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து, “இந்தாருங்கள் இதைப் புடைத்துக் கொடுங்கள், நான் சமைக்கிறேன்என்று சொல்லிவிட்டு மண்டியிட்டுக் குனிந்து பானையின் கீழிருந்த அடுப்பு நெருப்பை ஊதி ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்துவிட்டார். எழும்பிய புகை அவரது தாடியின் ஊடே புகுந்து வெளிவருவதைப் பார்த்துக் கொண்டு நின்றார் அஸ்லம்.

 பிறகு அந்தக் கோதுமையைச் சமைத்து, அந்தப் பெண்ணிடம் பானையை எடுத்துச் சென்று, “ஏதாவது பாத்திரம் எடுத்து வாருங்கள்,” என்றார்.

அந்தப் பெண் ஒரு பாத்திரத்தை எடுத்துவர, அதில் சமைத்ததைப் பரிமாறியவர், “நான் இதை பாத்திரத்தில் பரப்பி சூடு தணிய வைக்கிறேன்; தாங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுங்கள்.

அந்தச் சிறுவர்கள் உண்ண உண்ண, அவர்கள் வயிறு நிரம்பும் வரை அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மீத உணவையும் மற்றவற்றையும் அவர்களுக்கு அளித்துவி்டடு உமர் எழ அஸ்லமும் எழுந்து கொண்டார். அப்பொழுது அந்தப் பெண், “அல்லாஹ் உங்களுக்கு நல்ல கைம்மாறு அளிப்பானாக. அந்த அமீருல் மூஃமினீனைவிட நீங்கள்தான் கலீஃபாவாய் இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர்என்றார் நெகிழ்ச்சியுடன்.


நல்லது உரையுங்கள். அமீருல் மூஃமினீனிடம் நீங்கள் செல்ல நேர்ந்தால், அல்லாஹ் நாடினால் அங்கு என்னைக் காண்பீர்கள்என்றார் உமரும்.

நடக்க ஆரம்பித்தார்கள் கலீஃபாவும் அஸ்லமும். சிறிது தொலைவு சென்று அவர்களை நோக்கித் திரும்பி அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றார் உமர். இன்னும் என்ன?” என்று அஸ்லம் விசாரிக்க உமர் பதில் அளிக்கவில்லை. அங்கேயே அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பசி அடங்கிய சிறுவர்கள் கட்டிப்பிடித்து உருண்டு விளையாடி, பின்னர் உறங்கும் வரை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு எழுந்து எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்என்று கூறியவர், “ஓ அஸ்லம்! பசி அந்தச் சிறுவர்களைத் தூங்க விடாமல் அழ வைத்துவிட்டது. அவர்கள் அமைதியடைந்து தூங்கும் வரை நான் கிளம்பிச் செல்ல விரும்பவில்லை. வாருங்கள் போகலாம்!

இந்தச் சேவையை எப்படி வர்ணிப்பது? எத்தகைய இலவச மக்கள் உதவித் திட்டத்திற்குள் இதை வரையறுப்பது? உதவி என்ற பெயரில் தூக்கியெறியும் சில்லறைக்கெல்லாம் அரசாங்கமும் தலைவர்களும் செய்தித்தாள்களில் முழுப் பக்கத்திற்கு விளம்பரம் தேடும் இக்காலத்தில, மூட்டைத் தூக்கி, சமைத்து, பரிமாறி, சேவை செய்துவிட்டு தாம் யாரென்பதை சூசகமாய்க் கூடத் தெரிவிக்காமல் திரும்பும் தலைவரை என்ன சொல்லிப் புகழ்வது? நெஞ்சமும் சகலமும் இறை பக்தியில், இறை அச்சத்தில் மூழ்கி இறைவனுக்காக வாழ்ந்து இறைவனுக்காக சேவை புரிந்தவர் அவர்.


ஆம், அவர்தாம் உமர் (ரலி)!

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

நாட்டைக் காப்போம்! நாட்டு மக்களை நேசிப்போம்!

Related image
நாட்டுப் பற்று என்பது என்ன?

 நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பது மட்டுமல்ல, மாறாக அந்நாட்டைச் சேர்ந்த மக்களை உளமார நேசிப்பது என்பதே உண்மை. நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும்  நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.
 ஆனால் இன்று சில சுயநல ஆதிக்க சக்திகள் ஒரு சில மாயைகளை உருவாக்கி அவற்றை நாட்டுப்பற்றாக சித்தரித்து நாடகமாடுகிறார்கள். பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள் இயற்றிய பாடல்களை உருவிடுவதும், தேசத்தின் கொடியை பலர் காண வணங்குவதும் மேடைகளில் வீரவசனங்கள் பேசுவதும் எல்லாம் நாட்டுப்பற்றாக சித்தரிக்கப் படுகிறது. இவற்றில் எந்த அளவுக்கு ஆத்மார்த்தம் உள்ளது என்பதையும் இவற்றில் பெரும்பாலானவை   விளம்பரத்துக்காக செய்யப்படுபவையே என்பதையும் நாம் அறிந்தே இருக்கிறோம்.
 நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது  என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!
 இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில்  வரவேண்டுமானால்  அங்கு இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத்  தேவைகளாகும்.
 நம்மைப் படைத்த இறைவன் நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கைத் திட்டத்திற்கே அரபி மொழியில் இஸ்லாம் என்று வழங்கப் படுகிறது. அதை வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் அவர்கள் வாழும் நாட்டை அதாவது நாட்டு மக்களை நேசிக்காமல் இருக்கமுடியாது.
 இன, மொழி, நிற, மத வேற்றுமைகளை மறந்து மனிதகுலம் அனைத்தையும் தங்கள் சகோதரர்களாக பாவிக்கவேண்டும் என்பது இங்கு இறைவன் கற்பிக்கும் அடிப்படைப் பாடமாகும்.
 மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம். (திருக்குர்ஆன் 49: 13)
 மேலும் நாட்டு மக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.
 'மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்'என்பதும் 'மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்'என்பதும் நபிமொழிகள்.
 இஸ்லாம் முன்வைக்கும் மறுமை நம்பிக்கை - அதாவது பூமியில் நன்மைகளை நடப்பாக்கவும் தீமைகளைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை. அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை - இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு அலாதியான துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது. நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது.இதை மிஞ்சும் நாட்டுப்பற்றை எங்கேனும் காணமுடியுமா? ?


