இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 மார்ச், 2019

படைத்தவனைத் தவிர வேறெதுவும் கடவுளாகுமா?



படைத்தவனின் வல்லமை உணர்வோம்:
நம்மையும் இம்மாபெரும் பிரபஞ்சத்தையும் படைத்த இறைவனின் வல்லமையை உணர எண்ணற்ற சான்றுகள் நமக்குள்ளும் வெளியேயும் பரவிக்கிடக்கின்றன. ஒரு உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அடங்கியுள்ள நுட்பங்களும் தகவல்களும் மென்பொருளும் எல்லாம் அந்த விதை மண்ணோடும் நீரோடும் சேரும்போது நிகழ்த்தும் அற்புதங்களை அறிவீர்கள். அவை செடிகொடிகளாக மரங்களாக பழங்களாக பரிணமித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அதே போல ஒரு இந்திரியத் துளி முழு மனிதனாக பரிணமிப்பதையும் மீண்டும் இனப்பெருக்கம் செய்வதையும் காண்கிறோம்.
அவ்வாறே இம்மாபெரும் பிரபஞ்சம் ஒரு புள்ளியில் ஒடுங்கி நின்றதையும் அதற்கு இடப்பட்ட கட்டளைக்குப் பின் ஒரு பெருவெடிப்பு (Big bang) நிகழ்ந்து இப்பேரண்டமாக உருவெடுத்து தொடர்ந்து அதிவேக கதியில் விரிவடைந்து வருவதையும் இன்று அறிவியல் உறுதிப் படுத்திச் சொல்கிறது. இவை அனைத்தும் அதிபக்குவமான முறையில் உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த தன்னிகரற்ற சக்தியையே தமிழில் கடவுள் அல்லது இறைவன் என்றும் அரபு மொழியில் அல்லாஹ் என்றும் சொல்கிறோம்.
அற்பமானவன் அல்ல இறைவன்:
அந்த தன்னிகரற்ற இறைவன் இப்பேரண்டத்தில் அற்பமான ஒரு துகள் போன்ற பூமியின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் மற்றொரு துகளாக இருக்க வாய்ப்பில்லை என்பது பகுத்தறிவு நமக்குச் சொல்லும் தகவலாகும். மேலும் அந்த சர்வவல்லமை கொண்ட இறைவனுக்கு எதையேனும் அற்பப் பொருட்களை ஒப்பிட்டு அவற்றைக் கடவுள் என்று சொல்வதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்பதையும் அறிகிறோம்.
இறைவன் அல்லாதவற்றை வழிபடும் விபரீதம்:
இன்று பெரும்பாலான மக்கள் கடவுள் அல்லாதவற்றை கடவுளாக பாவித்து வணங்கும் செயலில் மூழ்கி உள்ளதை நாம் அறிவோம். அவ்வாறு இறைவனைச் சிறுமைப்படுத்தி சித்தரிப்பதால் மனித மனங்களில் உண்மை இறைவனைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் அகன்று போகிறது. அதனால் இறையச்சம் அகன்று போய் பாவங்கள் அதிகரிக்கின்றன. இறைவனை பல்வேறு விதமாக சித்தரிக்கும்போது அவற்றை வணங்குவோர் பல்வேறு குழுக்களாகி அவர்களுக்குள் ஏற்ற தாழ்வு கற்பித்தலும் தீண்டாமையும் எல்லாம் உடலெடுப்பதை நாம் அறிவோம். 
இறைவனின் சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்
இன்று மக்கள் வழிபட எடுத்துக் கொண்டுள்ள கடவுளர்களின் இயலாமையை உண்மை இறைவனின் வல்லமையோடு ஒப்பிட்டு நோக்க தனது வேதம் மூலம் அழைக்கிறான் அவன். இன்று நீங்கள்  உயிர்வாழ அனைத்து வசதிகளையும் அருட்கொடைக்கு மேல் அருட்கொடைகளாக வழங்கியவனை விட்டு விட்டு அவன் அல்லாதவற்றைக் கடவுளாக பாவித்து வணங்குவது முறையா என்று கேட்கிறான்:
  1. நீங்கள் வணங்குபவை மழையும் விளைச்சலும் தருமா?
= அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 27:60) 
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
  1. பூமியும் ஆறுகளும் கடல்களும் உண்டாக்கினவா?
= இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (திருக்குர்ஆன் 27:61) 
  1. பிரார்த்தனைக்கு பதில் கூறுமா?
= கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (திருக்குர்ஆன் 27:62) 
  1. வழிகாட்டும் ஆற்றலுண்டா அவற்றுக்கு?
= கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய ரஹ்மத்என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன். (திருக்குர்ஆன் 27:63) 
  1. படைப்பாற்றல் உண்டா அவற்றுக்கு?
= முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) இறைவன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள். (திருக்குர்ஆன் 27:64) 
  1. மறைவானவற்றை அறியுமா?
=  (இன்னும்) நீர் கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (திருக்குர்ஆன் 27:65) 
எனவே தங்களுக்குத் தாங்களே எந்த உதவியும் செய்துகொள்ள இயலாத கற்பனைக் கடவுள்களை விட்டுவிட்டு உண்மை இறைவன்பால் மீண்டு வாழ்வில் வெற்றி அடைய முயலுவோம்.
-------------
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html

