இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 நவம்பர், 2013

பாவங்கள் பாவங்களே!


சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி சன் என்ற தினப் பத்திரிகை ஐந்து பிரபலங்களின் படத்தை வெளியிட்டு கீழ்கண்டவாறு கேட்டிருந்தது:
இவர்களில் ஒருவர் ஆயிரம் பெண்களோடு படுத்தவர். ஒருவர் ஒன்றோடு நிறுத்திக் கொண்டவர். யார் அவர்கள்? கண்டு பிடியுங்கள் என்று வாசகர்களுக்கு புதிர் விடுத்திருந்தனர்.
இச்செய்தியை பலரும்.... ஏன் பெரும்பான்மையானவர்கள் மிகவும் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பது என்னவோ உண்மை. பத்திரிகைக்கும் சரி, அதன் வாசகர்களுக்கும் இது ஒரு பொழுதுபோக்கு அம்சம். பலரும் மிகவும் சீரியஸாக இப்புதிரை விடுவிப்பதில் ஈடுபட்டிருப்பார்கள். மேலை நாட்டில் மட்டுமல்ல நம் நாட்டுப் பத்திரிகையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இப்படி ஒரு புதிர் விடப்பட்டாலும் அதை அவிழ்ப்பதில் மக்களில் பெரும்பாலோர் மூழ்கியிருப்பார்களே தவிர அதன் சாதக பாதகங்களை அல்லது உள்ள நன்மை தீமைகளை ஆராய யாரும் முற்பட மாட்டார்கள் என்பதே உண்மை. அந்த அளவுக்கு நமது எதிரியான ஷைத்தானின் தாக்கம் நம்மீது உள்ளது. பாவங்கள் மலிந்து காணப்படுவதால் அவற்றை ஒரு பொருட்டாகவே கொள்ளாத நிலை இன்று காணப்படுகிறது.
விபச்சாரம் என்பது சமூகத்தில் எவ்வளவு பெரிய கொடுமை! திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் அதில் ஈடுபடும்போது என்னென்ன விளைவுகள் உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதில் ஈடுபடும் பெண் கன்னியாக இருந்தால் திருமணத்துக்கு முன் அவளது கற்பு பறிபோகிறது.  அவள் மணமானவளாக இருந்தால் தன கணவனல்லாத ஒருவனின் குழந்தையை சுமக்க நேரிடுகிறது. தொடர்ந்து குடும்பத்தில் குழப்பங்கள், கலகங்கள், என தொடங்கி கொலைகளில் முடியும் அவலம். தந்தைகள் அற்ற குழந்தைகள் பெருகுதல், குடும்ப உறவுகள் அற்றுப் போதல் இன்னும் இவைபோன்ற பலவும் சேர்ந்து ஒரு ஒழுக்கமற்ற அமைதியற்ற சமூகம் உருவாகக் காரணமாகின்றது.
விபச்சாரம் என்பது நம்மைச்சுற்றி தீய விளைவுகளை உண்டாக்குகிறதோ இல்லையோ அதை நாம் காண்கிறோமோ காணாமல் இருக்கிறோமோ அல்லது கண்டும் காணாமல் இருக்கிறோமோ எதுவானாலும் சரி..... இது இவ்வுலகைப் படைத்தவனின் பார்வையில் இது ஒரு கொடிய பாவமே! தண்டனைக்குரிய பெரும் பாவமே! பெரும்பான்மையானவர்கள் இச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதனாலோ நாட்டு அரசாங்கங்கள் இதை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதனாலோ இதன் வீரியம் ஒரு சிறிதும் குறைவதில்லை. இப்பாவத்தை நேரடியாக செய்பவர்களும் சரி, இதை அங்கீகரிப்பவர்களும் சரி, இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தருபவர்களும் துணை செய்பவர்களும் சரி அவரவர்களது மரணத்துக்கு முன் இறைவனிடம் உரிய முறையில் பாவப் பரிகாரம் செய்யாவிட்டாலோ பாவ மன்னிப்பு தேடா விட்டாலோ மறுமையில் இறைவனின் தண்டனைக்கு ஆளாவது உறுதி!  
நாடு எதுவானாலும் சரி, கலாச்சாரம் எதுவானாலும் சரி நாம் பூமியின் எந்த பாகத்தில் அல்லது எக்காலத்தில் வாழ்வோரானாலும் சரி ஒன்று மட்டும் உறுதியான உண்மை. நாம் அனைவருமே மனிதர்களே! நாம் சுயமாக இங்கு வரவில்லை. நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனால் இயக்கப்படுபவர்கள். நமது பிறப்பும் இறப்பும் இடமும் நாடும் நாம் தேர்ந்தெடுப்பது போல அமைவதில்லை. நாம் அனுபவிக்கும் செல்வமும் உடலும் நலமும் அழகும் வனப்பும் நமக்கு தற்காலிகமாகத் தரப்படுபவை. இவை நம்மை விட்டுப் போகவும் செய்யும். நாம் அவற்றை விட்டொழித்து செல்லவும் நேரிடும் என்பதெல்லாம் மறுக்க இயலாத உண்மைகள். பொருள் சேர்க்கும் அவசரத்திலும் சுக போகங்களை அனுபவிப்பதிலும் நாம் ஈடுபடும்போது இவற்றை மறந்து போகலாம். ஆனாலும் இவ்வுண்மைகள் என்றும் அழியாமல் நிலைகொள்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் இந்தியன் ஆனாலும் சரி, ஆங்கிலேயன் ஆனாலும் சரி மரணம் என்ற வாஸ்த்தவத்தையும்  அதைத் தொடர இருக்கும் மறுமை வாழ்கையையும் சந்தித்தே ஆகவேண்டும் அனுபவித்தே ஆகவேண்டும்.
உறுதியான வார்த்தைகளில் இறைவன் கூறுகிறான் பாருங்கள்:
'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.' (திருக்குர்ஆன் 3:185)       
இம்மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் காணாமல் இருப்பவன் அல்ல.  ஒவ்வொரு சிறு சிறு செயல்களும் அணுஅணுவாகப் பதிவாகவே செய்கின்றன. அவை மறைவதில்லை. அவை இறுதித் தீர்ப்பு நாள் அன்று கண்டிப்பாக நமக்கு முன் காண்பிக்கப்பட உள்ளன. இன்றும் இப்போதும் எப்போதும் மிகமிக பத்திரமாகப் பாதுகாக்கப் படுகின்றன மறுமை விசாரணைக்கு வேண்டி! இதோ திருக்குர்ஆன் சொல்கிறது பாருங்கள்....
99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8. அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவர் கண்டு கொள்வார்.