Search This Blog

Tuesday, January 27, 2015

ஈயிடம் இழந்ததை மீட்க வழியண்டா?

ஈயிடம் இழந்ததை மீட்க வழியண்டா?
இறைவனின் படைப்பினங்கள் ஒவ்வொன்றும் இறைவனின் உள்ளமையையும் அவனது வல்லமையையும் எடுத்துக்கூறும் அத்தாட்சிகளாக விளங்குகின்றன. அவை ஒவ்வொன்றும் தன்னகத்தே பற்பல அற்புதங்களையும் திட்டங்களையும் செயற்திறனையும் தாங்கி நிற்கின்றன. நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி, போன்ற சிறு உயிரினங்களும் இதற்கு விலக்கல்ல. அப்படிப்பட்ட ஓர் உயிரினமான ஈயை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான் இந்த வசனத்தில்...
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது; இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும்,தேடப்படுவோனும் பலஹீனர்களே!(திருக்குர்ஆன்.22:73)
திருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்த இறைவன் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக தனது தூதர் மூலம் கற்றுத்தரும் அறிவுரைகளின் தொகுப்பாகும். மனிதனை சிந்திக்கவைத்து அவன் உண்மைகளைப் பகுத்தறியட்டும் என்பதற்காக அவனது படைப்பினங்களின் உதாரணங்கள் பலவற்றை திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான். பாமரர்களையும் படித்தவர்களையும் அவரவர் பாணியில் சிந்திக்கவைத்து உண்மைகளை உணரத்தூண்டுவது திருக்குர்ஆனின் மற்றொரு சிறப்பாகும்.
கற்றோரும் கல்லாதோரும் சிந்திக்காத காரணத்தால் செய்துவரும் ஒரு – போலிதெய்வ வழிபாடு என்ற - பாவத்தை அவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்த இந்த வசனம் நவீன அறிவியல் கண்டுபிடித்த ஒரு உண்மையைத் தாங்கி நிற்கிறது.
ஈ பற்றிய உண்மைகள்
சிக்கல் நிறைந்த (complicated) உடலமைப்புக் கொண்ட ஈயைப் பற்றிய விபரம் திருக்குர்ஆன் இறங்கிய ஆறாம் நூற்றாண்டு மக்களுக்கு நிச்சயமாக தெரிய வாய்ப்பில்லை. அது எவ்வாறு உணவு உட்கொள்கிறது என்பதும் எவருக்கும் தெரியாது. இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள் உள்ளன.
ஒரு ஜோடி இறக்கைகொண்ட ஈயானது நொடிக்கு 1000 தடவை தன் சிறகை அடிக்கும் தன்மை கொண்டது. மணிக்கு 5 கி.மீ. பறக்கும் திறனுடையது. அதன் ஒவ்வொரு கூட்டுக் கண்களிலும்(compound eye) சுமார் 4000 லென்ஸ்கள் உள்ளன. தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே உணவுகளைத் தேடுகின்றன. ஈக்களுக்கு உணவை மென்று அரைத்துத் தின்னும் பற்கள் கிடையாது. ஆகவே ஈயானது திட உணவுப்பொருள்களை நேரடியாக வாயில் வைத்து மென்று தின்ன முடியாது.
திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் உள்ள (Proboscis) ஸ்பான்ஜ் போன்ற உறுப்பால் ஒற்றி உறிஞ்சிக்கொள்ளும். திட உணவாக இருப்பின் தனது உமிழ்நீரை அப்பொருளில் உமிழ்ந்து அதைக்கரைத்து நீர்ம நிலையில் உறிஞ்சி நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது. இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் பொருள்களை பெரிதாக்கிக்காட்டும் மைக்ராஸ்கோப் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததன் பின்னரே அறிய முடிந்தது.
ஈ எவ்வாறு திட உணவுப் பொருள் திரவமாக மாற்றி எடுத்துக்கொள்கிறது என்பதை இன்றைய அறிவியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஈ ஒரு உணவுப்பொருளில் அமர்ந்து ஒரு வித (நொதியை) எச்சிலை உமிழ்ந்து திடப்பொருளை திரவமாக்கி உறுஞ்சி, நேரடியாக வயிற்றுக்கு அனுப்பி விட்டால் நாம் அப்பொருளை மீண்டும் கைப்பற்ற முடியாது. இதைத்தான் இறைவன் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது;” என்று கூறுகிறான்.

ஆறாம் நூற்றாண்டின் பாலைவனத்துப் பாமர மக்களுக்கும் இந்த நூற்றாண்டின் அறிவியல் முன்னேற்றம் கண்டு நிற்கும் அறிவு ஜீவிகளுக்கும் ஒரே வசனம் மூலம் அவரவர் அறிவுமுதிற்சிக்கேற்ப சிந்திக்க வைக்கிறதென்றால் இதனை இயற்றியவன் இறைவனன்றி வேறு யார்?

No comments:

Post a Comment