செவ்வாய், 12 மார்ச், 2019

பெண்களே உஷார் - உங்கள் பாதுகாப்புக் கவசம்

உங்கள் ஆடைகளில் அமைந்துள்ள ஜன்னல்கள் அவை சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி அவை உங்கள் உடல் அழகை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகப் படைக்கின்றன. ஆண்களின் கழுகுக் கண்களை அந்த ஜன்னல்கள் கவரும்போது அவர்களில் சிலர் அதை ஒரு விருந்துக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றனர். இனிப்புக் கடைகளில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக அவை ஷோ கேஸ்களில் கவர்ச்சிகரமான வெளிச்சம் போட்டு வைக்கப் படுவதுபோல் உங்கள் அங்க அழகு அவர்களை ஈர்ப்பதற்காகப் பிரதர்சனம் செய்யப்படுகிறது என்பதாக அவர்கள் உணர்கிறார்கள். இந்த விருந்து அழைப்பு விபரீதமாக மாறுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் (National Crime Record bureau) கணக்குப்படி நாளொன்றுக்கு 106 பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப் படுகிறார்கள். இது பதிவான கணக்குப்படி... பதிவுக்கு வராதவை எத்தனையோ?

புதன், 13 பிப்ரவரி, 2019

சொர்க்கம் செல்ல எளிய வழிகள்


Related image நீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவு இன்பகரமானதாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியும். ஆனால் எவ்வளவுதான் இன்பமானதாக இருந்தாலும் அதைத் துறந்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டியவனே அப்பயணி. ஆம், அந்த மரத்தடி நிழல் போன்றதே இந்தத் தற்காலிக உலகமும்!
   இல்லாமையில் இருந்தும் பிறகு இந்திரியத் துளியில் இருந்தும் உருவாகி இன்று இப்பூவுலகில் மனிதர்களாக நடமாடிக்கொண்டிருக்கும் நாம் இதையும் கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளோம் என்பதை  நம்மில் பலரும் எளிதாக மறந்து விடுகிறோம். இவ்வுலகத்தில் நாம் எவ்வளவுதான் சொத்துக்களையும் சுகங்களையும் புகழையும் ஈட்டினாலும் உறவுகளை வளர்த்துக் கொண்டாலும் இமாலயப் பதவிகளை எட்டினாலும் அனைத்தையுமே ஒரு நொடியில் இழக்க வேண்டியவர்கள்தான் நாம் அனைவருமே! வெறுங்கையுடன் வந்த நாம் வெறுங்கையோடுதான் திரும்பிச் செல்ல உள்ளோம். ஆனால் நம்மோடு தொடர்ந்து வரக்கூடியவை நமது செயல்களின் பதிவு மட்டுமே. நம்மைப் படைத்த இறைவன் நமக்களித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறியவர்களாக அவன் நமக்கு ஏவிய கட்டளைகளுக்கேற்ப செய்யும் செயல்கள் மட்டுமே நமக்கு மறுமையில் பயன் தரும். அவை நமக்கு நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசாகப் பெற்றுத்தரும்.
= எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம் அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள் (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (திருக்குர்ஆன் 29:58)
= பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (திருக்குர்ஆன் 47:15)
ஆம், மறுமை வாழ்வில் நமது இருப்பிடம் சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமைய உள்ளது. அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட எதுவும் அங்கு இல்லை. உதாரணமாக நீங்கள் பணி ஒய்வு பெற்றபின் உங்கள்  கம்பெனி நிர்வாகம் ஒரு வீட்டு மனை வழங்க உள்ளது என்று அறிவித்தால் எவ்வளவு தீவிரமாக உழைப்பீர்கள்? ஒரு தற்காலிக சுகத்தை அடைவதற்கே அவ்வாறு உழைப்போம் என்றால் அழியாத இன்பங்களை அடைவதற்காக நாம் சிறிதேனும் உழைக்க வேண்டாமா?
