இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 மே, 2015

இறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்?

நாட்டில் நீதியும் நியாயமும் கேலிக்குரியதாவதற்கு முக்கிய காரணம்  சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதைப் பற்றி தெளிவான அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்களே! பலதரப்பட்ட மக்களும் பல்வேறு விதமான ஜீவராசிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இவ்வுலகில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவற்றை நீதமாகப் பங்கிடக் கூடிய அதிகாரமும் அறிவும் ஆற்றலும் இவ்வுலகின் அதிபதியாகிய இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பது தெளிவு!
அந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை. அதுவே நமது இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது. அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு தொகுத்து வழங்கும் சட்டங்களுக்கே இறை சட்டங்கள் அல்லது ஷரீஅத் என்று வழங்கப்படும்.

இறைவனின் வேதம் மற்றும் அவனது தூதரின் முன்மாதிரி செயல்முறை விளக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவதே ஷரீஅத். 

ஷரீஅத்தின் நோக்கம் என்ன
  1. மனித வாழ்வில் நன்மைகளை - அதாவது மனித குலத்துக்கு தொன்று தொட்டு எவையெல்லாம் நன்மையானவையாக, நலம் பயப்பவையாக இருந்து வந்துள்ளதோ அந்த நன்மைகள், சிறப்புகள், வளங்கள், நலங்கள் எல்லாவற்றையும் -  நிலை நிறுத்துவது
  2. மனித வாழ்விலிருந்து தீமைகளை – அதாவது  மனித குலத்துக்கு  தொன்றுதொட்டு எவையெல்லாம் தீமையானவையாக, தீங்கிழைப்பவையாகக் இருந்து வந்துள்ளதோ அந்தத் தீமைகள், அவலங்கள், அழுக்குகள், கசடுகள் எல்லாவற்றையும் -அகற்றித் தூய்மைப்படுத்துவது.
  
 ஷரீஅத் அளிக்கின்ற வரையறைகளும் சட்டங்களும் நமது தனிப்பட்ட வாழ்வையும், குடும்ப வாழ்வையும் வாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவி இருக்கின்றன.
 வணக்கங்கள், தனிநபர் நடத்தை, ஒழுக்கம், பழக்க வழக்கம், நடையுடை பாவனை, குடும்ப வாழ்வு, உண்ணுதல், பருகுதல், சமூகத் தொடர்புகள், பொருளாதார நடைமுறைகள், குடிமக்களின் உரிமைகள், நீதித்துறை, அரசியல் என எல்லாத் துறைகளுக்கும் நெறிமுறைகளை வகுத்துத் தருகிறது ஷரீஅத்.

ஷரீஅத் தொடாத வாழ்வியல் துறையே இல்லை எனலாம். எல்லாத் துறைகளுக்குமே எது நன்மையானது, எது தீமையானது என்பதையும், எது இலாபத்தை தரக் கூடியது, எது இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும், எது தூய்மையானது எது தூய்மையற்றது என்பதையும் ஷரீஅத் தெள்ளத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கோடிட்டுக் காட்டி விளக்கி இருக்கிறது. ஒரு தூய்மையான வாழ்வுக்கான வரைபடத்தை அது நமக்குத் தருகிறது.
இன்று நம் நாட்டை அலைக்கழிக்கும் சட்டங்கள் மனிதர்களால்  இயற்றப்பட்டவையும் பலமுறை திருத்தப்பட்டவையும் ஆகும். ஆனால் இறைவன் வழங்கும் சட்டங்கள் தொலைநோக்குள்ளவையும் மனிதகுலத்தின் அனைத்து அங்கங்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் படைப்பினங்களுக்கும் பொருத்தமானவையும் ஆகும். அவை நுண்ணறிவாளனும் நீதிமானுமான இறைவனால் வழங்கப்படும் சட்டங்கள் ஆகும்.