‘சுதந்திர' இந்தியாவின் இன்றைய நிலை:
 நம் தாய்த்திருநாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வேளையில் நாட்டுமக்கள்  சந்தித்துக் கொண்டு இருக்கும் அபாயங்களை அடையாளம் கண்டு அதைத் திருத்த வழியுண்டா என்று ஆராய்ந்து செயல்படுவது நாட்டுப்பற்று கொண்ட  ஒவ்வொருவர் மீதும் கடமையாகிறது.
= கருக்கொலை, சிசுக்கொலை, என்று தாம் பெற்ற பிள்ளைகளைக் சகஜமாக தாமாகவே கொன்றொ ழிக்கும் பெற்றோர்கள்...
= பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், பெருகிவரும் முதியோர் இல்லங்கள், கருணைக் கொலை என்ற பெயரில் நடக்கும் முதியோர் கொலைகள்...
= காதலர்களைக் கைப்பிடித்து போற்றி வளர்த்த பெற்றோரை தூக்கி எறிந்து செல்லும் பிள்ளைகள். காதல் என்ற பெயரில் காமப்பசி தீர்த்துவிட்டு கர்ப்பம் தரித்தபின் கைவிட்டு ஓடும் காமுகர்கள்...
= மறுபுறம் வட்டி, இலஞ்சம், ஊழல், கொலைகள், கொள்ளைகள், அடக்குமுறைகள், வன்முறைகள் போன்ற அயராது தொடரும் குற்றங்களை இனி தடுக்கவே முடியாது என்று முடிவுகட்டி ஒதுங்கியும் பதுங்கியும் பயந்தும் பணிந்தும் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டு வாழ்கிறது சமூகம்! பலரும் வாழ்க்கையையே வெறுத்த நிலை!

தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கை:
 தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் NCRB அறிக்கைப் படி நாளொன்றுக்கு 371 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் ஏறுமுகமாகவே உள்ளது.  நாளொன்றுக்கு 95 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதைத் தவிர வரதட்சணைச் சாவு, மதுபோதையால் ஏற்படும் குற்றங்கள், கொலை, கொள்ளை, திருட்டு இன்னும் இவை போன்று நாட்டில் நடக்கும் பற்பல குற்றங்களின் எண்ணிக்கைகள் ஏறுமுகமாக இருப்பதை புள்ளிவிவரங்கள்  நமக்குத் தெரிவிக்கின்றன.
 ஏறத்தாழ 94 விழுக்காடு பாலியல் குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகவும் நெருக்கமான நபர்களாலேயே நேர்கின்றன என்பதுபோன்ற அவமானகரமான விவரங்களையும் அவை தாங்கி நிற்கின்றன.

இவை போக...
= அதிக மகசூல் மூலம் கொள்ளை லாபம் காண ஆட்கொல்லி இரசாயனங்களை எருவாக விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்! மனிதனுக்கு நோய்களை உருவாக்கும் வைரஸ்களைப் பரப்பி அவற்றை எதிர்கொள்ளும் மருந்துகளையும் உற்பத்தி செய்து உலகளாவிய கொள்ளை நடத்தும் மேற்கத்திய கொடுரங்கள்!
 இன்னும் அவலங்களின் பட்டியல் நீளமானது ....!

 இனம், மொழி, நிறம், இடம் இவற்றின் பெயரால் அப்பாவி மக்களைப் பிரித்தாண்டு  மக்களைக் கொள்ளை அடிக்கும் சுயநல தலைவர்களும் அரசியல்வாதிகளும் இது பற்றி என்றுமே கவலை கொண்டதில்லை. நாடு எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் வருமானமும் புகழும் ஆதிக்கமும் தடைபடாது தொடரவேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். பெரும் பாவங்களான மது, விபச்சாரம் இவற்றை சட்டபூர்வமாக்கி அதன் மூலமே தங்கள் வருமானத்தையும் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ளும்  இக்கொடியவர்கள்தானே நாட்டின் மிகப்பெரிய எதிரிகள்?
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்: 'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே, அவரிடமும் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும்.... (நூல்: புகாரி, முஸ்லிம்)

தன் கையே தனக்கு உதவி!
 ஆம், சகோதர சகோதரிகளே, இந்நிலைமை மாறி நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற ஒரேயொரு வழிதான் உள்ளது. அதுதான் நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளுதல் என்ற வழி. இன்று தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் ஒழுக்கம் என்பது இல்லாமல் போனதுதான் நாட்டில் தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகுவதற்கும் மக்கள் விரக்தியின் விளிம்பை அடைந்திருப்பதற்கும் மறுக்கமுடியாத காரணம். 

 வாருங்கள், ஒழுக்கம் விதைப்போம்..
 இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.
  1. ஒன்றே குலம்:
 மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். .. அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
 அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே  என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
 இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
 படைத்தவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது. சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வௌ;வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன.  இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.

3. இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்.
 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
 அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும்.

 ஆக இந்த உண்மைகளை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும். மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்குகியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.
தொடர்புடைய பதிவுகள்:

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்கு உள்ளாகிறது?- விடியோ  

இறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்?