திங்கள், 11 மே, 2015

ஆன்மீகத்தின் அடிப்படை மந்திரம்!

 இறைவனின் ஏகத்துவத்தை போதிப்பதே இவ்வுலகின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்த இறைத்தூதர்களின் அடிப்படைப் பணியாக இருந்தது. ஏனெனில் இதுதான் பூமியில் தர்மத்தை நிலைப் நாட்டுவதற்கான அடித்தளம். மனிதன் பாவங்களில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால் கடவுளைப் பற்றிய முறையான எண்ணமும் நம்பிக்கையும் அவனுள் விதைக்கப்பட வேண்டும். அந்த எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், நான் நன்மை செய்தால் அவன் எனக்கு பரிசளிப்பான், குற்றம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு அவனுள் சதா இருக்க வேண்டும். 
 அந்த அடிப்படையில் இந்த பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் தத்தமது மக்களுக்கு 'இறைவன் ஒருவனைத் தவிர வேறில்லை' என்ற அடிப்படை மந்திரத்தை போதித்தார்கள். அவர்கள் வரிசையில் இறுதியாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதையே போதித்தார்கள். அதுவே இன்று அரபு மொழியில் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று வழங்கப் படுகிறது.
இறைவன் ஒருவனே!
 முதலில் இறைவன் ஒருவன் மட்டுமே என்பது பற்றி நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது?
ஒரு பள்ளிக்கூடத்திற்கு இரண்டு முதல்வர்கள் அல்லது ஒரு பேருந்துக்கு  இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் இருந்தால் அது எவ்வாறு பெரும் குழப்பம் , கலகம் அல்லது விபத்தில் கொண்டு சேர்க்குமோ அதுபோல இவ்வுலகம் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் என்றோ அழிந்துபோய் இருக்கும் எனபதை நமது சாமானிய அறிவு கூட நமக்குச் சொல்கிறது.
திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகிறது:
'(வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்.)

இறைவன் ஒருவனே என்பது பற்றியும் அவனது தன்மைகள் பற்றியும் இதோ திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
59:22. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
59:24. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே  துதி செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

வணக்கத்துக்கு உரியவன் யார்?

 மனிதர்களே! நீங்கள் உங்களையும்  உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.  (அல்குர்ஆன் 2:21)

அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன்  3:6).

 இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக