Search This Blog

Thursday, November 20, 2014

பாமரனுக்கும் பணிந்து வாழ்ந்த மாமன்னர்

‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்’ என்று பாடியவர்கள் உட்பட பலராலும் அதை நடைமுறைக்கு கொண்டுவர முடிவதில்லை என்பதை நாம் கண்டு வருகிறோம். பதவி என்பது இறைவனால் தன் மீது சுமத்தப் படும் அமானிதம் என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுப்பைப் பற்றி இறைவனால் மறுமை நாளில் கேள்வி கேட்கப் படுவோம் என்ற உணர்வு அந்த ஆட்சியாளர்களை கர்வம் கொள்வதில் இருந்தும் அகங்காரம் கொள்வதில் இருந்தும் தடுத்துவிடும்
நபிகள் நாயகம் மதீனா நகரில் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் நடந்தவை சில சம்பவங்களைப் பாருங்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. 'எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்' என்று கூறினார்கள். 'இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்' எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2821, 3148
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடன் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.
'என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது' என்று கூறவில்லை. மாறாக 'இம்மரங்களின் எண்ணிக்கை யளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்கு வேன்' என்று கூறுவதிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

= ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், ‘சாதரணமாக இருப்பீராகஉலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன் தான் நான்என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா 3303)

அன்றைய காலத்தில் மன்னர்களிடம் மக்கள் அப்படிதான் நடுங்கிட வருவார்கள், அப்படி தான் வரவேண்டும் என்ற நிலையிருந்த காலகட்டத்தில் ஆண்டிக்கும், அரசனுக்கும் முன்மாதிரியான நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக நடந்து கொண்டார்கள் என்பதை பார்த்தீர்களா?

ஒருநாள் அன்பளிப்பு வந்த ஆட்டை சமைத்து, தானும் மக்களும் சாப்பிட அமர்ந்தார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். இதனைக் கண்ட ஒரு கிராமவாசி என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைவன் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.என்று விடையளித்தார்கள்.

சாதாரண மனிதன்கூட சகித்துக் கொள்ளாத எத்தனையோ விஷயங்களை மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்தும் அவர்கள் சகித்துக்கொண்டு நடந்து கொண்ட முறை நம்மை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஒய்யாரத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. மாறாக மக்களோடு மக்களாக சேர்ந்து பணிகளையும், சிரமங்களையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

= அகழ் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள், மண் சுமந்தார்கள்.ஆதாரம்: புகாரி 2837, 3034.
= நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன், பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். ஆதாரம்: புகாரி 3906

= மக்களோடு மக்களாக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் இருப்பதால் உள்ள சிரமத்தைக் கண்ட அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கலந்து பேசி ஒரு கூடாரத்தை தனியாக உங்களுக்கு அமைத்து தருகிறோம்என்று கேட்டதற்கு நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையை பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காளை மிதித்த நிலையிலும் அவர்களுடன் நான் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடம் இருந்து இறைவன் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்என்று கூறினார்கள். (ஆதாரம்: பஸ்ஸார் 1293)


இப்படி ஏராளமான சம்பவங்களின் மூலம் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. 

No comments:

Post a Comment