உதாரணமாக இறைசட்டங்கள் நடைமுறைக்கு வந்தால்....
§  சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.
§  செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்)
§  . வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைக்கு வந்து விட்டாலே நாட்டின் வறுமை ஒழிந்து நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து விடும் என்பதை சிந்திப்போர் அறியலாம்.
§  நிலச்சுவான்தார்கள் தமது சொத்துக்களை முடக்கியபடி இருக்க அனுமதிக்கப் படாது.  ஒரு நிலம் மூன்றுவருடத்திற்கு மேல் தரிசாக கிடக்க அனுமதிக்காது. குத்தகை  முறை தடை செய்யப்படும்.  அவ்வாறு இருக்குமாயின்  அரசு அதனை  உள்வாங்கி  பிரித்துக் கொடுக்கும்.
§   சமூக நீதி நிலைநிறுத்தப்பட்டு மதம், ஜாதி, மொழி, இடம் அடிப்படையிலான பாகுபாடுகள் இல்லாமல்  மக்கள் எல்லாருக்கும் சமமான வேலை வாய்ப்பும், தொழில் மற்றும் வணிக வாய்ப்பும், கல்வி உரிமையும் வழங்கப்படும். சட்டங்கள் மூலம் குறிப்பிட்ட பிரிவினரின் நலன்களை மட்டும் உறுதிப்படுத்தும் நிலை மாறி மக்கள் எல்லாருக்கும் எல்லாவித உரிமைகளும் வாய்ப்புகளும் பாரபட்சமின்றி வழங்கப்படும்.
§   சமூகத்தில் ஏழைகள், முதியவர்கள், தேவையுள்ளவர்கள், அனாதைகள், விதவைகள், நாதியற்றவர்கள் போன்ற நலிவுற்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பைத்துல்மால் - (அரசுக் கருவூலம்) அமைப்பு திறம்படச் செயல்படும். பஞ்சம், பட்டினி, இயற்க்கைச் சீற்றங்கள் போன்ற ஆபத்தான சூழலில் அனைத்து மாநிலங்களின் வளங்களும் உரிய முறையில் அதிகாரப்பூர்வமாக திருப்பப்படும்.
§  பண்புள்ள குடிமக்களை உருவாக்க பயனுள்ள கல்வியும் ஆளுமையை வளர்க்கத் தேவையான பயிற்சிகளும் இளம் பருவத்தில் இருந்தே புகட்டப்படும். நன்மை - தீமை நியாயம் - அநியாயம் போன்றவை பற்றிய விழிப்புணர்வு கற்கும் கல்வியோடு இணைந்து ஊட்டப்படுவதால் மாணவர்கள் கற்கும் கல்வி ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படும். அவை அழிவுகளுக்கு பயன்படாது.
§  கற்பனை பாத்திரங்களின் பெயராலும் மதங்களின் பெயராலும் நாட்டுவளங்களும் அரசு இயந்திரங்களும் வீணடிக்கப்படுவதும் மக்கள் அச்சுறுத்தப்படுவதும் முடிவுக்கு வரும்.
§  தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கு உரிய கூலி முறையாக தாமதமின்றி கொடுக்கப்படும். பொதுவாக இதுபோன்ற மனித உரிமைகள் அனைத்தும் முறைப்படி பேணப்படும். வரம்பு மீறல்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
§  குடும்ப உறவுகளையும்  அமைதியையும் சீர்கெடுக்கும் விபச்சாரம் மது போதைப்பொருட்கள், சூதாட்டம்  போன்றவை தடை செய்யப்படும்.
§  கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்குற்றங்களில் ஈடுபடுவோரை திருத்த முதற்கண் உரிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கப்பாலும் மீறுவோர் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.
§  பெண் இனத்தைப் பாதுகாக்க அவர்களுடைய கல்வி பெறும் உரிமை, மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மஹர் என்னும் மணக்கொடை பெறும் உரிமை, சொத்துரிமை, போன்றவை சட்டரீதியாக வலுவாக்கப்படும். வரதட்சணை சட்டவிரோதமாகும்.
§  சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அவதூறு மற்றும் வதந்திகளைப் பரப்பும் மனிதர்களும் ஊடகங்களும் தங்கள் குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது. ஊர்ஜிதம் செய்யாமல் பரபரப்புக்காக பரப்பபடும்  செய்திகளுக்கு பரப்பியவர்கள் மீது சட்டம் பாயும்.

இன்னும் இவை போன்ற பல புரட்சிகளும் அங்கு உடலெடுக்கும். ஷரீஅத் என்பது நீதி, நியாயம் மட்டுமல்ல அதை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் செழிப்புக்கான  வழிகள் அங்கு தானாகவே திறக்கின்றன. சட்டம் ஆளும் என்பதை விட மனித மனங்களின் ஒருமைப்பாடும் ஈடுபாடும் நாட்டு மக்களின் பொறுப்புணர்வும் அங்கு ஆட்சி செய்யும் என்பதே உண்மை! 

செவ்வாய், 12 மே, 2015

நீதி ஏன் கேலிக்குரியதாகிறது?

Image result for justice
அறவே வலுவில்லாத சட்டங்கள்:
நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான  முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த முக்கிய காரணம் நமது சட்டங்களின் வலுவின்மையே! சரி எது தவறு எது நன்மை எது தீமை எது நியாயம் எது அநியாயம் எது என்பதை தீர்மானிக்கும் வேலையை மனிதனே மேற்கொள்வது பெரும் குழப்பங்களுக்குக் காரணமாகிறது. அதன் காரணமாக பலமுறை சட்டங்கள் மாற்றபடுவதும் சிலருடைய சுயநல தேவைகளுக்காக சட்டங்கள் வளைக்கப்படுதும் நடக்கின்றன. அதனால் நீதி, நியாயம் என்பவை கேலிக்குரியவை ஆகின்றன. எந்தக் கொடிய குற்றத்தைச் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியமும் குற்றவாளிகளுக்கு உண்டாகின்றன. குறிப்பாக அதிகாரத்தில் உள்ளோர் அசைக்கமுடியாத ஆதிக்கம் பெற்று விடுகின்றனர்.

யார் தீர்மானிப்பது?
முதலில் இங்கு சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதை தெளிவாக வரையறுத்து அறிந்தால்தான் சட்டம் என்பதை யாரும் இயற்றமுடியும். அந்த அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்கள் கண்டிப்பாக குறைபாடுள்ளதாகவே இருக்கும் என்பது தெளிவு!  

 நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். நம்மில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் முதியோரும் ஏழைகளும் செல்வந்தர்களும் அறிஞர்களும் பாமரர்களும் உழைப்போரும் அதிபர்களும் என்று பலதரப்பினரும் உள்ளோம். மறுபுறம் நம்மைச்சுற்றி சிறிதும் பெரிதுமான கண்ணுக்குத் தெரிந்ததும் தெரியாததுமான பல ஜீவராசிகளும் உள்ளன. அனைவருக்கும் இங்கு உரிமைகள் உள்ளன. ஒருவருக்கு தவறாகவோ  பாவமாகவோ படுவது மற்றவர்களுக்கு தவறாகவோ  பாவமாகவோ படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சரி எது தவறு எது என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?

சற்று சிந்தித்துப்பாருங்கள்...

= பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலை சரி என்றோ தவறு என்றோ நாம் தீர்மானிக்க முடியுமா
= அல்லது ஒரு சிலர் கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா
= அல்லது நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா
= அல்லது நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும் ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? 
= king is always right! –(அரசன் எப்போதும் சரியே!) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம் படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா? = அல்லது நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா? 

நன்மை தீமைகளைப் பிரித்தறிய தெளிவான அளவுகோல்

இப்படி எந்த வழியில் நாம் சரி-தவறு அல்லது நன்மை தீமை அல்லது பாவம் புண்ணியம் பற்றி முடிவெடுத்தாலும் நமக்கு மிஞ்சுவது குழப்பமே என்பதை உணரலாம். காரணம் அது சார்புடையதாகவே இருக்கும் என்பது உறுதி! சிற்றறிவு கொண்ட மனிதர்களின் அறிவின் அடிப்படையில் அவை ஆனதால் கண்டிப்பாக குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். 

எனவே இந்த விடயத்தில் குழப்பமற்ற தெளிவான முடிவுக்கு வர ஒரே வழிமுறை இதுதான்:
யார் இவ்வுலகிற்கும் அதில் உள்ளவற்றிர்க்கும் சொந்தக்காரனோ அதிபதியோ அவன் எதை நமக்கு நன்மை என்றும் அல்லது நமக்குத் தீமை என்றும் சொல்கிறானோ அதுவே உண்மையிலும் உண்மை. அவன்தான் இப்பெரண்டம் அனைத்தையும் அவற்றில் உள்ள சிறிதும் பெரிதுமான அனைத்து படைப்பினங்களையும் படைத்து இயக்கிப் பரிபாலித்து வருபவன். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் பற்றிய முழுமையான அறிவுள்ளவன். அவனது அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே. எனவே நம் பரிபாலகன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை.
அது மட்டுமல்ல, இந்தக் குறுகிய தற்காலிகமான வாழ்வு என்ற  பரீட்சைக் களத்தில் அந்த இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது. அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது!
ஆக, அந்த இறைவனுக்கு மட்டுமே நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற முழுமையான அறிவு உள்ளது. அவனுக்கு மட்டுமே எது புண்ணியம் எது பாவம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறலாம். மறுமை வாழ்விலும் அவன் நமக்குப் பரிசாக வழங்கும் சொர்க்கத்தை அடையலாம்.
எனவே நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சட்ட சிக்கல்களில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அளவுகோலை அமைத்துக் கொள்வதும் இறைவன் தரும் சட்டங்களை அமுல் படுத்துவதும் ஆகும்

மறுக்க முடியுமா மறுமை வாழ்வை? 
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

திங்கள், 11 மே, 2015

ஆன்மீகத்தின் அடிப்படை மந்திரம்!

 இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இவ்வுலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்த இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்தது. ஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம். மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும். அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், நான் நன்மை செய்தால் அவன் எனக்கு பரிசளிப்பான், குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும். 
 அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு 'இறைவன் ஒருவனைத் தவிர வேறில்லை' என்ற அடிப்படை மந்திரத்தை போதித்தார்கள். அவர்கள் வரிசையில் இறுதியாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதையே போதித்தார்கள். அதுவே இன்று அரபு மொழியில் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று வழங்கப் படுகிறது.
இறைவன் ஒருவனே!
 முதலில் இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது?
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு  இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.
திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:
'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்.)

இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
59:22. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
59:24. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே  துதி செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

வணக்கத்துக்கு உரியவன் யார்?

 மனிதர்களே! நீங்கள் உங்களையும்  உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.  (அல்குர்ஆன் 2:21)

அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்  3:6).

 இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.  

வியாழன், 7 மே, 2015

தற்கொலை தவிர்ப்பீர்! தன்னம்பிக்கை வளர்ப்பீர்!

Related image

தற்கொலைகளின் சீசன்!

தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகம் வெளியிடும் தகவல் படி இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 பேர் அதுவும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதும் இதில் 80 சதவீதம் பேரும் படித்தவர்களே என்பதும் நாம் அறியும் அதிர்ச்சித் தகவல்களாகும்.
கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளை வளர்க்க படாதபாடு படுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் முன்னேறவேண்டும் என்பதற்காக கடன் வாங்கியாவது பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்களைக் கட்டி  அவர்களைப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது .... இடிபோன்ற நிகழ்வுகள்! ... யாரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அதுவரை வளர்த்த ஆசைகளில் எதிர்பார்ப்புகளில் மண்ணை வாரிப்போட்டது போன்று பிள்ளைகளின் தற்கொலைகள்! .... என்ன காரணம்? .... சிலருக்கு தேர்வில் தோல்வியால் அவமானம், சிலருக்கு வகுப்பில் மற்ற மாணவனைவிட மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! சிலருக்கு ஒரு பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் அவமானம்! ... இப்படி பல காரணங்கள்! வாழ்வென்றால் அவ்வளவுதானா? அவ்வளவு அலட்சியம்!! அவ்வளவு காலம் இராப்பகலாக படித்ததும் பாடுபட்டதும் இந்த ஒரு முடிவிற்காகவா? படித்தும் அவர்களுக்கு அறிவு என்பது ஏன் வளராமல் போயிற்று? என்ன காரணம்?

பிள்ளைகளுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி, ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லை. அதை அறிய அவர்கள் முற்பட்டதும் இல்லை. கல்விக்கூடங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அதுபற்றிய கவலைகள் சிறிதும் இல்லை! ... தங்கள் வருமானம் பாதிக்கப் படாதவரை.... தங்கள் ஆட்சிக் கட்டில் ஆட்டம் காணாதவரை ... அவர்கள் கவலைப்படப் போவதும் இல்லை!

உங்கள் பிள்ளைகள் அல்லது வேண்டியவர்களுக்கு இது போன்றவை நேராமல் இருக்கவேண்டுமானால் வாருங்கள் இதைத் தொடர்ந்து படியுங்கள். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் இறைவன் அனுப்பிய இறுதி வேதம் திருக்குர்ஆன் மற்றும் இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்களை ஆதாரமாகக்கொண்டு சொல்லப்படுபவை. இவற்றை அனைத்து மதத்தைச் சார்ந்த அன்பர்களும் தங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்த கையாளலாம். இவற்றுக்குப் பகரமான மாற்றுத் திட்டம் கைவசம் இல்லாத பட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட நாத்திகர்களும் இன்ன பிற கொள்கைவாதிகளும் இதைப் பற்றி ஆராயலாம்!

கல்வி கற்பிப்பதோடு நாம் அடிப்படையாக இவ்வுலகைப் பற்றிய உண்மைகளையும் குழந்தைகளுக்கு உரிய பருவத்தில் உணர்த்தவேண்டும். தவறினால் மேற்கூறப்பட்ட விளைவுகள் ஏற்படுவது இயல்பே! மேலும் கல்வி கற்பிப்பதன் முக்கிய நோக்கம் அவர்களை விஞ்ஞானிகளாக ஆக்குவது என்பதை விட பண்புள்ள மனிதர்களாக ஆக்குவதுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

= மனித வாழ்வின் உண்மை நிலை
 மனித வாழ்வு இன்பம்துன்பம் என்ற இரு பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இரு பகுதிகளும் மாறி மாறி வருவது பிரபஞ்ச விதியும் கூட. மனிதன் இயல்பிலேயே  இன்பத்தை விரும்புகிறான். துன்பம் கஷ்டம் பிரச்சினைகளை  வெறுக்கிறான். எனினும் பிரபஞ்ச விதிக்கு அவன் உட்பட்டே வாழவேண்டியிருக்கிறது.
 இன்று வாழும் வாழ்வு மட்டுமே வாழ்வு, இதுதான் எல்லாமே, இதற்குப் பிறகு ஒன்றும் இல்லை மனித வாழ்க்கைக்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை என்ற குறுகிய மனப்பான்மையில் வாழ்வோருக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும் தன்னை சூழ்ந்து கொள்கின்றபோது மனமுடைந்து போகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.

ஆனால் இன்று நாம் வாழும் பூமி என்பது பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு துகள் போன்றது. இதன்மேல் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று விரிவாக சிந்திப்பவர்கள் இறைவன் கூறும் உண்மைகளைக் கண்டறிகிறார்கள். சோதனைகளும் துன்பங்களும் இவ்வாழ்வின் இன்றியமையாத பகுதிகளே என்பதை உணர்கிறார்கள் அதனால் தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.

= வாழ்வது எதற்காக?
இவ்விஷயத்தில் பலரும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் பலவாறு ஊகித்தாலும் இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உண்மை, மற்றவை அனைத்தும் ஊகங்களே! அவன் கூறுவது என்னவென்றால், மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு புதிய வாழ்வின் துவக்கமே என்பதே! தக்க காரணத்துடனேயே அன்றி இவ்வுலகைப் படைக்கவில்லை என்கிறான் இறைவன்.
 = “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும்நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”  (திருக்குர்ஆன்23:115) 
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறதுபரீட்சைக்காக கெடுதியையும்நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர்,நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
அதாவது மறுமை என்ற முடிவில்லாத வாழ்க்கையில் நமது இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு பரீட்சைக் கூடமே இந்த தற்காலிக இவ்வுலகம் என்பதை நாம் முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாழ்வில் இறைவன் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிகூறும் முகமாக அவனுக்குக் கீழ்படிகிறோமா இல்லையா என்பதே இங்கு பரீட்சிக்கப்படுகின்றது. இப்பரீட்சையில் கீழ்படிபவர்களுக்குப் பரிசாக சொர்க்கமும் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோருக்கு நரகமும் மறுமை வாழ்வில் வழங்கப்பட உள்ளன. 

மறுமை என்ற நிரந்தர வாழ்க்கை: 
இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்பட்டு பிறகு அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர். அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகவாழ்வும்  புண்ணியவான்களுக்கு சொர்க்க வாழ்வும் ஆரம்பிக்க உள்ளன.
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான்உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
இந்த தற்காலிக உலகம் என்பது ஒரு பரீட்சைக் கூடம் என்பதால் இங்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும், சோதனைகள் இங்கு சகஜமே என்று கூறுகிறான் இறைவன்:
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும்,  பசியாலும்,  பொருள்கள்,  உயிர்கள்,விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
ஆம், இங்கு சந்திக்கும் சோதனைகளுக்குப் பகரமாக இறைவனிடம் வெகுமதி காத்திருக்கிறது என்ற உணர்வும் பொறுமை மீறி இறைவன் தடுத்த காரியங்களில் ஈடுபாட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற உணர்வும் மனித மனங்களில் விதைக்கப்பட்டால் அந்த மனங்கள் தோல்விகளைக் கண்டோ துன்ப துயரங்களைக் கண்டோ சோர்ந்து போவதும் இல்லை, தற்கொலை போன்ற இறைவன் தடுத்த வழிகளை நாடுவதும் இல்லை. மாறாக இந்தப் பரீட்சையை முடித்துக்கொண்டு நம் இறைவனிடம் திரும்ப இருக்கிறோம் என்ற உணர்வில் அவற்றை பொறுமையோடு எதிர்கொள்வார்கள். தன்னம்பிக்கையோடு வாழ்வைத் தொடர்வார்கள்.
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள்;  நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்'என்று கூறுவார்கள்.
2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும்நற்கிருபையும் உண்டாகின்றனஇன்னும் இவர்கள் தாம் நேர்வழியை அடைந்தவர்கள்.
இவ்வுலக இன்பங்களைவிட பன்மடங்கு மதிப்புள்ள சொர்க்கச் சோலைகளும் பூங்காவனங்களும் தெவிட்டாத உணவும் பானங்களும் தேனாறும் பாலாறும் அங்கே காத்திருக்கின்றன. பிணியும் மூப்பும் சோர்வும் இல்லாத இளமை வாய்ந்த உடலோடும் நல்லோரின் சகவாசத்தொடும் அமைதி மாறா சூழலோடும் அனுபவிக்க இருக்கின்ற சொர்கத்து இன்பங்கள் ஏராளம் ஏராளம்! இவையெல்லாம் வெறும் கற்பனைகள் அல்ல, மாறாக இவற்றை பகுத்தறிவு பூர்வமாக எடுத்துரைத்து நம்பிக்கை ஊட்டுகிறது இறைவனின் திருமறை.
மறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மறுப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:
46:33. வானங்களையும்பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
மீணடும் நாம் விசாரணைக்காக எழுப்பபடுவோம் எனபதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:
36:77-82.. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா?அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ''எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்என்று கேட்கிறான்
 “முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.
 வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையாஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்அறிந்தவன்.
 ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது 'ஆகுஎன்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.


இறுதியாக, தற்கொலை பற்றி இறைவன் என சொல்கிறான்?
= உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் !  (அல்குர்ஆன்2:195)
= உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! இறைவன் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!- (குர்ஆன் 4:29)  
இறைவனின்    எச்சரிக்கையையும் மீறி தற்கொலை செய்து கொள்வோரின் நிலை என்ன என்பது பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுவதையும் பாருங்கள்:
"ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்து கொண்டவர் (மறுமையில்) தீசூழ் நரகிலும் தமது கையில் அந்தக் கூராயுதத்தை வைத்துக் கொண்டுஅதனால் தமது வயிற்றில் தாமே என்றென்றும் முடிவின்றிக் குத்திக் கொண்டே இருப்பார். விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர்தீசூழ் நரகிலும் என்றென்றும் முடிவின்றி விஷத்தைக் குடித்துக் கொண்டேயிருப்பார். மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டவர்தீசூழ் நரகில் (மீண்டும் மீண்டும்) தள்ளப் பட்டுமேலும் கீழும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டே இருப்பார்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புஹாரி
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html 
நாம் ஏன் பிறந்தோம்?

வெள்ளி, 1 மே, 2015

உழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் மலர...


ஒரே சமூகத்தில் கலந்து வாழும் நாம் பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களாக உள்ளோம். அதேபோல நம்முள் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற நாம் ஈடுபட்டுள்ள துறைகளைச் சார்ந்த பிரிவுகளும் உண்டு. இவைபோல சமூகத்திலும் குடும்பங்களிலும் நாம் வகிக்கும் பொறுப்புகளின் அடிப்படையில் நமது அடையாளங்கள் மாறுவதும் உண்டு. பல வேற்றுமைகள் நம்மைப் பிரித்தாலும் நம்மை ஒரு அடிப்படை நம்மைப் பிணைத்து வைத்திருக்கிறது. அதுவே மனிதம் என்பது!
அவ்வப்போது பல சுயநல சக்திகள் நம்மை இன, மொழி, நிற, மத அடிப்படைகளைக் காட்டி பிரிக்க முற்பட்டாலும் அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டை கலவர பூமியாக மாற்றினாலும் நம்மில் பெரும்பாலானவர்களும்  அவ்வாறு உண்டாகும் இன்னல்களையும் இழப்புக்களையும் சகித்துக் கொண்டு நல்லிணக்கத்தோடும் பரஸ்பரம் புரிந்துணர்வோடும் வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம்.
சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்படவேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும் மீட்கப்படவும் வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.
இவை ஏட்டளவில் இல்லாமல் எவ்வாறு திருக்குர்ஆன் எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருகிறது பாருங்கள்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்பதையும் அடிப்படையாக வலியுறுத்தி  உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் நிறுவுகிறது திருக்குர்ஆன்.. தொடர்ந்து நாம் அனைவரும் அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் அனைவரும் உள்ளோம் என்பதை உணர்த்தி நாம் இறைவனுக்கு நம் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை உண்டாக்குகிறது இந்த இறை வசனம்.

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினரே என்ற உணர்வு மேலோங்கும்போது சகமனிதனை தனது சகோதரனாக அல்லது சகோதரியாகப் பார்க்கும் பண்பு மனிதனுக்கு வந்துவிடுகிறது. அதனால் தொழிலாளி என்பவன் முதலாளியின் சகோதரனே விற்பவன் வாங்குபவனின் சகோதரனே என்ற உணர்வுடன் உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட உள்ளன என்ற உணர்வும் மேலோங்கினால் அங்கு மனித உரிமை மீறல்களும் மோசடிகளும் ஒழிந்து ஒரு தூய்மையான சமூகம் அமைகிறது.
 அங்கு நிறத்தின், இனத்தின், மொழியின், நாட்டின் பெயரால் உடலெடுக்கும் பிரிவினைவாதங்களும் உயர்வு தாழ்வுகளும் கிள்ளி எறியப்படுகின்றன. மாற்று மொழியினரும் நிறத்தவரும் அண்டை மாநிலத்தவரும் நம் சகோதரர்களே என்ற உணர்வு மக்களை ஆட்கொண்டால் இன்று நடக்கும் பெரும்பாலான இனக்கலவரங்களை இல்லாமல் ஆக்கிவிடலாம்..
இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழுதல் என்ற கொள்கைக்குப் பெயரே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் மாத்திரத்திலேயே மனிதன் தன்னைப் படைத்தவனை வணங்குவதோடு  சகமனிதர்களின் உரிமையைப் பேணவேண்டிய காட்டாயத்திற்கும் உட்படுகிறான்.
இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்று ஐவேளைத் தொழுகை. இதன்மூலம் மேற்படி அடிப்படைகள் மனிதனுக்கு அடிக்கடி நினைவூட்டபடுகிறது.  அத்துடன் இத்தொழுகைகளைக் கூட்டாக தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று நிறைவேற்றுவதன் மூலம் மனித சமத்துவமும் சகோதரத்துவமும் உறுதிப்படுத்தப் படுகிறது.  
நபிகள் நாயகம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் திட்டம் அதை ஏற்றுக் கொண்டு பின்பற்றுவோரிடம் எந்தவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியது, தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக கீழ்கண்ட சரித்திரக் குறிப்பைக் காணுங்கள்:

. 'நான் நபித்தோழர் அபூதர் அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்)" என அபூதர் கூறினார்" என மஃரூர் கூறினார். (ஆதார நூல்:  புகாரி. எண்.30)

உறங்கும்போது எங்கே சென்றுவிடுகிறீர்கள்?


இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள். உங்கள் மகள் வந்து “அப்பா.... அப்பா...” என்று அழைக்கிறாள் ..... உங்களால் கேட்க முடிகிறதா?
“இல்லை” என்பதே உங்கள் பதிலாக இருக்கும்.
“ஏன்?” என்று கேட்டால், “அதுதான் நான் உறக்கத்தில் இருந்தேனே!” என்பீர்கள்.
உண்மையில் அங்கு என்ன நடக்கிறது?
ஒரு அறையில் நீங்கள் இருந்து அங்கு யாராவது வந்து அழைத்தால் அது உங்களுக்குக் கேட்டிருக்க வேண்டுமே? ... எது தடையாக நிற்கிறது?
ஆம், அங்கு நீங்கள் – அதாவது அக்குழந்தையின் அப்பா அங்கு இல்லை.... அப்பாவின் உடல் மட்டுமே அங்கிருக்கிறது!
அப்பா எங்கே போனார் அப்போது?
ஆம், அப்பா இறைவன்பால் அழைக்கப் பட்டிருக்கிறார் என்பதே உண்மை!
ஆம் அன்பர்களே இவ்வாறு ஒவ்வொரு நாளும் உங்கள் உயிர் இறைவனால் கைப்பற்றப் படுகிறது! கைப்பற்றிய உயிரை மீண்டும் இறைவன் திரும்ப அனுமதித்தால் மட்டுமே நீங்கள் உங்கள் குழந்தையின் அழைப்பைக் கேட்கமுடியும்.
அதாவது மரணம் என்பது நாம் அன்றாடம் அனுபவித்து வரும் ஒன்று என்பதை இதில் இருந்து விளங்கலாம்.  மரணத்தின்போது மனிதனின் ஆத்மா  கைப்பற்றப்படுவது போலவே தினமும் நாம் உறங்கும்போது நமது ஆத்மா இறைவனால் கைப்பற்றப்ப்டுகிறது என்பதுதான் உண்மை. எனவேதான் நாம் உறங்கும்போது நம்மால் நம்மைச்சுற்றி நடப்பவைகளைக் குறித்து அறிய முடிவதில்லை. கீழ்கண்ட இறைவரிகள் இதை உணர்த்துகின்றன:
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்¢ மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு,  நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 39:42)
(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)
ஆம் அன்பர்களே, அனுதினமும் நமது உயிர்கள் இறைவன்பால் போய்வருகின்றன. ஒருநாள் போன உயிர் திரும்பாமலும் போகலாம்! எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) இரவில் படுக்கைக்கு செல்லும்போது கீழ்கண்டவாறு பிரார்த்திக்கக் கற்றுக் கொடுத்தார்கள்:
பிஸ்மிக்க அல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா   (பொருள்: இறைவா, உன் பெயரால் நான் மரணிக்கவும் வாழவும் செய்கிறேன்)
அதேபோல் காலையில் கண்விழித்தால் போன உயிர் அடுத்த தவணை வரை திரும்பிக் கிடைத்ததற்காக நன்றி சொல்லக் கற்றுத் தருகிறார்கள் நபிகளார்:
அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹின்னுஷூர்  (பொருள்:என்னை மரணிக்கச் செய்த பின் உயிர் தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும். அவனிடமே நமது மீட்சியும் உள்ளது. )     
மரணத்திற்க்குப் பின் இறைவனிடம் மீட்டப்படுவது பற்றி சந்தேகத்திலிருப்போரை  அவர்களின் சுற்றும்முற்றும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பார்த்துப் பாடம் பெறச் சொல்கிறான் இறைவன்:
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 43:11)
அவனே உயிர் கொடுக்கிறான்  இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான் மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? (திருக்குர்ஆன் 23:80)

வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்? (திருக்குர்ஆன் 7:185)
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்? http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html