சொர்க்கம் செல்ல எளிய வழிகள்:
மறுமையில் உங்கள் அழியாத நிரந்தரமான இருப்பிடம் திகட்டாத சொர்க்கச் சோலைகளின் நடுவே அமைய வேண்டுமானால் நீங்கள் அவ்வளவு கடினமாக ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் தனது இறுதி வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் காற்றுத்தரும்  மிக எளிமையான ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே!.
சொர்க்கம் செல்வதற்கான முதல்படி தூய இறைநம்பிக்கை. அதாவது படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவனைத்தவிர யாரையும் நான் இனி வணங்கமாட்டேன்  என்றும் அவன் அனுப்பிய தூதரை – அதாவது முஹம்மது நபி (ஸல்) – அவர்களை  எனது வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டேன் என்ற ஒரு உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழியவேண்டும்.
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லால்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (பொருள்: வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமே இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் அடிமையும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) – இதுதான் அந்த உறுதி மொழி. இந்த சத்தியப் பிரமாணத்தை மொழிய எந்த ஒரு வழிபாட்டுத்தலத்துக்கோ அல்லது ஒரு மதகுருவிடமோ செல்லவேண்டியதில்லை. நீங்களாகவே தனிமையில் படைத்த இறைவனை முன்னிறுத்திக் கொண்டு கூறினால் போதுமானது. அதை ஆத்மார்த்தமாக மொழிந்த பின் அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.
= நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். (திருக்குர்ஆன் 10:9)
இந்த இறைநம்பிக்கை கொண்டபின் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களைப் பேணி அவனது பொருத்ததிற்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வழிபாடாகவே கருதப்படும்.
திசைமாறாது இருக்க கடமைகள்
இறைநம்பிக்கை கொண்டபின் அதன் செயல்வடிவம்தான் அடுத்த கடமைகள். அவற்றில் முக்கியமானவை ஐவேளைத் தொழுகையும் ஜகாத் எனப்படும் கடமையான தான தர்மமும். நாம் ஏற்றுக் கொண்ட கொள்கையில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தான் என்ற மறைமுமான சக்தி நம்மில் ஊசலாட்டங்களை உண்டாகி நம்மை திசைதிருப்பி விடக்கூடாது. நம்மில் சதா இறைவனைப் பற்றிய அச்சமும் அன்பும் தொடர்ந்து இருக்கவேண்டும்.. அதற்காக இறைவன் வகுத்தளிக்கும் திட்டமே ஐவேளைத் தொழுகை என்பது.
பொருளாசையும் நம்மை திசை திருப்பி விடக்கூடாது. செல்வம் என்பது உண்மையில் நமதல்ல. அதன் உரிமையாளன் இறைவன் மட்டுமே. அவன் நம்மைப் பரீட்சிப்பதற்காக தற்காலிகமாக நம் பொறுப்பில் விட்டு வைப்பதே செல்வம் என்பது. அதை நாம் நமது தேவைகளுக்காக பயன்படுத்தும் அதேவேளையில் நம்மைச் சுற்றி வாழும் ஏழை எளியவர்க்கும் அதில்  பங்குண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்தப் பங்குதான் ஜகாத் என்பது.
நபிகளாரின் வாழ்வில்...
நபிகள் நாயகம் தனது சத்தியப் பிரசாரத்தை மக்களிடம் செய்து கொண்டிருந்தபோது மக்கள் அவரிடம் ஆர்வத்தோடு வந்து சொர்க்கம் செல்லும் வழிகள் பற்றிக் கேட்டறிந்து சென்றனர்.
 = ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, "செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இறைவனை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறினார்கள்.

அவர் திரும்பிச் சென்றதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "இவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்று விடுவார்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி). (முஸ்லிம்)
= கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, " இறைத்தூதரே! சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல் படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்" என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் "இறைவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மனிதர், "என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்" என்று கூறினார்.
அவர் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). (முஸ்லிம்)
----------------- 
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 

அல்லாஹ் என்றால் யார்?

திங்கள், 11 பிப்ரவரி, 2019

இல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன



ஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது? இவையெல்லாம் திட்டமிடுதலும் வடிவமைத்தலும்  உருவாக்கியவனும்  இல்லாமல் உருவாக முடியாது என்றும் இவை இயங்க தொடர்ச்சியான மின்சாரம் போன்ற இயங்கு சக்தி தேவை என்பதையும் உறுதியாகச் சொல்லும். ஏற்கெனவே கிடைக்கக் கூடிய பொருட்களை சிதைத்து அல்லது உருமாற்றி அவற்றை ஒன்று சேர்த்து முறைப்படிப் பொருத்தி உருவாக்கப் படுபவையே மேற்கண்ட பொருட்கள். இந்த தயாரிப்புக்களுக்குப் பின்னே என்னென்ன அறிவு சார்ந்த நடவடிக்கைகள் உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்தால் ஒரு அறிவார்ந்த உருவாக்குபவன் அல்லது குழு இல்லாமல் இவை உருவாக முடியாது என்றே உறுதியாகச் சொல்வீர்கள்.
ஆனால் அறவே இல்லாமையில் இருந்து அதிபக்குவம் வாய்ந்த பொருட்கள் உருவாகி இயங்கி வரும் அற்புதத்தை மட்டும் தானாக உருவானவை என்று அறிவுள்ள எவராலும் சொல்ல முடியுமா? உருவாகுவது மட்டுமல்ல, தானியங்கியாக அவை தாங்களாகவே இனப்பெருக்கமும் செய்வதைக் கண்டால் இவற்றின் பின்னுள்ள நுண்ணறிவாளனை சர்வ வல்லமை கொண்டவனை எவ்வாறு மறுக்க இயலும்?
= இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19) 
 = இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)
உடல் என்ற பெரும் பாடம்
நம் உடலையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்... அவற்றுக்குள் இருக்கும் உறுப்புக்களும் அவற்றின் பல்வேறு விதமான கட்டமைப்புகளும் அவற்றின் ஒழுங்குப்படுத்தப்பட்ட இயக்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் முதன்முறைப் படைக்கும்போதே அவை தானியங்கியாகவே தங்கள் சந்ததிகளையும் வழிவழியாக உருவாக்கிக் கொள்ளும் அற்புதத்தை என்னவென்று சொல்வது? மனிதர்களும் விலங்குகளும் தாவரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் இன்னும் நம் கண்களுக்குப் புலப்படுவதும் புலப்படாததுமான எண்ணிலாப் படைப்பினங்களும் தங்களைத் தாங்களே இனவிருத்தி செய்து கொள்ளுதல் என்பது தற்செயலான ஒன்றா? எந்த ஒரு வடிவமைத்தலும் திட்டமிடுதலும் மென்பொருளும் இல்லாமல் இவை நடக்க முடியுமா?
= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களாஅதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)
= . நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்;பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28)

விதை எனும் அற்புதம்
= நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள் (திருக்குர்ஆன் 56:63) 
ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள், வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  -  முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்?

 (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன்  எத்தகையவன் எனில்,  அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்;  மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)

பிரபஞ்சத்தின் ஆரம்ப விதை
இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒரு கருவில் ஒடுங்கியிருந்தது. அந்தக் கரு ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது.  கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்று குறிப்பிடுகிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒருநொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது. அந்த விரிவாக்கம் தொடர்ந்து முடுக்கப்பட்ட வேகத்தோடு நடைபெற்று வருகிறது என்பதையும் அறிவியல் நிரூபித்து நிற்கிறது.
பெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:
= சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா நிச்சயமாக வானங்களும்பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதை?... (திருக்குர்ஆன் 21:30) 
பிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவன் கூற்றை நாம் இங்கு நினைவு கூருவோம்:
= மேலும்நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம்.  (திருக்குர்ஆன் 51:47) 
ஒரு மரத்தின் விதையில் அது தொடர்பான அனைத்து பாகங்களின் இயல்பும் மென்பொருளும்  ஆற்றல்களும் உள்ளடக்கப் பட்டதன் காரணமாக மரமும் தொடர்ந்து பழங்களும் விதைகளும் உருவாகி அவற்றின் மூலம் இனப்பெருக்கமும் நடந்து கொண்டு வருகிறன என்பதை நாம் அறிகிறோம். இதே போல இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பக் கருவைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். அதற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்தில் இன்று காணும் அனைத்து கூறுகளின் – பெரியதும் நுண்ணியதுமான அனைத்தின் - இயல்புகளும் இயங்கு விதிகளும் மென்பொருளும் எல்லாம் எழுதப்பட்டு இருக்கவேண்டும். அக்கருவை இல்லாமையில் இருந்து தோன்றவைத்து அதிலிருந்து இன்று காணும் இப்பேரண்டத்தை உருவாக்கி பரிபாலித்து வரும் அந்த மாபெரும் சக்தியையே தமிழில் இறைவன் என்றும் அரபுமொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கிறோம்.
= படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்க ளையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
 அறிவிப்பு : அம்ரு இப்னு ஆஸ்(ரலி), முஸ்லிம், திர்மதி.
அற்பமானவனல்ல இறைவன்
அந்த தன்னிகரற்ற சக்தி என்பது நம்மைப்போல் பலவீனமான ஒருமனிதனைப் போலவோ அல்லது 
 நம்மைவிடத் தாழ்ந்த ஒரு ஜீவியாகவோ அல்லது ஒரு வெறும் உணர்வற்ற  ஒரு  ஜடப்பொருளாகவோ  இருக்க முடியாது  என்பதும் அதே பகுத்தறிவு  நமக்குச் சொல்லும் பாடமாகும்.
= சொல்வீராக: இறைவன் ஒருவனேஅவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை.அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
----------------
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

சனி, 2 பிப்ரவரி, 2019

திருக்குர்ஆன் நற்செய்திமலர் - பிப்ரவரி 2019 இதழ்

பொருளடக்கம்
தட்டிக்கேட்க யாருமில்லை என்ற திமிர்! -2
வாழ நினைப்போம்... வாழுவோம்! -4
மரணத்தைப் பற்றி அலட்சியமாக இருக்க 
முடியுமா?-7
காத்திருக்கும் மறுமையும் மண்ணறையும் -8
மரணம் நெருங்கிவிட்ட வேளை -11
மரணவேளையில் இருந்து மண்ணறை வரை -15
மரண சிந்தனை மானுடத்தை வாழவைக்கும்! -18
 மண்ணறைக்குள் என்ன நடக்கிறது?-21
 மரணத்தை நெருங்கியவரை நரகத்தில் இருந்து 
 காப்பாற்ற முடியுமா? -22

 வாசகர் எண்ணம் -24
------------------- 
இந்த மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர உங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். அனைத்து மத அன்பர்களுக்கும் நான்கு மாத சந்தா இலவசம்.   

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

முதுமைக்குப் பின் இளமை திரும்புமா?

காலம் கடந்த பின்னே இளமை எப்படி திரும்ப வரும்? முதுமைக்குப் பின் மீண்டும் இளமை திரும்ப வழியுண்டா?
இவ்வுலகமே எல்லாம் ... நாம் வாழும்வரைதான் வாழ்க்கை... நாம் மரித்த பின் மண்ணோடு மண்ணாகி விட்டால் அத்தோடு முடிந்தது மனித வாழ்வு என்ற மூடநம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை இளமை திரும்புதல் என்பது சாத்தியமில்லைதான்! 
Image result for video iconஅப்படிப்பட்ட குறுகிய சிந்தை கொண்டவர்கள் இப்பேரண்டத்தின் பின்னால் உள்ள அதிபக்குவம் வாய்ந்த படைப்பாளனையும் அவனது திட்டங்களையும் சற்றும் சிந்திக்காது பிடிவாதமாக மறுக்கிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை தற்செயலானது...அர்த்தமற்றது.. நோக்கமற்றது என்று நினைக்கிறார்கள். அதனால் நீதி, நியாயம், நாணயம், நல்லொழுக்கம், குடும்ப அமைப்பு போன்றவைகளைப் பேணவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. வாழ்க்கையில் தோல்வி அல்லது இழப்பு அல்லது நிராசைகளை சந்திக்கும்போது தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள்.
படைத்தவனை உணர்ந்துகொண்ட நல்லோர்
-----------------------------------------------------------------------
மாறாக பகுத்தறிவு கொண்டு இப்பேரண்டத்தின் அமைப்பையும் அதில் நீர்க்குமிழி போல மின்னிமறையும் வாழ்க்கை கொண்ட அற்ப மனிதனின் நிலையையும் பற்றி சிந்திப்போர் இந்த தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சை எனவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமே என்பதை உணர்கிறார்கள். இதில் இறைவனின் ஏவல்-விலக்கல்களுக்கு ஏற்ப வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி வாழ்க்கை சாத்தியப்படும் , மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தில் அமர வாழ்வும் பரிசாகக் கிடைக்கும் என்பதில் உறுதியாக நம்புகிறார்கள். அதனால் வாழ்க்கையில் ஏற்ற- தாழ்வுகளை சந்திக்கும்போது தன்னம்பிக்கையோடு சமநிலை தவறாது எதிர்கொள்கிறார்கள். ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதையும் பூமியில் நன்மையை எவுவதையும் தீமைகளைக் களைவதையும் இறைவனிட்ட கட்டளைகளாக சிரமேற்கொண்டு பணிபுரிவார்கள்.
முற்றிய முதுமையும் அதைத் தொடரும் மரணமும் உண்மையில் வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு நிரந்தர வாழ்வின் தொடக்கமே அது என்பதை அவர்கள் அறிவார்கள். அதுதான் உண்மையான பகுத்தறிவு! நாளை மறுமையில் நல்லோருக்குக்காக தயார்செய்யப்பட்டுள்ள சொர்க்கத்தில் அவர்கள் நுழையும்போது என்றும் மாறா இளமையோடு அவர்கள் நுழைவார்கள்!
ஏனெனில்..... மரணம் என்பதே இனி இல்லையல்லவா?
எது பகுத்தறிவு ?
புலன்களுக்கு எட்டும் தகவல்களை ஆய்வு செய்து புலன்களுக்கு எட்டாத விடயங்களை அறிவதே பகுத்தறிவு எனப்படும். இன்று நம்மால் இறைவனையும் மறுமையையும் காண முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி அவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் பகுத்தறியச் சொல்கிறது திருக்குர்ஆன்:
= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (திருக்குர்ஆன் 3:190)
= மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (திருக்குர்ஆன் 36:77-79)