இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 ஜூன், 2015

மனமாற்றமும் குணமாற்றமுமே இஸ்லாம்

Image result for planets images kids
பிறப்பால் வருவதா இஸ்லாம்?
இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன் வைக்கும் தத்துவம் ஆகும்.
   முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
   இயற்கையில்  காணும் மரம, செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்........ என இவை அனைத்தும் எவ்வாறு இறைவனின் கட்டளைகளுக்கு அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டு  வாழ்கின்றனவோ அவ்வாறு வாழ்தலே இஸ்லாம்! அவ்வாறு வாழ்பவரே முஸ்லிம்! ஆம், இவ்வுலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் முஸ்லிம்களாகவே இருக்கின்றன.
சரி, ஒரு மனிதன் எப்போது அல்லது எவ்வாறு முஸ்லிமாக முடியும்?
எப்போது மனிதன் படைத்த இறைவனை ஏற்றுக்கொண்டு அவனது கட்டளைகளைப் புரிந்து கொண்டு அதன்படி வாழத் துவங்குகிறானோ அப்போதுதான் அவன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது படைத்தவனோடு இறைவா உன்னை என் வணக்கத்துக்குரியவனாக ஏற்றுக் கொள்கிறேன். நீ அனுப்பிய தூதரை ஏற்றுக் கொள்கிறேன். இன்று முதல் உன் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்கிறேன். என்று ஒரு உடன்படிக்கை செய்து அதன்படி நிலைத்து நிற்கும்போதுதான் ஒரு மனிதன் முஸ்லிமாக ஆகிறான். அதாவது இறைவன் தரும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி வாழத் துவங்க வேண்டும்.
அது என்ன வாழ்க்கைத் திட்டம் ?
அதற்கு இஸ்லாத்தின் தூண்கள் என்று கூறப்படும். 
  1. கொள்கைப் பிரகடனம்: வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற வாசகத்தை மனதார ஏற்று வாயால் மொழிதல்.
  2. ஐவேளைத் தொழுகை: இந்த வாழ்க்கைத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டுமானால் நாம் படைத்தவனோடு தொடர்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் தீமை செய்யத்தூண்டும் மன சஞ்சலங்களும் ஷைத்தானின் ஊசலாட்டங்களும் நம்மை வழி தவறச் செய்யாது. அதற்காக விடியற்காலை, மதியம், மாலை. சூரியனின் மறைவுக்குப் பிறகு, உறங்கும் முன் என ஐவேளைகளில் இறைவன் தன தூதர் மூலமாக கற்றுத் தந்த தொழுகைகளை நிறைவேற்றுதல்.
  3. கட்டாய தருமம்: பொருள் மற்றும் செல்வம் என அனைத்தும் இறைவனுக்குச் சொந்தமானவையே. இவை நம்மை பரிசோதிப்பதற்காகத் தரப்படுபவையே. நமக்கு தரப்படுபவற்றில் ஒரு குறிப்பிட்ட பங்கு ஏழைகளுக்கு உரியது. எனவே அவற்றை கட்டாயமாகக் கொடுத்து விட வேண்டும்.
  4. ரம்ஜான் மாத விரதம்: திருக்குர்ஆன் இறங்கிய ரம்ஜான் மாதத்தில் பகலில் உண்ணுதல், பருகுதல், உடலுறவு இவற்றிலிருந்து தவிர்த்திருத்தல்.
  5. ஹஜ்ஜ் எனும் புனித யாத்திரை: பொருள் வசதியும் உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மக்க நகரிலுள்ள கஅபா என்ற இறையில்லத்தை தரிசிக்கச் செல்லுதல்.


 மேற்கூறப்பட்ட கொள்கையும் வாழ்க்கைத்திட்டமும் யாருக்கேனும் பிடித்து இருந்து அதைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினால் யாருடைய தயவும் அங்கு தேவை இல்லை. அது அந்த மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலானது.
ஆத்மார்த்தமாக மேற்கூறப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை இதயத்தில் உறுதி செய்து வாயால் மொழிந்தால் அந்த நொடியிலிருந்து அவர் முஸ்லிமாகி விட்டார்.  எந்த ஒரு மத குருவின் முன்னிலையோ யாருடைய சாட்சியமோ அல்லது ஒரு வழிபாட்டுத்தலத்தில் பதிவு செய்யும் அவசியமோ அங்கு இல்லை! அவர் தனது  பெயரை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் கூட அங்கு இல்லை!
ஆம், இம்மார்க்கத்தை ஏற்க  மன மாற்றமும் குண மாற்றமும் தவிர வேறு எந்த மாற்றங்களும் முக்கியம் இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மீணடும் படைத்தவன் அல்லாதவற்றை கடவுள் என்று சொல்வதோ கற்பனை உருவங்களை வணங்குவதோ தொழுகையை விடுவதோ தீமைகள் பக்கம் செல்வதோ கூடாது! நீங்கள் இக்கொள்கைப் பிரகாரம் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ அதுவரை மட்டுமே நீங்கள் முஸ்லிமாக இருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! அதே நிலையில் நீங்கள் மரணத்தைத் தழுவுவீர்களானால் உங்களுக்கு சொர்க்கம் உறுதி! இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் :

 ஓ, இறைவிசுவாசிகளே! நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள்!
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html 
நாம் ஏன் பிறந்தோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக