இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 மார்ச், 2022

அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!!

 


அழகிய மனிதனை மிருகமாக்கிய நாத்திக சிந்தனை!!

-    முஹம்மது கத்தாபி MISc.

இவ்வுலகத்தில் வாழக்கூடிய கோடான கோடி உயிரினங்களில் மனித படைப்பை இறைவன் உயர்ந்த படைப்பாக ஆக்கி இருக்கிறான்.

= மற்ற படைப்புகளைப்போல் அல்லாமல் மனித படைப்பை இறைவன் தன்  கரங்களால் படைத்து தன்னுடைய (ரூஹால்) ஆன்மாவால் உயிர்கொடுத்தான்.

= அதன் விலா எலும்பிலிருந்து அதன் துணையை படைத்து அவ்விருவரையும் சுவனத்தில் முதன்முதலாக வாழவைத்தான்.

= அனைத்து ஏனைய படைப்பினங்களின் மீதும் ஆளும் வல்லமையும் இறைவன் கொடுத்தான்!

இப்படி மனிதனுக்கு பல்வேறு விதமான உயர்ந்த அந்தஸ்துகளை வழங்கியதை திருமறைக் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்:

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் : 95:4)

= நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  (திருக்குர்ஆன் : 17:70)

இவ்வாறான சிறப்பை ஏனைய உயிரினங்களுக்கு வழங்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

திருமணம் என்ற சிறப்பு கட்டமைப்பு

மற்ற உயிரினங்களுக்கு திருமணம் என்கின்ற கட்டமைப்பு கிடையாது ஆனால் மனித சமூகத்திற்கு மட்டுமே இந்த திருமணம் என்ற பந்தம் உள்ளது.

நாத்திகம் விளைவித்த நாசங்கள்!

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்ற அறவே நிரூபிக்கப்படாத டார்வினின் ஊக சித்தாந்தத்தை அறிவியல் சாயம் பூசி பரப்பினார்கள் நாத்திகர்கள். இன்னும் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவாக மனிதனின் சிந்தனையில் ‘நீ ஒரு மிருகம். அது போல உன் மூதாதையர்களும் மிருகமே. அதனால் உனக்கென்று திருமணமோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை. உன் விருப்பம் போல யாரோடும் உறவு கொள்ளலாம். பிரியலாம்’ என்கிற சிந்தனை பொதுப்புத்தியில் புகுத்தப்பட்டது.

இவ்வாறான சிந்தனையின் மூலம் மனிதனுக்குள் மிருகத்தனமான சிந்தனைகள் வருவது இயல்பானது. உணவு தேவைகளை நிறைவேற்றுவதிலும் பாலியல் தேவைகளை அடைவதிலும் மிருகங்கள் எவ்வாறு அடைகின்றன அவ்வாறே மனித சிந்தனையும் இருக்கும். இந்த மிருகத்தனமான சிந்தனை விளைவித்து வரும் நாசங்களைத்தான் இன்று கண்டு வருகிறீர்கள்.. கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகள், பாலியல் வன்கொடுமைகள், காதலித்துக் காமப் பசியாறிவிட்டு காணாமல் போகும் காமுகர்கள், கருக்கொலைகள், சிசுக்கொலைகள், கள்ளக்காதல் விபரீதங்கள், தந்தைகளற்ற பிள்ளைகள் என கணக்கில்லாத சீர்கேடுகளை இந்த “மிருக சிந்தனை” விளைவித்து வருவதை யாரும் மறுக்க முடியாது.   

கண்ணியமிக்க படைப்பினத்துக்கு நேர்ந்த இழிவு:

மனிதனை உயர்ந்த கண்ணியமிக்க அழகிய படைப்பாக படைத்தவன் அவனிடமிருந்து உயர்ந்த நெறிகளையும் பண்புகளையும் செயல்களையும் எதிர்பார்க்கிறான். அதற்காகவே தன் வேதங்களையும் தூதர்களையும் அவ்வப்போது மனிதர்களுக்கு அனுப்பிவைத்தான். அந்த வேதங்களின் மூலமும் தூதர்களின் மூலமும் ‘மனிதர்களே  நீங்கள் உயர்ந்த படைப்பினம். உங்கள் கண்ணியத்தை இழந்து விடாதீர்கள். ஷைத்தானுக்கு அடிபணிந்து தரம் தாழ்ந்து விடாதீர்கள்’ என்பதை மீண்டும் மீண்டும் இறைவன் வலியுறுத்திக் கொண்டே வந்துள்ளான்.

இதற்கு மாற்றமாக குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் ஊக சித்தாந்தம் உண்மையில் மனிதனை ஒரு தாழ்வான எண்ணத்திற்கு அவனை அழைத்துச் செல்கின்றது. அதன் விளைவுகளைத்தான் இன்று நாம் இறைவனையும் மறுமையையும் ஏற்காத சமூகங்களில் கண்டு வருகிறோம். அடிப்படையில் எண்ணங்களே நம்மை வாழ வைக்கின்றன. எண்ணங்களே நம்மை உயர்த்தவும் செய்கின்றன தாழ்த்தவும் செய்கின்றன. தாழ்ந்த எண்ணங்கள் தவிர்த்து உயர்ந்த எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் ஆணித்தரமாக அவன் படைப்பின் துவக்கத்தை நினைவூட்டி புரியவைக்கிறது.

= திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில் மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களைத் தவிர, அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. (திருக்குர்ஆன் 95:4-6)

இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் இறைவனுடைய வார்த்தைகளான இறை வேதத்தை ஏற்று கட்டுப்படக்கூடிய மனிதர்களாக  வாழ்வோர் தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கும் நல்ல சிந்தனைகளையும் உயர்ந்த நெறிகளையும் விட்டுச் செல்வார்கள். இப்படிப்பட்ட இறைசிந்தனை ஏற்று வாழ்வதே இவ்வுலகத்தின் உயர்ந்த பண்பாட்டுக்கு வித்திடும். இதனடிப்படையில் செயல்படுவோர் மறுமையில் உயர்வான சொர்க்கத்தை அடைகிறார்கள்.

==================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?


செவ்வாய், 15 மார்ச், 2022

ஹிஜாபிற்கு மீள்வோம் சொர்க்கம் செல்வோம்!


நமது ஆதித் தந்தையும் ஆதித் தாயுமான ஆதாம் மற்றும் ஏவாள் தம்பதியினர் இங்கு பூமிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் சொர்க்கத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். அங்கு சொர்க்கத்தின் அருமையை உணராத காரணத்தினாலும் ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளான காரணத்தினாலும் அவர்கள் அங்கு இறைகட்டளைகளுக்கு மாறு செய்தார்கள். அதன் காரணமாக அங்கு இறைவன் அவர்களுக்கு இயற்கையாக அமைத்திருந்த ஆடையைக் களையும் நிலை உண்டானது. அதனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பூமியில் குடியேற்றப்பட்டார்கள். அவர்களின் சந்ததியினர்தான் நாம்.

= நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லைஅவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்துஎம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்! (திருக்குர்ஆன் 2:38,39)

அதாவது இந்த பூமி வாழ்க்கையை ஒரு குறுகிய பரீட்சை போன்றதாக இறைவன் அமைத்துள்ளான். இதில் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்களுக்கு மீண்டும் மறுமை வாழ்வில் சொர்க்கம் கிடைக்க உள்ளது. ஆனால் யார் ஷைத்தானின் தூண்டுதல்களுக்கு ஆளாகி இறைகட்டளைகளுக்கு மாறு செய்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம் தடை செய்யப்படுகிறது. மாறாக நரகமே அவர்களின் புகலிடமாக அமைகிறது.

ஆடை ஒழுக்கம் பேணுவோம்

= ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோமேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம். நீங்கள் பார்க்க முடியாத இடத்திலிருந்து அவனும்அவனுடைய நண்பர்களும் உங்களைப் பார்க்கின்றார்கள். திண்ணமாகஇறைநம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இந்த ஷைத்தான்களை நண்பர்களாய் நாம் ஆக்கியுள்ளோம்.  (திருக்குர்ஆன் 7:27) 

எனவே நாம் இந்த வாழ்க்கை என்ற பரீட்சையை வென்று மறுமையில் சொர்க்கம் செல்லவேண்டுமானால் ஆடை விஷயத்தில் இறைவன் விதித்த வரம்புகளைப் பேணுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை மேற்படி வசனத்தில் இருந்து அறியலாம்.

செவ்வாய், 1 மார்ச், 2022

ஹிஜாப்- சமூகத்தின் பாதுகாப்புக்கும் அரண்!

 


 - அந்நியனின் கருவை அநியாயமாக கற்பத்தில் சுமந்தார்கள் அந்த அபலைகள்...

- சுமந்த கருவை கொன்றொழிக்க மருத்துவமனைகளுக்கு இரகசியமாகச் சென்றார்கள்..

- அனுபவித்த வேதனைகளை உள்ளுக்குள் புதைத்து மூடினார்கள்..
- அரவணைத்திருந்த பெற்றோர்கள் அவர்களை வீடுகளை விட்டுத் துரத்தினார்கள்...
- கருவைப் புதைத்த காமுகர்கள் காணாத தூரம் போனார்கள்...
- அனைத்தையும் மீறிப் பிறந்தவற்றை தந்தைகளின்றி வளர்க்கும் நிலைக்கு ஆளானார்கள்...
- உடல் ரீதியாக அனுபவிக்கும் வலிகளுக்கும் மன உளைச்சலுக்கும் அப்பால் சமூகத்தின் ஏச்சும் பேச்சும், அவமானமும் இவர்களை அலைகழித்தது. ...
- மன உளைச்சல், கண்ணீர், விரக்தி, நிராசை, தற்கொலை என அனைத்தும் அரங்கேறின...

இன்னும் அன்றாடம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன...
(தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக (NCRB) அறிக்கைப் படி 2020 ஆம் ஆண்டு காதல் தோல்வி காரணமாக காவல் நிலையங்களில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 6734. ஆனால் பதிவாகாதவை இதைவிட ஆறுமடங்கு என்கிறது இன்னொரு புள்ளிவிவரம். ஆக வருடம் ஒன்றுக்கு 40000 தற்கொலைகள் இவ்வாறு நடக்கின்றன என்பது புலனாகிறது.)

எல்லாம் எதனால்?
= பெண்களின் உடலை விளம்பர மற்றும் வியாபாரச் சரக்காக பாவித்து தங்கள் சுயநல லாபங்களை ஈட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கும்பல்கள் ஒருபுறம்..
= முற்போக்கு, பெண்விடுதலை, பெண்ணியம் என்ற பெயரில் பெண்ணின் ஆரோக்கியமான இயற்கையை - நாணத்தை, வெட்க உணர்வை, மென்மையைக் களைந்து இயந்திர மயமாக்கி அவளை ஆண்களோடு தாராளமாக கலக்கவைக்கும் வஞ்சகம் ஒருபுறம்.
= ஆடைகளைக் குறைப்பதுதான் அல்லது அறவே களைவதுதான் பெண்விடுதலை அல்லது பெண்களின் முன்னேற்றம் என்று கட்டமைக்கப்படும் மாயை ஒருபுறம்..
= அதன் காரணமாக ஆபாசத்தையும் “கலாச்சார முன்னேற்றம்” என சித்தரிக்கும் ஊடகவஞ்சனை ஒருபுறம்..
= பெண்ணின் ஆளுமைக்கு அடையாளம் கவர்ச்சிகரமான ஆடையிலும் உதட்டுச்சாயத்திலும் அழகு சாதனங்களின் பயன்பாட்டிலும்தான் உள்ளது என்ற சபலமூட்டும் விளம்பர உத்திகள் ஒருபுறம்..
= இன்னும் இவைபோன்ற பல சதிவலைகளுக்கு நடுவே பயணிக்க வேண்டிய கட்டாயங்களுக்கு உட்படுத்தப் படுகிறது பெண்ணினம்.
முழு சமூகத்துக்கும் பாதிப்பு:
இவ்வாறு தங்களைச் சுற்றி வஞ்சக வலைகள் சூழ்ந்திருக்கும் நிலையில் கல்விக்காகவும், தொழிலுக்காகவும் சம்பாத்தியத்திற்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் வெளியே வரும்போது ஆணாதிக்க சக்திகளின் வஞ்சக வலைக்குள் விழுந்து தங்கள் கற்பையும் நிம்மதியையும் வாழ்க்கையையும் தொலைத்து நிற்கிறார்கள் அந்த அபலைகள்! இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல.. மாறாக அந்த அபலைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்த பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், கணவர்கள், பிள்ளைகள், உறவினர் என சமூகம் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

#ஹிஜாப்_பாதுகாப்புக்கவசம்
பெண்ணை இந்த ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து காப்பாற்ற அவளைப் படைத்த அவளது உணர்வுகளை நன்கறிந்த அவளது நலனில் பேரார்வம் கொண்ட அவளது இரட்சகன் அவளுக்கு பரிந்துரைக்கும் பாதுகாப்புக் கவசமே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம்!
#பெண்மையின்_புனிதம்:
மனித சமுதாயத்தின் விளைநிலங்களே பெண்கள். சமுதாயம் ஆரோக்கியமாக அமைய வேண்டுமானால் நல்லொழுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே மக்களுக்கு கற்பிக்கப்பட்டு நடைமுறையோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும். நன்மை, தீமை, நியாயம், அநியாயம், சக மனிதர்களோடு கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற பலவும் அங்கு கற்பிக்கப்பட்டால்தான் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள். இங்கு தந்தையை விட தாயின் தாக்கமே மிக அதிகம் என்பதை நாம் அறிவோம். இப்பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதில் இருந்து அவள் திசைதிருப்பப்பட்டால் அங்கு நடைபெறும் விபரீதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. மேலும் சமூகத்தில் ஆண் பெண் இரு பாலாரும் கல்வி, தொழில், வணிகம் போன்ற விடயங்களில் அன்றாடம் கலந்துறவாடுவது என்பது தவிர்க்க முடியாததாகும். அப்போது அவர்களுக்கு இடையே அமைந்த பரஸ்பர கவர்ச்சி அவர்களின் செயல்பாட்டில் இருந்து திசை திருப்பாமல் இருப்பது முக்கியமாகும். இவைபோன்ற பல விடயங்களையும் கருத்திற்கொண்டே ஹிஜாப் என்ற ஆடை ஒழுக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

#ஹிஜாப்_என்றால்_என்ன? #ஹிஜாப்_ஏன்?
தாய்மை என்ற உலகிலேயே உயர்ந்த விலைமதிக்கமுடியாத பதவியை அவளுக்கு வழங்குவதற்காகவும் அப்பதவியை அவள் செவ்வனே நிறைவேற்றுவதற்காகவும் அதன்மூலம் ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்பை சமைத்திடவும் அடித்தளமிடுவதே ஹிஜாப்!
ஹிஜாப் என்னும் அரபிச் சொல்லுக்கு திரை, தடுப்பு என்று பொருள்படும். ஹிஜாப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது...
' (நபியே ) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக ! அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக )வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும் தமது முக்காடுகளை (நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்துக்) கொள்ளட்டும்'(அல்குர்ஆன் 24:31)

மேலும் ஒரு வசனத்தில் குறிப்பிடும் போது...
'நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக !அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகமலிருப்பதற்கும் இது ஏற்றதாகும் (அல்குர்ஆன் 33.59)

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கு ஏற்றவாறு அந்நிய ஆண்கள் அல்லது பெண்களின் முன்னிலையில் வரும்போது கட்டாயமாக மறைக்கவேண்டிய உடலின் பகுதிகளை வரையறை இட்டுக் கூறுகிறது இஸ்லாம். ஆண்களைப் பொறுத்தவரை மறைக்க வேண்டிய பகுதி முழங்காலுக்கும் தொப்பிளுக்கும் இடைப்பட்ட அனைத்தும் ஆகும். பெண்களுக்கு அது முகமும் முன்கையும் தவிர உள்ள அனைத்தும் ஆடைகொண்டு மறைக்கப்பட வேண்டியதாகும்.

#ஹிஜாப்_பெண்ணடிமைத்தனமா?
பெண்ணுக்கு கண்ணியத்தை கொடுப்பதற்கு இறைவன் பரிந்துரைத்த இந்த உயர்ந்த ஆடை ஒழுக்கத்தைத்தான் சிந்திக்காதவர்கள் பெண்ணடிமைத்தனம் என்று விமர்சித்தார்கள். உண்மைதான் என்ன?
தாய்மை என்ற பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பெண்களை வீட்டிற்கு வெளியே செல்லக்கூடாது என்று முடக்கிப் போடவில்லை இஸ்லாம். கல்வி, தொழில், சம்பாதித்தல் போன்ற அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு முறைப்படி வழங்கி அவற்றை பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக்கொள்ள மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான் ஹிஜாப் என்பதை சிந்திப்போர் யாரும் அறியலாம். பெண்ணின் உடலழகும் கவர்ச்சியும் அவளுக்கு எதிரியாக மாறாமல் இருக்க ஹிஜாப்தான் பாதுகாப்புக் கவசம்.

பெண்ணுக்கு வழங்கப்படும் இந்த பாதுகாப்பு முழு சமூகத்தையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது என்பதை சிந்திப்போர் அறியலாம்!
"நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக !அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகமலிருப்பதற்கும் இது ஏற்றதாகும்" (அல்குர்ஆன் 33.59)

சமூகத்தின் பாதுகாப்பு என்ற பொறுப்புணர்வு

இனி ஹிஜாப் தேவையில்லை, ஆடை அணிவதும் அரைகுறையாக அணிவதும் அல்லது அறவே அணியாது இருப்பதும் அவரவர் உரிமை அல்லது விருப்பம் என்ற கருத்து கொண்டவர்களுக்கு பொது சமூகத்தின் பாதுகாப்பு கருதி சில வார்த்தைகள்.. பெண்கள் உடலின் மறைக்கப் பட வேண்டிய பாகங்களை அந்நிய ஆண்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கும்போது பொது இடங்களில் பாலுணர்வு தூண்டப்படுகிறது. தொடர்ந்து சமூகத்தில் பல சீர்கேடுகள் நிகழ இச்செயல் ஏதுவாகின்றது. காதல், கள்ளக்காதல், விபச்சாரம், கற்பழிப்பு, அநியாயமாக அந்நியனின் கற்பம் சுமத்தல், பெற்று வளர்த்தவர்களுக்கு நன்றிகேடு, டென்ஷன், கருக்கொலை, சிசுக்கொலை, கொலை, குடும்ப அங்கத்தினர் மத்தியில் கலகம் போன்ற பலதும் இதைத் தொடருகின்றன. இந்த சீர்கேடுகளுக்கு நீங்களும் காரணமாகிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

மேலும் இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்விலக்கல்களை பேணியே ஆகவேண்டும். இறுதித்தீர்ப்பு நாளன்று நாம் அனைவரும் விசாரணைக்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட உள்ளோம்.

= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)

நீங்கள் கேட்கக் கூடும். யார் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்று. உண்மையில் நீங்கள் உங்கள் முகத்தில் தாங்கி நிற்கும் இரு கண்களும் CCTV போன்றவை என்பதை மறந்து விடாதீர்கள். இதோ இறைவனே கேட்கிறான் பாருங்கள்:

= தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7-9)

விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.

அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் படியுங்கள்.

= .....அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘ (திருக்குர்ஆன் 18:29)

கட்டுப்பாடுகள் உங்களின் நன்மைக்கே!

ஆம் சகோதர சகோதரிகளே, மேற்கூறப்பட்டவை மனித வார்த்தைகளோ ஊகங்களோ அல்ல. இவ்வுலகைப் படைத்தவனின் மறுக்க முடியாத வார்த்தைகள். நாளை நடக்க இருப்பவற்றை இங்கேயே எச்சரிக்கிறான். சமூக நலன் கருதியே அவன் நமக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளான். அவற்றைப் பேணி வாழ்ந்தால் இங்கு நமது தனி நபர் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் அமைதி மிக்கதாக மாறும். அந்த கட்டுப்பாடுகளைப் பேணி வாழும்போது ஒரு சில மன இச்சைகளைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம். ஆனால் அவற்றுக்குப் பரிசாக நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தை அல்லவா தயார் செய்து வைத்துள்ளான்.

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் மறுப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் இறைவனுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்ஆன் 4:170)
================== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
நாம் ஏன் பிறந்தோம்?

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2022 இதழ்

 


திருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மார்ச் 2022 இதழ் 

இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள் 

பொருளடக்கம்: 

அரைகுறை ஆடை- பாலியல் விருந்துக்கான அழைப்பு -2

யாருக்காக? ... இது யாருக்காக?-4

ஹிஜாபிற்கு மீள்வோம் சொர்க்கம் செல்வோம்! -6

ஏம்மா, எதுக்கு முதுகில ஜன்னல்?-7

பாதுகாப்புக் கவசமே ஹிஜாப் -9

ஹிஜாபைப் பேணுவது சமூகக் கடமை! -11

யுவான் ரிட்லி - ஹிஜாபுக்குள் விரும்பி நுழைந்த புரட்சிப் பெண்மணி! -13

சமூக ஒழுக்கத்திற்கு இறைகூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -16

அறிவு வளர்ச்சியின் அடையாளமே ஆடை!-18

கூகுள் நினைவுகூர்ந்த கமலா சுரையா!-19

வாசகர் எண்ணம் -20

நாணமும் அடக்கமும் பெண்களுக்கு அழகு -21

இறைவிசுவாசிகளுக்கான ஆடை ஒழுக்கம் -23

சாராபோக்கர் - ஹிஜாபுக்குள் முழுமையாக நுழைந்த மாடல் அழகி! -24 


திங்கள், 14 பிப்ரவரி, 2022

ஒழுக்கமாக வாழ வழிவிடுங்கள்!


அவளது பிள்ளைகள் கேட்ட கேள்விகள் ஆஷாவை அன்றிரவு தூங்கவிடாமல் அலைகழித்துக் கொண்டிருந்தன... அன்று ஆபீசில் இருந்து களைப்போடு வீடு திரும்பி உடைமாற்றிக் கொண்டு இருக்கும்போதுதான் அந்தக் கேள்விகளைக் கேட்டார்கள் பிள்ளைகள்..

"எம்மாவீட்டுக்குள்ளாற மட்டும் மாக்சி போட்டுட்டு சுத்தறே... வெளிலே போகும்போது உடம்பெல்லாம் தெரியற மாதிரி ஓட்டை ஓட்டையா இருக்கிற டிரெஸ்ஸெல்லாம் போட்டுட்டுப் போறே?"
எதிர்பார்க்காத கேள்வி... கேட்டது ஆஷாவின் ஆறுவயது மகன்.
என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை ஆஷாவுக்கு... 
"
ஆபீசிலே மாக்சி போட்டுட்டுப் போனா உடமாட்டாங்கடா கண்ணு" 
பக்கத்து ரூமில் இருந்த மூத்தமகன் ராஜாவிடம் இருந்து வந்தது அடுத்த கேள்வி..
"
சரிம்மாஅதுக்கு எதுக்கு ஆபீஸ் போகும்போது கழுத்துகிட்ட ஜன்னல்முதுகுல ஜன்னல்லெக்கிங்க்ஸ்லிப்ஸ்டிக்.. ? இப்படித்தான் போட்டுட்டு வரணும்னு ஆபீசிலே சொன்னாங்களா?"
ஏன் இந்த திடீர் கேள்விகள்?... திக்குமுக்காடிப் போனாள் ஆஷா... 
"
இதுதான் ஊர் வழக்கம் ராஜா.. இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது" 
"
சரிம்மாஎன்னையும்தான் தண்ணியடிக்கறது ஊர் வழக்கம்னு பிரெண்ட்ஸ் கூப்பிட்டாங்கபோகட்டுமா?"
பதில் சொல்ல முடியவில்லை ஆஷாவால்...
"
காலேஜ்லே சில பொண்ணுங்க பசங்கள சுண்டி இழுக்கறதுக்காக கவர்ச்சியா ட்ரெஸ் போட்டுட்டு வர்றாங்க.. நீ எதுக்கும்மா அப்படிப் போடணும்?" 

மீண்டும் பதில் இல்லாமல் வாயடைத்து நின்றாள் ஆஷா.

ஏம்மாநாளைக்கு நம்ம சுதா கொஞ்சம் பெருசாகி உன்ன மாதிரி ட்ரெஸ் போட்டு போயி எவனாவது கொண்டுபோய் கற்பழிச்சா என்ன செய்வேஇல்லஉன்னையே கூட நாலு பேரு கடத்திட்டுப் போயி கற்பழிக்க மாட்டாங்கன்னு ரொம்ப தைரியமா இருக்கியா?”

ஏண்டா இப்படி ரொம்ப விபரீதமா கற்பனை பண்றேஅப்படியெல்லாம் நடக்காதுடா கண்ணு...” ராஜாவை தேற்ற நினைத்தாள் ஆஷா...

அடங்குவதாக இல்லை ராஜா..

ஏம்மா இந்த உலகத்துலதான் இருக்கியாநியுஸ்டிவி எல்லாம் பாக்கறதில்லையா நீஊரு பூரா நடக்கறது ஒண்ணும் உன் கண்ணுக்குத் தெரீலையா?

--------------------------

ஒழுக்கமாக வாழ நினைக்கும் உள்ளங்களில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளங்களில் குமுறிக்கொண்டிருக்கும் கேள்விகள் இவை. ஆஷாவைப் போல பெரும்பாலான பெண்கள் ஊர் வழக்கம்தானே என்று சொல்லி தாங்கள் அணியும் அரைகுறை ஆடையால் தவறில்லை என்று நினைகின்றனர். தங்களின் உடலின் அழகு அந்நிய ஆண்களின் கழுகுக் கண்களுக்கு விருந்தானாலும் அதனால் ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் இன்பம் என்று இந்த காட்சிகளை அனுபவிப்பவர்களும் இதைப் பற்றி ஏதும் பேசுவதில்லை. பெண்களின் ஆடைக்குறைப்பு என்பது ஒரு தீமை என்பதையும் சமூகத்தில் அது உண்டாக்கும் குழப்பங்களையும் மறுமையில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்ற உண்மைகளை அறிந்த சில நல்லவர்களும் இதைப் பற்றி வாய் திறக்காமல் செல்கிறார்கள். மற்ற மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று பயந்து இத்தீமையை கண்டிக்காமல் செல்கின்றனர். அவ்வாறு செய்யும்போது இத்தீமைகளில் மூழ்கியுள்ளவர்களைப் பொறுத்தவரை  தங்கள் செயலில் தவறு இல்லை என்பதாக உணர்கின்றனர்.

இப்படிப்பட்ட சமூகப் போக்கு ஆபத்தானது.

இறைவிசுவாசிகள் களமிறங்க வேண்டும்

இறைநம்பிக்கை கொண்டவர்கள் நாட்டையும் மக்களையும் நேசிக்காமல் இருக்க முடியாது! அவர்களால் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான்,  நாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம்  என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும். அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும்.

இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகைதியானம்தானம்விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான்

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்......” (திருக்குர்ஆன் 3:110)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)

மேலும் இறைத்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

= உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும். (நூல்: முஸ்லிம்)

ஆகஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். உதாரணமாக நம் அதிகாரத்திற்கு உட்பட்ட வட்டங்களில் ஆடைக்குறைப்பு என்ற தீமை நேராடியாகவோ அல்லது ஊடகங்கள் மூலமாகவோ ஊடுருவும்போது நேரடியான நடவடிக்கைகள் மூலம் தடுக்க முயற்சிக்க வேண்டும். நம் அதிகாரத்திற்கு உட்படாத வட்டங்களில் இத்தீமையின் விபரீதம் பற்றியும் மறுமை வாழ்வின் விளைவுகள் குறித்தும் நாவின் மூலமாக அல்லது எழுத்தின் மூலமாக மக்களை எச்சரிக்கை செய்வதன் மூலம் போராடலாம்.

--------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?

இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?

http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html 

திங்கள், 7 பிப்ரவரி, 2022

மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது

"முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).
"இறுதித் தீர்ப்பு நாள் வருகையில் கூட, ஒரு மரக்கன்றை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் விரைந்து அதனை மண்ணில் ஊன்றட்டும்" என்று இறைதூதர் (ஸல்) கூறினார்கள்.
இந்த நபிமொழியின் பொருள் குறித்து விளக்கம் தரும் அறிஞர் தாரிக் ரமழான் “இறுதி நாளில் கூட இறை நம்பிக்கை கொண்டவர் வாழ்க்கையையும் அதன் சுழற்சிகளையும் புதுப்பித்துக் கொள்ளும் வண்ணம் இயற்கையை மதித்து அதனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்கிறார்.
மேகண்ட இரண்டு நபிமொழிகளும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை சமநிலையை பேணவும் சொல்லப்பட்டவை.
மரம் நடுவதும், இயற்கை வளங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் ஒரு மனிதனின் கடமை குறிப்பாக இறைவனை ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கையாளனின் பொறுப்பு என்பதை மேற்காணும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
இறுதித் தீர்ப்பு நாள் வந்துவிட்டால் அதற்குப் பின் பூமி ஏது? பூமியில் வாழ்க்கை ஏது? அந்த நேரத்திலும் கூட கையில் இருக்கும் மரத்தை நட்டுவிட வேண்டும் என்று மனிதர்களின் வழிகாட்டி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இது மனிதர்களுக்கு இயற்கை வளங்கள் மேல் உள்ள பொறுப்பையும், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவையும் சுட்டிக் காட்டுகிறது. உலகம் அழிவது போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலும் மனிதர்கள் தங்கள் பொறுப்பில் கவனமற்று இருந்து விடக்கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறது.
மேலும் மரம் நடுவது ஒரு அறச் செயல். பணமாக, பொருளாக பிறருக்கு கொடுப்பதையே தர்மம் என்று நினைக்கும் மனிதர்களுக்கு, மனிதன் இன்னொரு மனிதனைப் புன்னகையுடன் எதிர்கொள்வதையும் தர்மம் என்கிறது இஸ்லாம்.
அந்த தொடரில் மரம் நடுவது தர்மம். ஒரு மனிதன் நடும் விதை வளர்ந்து மரமாகி பூவாக, காயாக, பலமாக, நிழலகாக மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களுக்கு பயன் தருகிற போது விதைத்தவனுக்கு தர்மமாக பலனளிக்கிறது என்கிறது இஸ்லாம்.
இஸ்லாம் மதமல்ல வாழ்க்கை நெறி என்று உபதேசிப்பதல்ல ஒரு முஸ்லிமின் கடமை. இஸ்லாம் மனிதர்களின் இயல்புகளோடு இயைந்த வாழ்க்கை என்பதை வாழ்ந்துதான் காட்ட வேண்டும். பக்தி என்பதும், ஆன்மீகம் என்பதும் பிற உயிர்களுக்கு பயன் தந்து வாழ்வதில் இருக்கிறது என்பதே இஸ்லாத்தின் முழக்கம்

சனி, 22 ஜனவரி, 2022

ஒரு குழந்தைக் கொள்கையால் சீரழிக்கப்பட்ட சீனா!


பெரும்பெரும் இயற்கை வளங்களும் பெரும் நிலப்பரப்பும் கொண்ட ஒரு நாடு அதைப் படைத்தவனுக்கு எவ்வளவு நன்றிக் கடன் பட்டதாக இருக்கவேண்டும்? ஆனால் அதைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் படைத்தவனையே மறுக்கும் ஒரு சித்தாந்தத்தைக் கொள்கையாகக் கொண்டு அந்நாடு ஆளப்பட்டால் அது சீரழிவை சந்திக்காமல் இருக்குமா? அதைத்தான் இன்று சீனா என்ற கம்யுனிச நாட்டின் உதாரணத்தில் காண்கிறோம்.

இன்று சீனா ஒரு தொழில் முன்னேற்றம் கொண்ட வல்லரசு நாடாக உலகுக்குக் காட்சியளிக்கலாம். ஆனால் அது நிலைக்காது என்பதை அதன் உள்நாட்டு நிலைமையை ஆராய்பவர்களுக்கு புரிய வரும். என்ன வளம் இருந்தும் என்ன ஆதிக்கம் இருந்தும் அதன் பலனை அனுபவிப்பதற்கு ஆள் இல்லையென்றால் என்ன பயன்?

ஒரு குழந்தை கொள்கை என்ற கொடூரம்!

பரவலாக அறியப்பட்டது போல, கம்யூனிச சீனா, 1980ம் ஆண்டு ஒரு குழந்தைக் கொள்கையை அறிவித்தது. மணமான தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், மீறினால் அபராதம், சலுகைகள் இரத்து என்றபடி நடைமுறைக்கு வந்தது இக்கொள்கை.

டெங் ஜியோபிங் (Deng Xiaoping ) அதிபராக இருந்த போது, இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. சீனாவின் மக்கள் தொகை 100 கோடியை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையலாம் எனும் அச்சத்தில் இக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)

என்ற இறைவனின் கட்டளை அப்பட்டமாக ஒரு நாட்டை  ஆள்பவர்களால் மீறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது

கடும் கட்டுப்பாடுகள்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் கட்டுப்பாட்டை சீன அரசு கடுமையாக செயல்படுத்தியது. குறிப்பாக நகர்புறங்களில் இந்த கட்டுப்பாடு தீவிரமாக இருந்தது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்ட தம்பதியருக்கு அபாராதம் விதிக்கப்பட்டதோடு, கட்டாய கருக்கலைப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். குறிப்பாக ஏழைகளுக்கு பாதிப்பு மோசமாக இருந்தது.

அதே நேரத்தில் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு பொருளாதார நோக்கில் சலுகைகளும் அளிக்கப்பட்டன. சீன மக்கள் இந்த கட்டுப்பாட்டை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்ட நிலையில், அரசு தரப்பில் இந்த கொள்கை வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு குழந்தை கொள்கை மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடிந்ததோடு, உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடிந்ததாகவும் சீன அரசு தரப்பில் பெருமிதத்தோடு தெரிவித்து வந்தது.

உச்சகட்ட கொடூரங்கள்

ஆனால் இதன் பின்னால் நடந்த கொடூரங்கள் உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன.

= பிறப்பது பெண் குழந்தை என்றால் –அதை ஸ்கேன் மூலம் அறிந்து கொண்டால் – உடனே கருவிலேயே கொல்லப்பட்டாள்.

= தப்பித்தவறி பிறந்துவிட்டால் பெற்றோர்களாலேயே உயிரோடு கொல்லப்பட்டாள்.

= பெற்றவர்களுக்கு கொல்ல மனம் வரவில்லை என்றால் அவளை அரசு காப்பகங்களில் சேர்த்தார்கள். பெற்றோர் உயிருடன் இருந்தும் அனாதையாகவே வளர்ந்தது அந்தப் பெண் குழந்தை. ஏனெனில் ஒரு பெற்றோருக்கு ஒரு குழந்தையை மட்டும் வைத்துக்கொள்ளத்தானே அனுமதி உள்ளது.

= அதுவும் ஆண்குழந்தைதானே வேண்டும் அனைவருக்கும்! அதனால் தொடர்ந்து பிறந்த பெண்குழந்தைகள் காப்பகங்களுக்குச் சென்றன.

= என்ன ஒரு கொடுமை! எத்தனை கருக்கொலைகள்? சிசுக்கொலைகள்? கருக்கலைப்புகள்? எவ்வளவு மன உளைச்சல்களை இவர்கள் சந்தித்திருக்க வேண்டும்.. மனித மனம் கொண்டவர்களே சிந்தித்துப்பாருங்கள்.

40 வருடங்களாக நடந்த கொடுமைகள்

இக்கொடுமைகள் ஏதோ ஊரில் ஏதோ மூலையில் ஏதோ ஒரு குடும்பத்தில் எங்கோ நடந்தவை அல்ல.. சீனா என்ற பெரும் நிலப்பரப்பில் கோடிக்கணக்கான குடும்பங்களில் 40 வருடங்களாக இக் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின. தட்டிக்கேட்க யாரும் இன்றி, எதிர்க்கட்சிகள் ஏதும் இன்றி,  இக்கொடுமைகள் கம்யூனிஸம் என்ற இரும்பு கரத்தின் ஒடுக்குமுறைகளுக்கு கீழ் ஈவிரக்கமின்றி நடந்தன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மனித உணர்வுகள் இவ்வாறு மழுங்கடிக்கப்பட்டன.

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, குடும்பம், அன்பு, பாசம், நேசம், சொந்தம் பந்தம், என அனைத்து உறவுகளையும் உணர்வுகளையும் கம்யுனிசவாதிகள் கால்களுக்குக் கீழ் போட்டு நசுக்கினார்கள். இவர்களைப் பொறுத்தவரை மனிதன் இன்னொரு குரங்குதானே?

கொடூரங்களின் முடிவில்..

= மக்கள்தொகைக் குறைப்பை வெற்றிகரமாக அடைந்தார்கள்.

ஆனால்...

= ஒரு குழந்தைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், சீன சமூகத்தில் பெண்கள் விகிதத்தை விட ஆண்கள் விகிதம் அதிகமானது.

= மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது சீன மக்கள் தொகை மிகவும் வேகமாக வயோதிகத்தை அடையவும் இது வழிவகுத்து. அதாவது மக்கள் தொகையில் இளம் வயதினரைவிட வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உண்டானது.

= மக்கள் தொகையில் இளம் வயதினர் குறைவாக இருப்பது, பொருளாதார நோக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. உழைப்பதற்கு ஏற்ற மனிதவளம் குறைந்து போயுள்ளது. வயோதிகர்களை கவனிக்க ஆளில்லா நிலை உருவானது.

இதன் விளைவாக கடந்த 2016ம் ஆண்டு சீன அரசு ஒரு குழந்தைக் கொள்கையை தளர்த்தி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது. ஆயினும் எதிர்பார்த்த மாற்றங்களைக் காணமுடியவில்லை.

அதைத் தொடர்ந்து தற்போது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது சீன அரசு. இனி முழு கட்டுப்பாட்டையும் தளர்த்தி மக்களே இனி எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சீன அரசு அறிவித்தாலும் பிறப்பு விகிதம் 1.12 என்ற நிலையை அடைந்துள்ள நிலையில் இன அழிப்பிலிருந்து சீனா மீண்டு வர வாய்ப்பே இல்லை எனலாம். இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது..

ஆம், மனித உணர்வுகளை இரும்புக் கரம் கொண்டு இவர்கள் அடக்கி ஒடுக்கியதால் இதயங்கள் கல்லாகிவிட்ட நிலையில் இவர்களின் பெண்கள் கேட்கிறார்கள்..

நாங்கள் என்ன உங்களுக்கு பிள்ளைபெறும் இயந்திரங்களா?

இறை எச்சரிக்கை

எது எப்படியானாலும் இது இறைவனுக்கு சொந்தமான உலகம். அவனை கண்டுகொள்ளாது தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அழிவையே தரும். மறுமையில் அவனது தண்டனையையும் பெற்றுத்தரும். கீழ்கண்ட இறைவசனத்தில் கூறப்படும் விஷயங்கள் இவர்களுக்கும் பொருந்திப்போவதை நாம் காணலாம்:

= (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த  காரணத்தால்  இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 6:70)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)

------------------------------------------------- 

நாம் ஏன் பிறந்தோம்?
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?