இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 செப்டம்பர், 2017

மீண்டும் மீண்டும் படைக்கும் அற்புதம்!


 ஒரு கார் அல்லது மொபைல் எவ்வளவு நுணுக்கங்களைக் அதன் பின்னால் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை மனிதன் உருவாக்கும் நிலையை அடைவதற்கு மனித குலத்திற்கு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தேவைப்பட்டது. அதே கார் அல்லது மொபைல் அல்லது ஒரு ரோபோ தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்யும் ஒரு செயலை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?  அப்படியென்றால் எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா? 
= இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனு க்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19) 
 = இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)

நம் உடலையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்... முதன்முறைப் படைக்கும்போதே அவை தானியங்கியாகவே தங்கள் சந்ததிகளையும் வழிவழியாக உருவாக்கிக்கொள்ளும் அற்புதத்தை என்னவென்று சொல்வது? மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் இன்னும் நம் கண்களுக்குப் புலப்படுவதும் புலப்படாததுமான எண்ணிலாப் படைப்பினங்களும் தங்களைத் தாங்களே இனவிருத்தி செய்து கொள்ளுதல் என்பது தற்செயலான ஒன்றா?
ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை – அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள், வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  -  முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்?

 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!
அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)

இவ்வாறு படைப்பினங்களுக்குரிய இனப்பெருக்கத்திற்கான திட்டமிடலும் நிர்ணயித்தலும் மூலப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில்  ஒன்றுசேர்த்தலும் அளவைகள் மாறாமல் கட்டுப்படுத்துவதும் ... என எவ்வளவோ செயல்பாடுகள் தற்செயலாக நிகழ்ந்து விடுமா? ஆம் என்று நம்பும் நாத்திகர்களை நாம் பகுத்தறிவுவாதிகள் என்று கூற முடியுமா?
இந்தக் கேள்வி ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தச் செயல்பாடுகளில் எதையுமே நிகழ்த்தாத ஆறடி உயரம் கொண்ட அற்பமான மனிதர்களையும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒப்பாக்கும் ஆத்திகர்களை தங்கள் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய அழைக்கிறான் உண்மை இறைவன்.

கடவுளர்களைப் பரீட்சித்துப் பாருங்கள்!
இறைவேதம் திருக்குர்ஆனில் இறைவன் மனிதர்கள் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்து அவை வணங்குவதற்குத் தகுதிவாய்ந்தவைதானா என்று ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறான்:
 = “நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா?” என்று (நபியே!) நீர் கேளும். (அவர்களுக்கு) நீர் கூறும்: அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்?”(திருக்குர்ஆன் 10:34)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இப்பிரபஞ்சத்தில் காணும் எண்ணற்ற உயிருள்ளதும் அல்லாததுமான படைப்பினங்களை படைத்தலும் அவற்றை அதிபக்குவமாக இயக்குதலும் அவற்றை மீண்டும்மீண்டும் படைத்தலும் எல்லாம் இறைவன் ஒருவனால் மட்டுமே சாத்தியம் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் மக்கள். எனினும் இந்தப் படைப்புப் பணியில் எந்த ஒரு பங்கையும் செலுத்தாதவற்றை கடவுளாகக் கற்பனை செய்து எப்படி ஏமாறுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறான் இறைவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக